ரேபரேலி தொகுதி: வெற்றி பெறுவதில் ராகுல் காந்தி முன் இருக்கும் சவால்கள் – பிபிசி கள ஆய்வு

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெறுவது ராகுல் காந்திக்கு எவ்வளவு பெரிய சவால்? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரேபரேலியில் ராகுல் காந்தி
  • எழுதியவர், அனுபவ் ஸ்வரூப் யாதவ்
  • பதவி, பிபிசி இந்திக்காக, ரேபரேலியில் இருந்து

வெள்ளிக்கிழமை காலை வரை அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது.

ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என்றும் ரேபரேலி தொடர்பாக கட்சி குழப்பமாக உள்ளது என்றும் வியாழன் இரவு வரை நம்பப்பட்டது. ஆனால் வியாழன் பின்னிரவில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை.

கடந்த 15 நாட்களாக ராகுல் காந்தி மற்றும் அமேதி தொடர்பாக இருந்து வந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி, ரேபரேலியில் இருந்து போட்டியிட முடிவு செய்தார். சோனியா காந்தியின் பிரதிநிதி கிஷோரி லால் ஷர்மா அமேதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, ரேபரேலி மக்களிடையேயும் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது.

இருப்பினும் ரேபரேலி மக்கள் ராகுல் காந்தியை நிராகரிக்கப் போகின்றனர் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

ரேபரேலி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி

ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.

மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராகுல் பாஜ்பாய் பேசுகையில், “ராகுல் காந்தி, இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பற்றிப் பேசுகிறார். நாட்டில் உள்ள ஊழல் அரசுக்கு எதிராகப் போராடுகிறார். அவர் ரேபரேலியில் இருந்து போட்டியிடுவது எங்கள் அதிர்ஷ்டம்,” என்றார்.

சோனியா காந்தியின் பிரதிநிதி கிஷோரி லால் ஷர்மா, ரேபரேலி மற்றும் அமேதியில் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் மே 1ஆம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தினார் என்பதும் சுவாரசியமானது. அந்தக் கூட்டத்தில்கூட ரேபரேலி மற்றும் அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை.

ஆனால் காலையில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற தகவல் வந்ததும் மாவட்ட அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது.

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெறுவது ராகுல் காந்திக்கு எவ்வளவு பெரிய சவால்? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும்போது திரண்ட ஆதரவாளர்கள்.

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருடன் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றார்.

அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களின் கூட்டமும் காணப்பட்டது. ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிட இருப்பதை அடுத்து, இந்தியா கூட்டணியில் இருந்து பிரதமர் வேட்பாளரைத் தாங்கள் தேர்வு செய்யப் போகிறோம் என்று கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

“காந்தி குடும்பம் எப்போதும் இங்கிருந்து வெற்றி பெற்று வந்துள்ளது. இம்முறை முதல்முறையாக ராகுல் காந்தி இங்கு போட்டியிடுகிறார். அவர் இந்தியா கூட்டணியின் முகம். அவர் குறைந்தது 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்,” என்று காங்கிரஸ் தொண்டர் முகமது அக்ரம் கூறினார்.

காங்கிரஸின் வலிமையான கோட்டை ரேபரேலி தொகுதி

ரேபரேலி தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், குடும்பம் தனக்கு நெருக்கமான ஒருவரை இங்கிருந்து களமிறக்கிய சில சந்தர்ப்பங்களும் உள்ளன.

சோனியா காந்திக்கு முன் ராஜீவ் காந்தியின் நண்பரான கேப்டன் சதீஷ் ஷர்மா இங்கிருந்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் 2004 முதல், சோனியா காந்தி தொடர்ந்து ரேபரேலி எம்.பி.யாக இருந்து வருகிறார். 2024 மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு முன் ரேபரேலி எம்பி சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு சென்றுவிட்டார்.

