ரோஹித் வெமுலா வழக்கு: நாட்டையே உலுக்கிய வழக்கில் போலீஸ் நீதிமன்றத்தில் அளித்த சர்ச்சைக்குரிய அறிக்கை

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், ROHITH VEMULA’S FACEBOOK PAGE

  • எழுதியவர், பல்லா சதீஷ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ரோஹித் வெமுலா விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை சமர்ப்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் போலீசார் அளித்த அறிக்கையில், ரோஹித் வெமுலா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று கூறப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் காவல்துறையின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த தெலங்கானா அரசு, இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், UGC

ரோஹித் தற்கொலை சர்ச்சை என்ன?

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் வெமுலா ரோஹித் சக்ரவர்த்தி 2016 ஜனவரி 17 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக ரோஹித் வெமுலா கல்லூரி வளாகத்தில் சில இயக்கங்களில் பங்கேற்றது, வெமுலா பற்றி அப்போதைய பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியது, ரோஹித் வெமுலாவின் உதவித்தொகை நிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இந்தப் பின்னணியில் ரோஹித் வெமுலா தற்கொலைக்குப் பிறகு மாணவர் அமைப்புகள் பெரிய அளவில் கொதிப்படைந்தன. பல்கலைக்கழக நிர்வாகம், பாஜக தலைமை, ஏபிவிபி மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரின் துன்புறுத்தலால் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மாணவர் சங்கங்கள் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றன.

அம்பேத்கர் மாணவர் சங்கம் (ASA) இந்த இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்றது. இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இருப்பினும், ரோஹித்தின் தற்கொலைக்கும் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனிப்பட்ட காரணங்களால் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதில் சாதிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி பாஜக மற்றும் ஏபிவிபி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. ரோஹித், தலித் அல்ல என்பதே பாஜகவின் வாதமாக இருந்தது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து பல்கலைக்கழக விடுதி காப்பாளரும் மாணவர் சங்க தலைவருமான டோண்டா பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் கச்சிபௌலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அப்போதைய பல்கலைக் கழக துணைவேந்தர் பொடிலே அப்பாராவ், செகந்திராபாத் எம்பி பண்டாரு தத்தாத்ரேயா, பாஜக சட்ட மேலவை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், கிருஷ்ண சைதன்யா, நந்தன் சுஷில் குமார், நந்தன் திவாகர் ஆகியோரின் துன்புறுத்தலால் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாக பிரசாந்த் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் தற்கொலைக்கு எதிராக நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டம் (கோப்பு படம்)

முன்னதாக 2015 முதல் பல்கலைக் கழகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக ஏபிவிபி மற்றும் அம்பேத்கர் மாணவர் சங்கம் ஆகிய மாணவர் அமைப்புகளுக்கு இடையே தகராறுகள் தொடர்ந்தன. இந்த மோதல்களில் பாஜக தலைவர்கள் தலையிடுவதாகவும், அவர்களுக்கு துணைவேந்தர் உதவுவதாகவும் பிரசாந்த் தனது புகாரில் கூறியிருந்தார்.

இந்த குறுக்கீடு காரணமாக ரோஹித் வெமுலா மற்றும் சில மாணவர்கள் அநியாயமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், ரோஹித் வெமுலாவுக்கு வழங்கப்பட்ட ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜேஆர்எஃப்) உதவித்தொகை நிறுத்தப்பட்டதாகவும் புகார் கூறுகிறது. ஐபிசி தவிர, எஸ்சி மற்றும் எஸ்டி கற்பழிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஹித் வெமுலாவின் மரணத்திற்குப் பிறகு நடந்த போராட்டம், பிரேதப் பரிசோதனையைத் தடுப்பது போன்ற சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

எனினும், ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு பதில் அளித்து அரசு தாக்கல் செய்த மனுவில் போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை அடங்கியுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தெலங்கானா உயர் நீதிமன்றம், பேராசிரியர் அப்பாராவ் மற்றும் பாஜக தலைவர் ராமச்சந்திர ராவ் மற்றும் பலர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கின் இறுதி அறிக்கையில் போலீஸ் என்ன எழுதியுள்ளது?

