நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளி, ஏப்ரல் 26-ஆம் தேதி) காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்துள்ளது.

இரண்டாம் கட்டத்தில் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பல முக்கிய பிரமுகர்கள் இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடுகிறார்கள்.

மாலை 5 மணி நிலவரப்படி திரிபுராவில் அதிகப்படியாக 77.53% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில் 52.74% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மணிப்பூரில் 76.06% வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 71.84% வாக்குகளும், கேரளாவில் 63.94% வாக்குகளும், கர்நாடகாவில் 63.90% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் 54.83% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் 67.22% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இந்தக் கட்டம் தொடர்பான சில முக்கிய விஷயங்களையும், தேர்தல் களத்தில் இருக்கும் முக்கிய வேட்பாளர்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.

கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த இரண்டாம் கட்டத்தில் 1.67 லட்சம் வாக்குச்சாவடிகளில் மொத்தம் 15.88 கோடி வாக்காளர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. இவர்களில் 8.08 கோடி பேர் ஆண்கள், 7.8 கோடி பேர் பெண்கள், 5,929 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. பிகாரில் உள்ள பங்கா, மாதேபுரா, ககாரியா மற்றும் முங்கர் தொகுதிகளின் பல வாக்குச் சாவடிகளில், வெப்பமான காலநிலையில் வாக்காளர்களின் வசதிக்காக வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல், ராஜஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் பெண்கள்

எந்தெந்த மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு?

  • கேரளா (20 இடங்கள் – அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு): காசர்கோடு, கண்ணூர், வடகரா, வயநாடு, கோழிக்கோடு, மல்லபுரமஸ் பாலக்காடு, பொன்னானி, ஆலத்தூர், திருச்சூர், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, மாவேலிக்கரா, பத்தனம்திட்டா, கொல்லம், அத்திக்கல், திருவனந்தபுரம்
  • கர்நாடகா (14 இடங்கள்): உடுப்பி சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூரு ரூரல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார்.
  • அசாம் (5 இடங்கள்): கரீம்கஞ்ச், சில்சார், தர்ராங்-உடல்குரி, திபு, நாகோன்
  • பிகார் (5 இடங்கள்): கிஷன்கஞ்ச், கதிஹார், பூர்னியா, பாகல்பூர், பாங்கா
  • சத்தீஸ்கர் (3 இடங்கள்): ராஜ்நந்த்கான், மஹாசமுந்த், கான்கேர்
  • ஜம்மு காஷ்மீர் (1 இடம்): ஜம்மு
  • மத்தியப் பிரதேசம் (7 இடங்கள்): திகம்கர், தாமோ, கஜுராஹோ, சத்னா, ரேவா, ஹோஷங்காபாத், பெதுல்
  • மகாராஷ்டிரா (8 இடங்கள்): புல்தானா, அகோலா, அமராவதி, வார்தா, யவத்மால்-வாஷிம், ஹிங்கோலி, நாந்தேட், பர்பானி
  • மணிப்பூர்: வெளி மணிப்பூர்
  • ராஜஸ்தான் (13 இடங்கள்): டோங்க்-சவாய் மாதோபூர், அஜ்மீர், பாலி, ஜோத்பூர், பார்மர், ஜலோர், உதய்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர், ராஜ்சமந்த், பில்வாரா, கோட்டா, ஜலவர்-பரான்
  • திரிபுரா (1 இடம்): திரிபுரா கிழக்கு
  • உத்தரப் பிரதேசம் (8 இடங்கள்): அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், கௌதம் புத்த நகர், புலந்த்ஷாஹர், அலிகார், மதுரா
  • மேற்கு வங்கம் (3 இடங்கள்): டார்ஜிலிங், ராய்கஞ்ச் மற்றும் பலூர்காட்
நாடாளுமன்றத் தேர்தல், கேரளா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேரளா வயநாடு தொகுதியில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் பெண்கள்
ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி – கேரளா வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்

நட்சத்திர வேட்பாளர்கள் யார்?

ராகுல் காந்தி

இரண்டாம் கட்டமாக கேரளாவின் வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி இரண்டாவது முறையாக இத்தொகுதொயில் இருந்து போட்டியிடுகிறார். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதியுடன் இணைந்து கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். அமேதியில் பா.ஜ.க-வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.

கடந்த முறை வயநாட்டில் ராகுல் காந்தி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இம்முறை அவருக்கு எதிராக சி.பி.ஐ-யின் அன்னி ராஜா மற்றும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அன்னி ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அன்னி கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி. இவர் இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். சுரேந்திரன் பாஜக மாநிலத் தலைவராக உள்ளார்.

சசி தரூர், நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சசி தரூர் – திருவனந்தபுரம் தொகுதி இருந்து காங்கிரஸ் வேட்பாளர்

சசி தரூர்

கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை பா.ஜ.க தரூருக்கு எதிராக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை களமிறக்கியுள்ளது. இத்தொகுதியில் சிபிஐ சார்பில் பன்னியன் ரவீந்திரன் போட்டியிடுகிறார்.

ஹேமமாலினி, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹேமமாலினி – உத்தரபிரதேச மாநிலம் மதுரா பா.ஜ.க வேட்பாளர்

ஹேமமாலினி

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் ஹேமமாலினியை களமிறக்கியிருக்கிறது பா.ஜ.க. ஹேமமாலினி மதுரா மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு வந்துள்ளார். அவர் 2014-இல் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரியையும், 2019-இல் சமாஜ்வாதி-லபகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணியின் குன்வர் நரேந்திர சிங்கையும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த முறை ராஷ்ட்ரிய லோக் தளம் பா.ஜ.க-வுடன் உள்ளது. ஹேமமாலினிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் முகேஷ் தங்கர் போட்டியிடுகிறார்.

ஓம் பிர்லா, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓம் பிர்லா – ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி பா.ஜ.க வேட்பாளர்

ஓம் பிர்லா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியில் எம்.பி-யாக இருந்து வருகிறார். இவருக்குப் போட்டியாக காங்கிரஸின் பிரஹலாத் குஞ்சால் களமிறங்க்குகிறார். பிரஹலாத் முன்பு பா.ஜ.க-வில் இருந்தவர். தற்போது காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

தேஜஸ்வி சூர்யா, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேஜஸ்வி சூர்யா – பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர்

தேஜஸ்வி சூர்யா

பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யா போட்டியிடுகிறார். 2019-ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு வந்த தேஜஸ்வி சூர்யா, இரண்டாவது முறையாக களமிறங்க்கியிருக்கிறார்.

பெங்களூரு தெற்கு தொகுதியில் இரு இளைஞர்களுக்கு இடையேதான் போட்டி. தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சௌமியா ரெட்டியை நிறுத்தியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் சௌமியா ரெட்டி தோல்வியடைந்தார். சௌமியாவின் தந்தை ராமலிங்க ரெட்டி கர்நாடக அரசில் அமைச்சராக உள்ளார்.

பா.ஜ.க ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க தலைவர் அனந்த்குமார் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 2019-ஆம் ஆண்டு தேர்தலில், தேஜஸ்வி சூர்யா இந்த தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் தலைவர் பிகே ஹரிபிரசாத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.