ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? நெருக்கடியில் சிஎஸ்கே – ஆர்சிபி நிலை என்ன?

ஐபிஎல் ப்ளே ஆஃப்

பட மூலாதாரம், IPL

ஐபிஎல் டி20 தொடரின் 2024ம் ஆண்டுக்கான சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் 10 போட்டிகளை விளையாடி முடித்தாலும் எந்தெந்த அணி ப்ளே ஆஃப் சுற்றின் முதல் 4 இடங்களைப் பிடிக்கப் போகிறது என்பது கணிக்க முடியாததாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் 10 அணிகளில் ஒரு அணி மட்டும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் அணியாக வெளியேறத் தயாராகியுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கணிதத்தில் மட்டும்தான் சாத்தியமே தவிர நிதர்சனத்தில் 0.0006% மட்டுமே வாய்ப்புள்ளது.

ஆகவே, ரேஸிலிருந்த ஒரு அணி கழன்றுவிட்டதால், இன்னும் 9 அணிகளில் எந்த 4 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லப் போகின்றன என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இனிவரும் போட்டிகள் அனைத்தும் ஒவ்வொரு அணிகளுக்கும் முக்கியத்துவமானவை. அந்த அணிகள் வெற்றியோடு சேர்த்து, நிகர ரன்ரேட்டையும் உயர்த்துவது அவசியம்.

தற்போது 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் இருந்தாலும் கூட அந்த அணிக்கு இன்னும் ப்ளே ஆஃப் சுற்று உறுதியாகவில்லை. அதேசமயம், ஆர்சிபி அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்தாலும், அந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேற்றப்பட இல்லை.

ஐபிஎல் டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் 8 வெற்றி, 2 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட் 0.622 என்று குறைவாக இருக்கிறது.

ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தை உறுதி செய்ய அடுத்துவரும் 4 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும் அல்லது ப்ளே ஆஃப் சுற்றில் இடத்தை பாதுகாப்பாக உறுதி செய்ய குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வெல்வது அவசியம்.

ஏனென்றால் தற்போது கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் வலுவாக இருக்கிறது, ராஜஸ்தானைவிட நிகர ரன்ரேட்டிலும் மேலோங்கி இருக்கிறது. இன்னும் ஒரு போட்டியில் கொல்கத்தா அணி வென்றால்கூட நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை 2வது இடத்துக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துவிடும்.

ஆதலால், கொல்கத்தா அணியை முதலிடத்தைப் பிடிக்கவிடாமல் தடுக்க அடுத்தடுத்த போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இன்றியமையாதது.

ராஜஸ்தான் அணிக்கு அடுத்ததாக, டெல்லி கேபிடல்ஸ்(மே7), சிஎஸ்கே(மே12), பஞ்சாப் கிங்ஸ்(மே15), கொல்கத்தா(மே19) ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது. இதில் உள்ள 4 அணிகளில் கொல்கத்தா, சிஎஸ்கே அணிகள் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய கடுமையாக போட்டியிடும்.

ஆதலால், ராஜஸ்தான் அணிக்கு அடுத்து வரும் 4 ஆட்டங்களில் கொல்கத்தா, சிஎஸ்கே ஆட்டங்கள் கடும் சாவாலாகவே இருக்கும். அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி அணிகள் இன்னும் ஒரு ஆட்டத்தில் தோற்றால்கூட கதை முடிந்துவிடும்.

ஒருவேளை ராஜஸ்தான் அணியிடமே இரு அணிகளும் தோற்றாலே முடிவுரை எழுதப்பட்டுவிடும். ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் செல்ல 99 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஐபிஎல் ப்ளே ஆஃப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தா அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல இன்னும் குறைந்பட்சம் 2 போட்டிகளில் வென்றாலே போதுமானது.

வலுவான நிலையில் கொல்கத்தா

கொல்கத்தா அணி தற்போது 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தாலும், முதலிடத்தைப் பிடிப்பதற்கான தகுதியுடன் ராஜஸ்தான் அணிக்கு கடும் போட்டியளிக்கிறது. ஏனென்றால் நிகரரன்ரேட் ராஜஸ்தான் அணியை விட அதிகமாக, கொல்கத்தா 1.098 என வலுவாக இருக்கிறது.

கொல்கத்தா அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல இன்னும் குறைந்பட்சம் 2 போட்டிகளில் வென்றாலே போதுமானது, 3 போட்டிகளில் வென்றால் 20 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்க முடியும்.

கொல்கத்தா அணிக்கு அடுத்ததாக லக்னெள(மே 5), மும்பை(மே11) குஜராத்(மே13) ராஜஸ்தான்(மே 19) ஆகிய போட்டிகள் உள்ளன. இதில் மும்பை அணியை ஏற்கெனவே கொல்கத்தா அணி வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து விரட்டிவிட்டது. ஆனால், லக்னெள, ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல கடுமையாக போட்டியிடும் என்பதால் அடுத்துவரும் இரு ஆட்டங்கள் சவாலாக அமையும்.

