டி-வாக்காளர்: அசாமில் புதிய குழப்பம் – ஒரு லட்சம் பேரின் வாக்குரிமை பறிப்பு ஏன்?

அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
படக்குறிப்பு, ஹரிசரண் தாஸ்
  • எழுதியவர், உமாங் போடார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறை என்று கூறப்படும் இந்திய பொதுத் தேர்தலில், கிட்டத்தட்ட 100 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இருப்பினும், அசாமில், வாக்களிக்க முடியாத நிலையில் ஒரு பெரிய மக்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் டி-வாக்காளர்கள் (D-voters) அல்லது சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தற்போது, ​​அசாம் அரசாங்கத்தின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட ஒரு லட்சம் சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களின் குடியுரிமை கேள்விக்குறியாகவே உள்ளது. அசாமில் நிலவும் குடியுரிமை பிரச்னைகளில் டி-வாக்காளர்கள் பிரச்னையும் ஒன்றாகும். அங்கு ஏற்கனவே, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் 2019 இல் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஆகியவை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அசாமில் உள்ள கரீம்கஞ்ச் மற்றும் சில்சார் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் உள்ள டி-வாக்காளர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள பிபிசி அங்கு பயணம் மேற்கொண்டது. வங்காளதேசம் எல்லையை ஒட்டி உள்ளதால், இங்கு குடியுரிமை பிரச்னைகள் முக்கிய அரசியல் கவலையாக மாறியுள்ளது.

டி-வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதால் அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. சட்ட வல்லுநர்கள் கூற்றுபடி, டி-வாக்காளர்களைக் குறிக்கும் செயல்முறை தன்னிச்சையானது என்றும், வழக்குகள் தீர்க்கப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் கூறுகிறார்கள். வாக்களிப்பது மட்டுமின்றி, நலத்திட்ட உதவிகள் கிடைப்பதிலும் டி-வாக்காளர்கள் சிரமப்படுகின்றனர்.

பிரச்னை ஆரம்பித்தது எப்படி?

அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
படக்குறிப்பு, மணிந்திரா தாஸ்

வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அசாம் வரலாற்று ரீதியாக, இடப் பெயர்வு பிரச்னைகளை எதிர்கொண்டது. புலம்பெயர்ந்து வந்தவர்களில் பலர் போர் மற்றும் அடக்குமுறை சூழலில் இருந்து தப்பித்து வந்தவர்கள் ஆகும்.

1979 ஆம் ஆண்டில், பல அசாமிய குழுக்கள், முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்கு வந்தவர்களைக் கண்டறிந்து நாடு கடத்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. மேலும், ஆறு ஆண்டுகால நீடித்த போராட்டமும் நடந்தது. இப்பிரச்னையைத் தீர்க்க, மார்ச் 24, 1971க்கு முன் (வங்காளதேச விடுதலைப் போர் தொடங்கும் முன்) இந்தியாவுக்கு வந்தவர்கள் இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின் வந்தவர்கள் வெளிநாட்டினராக கருதப்படுவர் என கூறப்பட்டது.

இதையடுத்து, 1997ல், இந்திய தேர்தல் ஆணையம், வெளிநாட்டினரை களையெடுக்கும் வகையில், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய குடியுரிமை ஆவணங்கள் கொண்ட நபர்களை அடையாளம் கண்டு, முதற்கட்ட சோதனைக்குப் பிறகு அவர்களின் வழக்கை வெளிநாட்டினர் தீர்ப்பாயத்திற்கு அனுப்பினர். இந்த தீர்ப்பாயங்கள் இந்தியர்கள் யார் என்பதை தீர்மானிக்க அமைக்கப்பட்ட நீதித்துறை போன்ற அமைப்புகளாகும்.

அவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்ட போது, ​​அவர்களின் பெயர்களுக்கு பக்கத்தில் ‘D’ என்ற குறியீடு போடப்பட்டது, அவர்கள் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் படி, 1997ல் சுமார் 3.13 லட்சம் பேர் (எண்ணிக்கை மாறுபடலாம்) டி-வாக்காளர்களாக அடையாளம் காணப்பட்டனர். பிப்ரவரி 2024 இல் அசாம் அரசாங்கத்தின் கூற்றுபடி வாக்காளர் பட்டியலில் தோராயமாக 97,000 டி-வாக்காளர்கள் உள்ளனர்.

அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
படக்குறிப்பு, மணிந்திராவின் 22 வயது மகன்

‘நாங்கள் இந்துக்கள், நான் எங்கு செல்வது?’

