பிராய்லர் கோழிக்கு ஹார்மோன் ஊசி போடுகிறார்களா? அதை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை வருமா?

பிராய்லர் கோழி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் கோழி இறைச்சியை தங்களது முக்கிய உணவாக சேர்த்துகொள்கின்றனர். ஆனால் அவர்கள் உண்ணும் கோழி உண்மையில் எந்த வேதிப்பொருளும் கலக்காத , நச்சுத்தன்மை இல்லாத ஒன்று என எப்படி கண்டுபிடிப்பது?

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் 2019ஆம் ஆண்டு தரவுகள் கூறுகிறது. இந்திய கோழிவளர்ப்புத் துறையின் மதிப்பு 204900 கோடி என்று கோழி விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுவின் (PFRC) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த தரவுகளை கையாளும் ‘Statista’ நிறுவனத்தின் தரவுகளின்படி 2023இல் இந்தியாவில் மட்டும் 4,407.24 மெட்ரிக் டன் பிராய்லர் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் இந்த பிராய்லர் கோழி குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகிறது. பிராய்லர் கோழிகளுக்கு தவறான ஊசிகள், மருந்துகள் கொடுக்கப்படுகின்றன, அவற்றால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன உள்ளிட்டவை அந்த வதந்திகளில் அடங்கும்.

ஆனால் உண்மையில் பிராய்லர் கோழி என்றால் என்ன? அவை எப்படி வளர்க்கப்படுகின்றன? அவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுமா என்பதை இந்த கட்டுரையில் ஆராயலாம்.

பிராய்லர் கோழி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1960களில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய பிராய்லர் கோழிகள் கோழி இறைச்சி தட்டுப்பாட்டை குறைப்பதற்கான புதுப்புரட்சியாகவே பார்க்கப்பட்டது.

பிராய்லர் கோழி என்றால் என்ன?

பிராய்லர் கோழி என்பது நேரடியாக இயற்கை முறையில் பிறக்கும் கோழி வகை கிடையாது. 1930 கள் காலகட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதன்முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான இருவேறு கோழி இனங்களை ஒன்றிணைத்து கருத்தரித்தல் முறையில் உருவாக்கப்பட்டவை தான் இவை.

பின்னர், 1960களில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய பிராய்லர் கோழிகள் கோழி இறைச்சி தட்டுப்பாட்டை குறைப்பதற்கான புதுப்புரட்சியாகவே பார்க்கப்பட்டது.

குறிப்பாக புரதச்சத்து தட்டுப்பாடு நிலவிய பல நாடுகளில் இந்த கோழியின் வருகை முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இதன் வளர்ச்சி காலம், மலிவு விலை மற்றும் உயர் புரதச்சத்து ஆகியவை ஆகும்.

1970களில் தமிழகம் உட்பட இந்தியாவுக்குள்ளும் வந்த பிராய்லர் கோழிகள் 1980 – 85 காலகட்டத்தில் உச்ச நிலையை அடைந்ததாக கூறுகிறார் தென்காசியில் கோழி வளர்ப்பு பண்ணை நடத்தி வரும் முத்துராமலிங்கம்.

அதற்கு பிறகான 30 ஆண்டுகளில் நாட்டுக்கோழிகளை பின்னுக்கு தள்ளி, எங்கு பார்த்தாலும் பிராய்லர் கோழி என்ற நிலை வந்துவிட்டது.

கோழி விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுவின் கூற்றுப்படி, “முட்டைக்காக நீண்ட நாட்கள் வளர்க்கப்படுபவை “லேயர்” என்றும், இறைச்சிக்காக குறுகிய நாட்களில் சந்தை படுத்தப்படுபவை “பிராய்லர்” என்றும் குறிப்பிடலாம்.”

பிராய்லர்

பட மூலாதாரம், Getty Images

தனி இனங்கள்

குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார் கூற்றுப்படி, “பிராய்லர் கோழி என்பது கார்னிஷ் கிராஸ் (Cornish crosses) என்று சொல்லக்கூடிய தனி இனம். எப்படி ஒவ்வொரு இனத்திற்கும் தனி பண்பு இருக்குமோ, அது போல் இந்த வகை கோழிக்கு வேகமாக வளரக்கூடிய தண்மை உண்டு. எனவே இந்த வகை கோழியை இறைச்சிக்காக 1970 களில் இருந்து வளர்க்க தொடங்கினார்கள்.”

