ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம், SPORTZPICS

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

பவர்ப்ளேவில் 92 ரன்கள், 38 பந்துகள் மீதமிருக்கையில் மிகப்பெரிய வெற்றி, புள்ளிப்பட்டியலில் திடீர் முன்னேற்றம், இதுபோன்ற ஆட்டத்தைத்தான் ரசிகர்கள் ஆர்சிபி அணியிடம் எதிர்பார்த்தனர்.

ஆனால் அனைத்தும் காலம் கடந்து நடக்கிறது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வென்றாலும் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லுமா என்பது விவாதப் பொருள்தான். தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்த ஆர்சிபி நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ‘ஹாட்ரிக் வெற்றி’யை பதிவு செய்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 52வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 38 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த சீசனில் லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய இரு ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேஸிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ஆர்சிபி பெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்திலும் வென்றது.

ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா?

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம், SPORTZPICS

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் மைனஸ் 0.049 எனக் குறைந்துள்ளது. ஆர்சிபி அணி தனக்கு இருக்கும் அடுத்த 3 ஆட்டங்களில் வென்றாலும்கூட 14 புள்ளிகள்தான் கிடைக்கும். இந்தப் புள்ளிகள் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கக்கூட போதாது. ஆனாலும், தற்போது வரை ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து ஆர்சிபி வெளியேறவில்லை என்பதுதான் நிதர்சனம்.

கணித அடிப்படையில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். அதற்கு இவையெல்லாம் நடந்தால் சாத்தியம். முதலில் ஆர்சிபி அணி மீதமிருக்கும் 3 ஆட்டங்களையும் வெல்ல வேண்டும், அதேநேரம் லக்னெள அணி அல்லது சன்ரைசர்ஸ் அணி தனக்கு மீதமிருக்கும் ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று மற்ற ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்போது 14 புள்ளிகளோடு முடிக்கும்போது நிகர ரன்ரேட் பார்க்கப்படும்.

இரண்டாவதாக சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது 10 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகள் தங்களுக்கு இருக்கும் 4 ஆட்டங்களில் இரு வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும், இரு போட்டிகளில் தோற்க வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் தனக்கிருக்கும் 4 ஆட்டங்களில் 3 போட்டிகளுக்கு மேல் வெல்லக்கூடாது, ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால் 14 புள்ளிகளுடன் 6 அணிகளும் இடம்பெற்று நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

மூன்றாவதாக ஆர்சிபி அணி ஒருவேளை 12 புள்ளிகளுடன் முடித்தாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாம். எப்படியென்றால் மேலே கூறப்பட்ட 5 அணிகளில் சிஎஸ்கே, டெல்லி, ஒரு வெற்றிக்கு மேல் பெறக்கூடாது, லக்னெள அல்லது சன்ரைசர்ஸ் அணி இனிமேல் வெல்லவே கூடாது, பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும், இவ்வாறு நடந்தால் 6 அணிகளும் 12 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

இவை நடப்பது சாத்தியமென்றால், ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்று செல்வதும் சாத்தியமே.

குஜராத் அணி வெளியேறுகிறது

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம், SPORTZPICS

முன்னாள் சாம்பியன், கடந்த சீசனில் 2வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் லீக் போட்டிகளோடு இந்த சீசனில் வெளியேற உள்ளது.

குஜராத் அணி இதுவரை 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் குஜராத் அணி வென்றாலும்கூட14 புள்ளிகள்தான் கிடைக்கும். இது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லப் போதுமான புள்ளிகளாக இருக்காது. ஒருவேளை கணித அடிப்படையில் குஜராத் அணிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினாலும், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.320 என்று மோசமாக இருக்கிறது. அடுத்த 3 ஆட்டங்களிலும் பிரமாண்ட வெற்றி பெற்றால்தான் நல்ல ரன்ரேட்டை பெற முடியும்.

ஆதலால், ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை, ஆர்சிபி, குஜராத் ஆகிய 3 அணிகள் வெளியேறுகின்றன. ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்கு 7 அணிகள் மட்டுமே தற்போது ரேஸில் உள்ளன.

