இம்பாக்ட் பிளேயர் விதி பற்றி ரோஹித் சர்மா கவலை ஏன்? இந்திய கிரிக்கெட்டில் அதன் தாக்கம் என்ன?

ஐபிஎல் டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

“இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. அந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டும், 12 வீரர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல.”

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் ரோஹித் சர்மா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்த கருத்து, ஐ.பி.எல்லில் கடைபிடிக்கப்படும் இம்பாக்ட் விதிமுறை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இம்பாக்ட் விதி ஐபிஎல் போட்டிகளை சுவாரஸ்யமாக்குகிறது என்று ஒரு தரப்பினரும், சர்வதேச போட்டிகளில் இல்லாத விதியால் இந்தியாவில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

திறமையை நிரூபிக்கும் களமான ஐபிஎல்

பாகிஸ்தான், இந்திய, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் முக்கிய வீரர்கள் ஒரே அணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் செய்த கற்பனையை நிஜமாக்கியது ஐபிஎல் டி20 தொடர்தான்.

இந்த ஐபிஎல் தொடரால் இந்திய அணிக்கு மட்டும் பலன் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக ஆடி தங்களின் தேசிய அணியில் இடம் பெற்றனர்.

புதிய இளம் பேட்டர்கள், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டு இந்திய அணிக்குக் கிடைத்தனர்.

கிரிக்கெட் கனவுகளுடன் பயிற்சி எடுத்து, விளையாடி வரும் ஏராளமான இளைஞர்களை அடையாளம் காணும் தளமாகவும், தங்களின் திறமையை நிரூபிக்கும் அரங்காகவும் ஐபிஎல் உருவெடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆல்ரவுண்டர்கள் ஓர் அணியில் இருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து அணியில் பலம் நிர்ணயிக்கப்படும்.

சர்வதேச அளவில் கிரிக்கெட் அணியின் பலம் என்ன?

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணி வலிமையானது என்பதை முடிவு செய்யும் அளவுகோல்களில் ஒன்றாக இருப்பது ‘ஸ்பெஷலிஸ்ட்’ பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் மட்டுமல்ல ‘ஆல்ரவுண்டர்கள்’ எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதும் கூர்ந்து கவனிக்கப்படும்.

ஆல்ரவுண்டர்கள் ஓர் அணியில் இருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து அணியில் பலம் நிர்ணயிக்கப்படும். அதிகமான ஆல்ரவுண்டர்களை வைத்திருக்கும் அணி உண்மையாகவே வலிமையான அணியாகவே பார்க்கப்படுகிறது. இதில் பேட்டிங் ஆல்ரவுண்டர், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று இரு வகைகளிலும் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகம்

இவையெல்லாம், ஐபிஎல் டி20 தொடரில் “இம்பாக்ட் ப்ளேயர்” விதி வருவதற்கு முன்புதான் இருந்தது. இந்த விதி ஐபிஎல் டி20 தொடரில் 2023ம் ஆண்டு சீசனில் நடைமுறைக்கு வந்தபின், ‘ஆல்ரவுண்டர்கள்’ அணிகளில் குறைந்து, “ இம்பாக்ட் ப்ளேயர்” என்ற கலாசாரத்துக்கு மாறிவிட்டனர்.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம், IPL / X

படக்குறிப்பு, 2023 ஐபிஎல் அணிகள்

இம்பாக்ட் ப்ளேயர் விதி என்றால் என்ன?

இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாரை வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்றாற்போல் பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்டரையோ, அல்லது பேட்டருக்கு பதிலாக பந்துவீச்சாளராகவோ இம்பாக்ட் பிளேயராக களமிறக்கிக் கொள்ளலாம்.

இதற்கு முன் மாற்றுவீரர்(சப்ஸ்டிடியூட்) என்பவர் ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஆனால், இம்பாக்ட் ப்ளேயர் விதியில் வரும் வீரர் பந்துவீச முடியும், பேட்டிங் செய்யவும் முடியும்.

கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் விதிக்குப்பின், ஐபிஎல் தொடரில் உள்ள அணிகள், ஆல்ரவுண்டர்கள் மீதான தங்கள் கவனத்தைக் குறைத்துவிட்டன.

ஐபிஎல்லில் நடைபெறும் வீரர்களுக்கான ஏலத்தில் இதனை கண்கூடாக காண முடிந்தது. இம்பாக்ட் விதி அமலுக்கு வருவதற்கு முன்பு நடந்த ஏலங்களின் போதெல்லாம் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களுக்கு நிகராக ஆல் ரவுண்டர்களுக்கு கிராக்கி இருந்ததைக் காண முடிந்தது. பென் ஸ்டோக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, ஆந்த்ரே ரஸ்ஸல், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்களிக்கக் கூடியவர்கள் என்பதாலேயே அதிக விலை போயினர்.

