இந்து திருமண சடங்குகள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆபத்தா?

இந்து திருமண சடங்குகள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “சடங்குகளை முறையாக மேற்கொண்டு திருமணங்களை நடத்த வேண்டும்” என்கிறது உச்ச நீதிமன்றம்.
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்

திருமண உறவு, விவாகரத்து குறித்த வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளும் கருத்துகளும் சுவாரசியமாக இருக்கும் அதே சமயத்தில், சமூகத்தில் பெரும் விவாதங்களையும் அவை கிளப்பும். அப்படி விவாதத்தை எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியிருக்கும் தீர்ப்பு.

இந்து திருமணங்கள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு சுயமரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கிய தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்து திருமணம் என்பது “சடங்குபூர்வமானது”, எனவே இந்து திருமணச் சட்டம் 1955-ல் குறிப்பிட்டுள்ள “சடங்குகளை முறையாக மேற்கொண்டு திருமணங்களை நடத்த வேண்டும்” என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளது.

வழக்கு என்ன?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மாசிஹ் அமர்வு முன்பு சமீபத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதன்படி, பெண் ஒருவர் தன்னுடைய விவாகரத்து வழக்கை முசாஃபர்பூரில் உள்ள பிகார் நீதிமன்றத்திலிருந்து ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் அதேசமயத்தில் தங்களின் திருமணத்தின்போது எவ்வித சடங்குகளும் பின்பற்றப்படாததால் தங்கள் திருமணத்தையே செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கூறி, இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 142-ன் கீழ், கணவன்-மனைவி இருவரும் இணைந்து விண்ணப்பம் அளித்திருந்தனர்.

சட்டப்பிரிவு 142-ன் கீழ், இந்திய உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அத்தம்பதியின் திருமணத்தை செல்லாது என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை வழங்கியபோது நீதிபதிகள் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, “இந்து திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சப்தபதி’ உள்ளிட்ட திருமணச் சடங்குகளை முறையாக மேற்கொள்ளாத திருமணங்கள் இந்து திருமணங்களாக அர்த்தம் கொள்ளப்படாது” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அப்படியான திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் செல்லாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், ‘சப்தபதி’ என்பது, திருமணம் செய்துகொள்ளும் இணை, அக்னி குண்டத்தைச் சுற்றி ஏழு அடிகள் நடப்பதாகும்.

இந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதன்படி, இந்து திருமண சடங்குகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் செல்லாதா? குறிப்பாக, எவ்வித சடங்குகளும் இன்றி, கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு இதனால் ஆபத்து நேர்ந்துள்ளதா?

இந்து திருமண சடங்குகள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

சுயமரியாதை திருமணம் என்பது என்ன?

மதச் சடங்குகளை தவிர்த்து எளிய முறையில் நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு பரஸ்பரம் தங்களின் இணையாக ஏற்றுக்கொண்டதை உறுதிமொழி எடுத்து அறிவிப்பதே சுயமரியாதைத் திருமணம்.

‘பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின்’ இணையதள தகவலின்படி, தமிழ்நாட்டில் 1928-ம் ஆண்டிலிருந்தே சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. மதச் சடங்குகளை தவிர்த்து மேற்கொள்ளப்படும் இத்தகைய திருமணங்களை திராவிடர் கழகத்தின் முன்னோடி பெரியார் ஓர் இயக்கமாகவே முன்னின்று நடத்தியுள்ளார். எனினும், இத்தகைய திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது.

திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திமுகவை தோற்றுவித்த அண்ணா 1967-ம் ஆண்டில் முதலமைச்சரான பிறகே, சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் வகையில், இந்து திருமண (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் பிரிவு 7 (அ)-ஐ கொண்டுவந்தார்.

இச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு நடைபெற்ற திருமணங்களும் செல்லுபடியாகும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அண்ணா முதலமைச்சரான மிகக்குறுகிய காலத்தில் செய்யப்பட்ட முக்கிய சீர்திருத்தமாக இதனை சமூக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்து திருமண சடங்குகள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆபத்தா?
படக்குறிப்பு, சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்து இல்லை என்கிறார், வழக்கறிஞர் ரமேஷ் பெரியார்.

சடங்கு மறுப்பு திருமணங்களுக்கு ஆபத்தா?

அத்தகைய சுயமரியாதை திருமணங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆபத்து சூழ்ந்துள்ளதா? ‘இல்லை’ எனக் கூறுகின்றனர் சட்ட நிபுணர்கள்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கான நலச்சங்கத்தின் செயலாளருமான ரமேஷ் பெரியார் பிபிசி தமிழிடம் பேசினார். கடந்த இரண்டாண்டுகளில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் அலுவலகத்தில் மிக எளிய முறையில், சிக்கனமாக சுமார் 1,500 சுயமரியாதை திருமணங்களை நடத்திவைத்துள்ளதாக கூறுகிறார் அவர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சுயமரியாதை திருமணங்களுக்கோ, சிறப்புத் திருமணங்களுக்கோ (வெவ்வேறு சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களிடையே நடைபெறும் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம்) பாதிப்பு இல்லை என்கிறார் அவர்.