குஜராத் அணி தற்போது 8 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு போட்டியில் தோற்றால்கூட ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து விரட்டப்பட்டுவிடும். ஆக ராஜஸ்தான், லக்னெள அணிகள்தான் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் இந்த இரு அணிகளைச் சமாளிப்பதுதான் கடினம். கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்ல 99 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

நெருக்கடியில் சிஎஸ்கே

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சீசனில் ப்ளே ஆஃப் சுற்றில் 3வது அல்லது 4வது இடத்தைப் பிடிக்கவே வாய்ப்பு இருக்கிறது. சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.627 ஆக குறைந்துவிட்டது.

இன்னும் சிஎஸ்கே அணிக்கு 4 போட்டிகள் உள்ளன. சிஎஸ்கே அணியும் ப்ளே ஆஃப் டாப்-4 இடங்களில் இடம் பெற அடுத்துவரும் 4 ஆட்டங்களிலும் வெல்வது அவசியமாகும். இதில் ஒரு போட்டியில் சிஎஸ்கே தோற்று 3 ஆட்டங்களில் வென்றால் ப்ளே ஆப் சுற்றில், 4வது இடத்துக்கு பிற அணிகளுடன் கடுமைாயாகப் போட்டியிட வேண்டியதிருக்கும். ஆதலால் சிஎஸ்கே அணிக்கு அடுத்துவரும் 4 ஆட்டங்களும் முக்கியம்.

சிஎஸ்கே அணிக்கு இன்னும் பஞ்சாப் அணி(மே5), குஜராத்(மே10), ராஜஸ்தான்(மே12), ஆர்சிபி(மே18) ஆகிய 4 போட்டிகள் உள்ளன. இதில் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் சுற்று கடிவாளம் சிஎஸ்கே வசம் இருக்கிறது.

ஏற்கெனவே சென்னையில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி சிஎஸ்கே அணியை தோற்கடித்தது. நாளை(5ம்தேதி) தரம்சாலாவில் நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை பழிதீர்த்தால், பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்று செல்ல இப்போதுள்ள நிலவரப்படி 50 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஐபிஎல் ப்ளே ஆஃப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 18 புள்ளிகளுடன் சென்றால் சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது உறுதியாகிவிடும்.

சன்ரைசர்ஸ் அணி

சன்ரைசர்ஸ் அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன், 0.072 என்ற நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணியைவிட உயர்வாக இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல குறைந்தபட்சம் 3 வெற்றிகள் அவசியம். 16 புள்ளிகள் பெற்றால், ப்ளேஆஃபில் கடைசி இடத்துக்கு முயற்சிக்கலாம்.

ஆனால் அதுவும்கூட கடைசி நேரத்தில் கடும் போட்டியாக மாறுலாம். ஆதலால் 18 புள்ளிகளுடன் சென்றால் சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது உறுதியாகிவிடும்.

சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்ததாக, மும்பை(மே6), லக்னெள(மே8), குஜராத்(மே16), பஞ்சாப்(மே19) ஆகிய அணிகளைச் சந்திக்கிறது. இதில் ராஜஸ்தான், லக்னெள அணிகளுடனான ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.

மும்பை அணி ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் தோற்கடித்தால் அந்த அணியும் தொடரிலிருந்து வெளியேறும். சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்று செல்ல இப்போதுள்ள நிலவரப்படி 72 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஐபிஎல் ப்ளே ஆஃப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதை சீசனில் லக்னெள அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன.

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ்

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

லக்னெள அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருப்பதால், இன்னும் குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆட்டங்களில் வென்றால் 16 அல்லது 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் இடத்தை உறுதி செய்யும்.

லக்னெள அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. கொல்கத்தா(மே5), சன்ரைசர்ஸ்(மே8),டெல்லி(மே14), மும்பை(மே17) ஆகிய அணிகளுடன் மோதுகிறது. இதில் மும்பை அணி 2வது முறையாக கொல்கத்தாவை நாளை(மே5) சந்திக்கிறது.

ஏற்கெனவே மும்பையை வீழ்த்திய லக்னெள அணி 2வது முறையும் வீழ்த்த முடிந்தால் ப்ளே ஆஃப் சுற்றை எளிதில் நெருங்கலாம். அதேபோல டெல்லி அணியையும் லக்னெள அணியால் வீழ்த்த முடியும். இந்த இரு ஆட்டங்களில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம்.

ஆனால், கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லக்னெள அணிக்கு கடும் சவாலாகவே இருக்கக்கூடும். லக்னெள அணி ப்ளே ஆஃப் சுற்று செல்ல இப்போதுள்ள நிலவரப்படி 50 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணி 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.442 ஆகக் குறைந்துள்ளது. அடுத்துவரும் 3 போட்டிகளிலும் டெல்லி கட்டாயமாக வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்தினால்தான் ரேஸில் ஓட முடியும்.