அதன்பிறகு ரேபரேலியில் இந்த முறை தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்ற ஆர்வம் ரேபரேலி மக்களிடையே எழுந்தது. சுமார் 20 ஆண்டுகளாக ரேபரேலி எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

சோனியா காந்தி தனது உணர்ச்சிகரமான செய்தியின் முடிவில், “இதுவரை நீங்கள் என்னையும் என் குடும்பத்தையும் ஒவ்வொரு கஷ்டத்திலும் தாங்கியது போலவே இனியும் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று எழுதியிருந்தார்.

அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்று முதலில் பேசப்பட்டது. ரேபரேலியில் இருந்து ராகுல் காந்தி போட்டியிடுவதன் பின்னணியில் உள்ள உத்தி குறித்துப் பேசிய ரேபரேலியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் திரிவேதி, “ராகுல் காந்தி தனது தாயின் பாரம்பரியத்தைத் தனதாக்கிக்கொள்ள வருகிறார். இது காங்கிரசுக்கு சாதகமான செய்தி. கிஷோரி லால் ஷர்மா காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர். எனவே அமேதியில் தேர்தல் களத்தில் அவர் வலுவாக நிற்பார்,” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தொண்டர்கள் என்ன சொல்கிறார்கள்?

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெறுவது ராகுல் காந்திக்கு எவ்வளவு பெரிய சவால்? - பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் பாஜ்பாய் மற்றும் சகுத்லா மெளரியா

ரேபரேலி காங்கிரசுடன் எப்போதும் இருந்து வந்துள்ளது, தொடர்ந்து இருக்கும் என்று காங்கிரஸ் தொண்டர் சகுந்தலா மெளரியா கூறினார்.

”தற்போதைய ஆட்சியில் விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. பயிரைப் பார்த்து விவசாயிகளின் கண்களில் கண்ணீர் வருகிறது. இப்படி ஒரு அரசு இருக்க வேண்டுமா? இந்தியாவின் நிலத்தையும் விவசாயிகளையும் காங்கிரஸ் அலங்கரித்தது. கால்வாய்களைக் கொடுத்தது. கால்வாய்கள் இல்லாதிருந்தால், விவசாய சகோதரர்களிடையே தங்கள் பயிர்கள் குறித்து உற்சாகம் இருந்திருக்காது,” என்றார் அவர்.

“பள்ளிகளும் மருத்துவமனைகளும் காங்கிரஸ் அளித்தவை. அதை நீங்கள் காட்டினால் எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். எங்களுக்கு வேலை வேண்டும். எங்களுக்கு மோதி மீது எந்த அலர்ஜியும் இல்லை,” என்று சகுந்தலா மெளரியா குறிப்பிட்டார்.

“ராகுல் காந்தியை ரேபரேலியில் நிறுத்தியதன் மூலம் காங்கிரஸ் மாஸ்டர் ஸ்ட்ரோக்கை ஆடியுள்ளது. ரேபரேலி அவரது தாயாரின் தொகுதி. ராகுல் காந்தி நாட்டின் பிரதமராகப் போகும் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார். ராகுல் காந்தி வயநாட்டிலும் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியை ராஜினாமா செய்தால் இங்கு இடைத்தேர்தல் வரும். ஒருவேளை ரேபரேலியில் அப்போது பிரியங்கா காந்திதான் வேட்பாளராக இருப்பார்,” என்று மாவட்டத்தில் உள்ள ஒரு செய்தியாளர் சாந்த் கான் கூறினார்.

ரேபரேலி காந்தி குடும்பத்தின் வலிமையான கோட்டையாக இருந்து வருகிறது. இந்திரா காந்தி ரேபரேலி எம்.பி.யாக இருந்தபோது நாட்டின் பிரதமராக இருந்துள்ளார்.

ஆனால் 1977இல் எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்தி தேர்தலில் ஜனதா கட்சியின் ராஜ் நாராயணனிடம் தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியின் மூன்றரை ஆண்டுகளுக்குள் ரேபரேலி மக்கள் 1980இல் இந்திரா காந்தியை மீண்டும் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும் அவர் இந்தத் தொகுதியை விட்டுவிட்டு மேடக் தொகுதியை வைத்துக் கொண்டார்.

