இலங்கை சுற்றுலா: குறைந்த செலவில் செல்ல விரும்புவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

பண்பாட்டு-கலாசார ரீதியாக தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தக் காரணத்திற்காகவும் அதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் இந்தத் தீவு நாட்டுக்குச் செல்ல தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்’ இலங்கை நிச்சயமாக இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியது.

தங்கள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது இலங்கை. 2023ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவில் இருந்தே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்தியாவிலிருந்து அதிகளவிலானோர் இலங்கைக்குப் பயணிப்பது தெளிவாகிறது. குறைந்த செலவில் பயணம், இ-விசா சலுகை போன்ற வசதிகளும் இந்தியர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

குறைந்த செலவில் எப்படி இலங்கைக்குச் செல்லலாம், இந்தியர்களுக்கு இலங்கையில் உள்ள வசதிகள் என்னென்ன, அங்கு நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.

இ-விசா சலுகை

குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லும் நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள், https://www.srilankaevisa.lk/ எனும் இணையதளத்தில் பயண ஆவணங்களைப் பதிவேற்றி, இ-விசா பெற்று இலங்கை செல்லலாம்.

சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இ-விசா வசதியை அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர், 2023இல் அறிவித்தது.

அதன்படி, இலங்கை செல்வதற்கு முன்பு, குறிப்பிட்ட இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு இ-விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-விசா மூலம் இலங்கையில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

குறைந்த பயண செலவு

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏராளமான விமான வசதிகள் உள்ளன. அதிலும் குறைவான பயண செலவிலேயே இலங்கை சென்று வர முடியும்.

சென்னையைச் சேர்ந்த ‘வேண்டர்லஸ்ட்’ எனும் பயண நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி கண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் விமான கட்டணம் குறைவாக இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலாவுக்காக இலங்கையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.

இலங்கை செல்வதற்கான நடைமுறை எளிதானது. விசா தேவையில்லை. இ-விசாவை ஆன்லைன் மூலமாகவே பெறலாம். ஒருவர் இலங்கை சென்றுவர 15,000-18,000 ரூபாய் இருந்தாலே போதுமானது,” என்கிறார்.

விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது பயணப்படகு ஒன்றையும் அரசு இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையிலிருந்து தனியார் கப்பல் மூலமாகவும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு பயணிக்கலாம் என பாலாஜி கண்ணன் தெரிவித்தார். கடல்வழிப் போக்குவரத்து எப்போதும் இருக்காது என்பதால், விமானப் பயணமே இலங்கை செல்ல ஏற்றது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமா?

குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

எந்தவொரு வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் இந்திய ரூபாயை அந்த நாட்டுப் பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்றினால்தான் நாம் அதைச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இதிலும் இலங்கை அரசு சலுகை வழங்கியிருக்கிறது.

அதாவது, இந்திய ரூபாயை அப்படியே யூபிஐ மூலமாக இலங்கையில் நாம் பயன்படுத்த முடியும். அதற்கென பெரும்பாலான இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதை நாம் ஸ்கேன் செய்தால், இந்திய ரூபாய் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்புக்கு மாற்றி அப்படியே பணத்தைச் செலுத்திவிடலாம்.

இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் பேசியபோது, “இது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு செய்துள்ள சலுகை. இதற்கென பல்வேறு இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

இதன்மூலம் எளிதாக பணத்தைச் செலுத்தலாம். இதனால், சுற்றுலாப் பயணிகள் இலங்கை பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தனர்.

ஆனால், இந்திய ரூபாயை கரன்சியாக அங்கு பயன்படுத்த முடியாது. எனினும், சில இடங்களில் யூபிஐ வசதி இல்லாமல் இருந்தால், அசௌகரியங்களைச் சமாளிக்க கொஞ்சம் பணத்தை இலங்கை ரூபாயாகவோ அமெரிக்க டாலர்களாகவோ மாற்றி வைத்திருப்பது நல்லது என்கிறார் பாலாஜி கண்ணன்.

மற்ற செலவுகள் எப்படி இருக்கும்?

இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதால், இன்னும் சில இடங்களில் சுற்றுலா வசதிகளுக்கான சேவைகள், பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கை பணத்தைவிட அதிகம் என்பதால், அதிக செலவு இருக்காது,” என்றார் பாலாஜி.

தவறவிடக்கூடாத இடங்கள்

இலங்கை சுற்றுலா

பட மூலாதாரம், Saiko3p/Getty Images

கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில் பயணம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய பயணம். அந்த ரயில் செல்லும் வழி மிக அழகு நிறைந்தது. மிகவும் மெதுவாக, 10 மணிநேரம் செல்லக்கூடிய இந்தப் பயணம், சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் இந்தப் பயணத்தின்போது நாம் பார்க்கக்கூடிய இடங்கள் மனதுக்கு மிக இனிமையாக இருக்கும்.

இலங்கை அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் போன நாடு. கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் உள்ளவர்கள், மிரிஸ்ஸ, பெந்தோட்டை போன்ற கடற்கரைகளுக்குச் செல்லலாம்.

காட்டுயிர்கள் மீதான ஆர்வம் கொண்டவர்கள் யால, உடவலவ போன்ற தேசிய காட்டுயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம். இங்கு, யானை, சிறுத்தை மற்றும் பலவகையான பறவைகளைக் காண முடியும்.

இலங்கையில் நிச்சயம் காண வேண்டிய மலைப்பிரதேசங்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய எல்ல, நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளின் அழகை அவசியம் காண வேண்டும்.

இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படும் சிகிரியா கோட்டை, தம்புள்ளை குகை கோவில், அனுராதபுரம் போன்றவற்றுக்கு இலங்கையின் கலை அழகை ரசிக்கச் செல்லலாம்.