பெட்டிகளுக்கு வாக்களித்த இந்திய மக்கள்: இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின் கதை

பட மூலாதாரம், PHOTO DIVISION

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

(இன்னும் சில மாதங்களில் இந்தியாவின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடந்த பொதுத் தேர்தல்கள் ஒவ்வொன்றும் எப்படி நடந்தன, அந்தத் தேர்தல்களில் நடந்த ஆச்சரியகரமான நிகழ்வுகள் என்ன, தேர்தல் முடிவுகளை எவையெல்லாம் பாதித்தன என்பது குறித்த தொடரை பிபிசி வெளியிடுகிறது. அந்தத் தொடரின் முதல் பகுதி இது.)

இந்தியா 1947இல் சுதந்திரம் அடைந்துவிட்டாலும், சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்கள் 1952ஆம் ஆண்டில்தான் நடந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஒரு பிரிட்டிஷ் டொமினியனாகத்தான் இருந்தது.

பிரதமருக்கு மேலே ‘கவர்னர் ஜெனரல்’ என ஒருவர் இருந்தார். இதற்குப் பிறகு இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த அரசமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதுவரை, இந்திய அரசமைப்பு அவையே நாடாளுமன்றத்தைப் போலச் செயல்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட பிறகு, சுயேச்சையான தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராக யாரை நியமிப்பது என யோசித்தபோது, நேருவின் நினைவுக்கு வந்தவர் ஐசிஎஸ் அதிகாரியான சுகுமார் சென். அவர் அப்போது மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலராக இருந்தார். முன்னெப்போதும் இந்தியா கண்டிராத ஒரு பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெட்டிகளுக்கு வாக்களித்த இந்திய மக்கள்: இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின் கதை

பட மூலாதாரம், PHOTO DIVISION

படக்குறிப்பு,

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென்

ஜவஹர்லால் நேருவை பொறுத்தவரை, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்தி முடிக்க நினைத்தார். ஆனால், சுகுமார் சென் அவசரப்படவில்லை. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் நடக்கும் முதல் பொதுத் தேர்தல். அந்தத் தேர்தல் மிக நியாயமாக நடத்தப்பட வேண்டும். ஆகவே மிகக் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நினைத்தார்.

தேர்தலுக்கான நடவடிக்கைகள் 1951இல் துவங்கின. 21 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் எல்லோரும் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதியில் ஒருவர் 180 நாட்களுக்கு மேல் வசித்தால், அந்தத் தொகுதியில் அவர் பதிவு செய்துகொண்டு வாக்களிக்கலாம்.

இந்தியாவில் வசித்த பெரும்பான்மை மக்களிடம் அடையாளத்திற்கான எவ்வித ஆவணங்களும் இல்லாத காலகட்டம் அது. ஆகவே, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதே மிகச் சிரமமான காரியமாக இருந்தது. அதற்கு முன்பு இந்தியாவில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தேர்தல் நடந்ததில்லை. தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்க கட்டமைப்பு ஏதும் இல்லை. 1944இல் மாகாணத் தேர்தல்கள் நடந்திருந்தன என்றாலும், அந்தத் தேர்தல்களை நடத்தியவர்களில் பலர் இறந்து போயிருந்தார்கள்.

இருந்தாலும் அசராமல் தேர்தல் பணிகளைத் துவங்கினார் சுகுமார் சென். முதல் பொதுத் தேர்தலின்போது இந்தியாவில் மொத்தமாக 401 தொகுதிகள் இருந்தன. இந்த 401 தொகுதிகளில் இருந்து 314 தொகுதிகளுக்கு ஒற்றை உறுப்பினர்களும் 86 தொகுதிகளில் இருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஒரே ஒரு தொகுதியில் இருந்து மூன்று உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இப்படியாக மொத்தமாக 489 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். 14 தேசியக் கட்சிகள் உட்பட, 53 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் களத்தில் அப்போது இருந்தன.

வாக்குச்சீட்டில் சின்னமே இல்லாமல் மக்கள் வாக்களித்தது எப்படி?

