பாலியல் தொழிலாளர்களால் இசை, நடன மையமாக திகழ்ந்த ‘ஹீராமண்டி’ என்ன ஆனது?

ஹீராமண்டி: பாலியல் தொழிலாளர்களின் கலைகளால் நிரம்பிய இந்த இடம் அதன் பெருமையை இழந்தது எப்படி?

பட மூலாதாரம், NETFLIX

படக்குறிப்பு, மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹீராமண்டி வெப் சீரிஸ்.
  • எழுதியவர், ஜெய்தீப் வசந்த்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் வெப் சீரிஸ் “ஹீராமண்டி- தி டயமண்ட் பஜார்” (Hiramandi – The Diamond Bazaar) நெட்ஃபிக்ஸில் வெளியாகியுள்ளது.

ஹீராமண்டியின் முழுக்கதையும் மல்லிகா ஜான் என்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு லாகூரில் உள்ள இந்த பகுதி பாலியல் தொழிலுக்குப் பெயர் பெற்றது.

பல தசாப்தங்களுக்கு முன்பு ஹீராமண்டி நடனம், இசை மற்றும் நாகரிகத்தின் மையமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இப்பகுதியின் அடையாளமே மாறிவிட்டது.

இப்பகுதியின் வரலாறு 450 ஆண்டுகள் பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றிய விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.

ஹீராமண்டி: பாலியல் தொழிலாளர்களின் கலைகளால் நிரம்பிய இந்த இடம் அதன் பெருமையை இழந்தது எப்படி?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, முகலாய பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது லாகூர் ஒரு முக்கியமான நகரமாக வளர்ந்தது.

ஹீராமண்டி எப்படி உருவானது?

அக்பர் ஆட்சியின் போது, ​​லாகூர் நகரம் நிர்வாகத்தின் மையமாக இருந்தது. அப்போது ஹீராமண்டி பகுதி ஷாஹி மொஹல்லா என்று அழைக்கப்பட்டது.

லாகூரில் உள்ள ஹிடாரி கல்லி, ஹீராமண்டி கிலா சாலையில் உள்ள நாவல்டி சௌக் இன்றும் ‘ஷாஹி மொஹல்லா’ என்று அழைக்கப்படுகிறது.

பேரரசர்களின் காலத்தில், அரச குடும்பம், அவர்களின் வேலையாட்கள் மற்றும் பிற பணியாளர்கள் வாழ்ந்த பகுதி ஷாஹி மொஹல்லா என்றும் அழைக்கப்பட்டது.

இந்த பகுதிக்கு ஆட்டோ, ரிக்ஷா போன்றவற்றில் வருபவர்கள் கூட ஷாஹி மொஹல்லா என்றே அழைக்கின்றனர். முகலாயர் ஆட்சிக் காலம் இப்பகுதிக்கு பொற்காலம் போன்றது.

“முகலாயர் ஆட்சியின் போது, ​​செல்வந்தர்களின் குடும்பங்கள் மற்றும் அதிகாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் இந்தப் பகுதியில் தங்கியிருந்தனர்” என்கிறார், மேடை இயக்குனர் பேராசிரியர் திரிபுராரி சர்மா. கோட்டையில் ஏதேனும் சடங்குகள் நடக்கும் போதெல்லாம், இங்கு இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

“தற்போது ‘கோதாஸ்’ (kotha) என்ற வார்த்தை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை” என்கிறார் அவர். “பாட்டு, இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும் பகுதிகளை ‘கோதாஸ்’ என்று முன்னர் அழைத்தனர்,” என்றார்.

“கோதாஸில் உள்ள பெண்கள் தங்களை கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என்று அழைத்தனர். இவர்கள் குறித்த அற்புதமான கதைகளும் இலக்கியங்களும் எழுதப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு தலைப்புகளில் உயர்மட்ட விவாதங்களும் நடைபெறும். பேச்சுத் திறமையை கற்றுக்கொள்வதற்காகவும் இங்கு வருவார்கள்” என்கிறார் அவர்.

“சமூகத்தில் எப்படி வாழ வேண்டும், மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை அறிய பலர் அங்கு வருகிறார்கள்” என்கிறார் திரிபுராரி சர்மா.

ஹீராமண்டி: பாலியல் தொழிலாளர்களின் கலைகளால் நிரம்பிய இந்த இடம் அதன் பெருமையை இழந்தது எப்படி?

பட மூலாதாரம், HERITAGE IMAGES

படக்குறிப்பு, மகாராஜா ரஞ்சித் சிங் ஆட்சியின் போது லாகூர் மீண்டும் ஒரு முக்கியமான நகரமாக மாறியது.

விவாதம் தொடங்கியது எப்போது?

கரண் ஜோஹரின் கலங்க் (kalank) திரைப்படத்தில் ‘ஹாசனாபாத்’ என்ற நகரம் காட்டப்பட்டது. இந்த நகரம் ஹீராமண்டியின் ஆன்மாவால் வடிவமைக்கப்பட்டது.

இந்திய துணைக்கண்டத்தில் முகலாய செல்வாக்கு குறைந்துகொண்டே வந்த நாட்களில் மராத்தாக்களின் எழுச்சி தொடங்கியது. அஹ்மத் ஷா அப்தாலியின் தாக்குதல்கள் மறுபுறம் அதிகரித்தன.

அப்தாலியின் ராணுவம் ராஜ்புதானா, பஞ்சாப், வட இந்தியாவின் மீது படையெடுத்த போது தோபி மண்டிக்கு அருகிலுள்ள ஹீராமண்டியின் மொஹல்லா தராஷிகோவில் தங்கியிருந்தது.