“படிப்படியாக அந்த துறையில் ஏற்பட்ட நவீன மாற்றங்களின் காரணமாக முதலில் 60 நாட்கள் வளர்ந்து வந்த பிராய்லர் கோழிகள் தற்போது 32 நாட்களில் வளர தொடங்கி விட்டது. இது முக்கியமாக அந்த கோழிகளுக்கு வழங்கும் உணவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் உள்ளது.”

பிராய்லர் கோழி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “பேரண்ட்டிலிருந்து உருவாக்கப்படும் முட்டை 21 நாட்களுக்கு ஹேச்சரி (Hatchery) என்ற பகுதியில் சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பத்தில் வைக்கப்படும். இங்குதான் இந்த முட்டைகள் குஞ்சு பொரிக்கின்றன.”

பிராய்லர் கோழி எப்படி உருவாகிறது?

பிராய்லர் கோழிகளின் உருவாக்கம் என்பது ஆய்வகங்களில் இருந்தே தொடங்குகிறது. முதலில் தேவையான பியூர்லைன் எனப்படும் இனக்கலவை செய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து பேரண்ட் உருவாக்கப்படும் என்கிறார் முத்துராமலிங்கம்.

“இந்த பேரண்ட்டிலிருந்து உருவாக்கப்படும் முட்டை 21 நாட்களுக்கு ஹேச்சரி (Hatchery) என்ற பகுதியில் சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பத்தில் வைக்கப்படும். இங்குதான் இந்த முட்டைகள் குஞ்சு பொரிக்கின்றன.”

“அங்கிருந்து குஞ்சுகளாக கோழிப்பண்ணைகளுக்கு வரும் இந்த கோழிக்குஞ்சுகள் முதல் வாரத்தில் 220 கிராம் வரை வளரும். பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் பொறுமையான வளர்ச்சியே இருக்கும்.”

முன்பெல்லாம் 60 நாட்கள் வரை வளர்க்கப்படும் பிராய்லர்கோழிகள் தற்போது 32 இலிருந்து 40 நாட்களில் 2.3கிலோ வரை வளர்ந்து விடுவதாக தெரிவிக்கிறார் முத்துராமலிங்கம். அதற்கான உணவு என்ன கொடுக்கிறோம் என்பதை பொறுத்தே அதன் வளர்ச்சியும் இருக்கும் என்கிறார் அவர்.

பிராய்லர் கோழிக்கும், நாட்டு கோழிக்கும் வித்தியாசம் என்ன?

பொதுவாக நாட்டுக்கோழிகள் வளர 6 மாதம் மற்றும் அதுக்கு மேலும் ஆகும் என்று கூறும் முத்துராமலிங்கம், இதே பிராய்லர் கோழியாக இருந்தால் 32 முதல் 60 நாட்களுக்குள் வளர்ந்து விடும் என்கிறார்.

அதேபோல், நாட்டுக்கோழிக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி, பிராய்லர் கோழிகளில் இருக்காது என்றும் கூறுகிறார் அவர். ஆனால் அதே சமயம் பிராய்லர் கோழிகளுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் கொடுத்து வளர்க்கப்படுவதால் நாட்டுக்கோழிகளுக்கு வருவது போல் பறவைக்காய்ச்சல்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார் அவர்.

கோழி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு பிராய்லர் கோழியை 6 முதல் 8 வாரங்கள் வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது கோழி பண்ணையாளர்கள் ஒழுங்குமுறைக் குழு

பிராய்லர் கோழி வளர்ப்பதற்கான விதிகள்

பிராய்லர் கோழி வளர்ப்பதற்கென குறிப்பிட்ட வழிமுறைகள் இருப்பதாக கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். அதன்படி, இந்தியாவில் செயல்பட்டு வரும் கோழி விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுவே, ஒரு பிராய்லர் கோழியை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வழங்குகிறது.

அக்குழுவின் விதிகளின்படி, ஒரு பிராய்லர் கோழியை 6 முதல் 8 வாரங்கள் வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதற்கு வழங்கப்படும் உணவு, தண்ணீர், அது வளரும் சூழல், செலுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் என அனைத்திற்கும் அளவீடுகளை நிர்ணயித்துள்ளது இந்த குழு.

அதன்படி, வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளே ஆரோக்கியமான கோழிகள் என கோழி விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழு பரிந்துரைக்கிறது. ஆனால், மீண்டும் மீண்டும் பிராய்லர் கோழிகளால் பல உடல் உபாதைகள் ஏற்படும் என்ற கருத்து நிலவுவது ஏன்?