சில்சாரில் வசிக்கும் 64 வயதான மணிந்திரா தாஸ், வங்கதேசத்தை விட்டு வெளியேறிய குடும்பங்களில் ஒருவர். அவர் 1997இல் டி-வாக்காளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013 இல் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருக்கு வந்ததாக கூறுகிறார்.

“என் தந்தை எப்போது இந்தியா வந்தார் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. அப்போது நான் சிறு குழந்தையாக இருந்தேன். நான் வளர்ந்ததும் என் தந்தை என்னிடம் அகதிகளுக்கான அட்டையைக் கொடுத்தார்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்திய அரசால் வழங்கப்பட்ட அந்த அட்டையில், அவர் 1964 இல் இருந்து இந்தியாவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் தீர்ப்பாயம் மணிந்திரா தரப்பை விசாரிக்காமல் ஒரு உத்தரவை பிறப்பித்தது, மணிந்திரா தாஸ் இரண்டு ஆண்டுகள் தடுப்பு முகாமில் இருந்தார்.

மணிந்திரா , “ஒரு நாள் போலீஸ் என் ஆவணங்களுடன் வரும்படி என்னிடம் கூறினர். நான் அவர்களின் வேனில் ஏறினேன், அவர்கள் என்னை சிறைச்சாலையின் முன் அழைத்துச் சென்று, உள்ளே தள்ளினார்கள்.” என்றார்.

மணிந்திராவின் 22 வயது மகனின் கூற்றுப்படி – இந்த வழக்கு குடும்பத்தின் நிதியை காலி செய்தது, மேலும் அவர்கள் உதவிக்காக அலைந்து திரிந்தனர்.

குடும்பத்தின் மோசமான நிதி நிலைமை காரணமாக அவர் கல்லூரி படிப்பை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“நாங்கள் இந்தியாவில் வாழும் இந்துக்கள். எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவில்லை எனில் எங்கே போவது? பாகிஸ்தானுக்கா?” என்கிறார்.

அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
படக்குறிப்பு, வாக்காளர் பட்டியல்

`நான் பாஜகவை ஆதரித்தேன்’

மணிந்திரா தாஸின் வீட்டிற்குப் பக்கத்தில் ஹரிசரண் தாஸ் என்பவர் வசிக்கிறார். தான் பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர் (BLA) என்றும், நீண்ட காலமாக பாஜக ஆதரவாளராக இருப்பதாகவும் ஹரிசரண் தாஸ் கூறுகிறார்.

“இந்தத் தேர்தலில் நான் பலரை வாக்களிக்க வைத்தேன். ஆனால் என்னால் வாக்களிக்க முடியவில்லை, இது வேதனையளிக்கிறது. ஒரு நாள் காவல்துறை அதிகாரி என்னிடம் வந்து நீங்கள் டி-வாக்காளர், உங்களை விசாரிக்க வேண்டும் என்று சொன்னார். டி-வாக்காளர் என்றால் என்ன என்பது கூட எனக்குத் தெரியவில்லை.” என்று அவர் கூறுகிறார்.

ஒரு சிறிய அறை கொண்ட வீட்டில் வசிக்கும் ஹரிசரண் , ஒரு பெட்டி நிறைய ஆவணங்களை வைத்திருந்தார். இருப்பினும், தீர்ப்பாயத்தில் பெறப்பட்ட நோட்டீஸை எங்களிடம் காட்ட முடியுமா என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது, ​​​​அவரிடம் இருந்த ஆவணங்களில் அரை மணி நேரம் தேடினார், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது பெயருக்கு பக்கத்தில் `டி’ குறிக்கப்பட்ட ஒரு தேர்தல் வாக்காளர் பட்டியலை மட்டுமே அவரால் காட்ட முடிந்தது.

அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
படக்குறிப்பு, ஹரிசரண்

‘என்னால் இந்த முறை வாக்களிக்க முடியவில்லை’

அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
படக்குறிப்பு, லட்சுமி தாஸ்

இது அப்பகுதி முழுவதும் திரும்பத் திரும்ப நடக்கும் ஒரு கதை. ஹரிசரணின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் 47 வயதான லட்சுமி தாஸ் என்ற பெண் தங்கியுள்ளார்.

“எனது தந்தை எப்போது இந்தியா வந்தார் என்பது எனக்கு நினைவில்லை. என் பெற்றோர் இருவரும் இப்போது இறந்துவிட்டனர். என் பெயருக்கு பக்கத்தில் டி-குறியிடப்பட்டதால் என்னால் வாக்களிக்க முடியவில்லை.” என்கிறார் லட்சுமி தாஸ்.

