பஞ்சாபை வென்றாலும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வருத்தம் ஏன்? களத்தில் என்ன நடந்தது?

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 5 தோல்விகள், இந்த சீசனில் சொந்த மைதானத்திலேயே தோல்வி என துவண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அது மட்டுமல்லாமல் தனது மிகப்பெரிய வெற்றியால், பஞ்சாப் அணியையும் ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லவிடாமல் தொடரிலிருந்தே சென்னை அணி வெளியேற்றியது.

தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சிஎஸ்கே அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்த சிஎஸ்கே அணி அந்தத் தோல்விகளுக்கு இந்த வெற்றியால் முற்றுப்புள்ளி வைத்தது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்

இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தாவுக்கு பின் அதிகமாக 0.700 வைத்துள்ளதால் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான்அணிகூட நிகர ரன்ரேட் 0.622 மட்டுமே வைத்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே கட்டாய வெற்றி பெறுவது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சிக்கலின்றி செல்ல உதவும்.

வெளியேறும் பஞ்சாப் கிங்ஸ்

டோனி மற்றும் ரபாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டோனி மற்றும் ரபாடா

அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தத் தோல்வியால் ஐபிஎல் தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது. 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளன. இந்த 3 ஆட்டங்களில் வென்றாலும் 6 புள்ளிகள் என அதிகபட்சமாக 14 புள்ளிகள்தான் பெற முடியும்.

இந்த புள்ளிகள் ப்ளேஆஃப் சுற்றின் கடைசி இடத்துக்குப் போதாது என்பதால், தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது பஞ்சாப் அணி. இனிவரும் ஆட்டங்களில் பஞ்சாப் அணி வென்றால், பிற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பைத்தான் கெடுத்துவிடும்.

ஆபத்பாந்தவன் ஜடேஜா

சிஎஸ்கே அணி சிக்கலான கட்டத்தில் இருக்கும் போதெல்லாம் பெரும்பாலான நேரத்தில் ஆங்கர் ரோல் எடுத்து ஜடேஜா விளையாடியுள்ளார். இந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நேரத்தில் ஆங்கர் ரோல் செய்து 43 ரன்களும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பஞ்சாப் தோல்விக்குக் காரணம் என்ன?

பஞ்சாப் அணி கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். சிஎஸ்கே அணி 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருந்தால், 140 ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். ஷர்துல் தாக்கூர்(17), ஜடேஜா(43) இருவரையும் களத்தில் ஷாட்களை ஆட அனுமதித்ததுதான் பஞ்சாப் அணி செய்த பெரிய தவறாகும். நடுவரிசையில் இருவரின் விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தி இருந்தால் ஆட்டம் பஞ்சாப் கரங்களில் இருந்திருக்கும்.

பேட்டிங்கிலும் பஞ்சாப் அணி 2-வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணியின் “இன்டென்ட்டை” கடுமையாகப் பாதித்தது. இதனால் அடுத்தடுத்து வந்த பேட்டர்களும் களத்தில் நின்று செட்டில் ஆவதற்குள் பெரிய ஷாட்களுக்கு முயன்றது பெரிய தவறு. டெய்லெண்டர்கள் பேட்டர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடும்போது தொடக்கவரிசை, நடுவரிசை பேட்டர்கள் நிதானமாக ஆடி இருக்கலாம்.

8-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை பஞ்சாப் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை சீராக இழந்து வந்தது. 62 ரன்களுக்கு 2 விக்கெட் என இருந்த பஞ்சாப் அணி அடுத்த 16 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். பல போட்டிகளில் பஞ்சாப் அணியை காப்பாற்றிய சஷாங் சிங், அசுதோஷ் சர்மா இருவருமே ஏமாற்றம் அளித்தனர்.

“வெற்றி பெற்றாலும் வருத்தம்தான்”

ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில், “டாஸில் தோற்றாலும் போட்டியில் வென்றுவிட்டாயே என பலர் கூறினாலும் டாஸ் தோற்றது எனக்குக் கவலையாக இருக்கிறது. இந்த விக்கெட்டில் பந்து மெதுவாக பேட்டரை நோக்கி வரும் என்று கூறினர், பந்து தாழ்வாக பேட்டரை நோக்கி வரும் என்றனர். நாங்கள் 200 ரன்களை எடுக்கவே தொடக்கத்தில் நினைத்தோம். ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால், 180 ரன்களை எட்டிவிடுவோம் என்று நம்பினேன். ஆனால் 10 ரன்கள் குறைவுதான்.