பிராய்லர் கோழி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோழிகள் ஒவ்வொரு காலகட்டத்தை எட்டும்போதும், அதற்கேற்ற வைரஸ் அதை தாக்கும். அப்படி அது வைரஸ்களால் தாக்கப்படாமல் இருப்பதற்காக தடுப்பூசி போடப்படுகிறது.

பிராய்லர் கோழி வேகமாக வளர ஹார்மோன் ஊசி போடுகிறார்களா?

பொதுவாகவே பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுவதாகவும், இதை உண்பவர்களுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இளம்பெண்கள் சிறு வயதிலேயே பருவம் எய்து விடுவதாகவும் பல தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அதெல்லாம் உண்மையா? உண்மையில் இந்த கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுகின்றனவா?

அப்படி எதுவும் நடப்பதில்லை என்று உறுதியாக கூறுகிறார் முத்துராமலிங்கம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ கோழிகள் ஒவ்வொரு காலகட்டத்தை எட்டும்போதும், அதற்கேற்ற வைரஸ் அதை தாக்கும். அப்படி அது வைரஸ்களால் தாக்கப்படாமல் இருப்பதற்காக எப்படி மனிதர்களுக்கு தடுப்பூசி போடப்படுமோ, அப்படி கோழிகளுக்கும் போடப்படுகிறதே தவிர வேறு எந்த மருந்துகளும் வழங்கப்படுவதில்லை” என்கிறார்.

அப்படி ஒவ்வொரு கோழிக்கும் ஹார்மோன் ஊசி செலுத்த வேண்டுமென்றால் பிராய்லர் கோழிகளை 700 முதல் 900 ரூபாய்க்கு தான் விற்க வேண்டும் என்று கூறுகிறார் கோழி விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுவின் துணை செயலாளர் சரத்.

எனவே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறும் அவர் ஒரு கோழிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தான் ஆண்டிபயாட்டிக் கூட வழங்கப்படுகிறது என்கிறார். சொல்லப்போனால் பண்ணை உரிமையாளர்களுக்கு ஆண்டிபயாட்டிக் வழங்குவதே கூட கூடுதல் செலவுதானாம்.

“பிராய்லர் கோழி என்பது 42 முதல் 45 நாட்களில் வளரக்கூடிய ஒரு சிறிய கோழி. அதில் ஹார்மோன் செலுத்துவதற்கான வாய்ப்பு கிடையாது. இது மற்ற இறைச்சி இனங்களை போன்ற பெரிய வகை உயிரினம் கிடையாது” என்கிறார் அவர்.

பிராய்லர் கோழி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹார்மோன் ஊசி செலுத்தினால் ஒரு கோழிக்கே 20 முதல் 25 ஆயிரம் செலவாகும் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

‘வளர்ச்சி ஹார்மோன் என்று ஒன்று இல்லை’

மருத்துவர் அருண்குமார் பேசுகையில், “பலரும் வளர்ச்சி ஹார்மோன்கள் மூலம் இந்த கோழிகள் வளர்க்கப்படுவதாக நினைக்கின்றனர். ஆனால், அப்படி ஒரு ஹார்மோனே கிடையாது. வளர்ச்சி ஹார்மோன்கள் என்பது வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக, குழந்தை மருத்துவத்தில் அவர்களது உயரத்தை அதிகரிக்க நாங்கள் பயன்படுத்துவோம்.”

“அப்படி கோழிகளுக்கு அதை பயன்படுத்த வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு நாலு வேளைகள் வீதம் 40 நாளைக்கு கொடுக்க வேண்டும். அப்படியென்றால் ஒரு கோழிக்கே 20 முதல் 25 ஆயிரம் செலவாகும். அப்படியே அது இல்லை என்று நிரூபிப்பதற்காக இதே ஹார்மோனை கோழிக்கு கொடுத்தும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் கோழி வளரவே இல்லை. எனவே அது வெறும் வதந்திதான்” என்கிறார்.

மேலும், “இந்த கோழிகளை வைரஸ் தொற்றுகளில் இருந்து காப்பதற்காக ஒரு கோழிக்கு 5 தடுப்பூசிகள் வீதம் போடப்படுகிறது. இதையே பலரும் ஹார்மோன் ஊசி என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்” என்றும் கூறுகிறார் அவர்.