பெட்டிகளுக்கு வாக்களித்த இந்திய மக்கள்: இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின் கதை

பட மூலாதாரம், PHOTO DIVISION

நாடு பிரிவினையைச் சந்தித்து நான்கு ஆண்டுகளே ஆகியிருந்தன. யார் நாட்டின் குடிமகன் என்பதற்கான வரையறைகள் எல்லாம் தெளிவாக இல்லாத ஒரு தருணம். அந்தத் தருணத்தில் ஒரு இடத்தில் 180 நாட்களுக்கு மேல் வசித்தவர்கள், அந்தத் தொகுதியில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால், வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதன் மூலம், நாட்டின் குடிமகனாகிவிடலாம் எனப் பலரும் கருதினார்கள்.

ஆகவே, வாக்காளர் பட்டியலில் போட்டி போட்டுக்கொண்டு பலரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தபோது இந்திய மக்கள் தொகையில் 49 சதவீதம் பேர் அதாவது 17 கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 343 பேர் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் இந்திய மக்கள் தொகையில் வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அதேபோல, மாகாணத் தேர்தல்களில் வாக்களித்தவர்களைத் தவிர, மற்றவர்களுக்குத் தேர்தல் என்றால் என்ன என்பது தெரியாது.

இதனால், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், வாக்குச் சீட்டில் சின்னம் அச்சடிக்கப்பட்டு, அதில் முத்திரை குத்த வேண்டியதில்லை. பதிலாக, வாக்குச் சாவடிகளில் அந்தந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் ஒட்டப்பட்ட வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன. ஒருவர் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க விரும்பினால், தான் விரும்பும் சின்னம் ஒட்டப்பட்ட பெட்டியில் தனது வாக்கைச் செலுத்த வேண்டும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை, 489 இடங்கள். சட்டமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன.

ஆகவே, 24,73,850 வாக்குப் பெட்டிகளைச் செய்ய வேண்டியிருந்தது. பெட்டிகளைச் செய்து தர, கோத்ரேஜ், பாய்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இந்தத் தேர்தலுக்கு 2,24,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 56,000 தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில், இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் 25ஆம் தேதி முதல் 1952 பிப்ரவரி 21ஆம் தேதி வரை பல கட்டங்களாக நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

முதல் பொதுத் தேர்தலின்போது இந்தியாவில் அரசியல் சூழல்

அம்பேத்கர்

பட மூலாதாரம், GETTY IMAGES

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் 14 தேசிய கட்சிகள் இருந்தன என்றாலும், அதில் முக்கியமான கட்சிகளாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவையே இருந்தன.

இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கட்சி என்ற பெயருடன் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருந்தது காங்கிரஸ். காங்கிரசின் சித்தாந்தத்திற்கு எதிராக ஒரு கட்சியைத் துவங்க நினைத்தது ஆர்.எஸ்.எஸ்.

அப்படி துவங்கப்பட்ட கட்சிதான் பாரதீய ஜன சங்கம். ஜவஹர்லால் நேருவின் இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, 1951இல் இந்தக் கட்சியைத் துவங்கினார்.

அடுத்ததாக, இந்தியா முழுவதும் இடதுசாரிக் கட்சியினர் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். நாடு முழுவதும் நிலவிய ஏழ்மை, பல்வேறு கோரிக்கைகளுக்கான போராட்டங்களின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவு தளத்தை உருவாக்கியிருந்தது. முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரசை எதிர்கொள்ள அந்தக் கட்சி தயாராக இருந்தது.

பெட்டிகளுக்கு வாக்களித்த இந்திய மக்கள்: இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின் கதை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி (வலது), ஜன சங்கத்தின் நிறுவனர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான ஜே.பி. க்ருபளானி, அந்தக் கட்சியில் இருந்து விலகி கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி என்ற கட்சியைத் துவங்கியிருந்தார். அதேபோல, ஜெயப் பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோஹியா போன்றவர்கள் இணைந்து சோஷலிஸ்ட் கட்சியைத் துவங்கியிருந்தனர்.