“அமேதி காங்கிரஸின் ஆரம்பப் பள்ளிக்கூடம். கிஷோரி லால் ஷர்மா காந்தி குடும்பத்தின் ஓர் உறுப்பினர் போலத்தான். அதனால்தான் அவர் அமேதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,” என்று அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவை களமிறக்குவது குறித்து சாந்த் கான் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி ரேபரேலி சென்றடைந்தபோது பாஜக ஆதரவாளர்கள் ராகுல் காந்திக்கு எதிராக ‘ராகுல் காந்தி திரும்பிச் செல்’ என்று கோஷங்களை எழுப்பினர்.

”ராகுல் காந்தி, ரேபரேலிக்கு வந்தபோது எதிர்ப்பைச் சந்தித்தார். கடந்த 5 ஆண்டுகளாக ரேபரேலி எம்.பி.யாக இருந்தபோதும், சோனியா ரேபரேலிக்கு வரவில்லை. இது தொடர்பாக ரேபரேலி மக்களிடையே கோபம் உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது முற்றிலும் சாத்தியமற்றது,” என்று தொழிலதிபரும், பாஜக ஆதரவாளருமான அனூப் திரிபாதி கூறினார்.

பாஜக சார்பில் தினேஷ் சிங் போட்டி

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெறுவது ராகுல் காந்திக்கு எவ்வளவு பெரிய சவால்? - பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, வேட்புமனு தாக்கல் செய்யும் தினேஷ் சிங்

மறுபுறம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தினேஷ் சிங் மீண்டும் தேர்தல் களத்தில் உள்ளார். அவரும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் பாஜக தொண்டர்களின் கூட்டம் காணப்பட்டது. இருப்பினும் ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாகவே இருந்தது.

“ராகுல் காந்தி தோல்வி அடைந்துவிடுவாரோ என்று காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால்தான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது குடும்பத்தினர் அனைவரும் வந்துள்ளனர். முதல் முறையாக காங்கிரஸ் தலைவரும் வந்துள்ளார். பயப்படாதீர்கள் என்று சொல்பவருக்கு எவ்வளவு பயம் உள்ளது என்பதை இது காட்டுகிறது. அவருடன் சோனியா, கார்கே மற்றும் பிரியங்கா வந்திருக்கிறார்கள். என்னுடன் ரேபரேலி மக்கள் வந்துள்ளனர்,” என்று வேட்புமனு தாக்கல் செய்த பின் ராகுல் காந்தியை குறிவைத்து அவர் கூறினார்.

தினேஷ் சிங்கின் வேட்புமனு தாக்கலின்போது மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கும் வந்திருந்தார். தனது பேரணியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் தினேஷ் சிங் கூறினார்.

”இது தினேஷ் சிங்கின் வேட்புமனு தாக்கல் ஊர்வலம் அல்ல. வெற்றி ஊர்வலம். ராகுல் காந்திக்கு டாடா பை-பை…,” என்று இந்து யுவ வாஹினியின் பொதுச் செயலர் மாருத் திரிபாதி குறிப்பிட்டார்.

“ராகுல் காந்தியை காங்கிரஸ் ரேபரேலியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ராகுல் அமேதியில் இருந்து வயநாடுக்கும், வயநாட்டில் இருந்து ரேபரேலிக்கும் வந்துள்ளார். ரேபரேலியில் இருந்து இத்தாலிக்கு செல்வார். இதை நிறைவேற்றும் லட்சியத்துடன் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவோம். பாஜக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து தாமரையை மலரச் செய்வோம்,” என்று பாஜக தலைவர் சசிகாந்த் சுக்லா தெரிவித்தார்.