ரோஹித் வெமுலாவின் மரணம் மற்றும் சாதி குறித்து 60 பக்க அறிக்கையை போலீசார் எழுதியுள்ளனர். இதில் ரோஹித் வெமுலா பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் (SC) அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

வெமுலா ரோஹித் தனது இடைநிலை மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் எஸ்சி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது தம்பி வெமுலராஜாவின் சாதிச் சான்றிதழில் வட்டேரா என்று எழுதப்பட்டுள்ளது. ரோஹித் வெமுலாவும் அவரது தந்தையும், வட்டேரா (BC-A) சாதியைச் சேர்ந்தவர்கள் என்று குர்ஜாலா தாசில்தார் கூறினார்.

ரோஹித்தின் சாதி குறித்த குழப்பத்தைத் தொடர்ந்து குண்டூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான விசாரணைக் குழுவை அமைத்தார். இதில் இணை ஆட்சியர், துணை இயக்குநர் (பின்தங்கிய வகுப்பினர் நலன்), இணை இயக்குநர் (எஸ்சி நலன்) உள்பட 5 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். ரோஹித்தின் குடும்பம் வட்டேரா சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர் பெற்ற எஸ்சி சான்றிதழ்கள் பொய்யானவை என்றும், அவற்றை ரத்து செய்யுமாறு பரிந்துரைத்திருப்பதாகவும் போலீஸார் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

”வெமுலா ராதிகாவும் வட்டேரா சாதியைச் சேர்ந்தவர் என்று குண்டூர் மாவட்டத்தின் குர்ஜாலா தாசில்தார் அறிக்கை அளித்துள்ளார். இதற்கிடையில், ராதிகாவின் தாய் (வட்டேரா சாதியைச் சேர்ந்த பெண்), ராதிகா, ’மாலா’ குடும்பத்தில் இருந்து தத்தெடுக்கப்பட்டதாக பல ஊடக நிறுவனங்களிடம் கூறினார்.

ஆனால்,’ நான் எங்கிருந்து தத்தெடுக்கப்பட்டேன், எந்தக் குடும்பத்தில் பிறந்தேன் என்பது தெரியவில்லை’ என்று ராதிகா கூறுகிறார். தான் எஸ்சி குடும்பத்தில் இருந்து தத்தெடுக்கப்பட்டதாகவும், கணவரை பிரிந்து எஸ்சி காலனியில் வசித்து வந்ததாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். “தாசில்தாரின் அறிக்கையின் அடிப்படையில் ரோஹித் எஸ்சி அல்ல என்பதால், எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்த வழக்கில் பொருந்தாது” என்று போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் வெமுலா மரணத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு அளித்தார் (கோப்பு படம்)

அந்த அறிக்கையில் சாதி மற்றும் ரோஹித் வெமுலாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் கூறப்பட்டுள்ளது. 2015 இல் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட போது, ஐதராபாத் மத்திய பல்கலைகழகம் HCU-வில் நடந்த போராட்டங்களால் தொடங்கிய வளாகக் கலவரம் மற்றும் அதன்பின் வந்த புகார்கள், அவர்கள் மீதான விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போலீஸார் அந்த அறிக்கையில் எழுதியுள்ளனர்.

ரோஹித் மீது பல்கலைக் கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கை பல்கலைக்கழக விதிகளின்படியே உள்ளதாக போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர்கள் எழுதிய கடிதங்கள் குறித்து, நடவடிக்கை எடுத்த குழுவுக்குத் தெரியாது என்றும், அவர்கள் சுதந்திரமாக முடிவெடுத்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ரோஹித் வெமுலா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தனிமை மற்றும் சிறுவயதில் இருந்தே எதிர்கொண்ட வாழ்க்கைப் பிரச்சனைகள்தான் ரோஹித் தற்கொலைக்குக் காரணம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என ரோஹித் தான் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும் தற்கொலைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், மாணவர்களை தூக்கிலிடுவது குறித்து போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ்சி இல்லையென்றாலும் தனது தாயார் தனக்கு எஸ்சி சான்றிதழ் கொடுத்துவிட்டார், அதனால் எதிர்காலத்தில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று ரோஹித் பயந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், எதன் அடிப்படையில் இந்த வாக்கியம் எழுதப்பட்டது என்பதை காவல்துறை தனது அறிக்கையில் விளக்கவில்லை.

