கம்போடியா: வேலை வழங்குவதாக கூறி இணையவழி மோசடியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்ட இந்தியர்கள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், செரிலான் மோல்லன்
  • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

கம்போடியாவில் இணையவழி மோசடிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட சுமார் 250 இந்தியர்களை இந்திய அரசு மீட்டுள்ளது.

வேலை வழங்குவதாக ஆசை காட்டி, அவர்களை “சட்டத்திற்கு புறம்பாக இணையவழி மோசடிகளில் ஈடுபடுமாறு அந்த கும்பல் கட்டாயப்படுத்தியதாக,” இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கம்போடியாவில் 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இணையவழி மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக, சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.

தென்கிழக்கு ஆசியாவில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு என்ற பெயரில், மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்குகின்றனர்.

இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். இவர்கள், வேலை வழங்குவதாகக் கூறி பல்வேறு இணையவழி மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதில், இணையத்தில் காதல் என்ற பெயரில் போலியாக நடித்து, மோசடியில் ஈடுபடுவதும் அடக்கம்.

ஆகஸ்ட் 2023-ல் வெளியான ஐ.நா அறிக்கை, மியான்மர் நாட்டைச் சேர்ந்த சுமார் 1,20,000 பேரும் கம்போடியாவை சேர்ந்த சுமார் 1,00,000 பேரும் இணையவழி மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதில் இது சமீபத்திய நிகழ்வாகும். கடந்த மார்ச் மாதத்தில், பிலிப்பைன்ஸில் இத்தகைய மோசடி மையத்திலிருந்து நூற்றுக்கணக்கானோரை காவல்துறை மீட்டது. அங்கு அவர்கள் இணையத்தில் போலியாக காதலிப்பது போன்று மற்றவர்களிடம் மோசடியில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கு சில வாரங்களுக்கு முன்பு மியான்மரில் மோசடி மையத்திலிருந்து சீனாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டனர்.

போலி சமூக ஊடகக் கணக்குகள்

கம்போடியா: வேலை வழங்குவதாக கூறி இணையவழி மோசடியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்ட இந்தியர்கள்

பட மூலாதாரம், Getty Images

“இதற்குக் காரணமானவர்களை கண்டறிவதற்காக” கம்போடியா அதிகாரிகளுடன் இந்திய அரசாங்கம் நெருக்கமாக பணியாற்றி வருவதாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் சமீபத்தில் தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களில் 75 பேரை மீட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், மற்றவர்களை எப்போது மீட்டனர் என்பது குறித்து தெரிய வரவில்லை.

இதுதொடர்பாக கருத்து அறிய இந்தியாவில் உள்ள கம்போடியா தூதரகத்திற்கு பிபிசி மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

கம்போடியாவில் இப்படி சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக, கம்போடியா தலைநகரம் நோம் பென் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு கடந்த வாரம் 130 புகார்கள் வந்ததாக `இந்தியன் எக்ஸ்பிரஸ்` நாளிதழ் தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள மக்களிடம் மோசடியில் ஈடுபடுமாறு ஆயிரக்கணக்கானோர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் போலியாக விசாரணை அதிகாரிகளாக நடித்து மிரட்டி பணம் பறிக்கவும் சில நிகழ்வுகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இப்படி இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது ரூ. 500 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக, அச்செய்தி தெரிவிக்கிறது.

மற்றொரு செய்தியில், வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி கம்போடியாவில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஒருநாளைக்கு சராசரியாக நான்கு – ஐந்து புகார்கள் தங்களுக்கு வருவதாக, கம்போடியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.

இதிலிருந்து மீட்கப்பட்ட ஸ்டீஃபன் என்பவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், தென்னிந்திய நகரமான மங்களூருவை சேர்ந்த முகவர் ஒருவர் மூலமாக தனக்கு `டேட்டா என்ட்ரி` வேலை வழங்குவதாக கூறி கம்போடியா வந்ததாக கூறுகிறார்.

ஆனால், கம்போடியா சென்றவுடன் அவரை, பெண்களின் புகைப்படங்களை வைத்து போலி சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, பலரையும் அதன் மூலம் தொடர்புகொள்ள வேண்டும் என கூறியதாக அவர் தெரிவித்தார்.

“விழிப்புடன் இருக்க வேண்டும்”

கம்போடியா: வேலை வழங்குவதாக கூறி இணையவழி மோசடியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்ட இந்தியர்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழர்கள் ஏமாறாமல் இருப்பது எப்படி?

வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு வழிகாட்டுகிறது தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின் சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து தருகின்றனர். மேலும் அதற்கான பயிற்சிகளும்கூட வழங்குகின்றனர்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு ‘SIGN UP’ என்பதை அழுத்தி தங்களுடைய விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்யும் போது உபயோகத்தில் இருக்கும் தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை பயன்படுத்த வேண்டும்.

விவரங்களை பதிவு செய்தவுடன், உங்களுடைய மின்னஞ்சலுக்கு Activate Account என்ற link கிடைக்கும். அதன் பின்னர் User name மற்றும் Password பூர்த்தி செய்தவுடன் விண்ணப்படிவம் வரும். அதில் விவரங்களை பதிவு செய்து Submit கொடுத்தால் விண்ணப்பம் பதிவாகிவிடும்.

வெளிநாட்டு வேலை
படக்குறிப்பு,

டாக்டர். சி.என். மகேஸ்வரன், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் & நிர்வாக இயக்குநர்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எவ்வாறு தெரியப்படுத்தப்படும்?

அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்பதை எப்படி மக்களுக்கு தெரியப்படுத்துவீர்கள்? என்று தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் & நிர்வாக இயக்குநரான டாக்டர். சி.என். மகேஸ்வரனிடம் பிபிசி தமிழ் கேட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,

“எங்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவுசெய்த பிறகு, பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர் விவரங்கள் omcl தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். OMCL குழு விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, காலியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் பொருத்தமான வேலைகளுக்கு உங்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும். நீங்கள் தகுதியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு கடிதம் அனுப்பப்படும்.

இது ஒரு அரசு நிறுவனம் என்பதால் முதலிலேயே நாங்கள் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு தான் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றோம்.

அதே போல் அனைத்து தரவுகளையும் 2 பக்கமுமே நாங்கள் சரிபார்க்கிறோம். நிறுவனத்திறகு தனுந்த ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு , அவர்கள் வேலைக்கு போகும் பட்சத்தில் நாங்களே வெளிநாட்டு வேலைக்குரிய பயிற்சிகளை வழங்குகிறோம்.

விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்களோ அதன் அடிப்படையில் அந்நாட்டு கலாச்சாரம், மொழி, தகவல் தொடர்பு திறன் போன்றவை குறித்து நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். வெளியாட்டு வேலைக்கு விண்ணப்பதார்களை அனுப்ப எங்கள் நிறுவனத்தின் ஆரம்ப கட்டணம் India Immigration Act படி 35000 மட்டுமே வசூலிக்கிறோம். மறைவு கட்டணம் எதுவும் கிடையாது. செவிலியர் பணிக்கு சற்று கூடுதல் கட்டணம் உண்டு.

விண்ணப்பதார்கள் வேலைக்கு சென்ற பிறகு அவர்களுடைய பாதுகாப்பை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அசாதாரண சூழல் வரும் போது, எங்கள் மூலம் சென்ற பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்து கொடுப்போம்.”என்று கூறினார்.