“இந்து திருமணச் சட்டத்திற்கும் சுயமரியாதை திருமண சட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்து திருமண சட்டம் பிரிவு 7-ல் குறிப்பிட்டுள்ளதை பின்பற்ற வேண்டும் என்றுதான் நீதிபதி பி.வி. நாகரத்னா கூறியுள்ளார். அந்த பிரிவின்படி, இந்து திருமணம் என்றால் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு வரையறை இருக்கிறது. இந்து திருமணத்தில் பிரிவு 7-ன் படி குறிப்பிட்ட சடங்குகளை பின்பற்றினால் மட்டுமே அந்த திருமணம் செல்லும், இல்லையென்றால் செல்லாது என்று தீர்ப்பில் கூறியிருக்கின்றனர்” என்கிறார்.

இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு (7)-ல் இந்து திருமண சடங்குகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, “இந்து திருமணமானது ஏதேனும் ஒரு தரப்பினரின் (கணவர் அல்லது மனைவி) வழக்கமான சடங்குகளுக்கு ஏற்ப நடத்தப்படலாம்” என்கிறது. மேலும், பிரிவு 7-ன் உட்பிரிவு (2)-ன் படி, ‘சப்தபதி’ உள்ளிட்ட சடங்குகளை அத்தம்பதி செய்யும்போது அத்திருமணம் முழுமை பெறுவதாகவும் இருவருக்குள்ளும் பிணைப்பு ஏற்படுவதாகவும் கூறுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் சமூகத்திற்கும் திருமண சடங்குகள் வேறுபடும். எனவே, “அந்தந்த இடங்களுக்கோ, சாதிக்கோ என இருக்கும் நடைமுறைகள், சடங்குகளை பின்பற்றியிருக்க வேண்டும் என இந்த சட்டம் கூறுகிறது” என்கிறார் ரமேஷ் பெரியார்.

இந்து திருமண சடங்குகள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆபத்தா?
படக்குறிப்பு, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கினார் அண்ணா.

தமிழ்நாடு அரசு 1967-ம் ஆண்டில் நிறைவேற்றிய சட்டதிருத்தம் இந்த இந்து திருமணச் சட்டத்தில் உட்பிரிவாக 7(அ)-ல் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்பு சுயமரியாதை திருமணங்களுக்கு செல்லாது என்கிறார் ரமேஷ் பெரியார்.

இப்போது என்று இல்லாமல், பல சமயங்களில் சுயமரியாதை திருமணங்களை கேள்விக்குட்படுத்தும் தீர்ப்புகளும் கருத்துகளும் எழுந்தாலும், அதனை வலுவாக எதிர்கொண்டு உறுதியுடன் இருக்கும் வகையில் அச்சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

“சுயமரியாதை திருமணத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. 2023-ல் மிக சமீபத்தில் கூட உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது. 2014-ம் ஆண்டில் வழக்கறிஞர்கள் செய்துவைக்கும் சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அந்த தீர்ப்பை 2023, ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். மேலும், சுயமரியாதை திருமணங்களையோ, சிறப்பு திருமணங்களையோ மிகவும் ஆடம்பரமாக செய்ய முடியாது, அதை ரகசியமாக செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது” என்றார் அவர்.

சுயமரியாதை திருமணங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மட்டுமே பொருந்தும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பிபிசி தமிழிடம் பேசுகையில், “சுயமரியாதை திருமணத்திற்கான தமிழ்நாட்டின் சட்டத்திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய திருமணங்கள் சடங்குகளுடன் நடந்தாலும் சடங்குகள் இல்லாமல் நடந்தாலும் செல்லும் என்கிற பிரிவு இருக்கிறது” என்றார்.

சுயமரியாதை திருமணங்கள் செல்லாது எனக்கூறி தாக்கல் செய்த வழக்கில், அத்திருமணங்கள் செல்லும் என 2001-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்து திருமண சடங்குகள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், KIZHAKKU PATHIPPAGAM

படக்குறிப்பு, “தமிழ்நாட்டில் திருமணங்களை உறுதி செய்ய எந்தவொரு நெருப்போ அல்லது ஏழு அடிகளோ தேவையில்லை” என்கிறார், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.

சிறப்பு திருமணச் சட்டம்

இந்தியா முழுவதும் சிறப்பு திருமணச் சட்டம் 1954 வெவ்வேறு மதம், சாதியை சேர்ந்தவர்கள் சார்பதிவாளர் முன்பு எளிமையாக மாலை மாற்றி திருமணம் செய்து, திருமணப் பதிவு சான்றிதழை பெற முடியும். ‘தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009’-ன்படி திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்து திருமண சடங்குகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய முடியும். சுயமரியாதை திருமணங்களுக்கோ, சிறப்பு திருமண சட்டத்தின்படி திருமணம் செய்தவர்களுக்கோ இந்த தீர்ப்பால் பிரச்னை இல்லை.

அப்படியென்றால் யாருக்கு பிரச்னை?

“எவ்வித சடங்கையும் பின்பற்றாமல் இந்து மதப்படி திருமணம் செய்த தம்பதிகளில் யாரோ ஒருவருக்கு மனக்கசப்பு ஏற்படும்போது, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தங்கள் திருமணம் செல்லாது என அறிவிக்குமாறு கோரலாம். அத்தகைய சமயங்களில் திருமணம் செல்லாது என்று அறிவித்தால் அதில் தம்பதியில் ஒருவருக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர்களுக்கு பிரச்னையாக இருக்கும்” என்று சுட்டிக்காட்டுகிறார் வழக்கறிஞர் ரமேஷ்.

ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் அக்னி குண்டத்தை ஏழு முறை சுற்றி வலம் வரவில்லையென்றால் செல்லாது என தீர்ப்பளித்திருக்கிறது.