ஆர்சிபி அணி வெற்றிக்கு அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், கேப்டன் டூப்ளெஸ்ஸி, விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கும்தான் காரணம். ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் பயன்படுத்திய முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா, கேப்டன் கில் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தியது குஜராத் அணியை பெரிய அதிர்ச்சியில் தள்ளியது.

டுப்ளெஸ்ஸியின் பதற்றம்

ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில், “கடந்த சில போட்டிகளாக நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நன்றாகச் செயல்படுகிறோம். பேட்டிங்கில் ஆக்ரோஷம், ஃபீல்டிங்கில் நம்ப முடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸர் இருந்ததை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

கேட்சுகளை நாங்கள் கோட்டைவிட்டாலும், ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தோம். 180 முதல் 190 ரன்கள் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர். நாங்கள் ஸ்கோர் போர்டை பார்ப்பதில்லை, ஆட்டத்துக்கு என்ன தேவையோ அதை விளையாடுகிறோம்.

திடீரென வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தவுடன் நான் பதற்றமடைந்தேன். இந்த வெற்றி போதாது, நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

ஆர்சிபியின் சாதனைகள்

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம், SPORTZPICS

பேட்டிங்கை பொறுத்தவரை பவர்ப்ளேவில் வெளுத்து வாங்கிய டுப்ளெஸ்ஸி, கோலி, ஆர்சிபி அணிக்கு 92 ரன்கள் சேர்த்தனர். அதேநேரம், குஜராத் அணி பவர்ப்ளேவில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள்தான் சேர்த்திருந்தது. குஜராத் அணியின் பவர்ப்ளே ஸ்கோருக்கும், ஆர்சிபி பவர்ப்ளே ஸ்கோருக்கும் இடையே 69 ரன்கள் இடைவெளி இருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளே ஸ்கோரில் இதுபோன்று மிகப்பெரிய வேறுபாடு இருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன் கடந்த 2017இல் ஆர்சிபி 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தநிலையில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய வேறுபாடாக இருந்தது.

குஜாரத் அணி பவர்ப்ளேவில் சேர்த்த 23 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் அந்த அணியின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோர். இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் 30 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆர்சிபி அணி பவர்ப்ளேவில் 92 ரன்கள் என்பது எந்த அணிக்கும் எதிராக பவர்ப்ளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேவில் 79 ரன்களும், 2011இல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக 79 ரன்கள் சேர்த்ததுதான் ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

ஆர்சிபி அணி 38 பந்துகள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணிக்கும் எதிராக அதிகமான பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று ஆர்சிபி சாதனை படைத்தது. இதற்குமுன் கொல்கத்தா அணி 34 பந்துகள் மீதமிருக்கையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.

குஜராத் மீது ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம், SPORTZPICS

குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 26 ஓவர்களில் ஆர்சிபி ஆதிக்கம் செலுத்தியது. பந்துவீச்சில் 20 ஓவர்களும் ஆர்சிபியின் கட்டுப்பாட்டிலும், சேஸிங்கின்போது பவர்ப்ளேவில் 6 ஓவர்களும் ஆர்சிபி வீர்ரகள்தான் கோலோச்சினர்.

நடுப்பகுதியில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆர்சிபி படபடவென இழந்தாலும், சுதாரித்து வெற்றியை அடைந்தது. தினேஷ் கார்த்திக்(21), ஸ்வப்னில் சிங்(15) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் சேர்த்த அதே ஆடுகளத்தில்தான் நேற்றைய ஆட்டமும் நடந்தது. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன் சிறிது மழை பெய்ததால் விக்கெட்டின் தன்மை ஒட்டுமொத்தமாக மாறியது.

ஆடுகளம் வேகப்பந்துவீச்சில் ஸ்விங் செய்ய நன்கு ஒத்துழைத்ததால், அதை சிராஜ், யாஷ் தயால் நன்கு பயன்படுத்திக் கொண்டு குஜராத் பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தனர். முகமது சிராஜ் தனது முதல் ஓவரில் சஹாவை(1) வெளியேற்றினார். இதுவரை 6 இன்னிங்ஸில் சஹாவை 4 முறை சிராஜ் ஆட்டமிழக்க வைத்துள்ளார். சிராஜ் தனது 2வது ஓவரில் கில்(2) விக்கெட்டை வீழ்த்தி குஜராத் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் குஜராத் அணிக்கு முதுகெலும்பாக இருக்கும் சாய் சுத்ரசன்(6) விக்கெட்டை கேமரூன் கிரீன் வீழ்த்த குஜராத் அணி ஆழ்ந்த சிக்கலுக்குச் சென்றது.

அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான்(37), மில்லர்(30), திவேட்டியா(35) ஆகியோர் குஜராத் அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றும் முடியவில்லை. அதன்பின் களமிறங்கிய கடைசி வரிசை பேட்டர்களுக்கு பவுன்ஸர்களையும், ஷார்ட் பந்துகளையும் வீசி ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணறடிக்கவே, குஜராத் அணி 147 ரன்களுக்கு வீழ்ந்தது.

குஜராத் அணி 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 16 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிலும் வியாசக் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை குஜராத் இழந்தது.

மிரட்டலான சேஸிங்

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம், SPORTZPICS

இந்த ஆடுகளத்தில் 148 ரன்கள் இலக்கை விரைவாக அடைய வேண்டுமெனில் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கக் கூடாது என்பதை உணர்ந்து டூப்ளெஸ்ஸி, கோலி அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். மோகித் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே கோலி ஓவர் கவர் திசை, மிட்விக்கெட்டில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

ஜோஸ் லிட்டில் வீசிய 2வது ஓவரில் டூப்ளெஸ்ஸி சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களை விளாசினார். மனவ் சத்தார், மோகித் ஓவரை டூப்ளெஸ்ஸி வெளுக்கவே, ஆர்சிபி அணி 3.1 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது.

மனவ் சத்தார் ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை கோலி பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய டூப்ளெஸ்ஸி 18 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஆர்சிபி அணிக்காக 2வது அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை டூப்ளெஸ்ஸி பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 17 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். பவர்ப்ளேவில் ஆர்சிபி அணி 92 ரன்கள் சேர்த்தது.

பவர்ப்ளேவில் 92 ரன்கள் சேர்த்திருந்தபோதே ஏறக்குறைய ஆட்டம் முடிந்துவிட்டது, ஆர்சிபி வெற்றி உறுதியானது. லிட்டில் வீசிய ஓவரில் டூப்ளெஸ்ஸி 64 ரன்கள்(23 பந்துகள், 10 பவுண்டரி, 3 சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பவர்ப்ளே ஓவருக்குள் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்களை சேர்த்த முதல் பேட்டர் என்ற பெருமையையும் டூப்ளெஸ்ஸி பெற்றார். அதன்பின் ஆர்சிபி அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

நூர் முகமது பந்துவீச வந்ததும், அவரின் பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் நோக்கி நகர்ந்த விராட் கோலி 42 ரன்னில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம், SPORTZPICS

லிட்டில் வீசிய 8வது ஓவரில் பட்டிதார்(2), மேக்ஸ்வெல்(4) ரன்னில் விக்கெட்டைஇழந்தனர். இந்த சீசன் முழுவதும் இதுவரை மேக்ஸ்வெல் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் வரை இருந்த ஆர்சிபி அணி 117 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 25 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது.

சின்னச்சாமி அரங்கமே மௌனமானது. 7வது விக்கெட்டுக்கு வந்த தினேஷ் கார்த்திக், ஸ்வப்னிங் சிங் அதிரடியாக சில பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்து, வெற்றி பெற வைத்தனர். டிகே(21), ஸ்வப்னில்(15) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

காபி குடிப்பதற்குள் ஆட்டம் மாறியது

ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “டூப்ளெஸ்ஸி, கோலி ஆட்டத்தைப் பார்த்தபோது, நான் களமிறங்க வேண்டிய தேவை இருக்காது என நினைத்து ரிலாக்ஸாக ஒரு காபி குடிக்கத் தொடங்கினேன்.

ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தவுடன் நான் பேட்டிங் செய்ய வேண்டி வந்தது. எனக்குரிய வேலையைச் செய்துவிட்டேன். விக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது, லேசான ஈரப்பதம் இருந்தது. டாஸை வென்றோம், போட்டியையும் வென்றோம்,” எனத் தெரிவித்தார்.