பிராய்லர் கோழி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “12 வயதில் பருவம் எய்துதல் என்பது அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதன் அர்த்தம்” என்கிறார் அருண்குமார்.

பெண்கள் இளம்வயதில் பருவம் எய்துகிறார்களா?

அமெரிக்க தேசிய மருத்துவ மையத்தின் ஆய்வு முடிவுகளின்படி குழந்தைகளுக்கு இயல்புக்கு முன்னதாகவே பருவம் எய்தும் நிகழ்வு நடப்பதாக கூறுகிறார் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த உணவியல் ஆலோசகர் யசோதா பொன்னுச்சாமி.

அதே போல் கோழியை அவித்து அல்லது வேகவைத்து உட்கொள்ளும்போது பிரச்னை குறைவு. ஆனால், அதையே பிரியாணியாக அல்லது வேறு வகைகளில் சமைத்து உண்ணும்போது அதுவே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகி இதர பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது என்கிறார்.

மேலும், “தங்களிடம் வரும் பல பெண்களை சோதனை செய்து பார்க்கையில், அதிகம் அவர்கள் சிக்கன் ரைஸ் உள்ளிட்ட அதிகப்படியான கோழி இறைச்சி சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதாக கூறுகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வழக்கத்திற்கு முன்னதாகவே பருவம் எய்துதல், பிசிஓடி பிரச்னைகள் ஏற்படுவதாக” கூறுகிறார் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் ஜெ.பி. ஜெயந்தி ஆல்.

ஆனால், இது முற்றிலும் கட்டுக்கதையே என்று மறுக்கிறார் மருத்துவர் அருண்குமார்.

அவர் பேசுகையில், “கடந்த 100 ஆண்டுகளில் சைவம், அசைவம் என இரண்டு உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்குமே பருவம் எய்தும் காலம் அதிகரித்துள்ளது. முதலில் 17 என்று இருந்த நிலையில் தற்போது 11 மற்றும் 12 வயதுகளில் சிறுமிகள் பருவம் எய்துகிறார்கள். அதற்கு காரணம் உடலுக்கு தேவையான சரியான புரதச்சத்து கிடைப்பதுதான். 8 வயதுக்கு முன்பு ஒரு குழந்தை பருவம் எய்துவது தான் அது முன்னதாக பருவம் எய்துதல் எனப்படும். 12 வயதில் பருவம் எய்துதல் என்பது அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதன் அர்த்தம்” என்கிறார்.

பிராய்லர் கோழி

பட மூலாதாரம், Chandrasekar

படக்குறிப்பு, இந்த வகை கோழிகளில் வேதிப்பொருட்கள் மற்றும் கூடுதல் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை சேர்ப்பதால் அதை உண்பவர்களுக்கு தீங்கு உண்டாவதாக கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர்

மலட்டுத்தன்மை ஏற்படுமா?

கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழுவின் விதிகளை பின்பற்றாமல் செயல்படும் கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யும் கோழிகளை உண்பவர்களுக்கு கண்டிப்பாக தீங்கு ஏற்படலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி.

இதே கருத்தை ஆமோதிக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர், இந்த வகை கோழிகளில் வேதிப்பொருட்கள் மற்றும் கூடுதல் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை சேர்ப்பதால் அதை உண்ணும் மனிதர்களின் உடல்நலத்திற்கு தீங்கு உண்டாவதாக கூறுகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “சில சமயங்களில் ஆயிரக்கணக்கான கோழிகள் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் கூடுதல் இறைச்சிக்காக அந்த கோழிகளின் ஈஸ்ட்ரோஜன்களுக்குள் வேதிப்பொருட்கள் செலுத்தப்படுகின்றன. மேலும் வேறு எந்த வைரஸும் தாக்கிவிடாமல் இருப்பதற்காக அதிக செறிவுள்ள ஆண்டிபயாட்டிக் மருந்துகளை அவற்றின் உணவுகளில் கலந்துக் கொடுக்கின்றனர்.”

இந்த வேதிப்பொருட்களை எண்டோகிரைன் டிஸ்ரப்ட்டர்ஸ் (endocrine disruptors) என்று கூறுவார்கள்.

இதுபோன்ற வேதிப்பொருட்களை உட்கொள்ளும் ஆண்கள், பெண்கள் என எந்த பாலினத்தவருக்கும் மலட்டுத்தன்மை, சினைப்பை கட்டிகள், இளம்வயதில் பருவம் எய்துதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்று கூறுகிறார் எஸ். சந்திரசேகர்.