இது தவிர, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அம்பேத்கரின் பட்டியல் சாதிகள் சம்மேளனம் (Scheduled Castes Federation) ஆகிய கட்சிகளும் களத்தில் இருந்தன.

இந்த அனைத்துக் கட்சிகளிலும் காங்கிரஸ் கட்சியே நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தக்கூடிய அளவுக்கு வலுவான கட்சியாக இருந்தது. சுமார் 250 இடங்களில் சோஷலிஸ்ட் கட்சியும் சுமார் ஐம்பது இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின.

ஜவஹர்லால் நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அஜய் கோஷ், ஆச்சார்ய க்ருபாளினி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், டாக்டர் அம்பேத்கர், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களே தேசிய அளவில் அறியப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்.

சென்னை மாகாணத்தில் அரசியல் சூழல் என்ன?

நாடாளுமன்ற தேர்தல் 1952

பட மூலாதாரம், PHOTO DIVISION

அப்போதைய சென்னை மாகாணத்தில் தற்போதைய தமிழ்நாடு, கேரளாவின் மலபார் பகுதிகள், ஆந்திரா, கர்நாடகத்தின் சில பகுதிகள் அடங்கியிருந்தன. சென்னை மாகாணத்தில் இருந்த 62 மக்களவைத் தொகுதிகளில் 13 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகள்.

ஆகவே 75 மக்களவை உறுப்பினர்கள் சென்னை மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல, மாநில சட்டமன்றத்தில் 309 தொகுதிகள். இரட்டை உறுப்பினர் தொகுதிகள் 66. மொத்தமாக 375 தொகுதிகள்.

இந்த இரட்டை உறுப்பினர் தொகுதிகள் என்பது, பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளாகும். இங்கு கூடுதலாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார். ஆகவே இந்தத் தொகுதிகளுக்கு மட்டும் இரண்டு.

இதற்கு முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நீதிக் கட்சி, தற்போது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் சேர்ந்து திராவிடர் கழகமாக மாறியிருந்தது. தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருந்தது.

ஆகவே, சென்னை மாகாணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வந்தது. காங்கிரசில் பி.எஸ். குமாரராஜா, பக்தவத்சலம், காமராஜர் போன்ற செல்வாக்குமிக்க தலைவர்கள் இருந்தனர். ஆனால், 1946ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மூன்று முதலமைச்சர்கள் வந்துவிட்டதால் சற்று கலகலத்துத்தான் போயிருந்தது கட்சி.

காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்டிருந்த முன்னாள் சென்னை மாகாண பிரதமர் டி. பிரகாசம் ‘ஹைதராபாத் ஸ்டேட் பிரஜா கட்சி’ என்ற கட்சியைத் துவங்கியிருந்தார். தேர்தலுக்கு சற்று முன்பாக இந்தக் கட்சி, கிருபாளினியின் கிஸான் பிரஜா மஸ்தூர் கட்சியுடன் இணைந்து கொண்டது. சென்னை மாகாண காங்கிரசில் காமராஜர்தான் வலுவான தலைவர் என்றாலும் ராஜாஜியின் ஆதரவாளர்களிடம் ஒரு எதிர்ப்புணர்வும் இருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் வலுவான தலைவர்களாக இருந்தனர். அவர்கள், ஆந்திரப் பகுதிகளிலும் தஞ்சை போன்ற பகுதிகளிலும் தங்களுக்கு இருக்கும் ஆதரவை நம்பியிருந்தனர்.

வெற்றி பெற்றவர்கள் யார்?

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், GETTY IMAGES

இவை தவிர, ராமசாமி படையாட்சியாரின் தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, எம்.ஏ. மாணிக்கவேல் நாயக்கர் தலைமையிலான ‘காமன் வீல்’ கட்சி ஆகியவையும் தேர்தலில் போட்டியிட்டன. மேலும் சோஷலிஸ்ட் கட்சி, கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, ஃபார்வர்ட் பிளாக் கட்சிகளும் களத்தில் இருந்தன. நீதிக் கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அதை ஏற்காத சில நீதிக் கட்சியினர் பி.டி. ராஜன் தலைமையில் செயல்பட்டு வந்தனர். அவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.