இருப்பினும், அவர் காட்டிய ஆவணங்களில், அவரது தந்தை ஒரு இந்திய குடிமகன் என்று 1950 களில் கொடுக்கப்பட்ட ஒரு சான்றிதழ் இருந்தது.

அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
படக்குறிப்பு, ஜஹானாரா

‘நான் வாக்களித்ததே இல்லை’

இந்த குடியுரிமை பிரச்னைகள் இந்துக்களை மட்டும் பாதிக்கவில்லை. சில்சாரின் புறநகர் பகுதியில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் வசித்து வரும் ஜஹானாரா பேகத்தை நாங்கள் சந்தித்தோம். அவர் இங்கு தான் பிறந்ததாகக் கூறுகிறார்.

இருந்தபோதிலும், “நான் என் வாழ்நாளில் இதுவரை வாக்களித்ததில்லை.” என்கிறார்.

ஜஹானாரா வெளிநாட்டவராக அறிவிக்கப்பட்டதே இதற்குக் காரணம். அகதிகள் முகாமிலோ சிறையிலோ அடைபட்டு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, ஒருவழியாக சமாளித்து அவரால் ஜாமீன் பெற முடிந்ததால் வீட்டிலேயே இருக்க முடிந்தது. எனவே, எல்லா நேரங்களிலும் ஆவணத்தை தனக்கு அருகிலேயே வைத்திருப்பதாக ஜஹானாரா கூறுகிறார்.

குழப்பமான ஒழுங்கற்ற செயல்முறை

டி-வாக்காளர்கள் தொடர்பான முழு செயல்முறையும் ஒழுங்கற்ற மற்றும் குழப்ப நிலையில் உள்ளது. நாங்கள் சந்தித்த பலரிடம் அவர்களின் வழக்கு ஆவணங்கள் இல்லை. மற்றவர்களுக்கு தங்கள் வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் யார் என்று கூடத் தெரியவில்லை.

பல சந்தர்ப்பங்களில், டி-வாக்காளர்கள் தொடர்பான செயல்முறை திட்டமிடாமல் ஒழுங்கற்ற முறையில் நடப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அத்தகைய சில வழக்குகளில் டி-வாக்காளர்கள் என குறிப்பிடப்பட்ட பலரின் குடும்ப உறுப்பினர்கள் இந்தியக் குடிமக்களாக சான்று பெற்றுள்ளனர், பெற்றவர்கள் இந்திய குடிமக்கள் ஆனால் பிள்ளைகள் டி-வாக்காளர்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

டி-வாக்காளர்களின் பிரச்னை வெறும் வாக்களிப்பது மட்டும் அல்ல. “ரேஷன் பொருட்கள் பெறுவதிலும், ஆதார் அட்டை பெறுவதிலும் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது” என்று வழக்கறிஞர் மற்றும் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான சிஷிர் டே கூறுகிறார்.

மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில், `டி’ என்று குறிக்கப்பட்ட பலர் உண்மையில் இந்திய குடிமக்கள் என்பதை தீர்ப்பாயங்கள் கண்டறிந்தன.

“எந்த அடிப்படையில் அவர்கள் டி-வாக்காளராக அறிவிக்கப்பட்டனர் என்பது அவர்களிடம் சொல்லப்படுவதில்லை. உங்கள் ஆவணங்கள் காணவில்லை என்று மட்டுமே அவர்களிடத்தில் கூறப்படும். ஆனால் என்னென்ன ஆவணங்கள் விடுபட்டுள்ளன என்பது கூட அவர்களிடம் சொல்ல மாட்டார்கள்” என்று சில்சார் சார்ந்த வழக்குரைஞரான தன்யா லஸ்சார் கூறுகிறார்.

மேலும் இந்த பிரச்னைகளில் தீர்ப்பு வழங்க ஒவ்வொரு நீதிமன்றமும், வெவ்வேறு அளவீடுகளை பின்பற்றுகின்றன. என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்பது நீதிபதிகளை பொறுத்து மாறுபடும்.

“இது உயர் நீதிமன்றத்தால் கையாளப்படுகிறது. ஒரு நீதிபதி ஒரு குறிப்பிட்ட வகையில் இந்த விஷயங்களை கையாள்கிறார். மற்றொரு நீதிபதி அதை மாற்றியமைக்கிறார்,” என்கிறார் சிஷிர் டே.

ஆவணங்களைக் கண்டுபிடிப்பதும் கடினம்

“ஆண்டுதோறும் வெள்ளம் வரும் ஒரு மாநிலத்தில் ஆற்றங்கரையோரப் பகுதிகளை சுற்றி வாழும் மக்களும், ஒதுக்குப்புறமாக வசிக்கும் மக்களும் ஆவணங்களை பத்திரமாக பல ஆண்டுகளுக்கு பாதுகாப்பது சாத்தியமா? அவர்கள் எல்லா ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? ”என்று தன்யா லஸ்சார் கேள்வி எழுப்புகிறார்.