இந்த நோய்கள் ஏற்பட வேதிப்பொருட்கள் கலந்த பிராய்லர் கோழிகள் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும், அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது என்கிறார் அவர்.

பிராய்லர் கோழி

பட மூலாதாரம், DOCTOR ARUNKUMAR

படக்குறிப்பு, பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் எந்த விதமான பாதிப்பும் மனிதர்களுக்கு ஏற்படாது என உறுதியாக கூறுகிறார் மருத்துவர் அருண்குமார்.

‘மனிதர்களை பாதிக்க வாய்ப்பில்லை’

ஆனால், பிராய்லர் கோழி வளர்ப்பில் ஆண்டிபயாட்டிக்ஸ் பயன்பாடு கட்டுக்கடங்காமல் இருந்தாலும், மனிதர்களுக்கு இதனால் நேரடி பாதிப்பு இருக்காது என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

அவர் கூறுகையில், “மனிதர்களுக்கு . நாம் மனிதர்களுக்கு பார்த்து பார்த்து வழங்கும் ஆண்டிபயாட்டிக்ஸ்களை, கோழிகளில் வெகு இயல்பாக பயன்படுத்துகின்றனர். அது மட்டுமே இந்த துறையின் ஒரே பின்னடைவு. ஆனாலும், அதை உண்ணும் மனிதர்களை அது நேரடியாக தாக்குவதில்லை” என்கிறார்.

மேலும், “அதிக ஆண்டிபயாட்டிக்ஸ் வழங்கப்படுவதால் அவற்றின் உடலில் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. இவை அதன் எச்சங்களாக வெளியேறிவிடும். அப்படி அதிலிருந்து ஏதாவது தொற்று வெளியேறி மறைமுகமாக பாதிப்பு ஏற்பட்டால் தான் உண்டே தவிர மற்றபடி பிராய்லர் கோழிகளை உண்ணும் மக்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பே இல்லை” என்று கூறுகிறார் அவர்.

எனவே பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் எந்த விதமான பாதிப்பும் மனிதர்களுக்கு ஏற்படாது என உறுதியாக கூறுகிறார் மருத்துவர் அருண்குமார்.

சரத் கூறுகையில், “பிராய்லர் கோழிகள் மிகவும் உணர்திறன்(Sensitive) மிக்கது. எனவே தேவையான அளவை விட குறைவாத தான் ஆண்டிபயாட்டிக் வழங்கப்படுகிறது. அதுவும் கால்நடை மருத்துவரின் வழிகாட்டுதலின்படியே வழங்கப்படுகிறது. அதற்கும் ‘Withdrawal limit’ உள்ளது. அது குறிப்பிட்ட நோயை குணப்படுத்துமே தவிர, அதிலிருந்து வெளியேறி மனிதர்களை தாக்க வாய்ப்பே இல்லை. அறிவியல்பூர்வமாக அது சாத்தியம் இல்லை” என்கிறார்.

பிராய்லர் கோழி
படக்குறிப்பு, மீனாட்சி பஜாஜ், ஊட்டச்சத்து நிபுணர்

பிரியாணி சாப்பிடுபவர்கள் என்ன செய்யலாம்?

சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி, இந்தியாவில் கடந்த வருடம் உணவு டெலிவரி நிறுவனங்கள் வழியாக வாங்கப்பட்ட உணவுகளில் பிரியாணியே முதலிடம். இந்தியர்கள் ஒவ்வொரு 2.25 வினாடிகளுக்கு ஒரு பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.

அதில் அதிக இடத்தை பிடித்துள்ளது சிக்கன் பிரியாணியே. ஆனால், அப்படி அதிக கோழிகளை உட்கொள்வதால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், ஒரு அளவாக அதை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி.

அவர் கூறுகையில், “ஒரு வாரத்தில் மூன்று முறை, ஒரு முறைக்கு 100 கிராம் என்ற அளவில் கோழி இறைச்சியை எடுத்துக் கொள்ளலாம். அதுவும் பொறித்தோ, வறுத்தோ அல்ல, வேக வைத்து அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிடலாம். அதுவே பிரியாணி என்றால் குறிப்பிட்ட அளவில் மாதத்தில் இரண்டு முறை சாப்பிடலாம். ஆனால், வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும்” என்கிறார்.