2-வது இன்னிங்ஸில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. சிமர்ஜித் சிங் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவார் என எனக்கு இதற்குமுன் தெரியாது. தீபக், ஷர்துல், துஷார், பதிரணா, முஸ்தாபிசுர் மட்டுமே வைத்திருந்தோம். சிமர்ஜித்துக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. பரவாயில்லை இன்று அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதை சிறப்பாக பயன்படுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாங்கள் அடைந்த காயத்துக்கு நிவாரணம் இந்த வெற்றியால் கிடைத்துள்ளது. யாரெல்லாம் விளையாடப் போகிறார்கள் என்பது காலை வரை தெரியவில்லை. இந்த வெற்றி எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

ரஹானே ஏமாற்றம்

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட், ரஹானே ஆட்டத்தைத் தொடங்கினர். ரபாடா வீசிய முதல் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் ஏதும் சிஎஸ்கே பேட்டர்கள் அடிக்கவில்லை. அர்ஷ்தீப் வீசிய 2-வது ஓவரில் ரஹானே பவுண்டரி அடித்தநிலையில் அதே ஓவரின் 5-வது பந்தில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த முறையும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே இந்த சீசனில் 200 ரன்களைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்ஷெல், கெய்க்வாட் அதிரடி

அடுத்து டேரல் மிட்ஷெல் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். அர்ஷ்தீப் வீசிய 4-வது ஓவரில் மிட்ஷெல் ஒரு பவுண்டரி, சிக்ஸர் உள்பட 12 ரன்கள் சேர்த்தார். ஹர்பிரித் பிரார் வீசிய 6-வது ஓவரில் மிட்ஷெல் ஒரு பவுண்டரியும், கெய்க்வாட் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது.

கடந்த போட்டியில் ஹர்பிரித் பிரார் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள்தான் கொடுத்திருந்தார். இன்று ஒரே போட்டியில் 19 ரன்கள் வாரி வழங்கினார். இதுதான் டி20 கிரிக்கெட்!

சிஎஸ்கே தடுமாற்றம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம், Getty Images

8-வது ஓவரை ராகுல் சஹர் வீச வந்தபோதுதான் திருப்பம் ஏற்பட்டது. சஹர் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கெய்க்வாட்-மிட்ஷெல் கூட்டணி 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்தவந்த சிஎஸ்கே முதுகெலும்பு பேட்ஸ்மேன் ஷிவம் துபே டக்அவுட்டில் விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது.

ஷிவம் துபே சுழற்பந்துவீச்சை எளிதாகக் கையாண்டு ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஷிவம் துபே களத்தில் இருக்கும்போது சுழற்பந்துவீச்சாளர்களை பெரும்பாலும் அணியினர் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால், இன்று சுழற்பந்துவீச்சை கணிக்கத் தவறி துபே டக்அவுட்டில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு மொயின் அலி களமிறங்கி, மிட்ஷெலுடன் சேர்ந்தார். இருவரும் ஒரு ஓவர்கூட சேர்ந்து விளையாடவில்லை, அதற்குள் பிரி்ந்தனர். ஹர்ஷல் படேல் வீசிய 9-வது ஓவரில் மிட்ஷெல் கால்காப்பில் வாங்கி 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

69 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 6 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு ஜடேஜா களமிறங்கி, மொயின் அலியுடன் இணைந்தார். ராகுல் சஹர் வீசிய 10-வது ஓவரை சமாளிக்கத் திணறிய சிஎஸ்கே பேட்டர்கள் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்தது.

ஆங்கர் ரோலில் ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம், Getty Images

ஹர்ஷல் படேல் வீசிய 11-வது ஓவரில் ஜடேஜா 2 பவுண்டரிகள் உள்பட11 ரன்கள் சேர்த்தார். ரபாடா வீசிய 12-வது ஓவரில் மொயின் அலி 2 பவுண்டரிகள் அடிக்கவே சிஎஸ்கே அணி 100 ரன்களை எட்டியது. இருவருக்கும் இடையே பார்ட்னர்ஷிப் உருவாகியது.

ஆனால், சாம் கரண் 13-வது ஓவரை வீச வந்தபோது இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். சாம்கரன் வீசிய ஸ்லோ பவுன்சரை தூக்கி அடித்த மொயின் அலி, 17 ரன்னில் பேர்ஸ்டோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். அடுத்து மிட்ஷெல் சான்ட்னர் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்தது.

16-வது ஓவரை ராகுல் சஹர் வீசியபோது மீண்டும் விக்கெட் விழுந்தது. அந்த ஓவரின் கடைசிப்பந்தில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து சான்ட்னர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷர்துல் தாக்கூர் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார்.

சாம்கரன் வீசிய 17-வது ஓவரில் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த தாக்கூர், 3-வது பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடித்தபோது எளிதாகப் பிடிக்க வேண்டிய கேட்ச்சை சஷாங்க் சிங் தவறவிட்டதால் 14 ரன்களை சிஎஸ்கே சேர்த்தது.