“அடக்குமுறைகளால் துன்புறுத்தலுக்கு ஆளான மக்கள் உயிரை காப்பாற்றி கொள்ள புலம்பெயர்ந்து வந்துள்ளனர். அவர்களிடம் ஆவணங்களை கேட்பது நியாயமா? உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி வந்தவர்கள், ஆவணங்களை கையில் கொண்டு வர வேண்டும் என்று எப்படி யோசிப்பார்கள்? ” என்கிறார் தன்யா.

அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
படக்குறிப்பு, மணிந்திரா தாஸ்

ஒருங்கிணைப்பு இல்லாத குடியுரிமை நடைமுறை

அசாமில், குடியுரிமை தொடர்பான பிரச்னைகள் முக்கிய சிக்கலாக உள்ளது. 2019 ஆம் ஆண்டில், மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. தேசியக் குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) என்பது நீண்ட காலமாக பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்து வருகிறது. ஆனால், இம்முறை அது கைவிடப்பட்டுள்ளது.

அசாமின் மொத்த மக்கள் தொகை, அதாவது மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள், 1971-க்கு முன் இந்தியாவுக்கு வந்ததாக ஆவணங்களைக் காட்டி நிரூபிக்க வேண்டும். இதில் 19 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, பல டி-வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் பல்வேறு துறையினருக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமையின் மற்றொரு உதாரணம் இது, சில டி- வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பார்க்க முடியும். வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் மணிந்திரா தாஸ் போன்றவர்கள் இந்தத் தேர்தல்களில் வாக்களித்தனர். இது முழு செயல்முறையின் குழப்பத்தை நிரூபிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாஜகவின் பிரச்னை

நீண்ட காலமாக, பாஜக அரசு இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதாக உறுதியளித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, ​​பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் முகாம்களை ஒழிப்போம் என்று நரேந்திர மோதி கூறியிருந்தார்.

இந்தத் தேர்தல்களிலும் பாஜக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா, தான் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் டி-வாக்காளர் பிரச்னையை தீர்த்து விடுவோம் என்று கூறினார். ஆனால், இந்த வாக்குறுதியில் அவர் இந்து டி-வாக்காளர்களை மட்டுமே குறிப்பிட்டு பேசினார்.

இந்த பிரச்னையை பாஜக எவ்வாறு தீர்க்கும் என்பது குறித்து சில்சார் மக்களவையில் பாஜக சார்பில் போட்டியிடும் பரிமல் சுக்லபைத்யாவிடம் பேசினோம்.

“தேர்தலில், மாதிரி நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இதுகுறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது,” என்று அவர் கூறினார். இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) காரணமாக அசாமில் குடியுரிமை பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார்.

2019 இல், பாஜக அரசாங்கம் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள இஸ்லாமியர்களை தவிர அனைத்து மதத்தினரும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும், ஆவணங்கள் இல்லாமல் வந்திருந்தாலும், விரைவான குடியுரிமைக்கு தகுதியுடையவர்கள் என்றும் அது கூறியது. இது இந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

“குடியுரிமை பிரச்னை தீர்க்கப்பட்டவுடன், அதோடு சேர்ந்த டி-வாக்காளர் பிரச்னையும் தீர்க்கப்படும்,” என்று பரிமல் கூறினார்.

ஆனால் இந்த வாக்குறுதிகள் மீது பலருக்கு நம்பிக்கை இல்லை.

திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி., சுஷ்மிதா தேவ் கூறுகையில், “இது வெறும் தேர்தல் வித்தைதான். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரிவினையின் அடிப்படையில் பாஜக வாக்குகளை பெறுகிறது.’’ என்கிறார்.

“பத்து ஆண்டுகளில் பாஜக என்ன செய்தது? அரசியல்வாதிகள் வாக்குக்காக மட்டுமே பேசுகிறார்கள். மக்களின் வலியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.’’ என்று மணிந்திரா தாஸின் மகன் கூறுகிறார்.

“மோடி கொண்டு வந்த சட்டம் எங்களுக்கு உதவவில்லை. நான் இவ்வளவு காலமாக டி-வாக்காளராக இருக்கிறேன், ஆனால் அவர் எங்களுக்கு உதவவில்லை, ”என்கிறார் லட்சுமி தாஸ்.