காந்தி குடும்பத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெறுவது ராகுல் காந்திக்கு எவ்வளவு பெரிய சவால்? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், ANI

ரேபரேலியில் காந்தி குடும்பத்தினர் மீது எந்தவிதமான கோபமும் காணப்படவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சோனியா காந்தி எம்.பி.யாக இருந்தபோது, ரேபரேலிக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ரெயில் கோச் பேக்டரி, எய்ம்ஸ் மற்றும் நிஃப்ட் போன்ற அமைப்புகள் கிடைத்தன.

ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் இருந்து வெளியேறியதும் சோனியா காந்தியின் ரேபரேலி வருகைகள் குறைந்தன. மத்தியில் ஆட்சி இல்லாததால் சோனியா காந்தியிடம் ரேபரேலி மக்களுக்குக் கொடுக்க எம்பி நிதித் திட்டங்களின் பலன்களைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

எம்பி சோனியா காந்தி ரேபரேலிக்கு வருவதில்லை என்று பாஜக தலைவர்கள் பலமுறை இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளனர். ஆனால் அதன் தாக்கம் ரேபரேலியின் சாமானிய இளைஞர்களிடம் அதிகம் காணப்படவில்லை.

”ரேபரேலியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி. இங்கு இருக்கும் அனைத்துமே காங்கிரஸின் பங்களிப்புதான். கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக ரேபரேலியில் எந்தப் பணியையும் செய்யவில்லை,” என்று ரேபரேலியை சேர்ந்த இளைஞர் சஞ்சய் யாதவ் கூறினார்.

அஷ்வினியும் இதை ஒப்புக்கொள்வதாகவே தெரிகிறது. “ரேபரேலியில் காணப்படும் எல்லா வளர்ச்சியையும் காங்கிரஸ்தான் செய்தது. 10 ஆண்டுகளில் பாஜக எதையும் செய்யவில்லை. ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசுப் பணிக்குத் தயாராகி வரும் பூஜா படேல், “ராகுல் காந்தி ரேபரேலியில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், அவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். அவர் இளைஞர்களைப் பற்றிப் பேசுகிறார். நாங்கள் கஷ்டப்படுகிறோம், வேலைகள் வருகின்றன. ஆனால் கேள்வித்தாள்கள் கசிந்துவிடுகின்றன. அவர் மாணவர்களைப் பற்றிப் பேசுவதால் ராகுல் காந்தி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, ராகுல் காந்தி எளிதில் வெற்றி பெறுவார்,” என்று கூறினார்.

“காந்தி குடும்பத்தில் இருந்து வேட்பாளர் வருவார் என நீண்ட காலமாகவே ஊகங்கள் நிலவின. ராகுலின் வருகையால் உற்சாகம் அதிகரித்துள்ளது. கடந்த முறையும் தினேஷ் பிரதாப் நன்றாகவே தேர்தலில் போட்டியிட்டார். மூன்று லட்சத்து 68 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார். கடந்த முறை மோதி அலை வீசியது. இப்போது தினேஷ் பிரதாப் சிங் மாநில அரசில் அமைச்சராக இருக்கிறார். ஆனால் எந்த அலையும் காணப்படவில்லை. எனவே தேர்தல் சுவாரசியமாக இருக்கும்,” என்று ரேபரேலியின் மூத்த செய்தியாளர் சஞ்சய் மெளரியா குறிப்பிட்டார்.

சாதி சமன்பாடு சொல்வது என்ன?

ரேபரேலி தொகுதியில் சுமார் 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சாதிப் புள்ளிவிவரங்கள் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை என்றாலும் அதிக எண்ணிக்கையிலான தலித் வாக்காளர்கள் ரேபரேலியில் உள்ளனர் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ரேபரேலியில் சுமார் 35 சதவீத தலித் வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் எண்ணிக்கை சுமார் நாலரை லட்சம்.

பிராமணர்கள், யாதவர்கள் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் தலா சுமார் 12 சதவீதம் உள்ளனர். ராஜ்புத் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து சதவீதம். லோதி 6 சதவீதம் மற்றும் குர்மி மக்கள் 4 சதவீதம்.