இறுதியில், ‘ரோஹித்தின் மரணத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம்’ என்று கூறி போலீசார் தங்கள் அறிக்கையை முடித்துள்ளனர். புகாரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ரோஹித்தின் மரணத்திற்கு காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா

காவல்துறை அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு

காவல்துறையின் அறிக்கைக்கு சில மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து HCU பேராசிரியர் ஸ்ரீபதி ராமுடு பிபிசியிடம் பேசினார்.

”ரோஹித் ஒரு தலித் என்று அப்போதைய குண்டூர் மாவட்ட கலெக்டரே தேசிய எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்திருந்தார். ஆனால் யாரோ ஒருவர் புகார் அளித்தபோது அதைத் திருத்தி மற்றொரு குழு அமைத்து ரோஹித் எஸ்சி இல்லை என்று அறிக்கை கொடுக்கப்பட்டது. இரண்டு முரண்பட்ட அறிக்கைகள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்தின் முன்வைத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவல்துறை செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு அறிக்கையை மட்டும் காவல்துறை எப்படி நம்புகிறது?

இரண்டாவது அறிக்கையை போலீஸ் எடுத்துக்கொண்டது சதி என்று நான் சந்தேகிக்கிறேன். காவல்துறையின் உள்நோக்கம் குறித்தும் சந்தேகம் உள்ளது. ரோஹித் வெமுலாவின் சான்றிதழ் போலியானது என்றும் இந்த பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல்துறை எப்படி நினைக்கிறது? நீதிமன்றத்தில் அறிக்கை கொடுப்பதற்கான தேவை என்ன? குறைந்தபட்ச அடிப்படை இருக்க வேண்டாமா? அப்போது வருவாய்த் துறையினர் சாதிச் சான்றிதழ் தொடர்பாக வெமுலா ராதிகாவை கடுமையாகத் துன்புறுத்தினார்,” என்று பேராசிரியர் ராமுடு தெரிவித்தார்.

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், ROHITVEMULA/FB

பேராசிரியர் ஸ்ரீபதி ராமுடு, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகிறார்.

“அப்போது பேராசிரியர் அப்பாராவ் துணைவேந்தராக இருந்திருக்காவிட்டால் ரோஹித் காப்பாற்றப்பட்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். பிரச்னையை எளிதில் தீர்க்க அவர் அனுமதிக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தலித்துகள் மீதான வெறுப்பு மற்றும் பாகுபாடு. இரண்டாவது, உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு பெற வேண்டும் என்பது அவரது விருப்பம்,” என்றார் அவர்.

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் தனது வரலாற்றில் இரண்டு முறை மாணவர்களை வெளியேற்றியுள்ளது. இரண்டு முறையும் தலித் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னணியில் அப்பாராவ் முக்கிய பங்கு வகித்தார். இந்த கோணத்தை போலீசார் தொடவில்லை.

உண்மையில், இந்த வழக்கு அப்பாராவ் துணைவேந்தர் ஆவதற்கு முன்பே விசாரிக்கப்பட்டது. அப்போதைய துணைவேந்தரான ஷர்மா, இரு தரப்பு மாணவர்களும் தவறு செய்ததாகக் கூறி, கடுமையாக எச்சரித்து, பின்னர் கடைசியாக, நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கச் செய்தார். பிரச்னை இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்த போது துணைவேந்தராக வந்த அப்பாராவ் விஷயத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்தார்.

அதன் பிறகு அமைக்கப்பட்ட ஒரு குழு, ஐந்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கியது. இந்த ஐந்து பேரும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும் இரு குழுக்களையும் போலீசார் தங்கள் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்?” என்று பேராசிரியர் ராமுடு கேள்வி எழுப்பினார்.

“இறப்பதற்கு முன் எழுதிய இரண்டு கடிதங்களில், பல்கலைக் கழகத்தில் நடக்கும் பாகுபாடு குறித்து ரோஹித் தெளிவாக எழுதியிருந்தார். மன உளைச்சலைக் குறிப்பிட்டுள்ளார். இதையெல்லாம் விட்டுவிட்டு, சாதி உறுதி செய்யப்படாததால், வருங்காலத்தில் ஏதாவது பிரச்னை வரலாம் எனக்கருதி அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸ் தரப்பில் எழுத என்ன ஆதாரம் இருக்கிறது?” என்று அவர் வினவினார்.