3 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட்டை அதிகரிக்க ப்ளே ஆஃப் சுற்றில் வாய்ப்புக் கிடைக்கும். ஆதலால், டெல்லி அணிக்கு அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் மிகப்பெரிய வெற்றி அவசியம்.

டெல்லி அணிக்கு அடுத்ததாக, ராஜஸ்தான்(மே6), ஆர்சிபி(மே12), லக்னெள(மே14) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. இதில் ஆர்சிபி அணியைத் தவிர்த்து மற்ற 2 அணிகளும் வலிமையானவை என்பதால், டெல்லிக்கு கடும் சவாலாக இருக்கும்.

ஐபிஎல் ப்ளே ஆஃப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத் அணி ப்ளே ஆஃப் சுற்று செல்ல இப்போதுள்ள நிலவரப்படி 2 சதவீதம் வாய்ப்புள்ளது.

குஜராத் டைட்டன்ஸ்

முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட் மைனஸ் 1.113 என்று மோசமாக இருக்கிறது.

குஜராத் அணிக்கு அடுத்து 4 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளதால், அனைத்திலும் பெரிய வெற்றியைப் பெற்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

3 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் குஜராத் இருந்தால், நிகர ரன்ரேட்டில் சிக்கிக் கொள்ளும். ஏனென்றால் கடைசி இடத்தைப் பிடிக்க 5 அணிகள் போட்டியிடும் என்பதால், நிகர ரன்ரேட்டை உயர்த்துவது அவசியம்.

குஜராத் அணிக்கு அடுத்ததாக ஆர்சிபி(மே4), சிஎஸ்கே(மே10), கொல்கத்தா(மே13) சன்ரைசர்ஸ்(மே16) ஆகிய போட்டிகள் உள்ளன. இதில் சிஎஸ்கே, கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகளுடனான ஆட்டம் குஜராத்துக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதில் இரு ஆட்டங்களில் குஜராத் தோற்றாலே போட்டித் தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

ஐபிஎல் ப்ளே ஆஃப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சாப் அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலே ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோகும்.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து இரு வெற்றிகளுடன், 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.062 என்று குஜாரத் அணியைவிட சிறப்பாகவே இருக்கிறது.

இன்னும் பஞ்சாப் அணிக்கு 4 போட்டிகள் மீதம் உள்ளன. அனைத்து ஆட்டங்களிலும் வென்றாலும் கூட நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு வெற்றி பெற்றால்தான் ப்ளே ஆஃபில் கடைசி இடத்தைப் பிடிக்க முடியும்.

பஞ்சாப் அணி, சிஎஸ்கே அணியுடன் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் வென்றுவிட்டது. அடுத்ததாக நாளை(மே5) தரம்சாலாவில் நடக்கும் 2வது ஆட்டத்திலும் வென்றால் ப்ளே ஆஃப் பாதை எளிதாக அமையும்.

அதேபோல, சன்ரைசர்ஸ்(மே19), ராஜஸ்தான்(மே15) அணிகளுடனான ஆட்டமும் கடும் சவாலாக இருக்கும். ஆர்சிபி(மே9) அணியுடன் நடக்கும் ஆட்டத்தில் வேண்டுமானால் பஞ்சாப் வெல்லலாம்.

பஞ்சாப் அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலே ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோகும்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

மும்பை அணிக்கு வாய்ப்பு கடினம்

மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 3 வெற்றி, 8 தோல்வி 6 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் போட்டித் தொடரிலிருந்தும் ஏறக்குறைய வெளியேறிவிட்டது.

நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.261 என்ற ரீதியில் இருக்கிறது. மும்பை அணி அடுத்துவரும் 3 போட்டிகளில் வென்றால்கூட 12 புள்ளிகள்தான் பெற முடியும்.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கடைசி இடத்தைப் பிடிக்கவே 16 புள்ளிகள் தேவைப்படும் போது, மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் சுற்று கனவாகவே அமையும்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லுமா?

ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது என்பது கணிதத்தில் மட்டும்தான். நடைமுறையில் அடுத்துவரும் 4 ஆட்டங்களில் வென்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது. இதுவரை 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் ஆர்சிபி கடைசி இடத்தி்ல் இருக்கிறது.

அடுத்துவரும் 4 ஆட்டங்களில் வென்றாலும் ஆர்சிபி 14 புள்ளிகள்தான் பெறும். ஆனால், இந்த முறை 14 புள்ளிகள் வைத்து 4வது இடம் நிர்ணயிக்கப்படுவது கடினம்தான். ஒருவேளை 14 புள்ளிகள் கடைசி இடத்துக்கு அளவுகோலாக வந்தால் ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் உயர்வாக இருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல பல அணிகள் தங்கள் வெற்றியை தாரை வார்க்க வேண்டும். இவையெல்லாம் நடந்தால், ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லும்.