தி.மு.க. துவங்கப்பட்டுவிட்டாலும், இந்தத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை. பெரியார் காங்கிரசிற்கு எதிராக, இடதுசாரிகளை ஆதரிப்பதாக அறிவித்துவிட்ட நிலையில் தி.மு.க. ஆதரவையும் பெற விரும்பியது கம்யூனிஸ்ட் கட்சி.

ஆனால், தி.மு.க. சில நிபந்தனைகளை விதித்தது. அதாவது, திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதற்காகப் பேச வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்பதாக எழுதிக் கையெழுத்திட வேண்டும் என்றது தி.மு.க. இது இடதுசாரிகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

ஆனால், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் காமன்வீல் கட்சியும் இந்த நிபந்தனைகளை ஏற்று கையெழுத்திட்டுக் கொடுத்தனர். இந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் ஆதரவளிப்பதாக தி.மு.க. அறிவித்தது.

தேசிய அளவில் இருந்ததைப் போலவே பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. அதற்கு அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது.

தேசிய அளவில், ஜவஹர்லால் நேருவுக்கு இருந்த செல்வாக்கு அந்தக் காலகட்டத்தில் யாருக்கும் இல்லை. இந்தத் தேர்தலில் அவர் நாடு முழுவதும் பயணம் செய்து, மிகத் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜெயப்பிரகாஷ் நாராயண், க்ருபாளினி ஆகியோருக்கு வட இந்தியாவில் செல்வாக்கு இருந்த அளவுக்கு தென்னிந்தியாவில் செல்வாக்கு இருக்கவில்லை. ஆகவே, காங்கிரஸ் உருவாக்கியதைப் போல, இந்தியா முழுவதும் இடங்களை வென்று ஆட்சியமைக்கக்கூடிய கட்சி என்ற தோற்றத்தை மற்ற கட்சிகளால் ஏற்படுத்த முடியவில்லை.

இது தேர்தல் முடிவுகளில் தெளிவாக வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக 364 இடங்களைக் கைப்பற்றியது. இதற்கு அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களைக் கைப்பற்றியது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கூடுதல் சதவீதத்தை சோஷலிஸ்ட் கட்சி பெற்றிருந்தது. ஆனால், அக்கட்சி பெற்றிருந்த இடங்கள் பன்னிரண்டுதான். கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி 9 இடங்களையும் பாரதீய ஜன சங்கம் 3 இடங்களையும் கைப்பற்றின.

தமிழ்நாட்டில் மொத்தமிருந்த 75 நாடாளுமன்றத் தொகுதிகளில், அதிகபட்ச இடங்களை காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியிருந்தது. மொத்தமாக 35 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. இதற்கு அடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும் கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சிக்கு 6 இடங்களும் சுயேச்சைகள் 15 பேரும் வெற்றி பெற்றனர்.

குறிப்பிடத்தக்க தோல்வி என்று பார்த்தால், வடக்கு மத்திய பம்பாய் தொகுதியில் இருந்து போட்டியிட்ட அம்பேத்கர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான என்.எஸ். கஜ்ரோல்கரிடம் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார். உத்தர பிரதேசத்தின் பைஸாபாத்தில் போட்டியிட்ட ஆச்சார்ய க்ருபளானியும் தோல்வியடைந்தார்.

தேசிய அளவில் அதிக அளவில் இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். வெளியுறவு, பாதுகாப்புத் துறைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டார் நேரு. கல்வித்துறை அமைச்சராக அபுல்கலாம் ஆசாத் பதவியேற்றார். மின்சாரம், திட்டமிடல் ஆகிய துறைகள் குல்சாரி லால் நந்தாவுக்கும் ரயில்வே துறை லால் பகதூர் சாஸ்திரிக்கும் தகவல் தொடர்புத் துறை ஜெகஜீவன் ராமுக்கும் அளிக்கப்பட்டன.