உண்மையான வன்கொடுமை வழக்கை விசாரிக்க சாதி சரிபார்ப்பு அவசியம் என்று சட்டம் எங்கும் கூறவில்லை. அவரது சான்றிதழ் குண்டூர் ஆட்சியர் அலுவலகத்தில் சரிபார்ப்பின் கீழ் உள்ளது.

மறுபுறம், ரோஹித் வெமுலா தலித் என்பதற்கு 18 சான்றுகள் உள்ளன. இந்நிலையில், வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி, குண்டூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நடவடிக்கையை புறக்கணித்து, பதிவேடுகளை கொண்டு வராமல், அலட்சியமாக கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.” என்று அவர் கூறியுள்ளார்.

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை மாலை மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பதற்றம்

இந்த அறிக்கை வெளியானதையடுத்து, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தெலங்கானாவை ஆளும் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. “ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கை முடித்து வைப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு மாநில அரசிடம் முறையிடுகிறோம்” என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணைத் தலைவர் ஜி. நிரஞ்சன் கூறினார்.

தெலங்கானா டிஜிபி அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை ஒரு அறிக்கை வெளியானது.

“இந்த வழக்கின் இறுதி அறிக்கை கடந்த ஆண்டு அதாவது 2023 நவம்பருக்கு முன் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. அந்த இறுதி அறிக்கை விசாரணை அதிகாரியால் இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்யப்பட்டது. உயிரிழந்த ரோஹித் வெமுலாவின் தாயார் மற்றும் சிலர், விசாரணை மற்றும் விசாரணை செய்யப்பட்ட முறை குறித்து சந்தேகம் தெரிவித்ததால், இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா டிஜிபி அலுவலகம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்.” என்று கூறியது.

இதனால் வளாகத்தில் பதற்றம் தணிந்து அமைதி ஏற்பட்டது..

“இந்த அறிக்கை இறந்தவரை அவமதித்துள்ளது. அரசு மீண்டும் விசாரிக்கப் போகிறது. எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். இல்லையெனில் சட்டப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்,” என்று வழக்கறிஞர் ஜெய் பீம் ராவ் கூறினார்.

போலீசார் இந்த அறிக்கையை 2024 மார்ச் மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். முந்தைய பி.ஆர்.எஸ்.அரசு காலத்தில்தான் விசாரணை முடிந்ததாக டிஜிபி அலுவலகம் கூற முயன்றது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ரோஹித்தின் தாயும் சகோதரரும் சனிக்கிழமை காலை சந்தித்தனர்.

ரோஹித்திற்கு நீதி வழங்குமாறு அவரது தாயார் ராதிகா முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கை மீண்டும் விசாரித்து நீதி வழங்கப்படும் என முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா, “என் மகனின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு அவர்களிடம் கேட்டபோது, ரோஹித் தலித் இல்லை என்று கூறினார்கள். நான் ஒரு தலித். என் மகன் தலித் இல்லையா?” என்று வினவினார்.

பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளதாக ராதிகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரோஹித் வெமுலா - காவல்துறை அறிக்கை

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வேண்டுகோள் விடுக்கும் ராதிகா வெமுலா

ரோஹித் வெமுலாவின் தந்தை யார்?

ரோஹித் வெமுலாவின் தந்தை வெமுலா மணி குமார், குண்டூர் மாவட்டம் குர்ஜாலா பகுதியில் வசிப்பவர். இவரது மனைவி ராதிகா. அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்குப் பிறகு ராதிகா தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சி முகாம்களுடன் இணைந்து போராடிவருகிறார்.

அதே நேரத்தில் மணிகுமார் பாஜக கூட்டங்களில் கலந்துகொண்டு அந்த கட்சியை ஆதரித்து வருகிறார்.

பேராசிரியர் ராமுடு சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க பேராசிரியர் அப்பாராவ் மறுத்துவிட்டார். பாஜக தலைவர் ராமச்சந்திர ராவை பிபிசி தொடர்பு கொண்டது. அவரது பதில் எதிர்பார்க்கப்படுகிறது.