ஹீராமண்டியில் குடியேறிய பாலியல் தொழிலாளர்கள் அரச குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

அப்தாலியின் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட சூழ்நிலை இப்பகுதியில் வறுமையை அதிகரிக்கச் செய்தது. இதன் மூலம் இங்கு வசிக்கும் பாலியல் தொழிலாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு பாலியல் தொழிலை தொடங்கினர். அதன்பின், இங்குள்ள சில பெண்கள் விரும்பாவிட்டாலும் பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வறுமையில் வாடும் பெண்கள் வேலைவாய்ப்புக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதைக் கவனித்த முகலாய ஆளுநர், அப்தாலியின் தாக்குதல்களைத் தடுக்க முயன்றார்.

முகலாய ராணுவம் அப்தாலியை இடைமறித்ததால், இரு படைகளுக்கும் இடையிலான போர் மற்றும் மோதல்களால் முழு பிராந்தியமும் கொந்தளிப்பானது.

இந்த நிலைமை சீரடைந்த பிறகு, லாகூர் 1799 முதல் மகாராஜா ரஞ்சித் சிங்கால் ஆளப்பட்டது. ரஞ்சித் சிங்கின் ஆட்சிக் காலத்தில் ஹீராமண்டியில் அமைதி நிலவியது.

ரஞ்சித் சிங்கின் ஆட்சியின் போது, ​​இந்த அரச பகுதிக்கு ரஞ்சித் சிங்கின் உறவினர் ஹிரா சிங்கின் நினைவாக ஹீராமண்டி என்று பெயரிடப்பட்டது.

மகாராஜா ரஞ்சித் சிங் ஆட்சியின் போது லாகூர் மறுமலர்ச்சி கண்டது. இந்த பகுதி மீண்டும் மையமாக மாறியது. மார்ச் 1849 இல் கிழக்கிந்திய கம்பெனி லாகூரைக் கைப்பற்றும் வரை அந்தப் பெருமை தொடர்ந்தது.

ஹீராமண்டி: பாலியல் தொழிலாளர்களின் கலைகளால் நிரம்பிய இந்த இடம் அதன் பெருமையை இழந்தது எப்படி?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பழைய லாகூர் நகரம்

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஹீராமண்டி

“ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அவர்கள் கிளர்ச்சிக்கான அனைத்து சாத்தியக்கூறுகளுக்கான கதவுகளையும் அடைத்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு உரிமம் கட்டாயம் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது” என்றார் பேராசிரியர் சர்மா.

பாலியல் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கத் தொடங்கிய பிறகு, சட்டவிரோதமான பாலியல் தொழிலாளர்களை போலீசார் ஒடுக்கத் தொடங்கினர்.

“பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​விசாரணை என்ற பெயரில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தினர்,” என்று பேராசிரியர் சர்மா கூறினார்.

“இது இந்த பகுதியின் பிரபலத்தைக் குறைத்துவிட்டது,” என்று அவர் கூறினார். போலீசாரின் அதிரடி சோதனையை கண்டு மக்கள் ஹீராமண்டிக்கு வரவே அஞ்சினர். இதனால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்தப் பகுதியில் மாற்றம் தொடங்கியது.

“இந்த மாற்றத்தால், பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை மாறிவிட்டது. ஹீராமண்டியில் கண்ணியத்துடனும் செல்வத்துடனும் வாழ்ந்த பாலியல் தொழிலாளர்கள் ஆங்கிலேயர் காலத்தில் அதனை இழந்தனர். இந்தப் பகுதி தன் பெருமையை இழந்து, இப்படி மாறிவிட்டது.

ஹீராமண்டி: பாலியல் தொழிலாளர்களின் கலைகளால் நிரம்பிய இந்த இடம் அதன் பெருமையை இழந்தது எப்படி?

பட மூலாதாரம், UNIVERSAL HISTORY ARCHIVE/GETTY

படக்குறிப்பு, ராஜா ஹரிச்சந்திரா படத்தில் ஒரு காட்சி

இந்திய சினிமாவும் ஹீராமண்டியும்

தாதா சாகேப் பால்கே 1913 இல் முதல் ஹிந்துஸ்தானி திரைப்படத்தை உருவாக்கினார்.

ஆரம்ப காலத்தில் பெண்கள் படங்களில் நடிக்கவில்லை. அதனால் ஆண்கள்தான் பெண்களைப் போலவே மேக்கப் போட்டுக்கொண்டு அந்த வேடங்களில் நடித்தனர்.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல படங்களில் ஹீராமண்டியைச் சேர்ந்த பலர் இருந்தனர்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஹீராமண்டியில் வாழ்ந்த பலர் லாகூரிலிருந்து வெளியேறி மும்பையை அடைந்தனர். திரைப்படத் துறை மற்றும் பிற துறைகளில் பணியாற்றினார்.

பாகிஸ்தானிய எழுத்தாளர் ஃபௌசியா சயீத் தனது புத்தகத்தில் ஹீராமண்டி பற்றி எழுதியுள்ளார்.

எட்டு வருடங்கள் ஹீராமண்டியை ஆராய்ச்சி செய்து “டாபூ: தி ஹிடன் கல்ச்சர் ஆஃப் எ ரெட் லைட் ஏரியா” (Taboo: The Hidden Culture of a Red Light Area) என்ற புத்தகத்தை எழுதினார்.

ஃபௌசியா சயீத் தனது புத்தகத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த பல பெண்கள் மற்றும் பிறரின் வாழ்க்கையின் பல அம்சங்களை விவரிக்கிறார்.