தோனி முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்

ராகுல் சஹர் வீசிய 18-வது ஓவரில் தாக்கூர் ஒரு பவுண்டரியும், ஜடேஜா ஒரு சிக்ஸரும் விளாசி 13 ரன்கள் சேர்த்தனர். 19-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார், முதல் 3 பந்துகளில் தாக்கூருக்கு படம் காட்டிய ஹர்சல் படேல், 4-வது பந்தில் கிளீன் போல்டாக்கி தாக்கூரை(17) வெளியேற்றினார்.

அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கினார். தோனி சந்தித்த முதல் பந்திலேயே ஹர்சல் படேல் யார்கர் வீசி க்ளீன் போல்டாக்கி டக்அவுட்டில் வெளியேற்றினார். தோனி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தவுடன் அரங்கில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, மௌனமாகினர். அடுத்து தேஷ்பாண்டே களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார்.

கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். ஸ்ட்ரைக்கில் இருந்த ஜடேஜா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசிய நிலையில் சாம்கரனிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது.

பஞ்சாப் அணித் தரப்பில் ராகுல் சஹல், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஷாக் அளித்த சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம், Getty Images

168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் ஆட்டத்தைத் தொடங்கினர். தேஷ்பாண்டே வீசிய அவரின் முதல் ஓவரில் பவுண்டரி அடித்த பேர்ஸ்டோ அடுத்த இரு பந்துகளில் க்ளீ்ன் போல்டாகி 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த ரிலே ரூஸோவும் வந்த வேகத்தில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். 2-வது ஓவரிலேயே பஞ்சாப் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்துவந்த சஷாங் சிங், பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை மெதுவாக உயர்த்தினர். தேஷ்பாண்டே வீசிய 6-வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 16 ரன்களை விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது.

சரிவிலிருந்து மீளாத பஞ்சாப்

சான்ட்னர் வீசிய 8-வது ஓவரில் மீண்டும் சிஎஸ்கே அணி பஞ்சாப்புக்கு அதிர்ச்சியளித்து. சான்ட்னர் வீசிய அந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சஷாங்சிங் 27 ரன்களில் சிமர்சித் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட் செய்து வந்த பிரப்சிம்ரன் சிங் 30 ரன்னில் ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா ரன் ஏதும் சேர்க்காமல் சிமர்ஜீத் ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. அஷுதோஷ் சர்மா, சாம்கரன் 6-வது விக்கெட்டுக்கு இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஆனால் சாம்கரனும் நிலைக்கவில்லை. ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து சாம்கரன் 7 ரன்னில் வெளியேறினார். அதே ஓவரின் 4-வது பந்தில் அசுதோஷ் சர்மா 3 ரன்னில் சிமர்ஜித்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பஞ்சாப் பறிகொடுத்தது. 8-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை ஒவருக்கு ஒரு விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்தது.

பேட்டர்கள் ஏமாற்றம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம், Getty Images

8-வது விக்கெட்டுக்கு ஹர்பிரித் பிரார், ஹர்சல் படேல் ஜோடி சேர்ந்தனர். சிமர்ஜித் வீசிய 15-வது ஓவரில் ஹர்ஷல் படேல் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால், அதே ஓவரின் 4-வது பந்தில் சமீர் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து ஹர்ஷல் படேல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களும், 7 முதல் 15 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்தது. ஹர்பிரித் பிரார், ராகுல் சஹர் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி எளிய இலக்கை சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியில் பிடியில் இருந்தது.

ஆனால் கிளீசன் வீசிய 16-வது ஓவரில் ராகுல் சஹர் அதிரடியாக ஆடி 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 14 ரன்களை விளாசி நம்பிக்கை அளித்தார். பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 100 ரன்களைக் கடந்தது.

18-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஹர்பிரித் பிரார், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். அந்த ஓவரில் ராகுல் சஹர்(12) க்ளீன் போல்டாகவே, பஞ்சாப் அணி ஆல்அவுட் நோக்கி நகர்ந்தது.

9-வது விக்கெட்டுக்கு ஹர்பிரித் பிரார், ரபாடா இணைந்து ஓரளவு ரன்களைச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். க்ளீசன் வீசிய 19 ஓவரில் ரபாடா சிக்ஸர் அடித்து 11 ரன்களைச் சேர்த்தார்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 7 ரன்கள் சேர்க்கவே 20 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது. ரபாடா 11, ஹர்பிரித் பிரார் 17 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சிஎஸ்கே தரப்பில் சிமர்ஜித், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.