சர்வதேச போட்டிகளில் பெரிதாக ஜொலிக்காத கேதார் ஜாதவை ஆல்ரவுண்டர் என்பதாலேயே 2018-ம் ஆண்டு ஏலத்தின் போது 7.8 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.

ஆனால், கடந்த தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அமலுக்கு வந்த பிறகு, நடப்புத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் அந்த விதியின் தாக்கத்தை உணர முடிந்தது. ஒரு பேட்ஸ்மேனையோ, பவுலரையோ தேவைக்கு ஏற்ப 12-வது வீரராக களமிறக்க முடியும் என்பதால் அனைத்து அணிகளுமே ஏதாவது ஒரு துறையில் ஸ்பெஷலிஸ்டான வீரர்களையே குறிவைத்தன. இதனால், ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு குறைந்து போனது.

கடந்த ஏலத்தில் பேட்டிங் அல்லது பவுலிங்கில் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களே அதிக விலைக்கு ஏலம் போயினர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கும். மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கும் ஏலம் போயினர்.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐபிஎல் போலவே ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் “பவர் சர்ஜ்” என்ற விதி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் ‘பவர் சர்ஜ்’

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் “பவர் சர்ஜ்”(Power Surge) என்ற முறை உள்ளது. ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் ப்ளேயர் விதியைப் போல பேட்டிங் செய்யும் அணியின் கரங்களையே இதுவும் வலுப்படுத்துகிறது.

பவர் சர்ஜ் என்பது பவர்ப்ளேயில் 6 ஓவர்களில் 4 ஓவர்கள் மட்டும்தான் வீச முடியும். மீதமுள்ள 2 ஓவர்களை 11-வது ஓவருக்குப் பின் பேட்டிங் செய்யும் அணிதான் எப்போது வீசுவது என்பதை முடிவு செய்யும். இந்த விதியால் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதே பேட்டிங் செய்யும் அணியாகத்தான் இருக்கும்.

இந்த பவர் சர்ஜ் விதி பிக்பாஷ் லீக்கில் எவ்வாறு சர்ச்சையாக, விவாதப்பொருளாக மாறியுள்ளதோ அதேபோன்று இம்பாக்ட் ப்ளேயர் விதியும் மாறியுள்ளது.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம், IPL / INSTAGRAM

படக்குறிப்பு, இம்பாக்ட் ப்ளேயர் ஆல்ரவுண்டர்களை பாதிப்பதாக தெரிவிக்கிறார் வோக்ஸ்.

“ஆல்ரவுண்டர்களின் தேவையை குறைத்த இம்பாக்ட் பிளேயர் விதி”

“இம்பாக்ட் ப்ளேயர் விதி ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கைக் கொடுத்தாலும், அது போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர்களை வெளியேற்றிவிடுகிறது” என்று லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, “இம்பாக்ட் ப்ளேயர் விதி டி20 ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி பொழுதுபோக்காக இருக்கிறது. ஆனால், இது ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவத்தை குறைத்து விடுகிறது. அணிகளின் ஸ்கோர் எப்போதும் இல்லாத அளவு உயர்கிறது, அணிகளுக்கு முழுமையான ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் 7வது அல்லது 8-வது வரிசை வரை கிடைக்கிறது.

நான் பவர் சர்ஜின் ரசிகன். இம்பாக்ட் ப்ளேயர் விதியைவிட பவர் சர்ஜை ரசிக்கிறேன். சேஸிங்கின் போது ஆட்டம் கையைவிட்டு சென்றுவிட்டதாக ஒருபோதும் நினைக்க முடியாது” என்று கூறியதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டி 20 உலகக் கோப்பையில் சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரிங்கு சிங் – துபே சர்ச்சை

ரிங்கு சிங்கிற்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது. ஏனென்றால், ஷிவம் துபே சர்வதேச போட்டிகளி்ல் விளையாடிய பெரிதாக அனுபவம் இல்லாதவர். ஐபிஎல் தொடரில் இதுவரை பெரிதாக பந்துவீசவும் இல்லை.

குறிப்பாக 2022 ஐபிஎல் சீசனில் 20.4 ஓவர்கள் வீசிய துபே 8 விக்கெட்டுகளையும், 2023 ஐபிஎல் சீசனில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். 2024 சீசனில் துபே பெரிய அளவில் பந்துவீசவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் ஷிவம் துபே ஆல்ரவுண்டர் வரிசையில் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதேசமயம், ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடி தன்னை சிறந்த ஃபினிஷர் என நிரூபித்துள்ளார். ஆனால், அவர் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சம நிலையற்ற சூழல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான டாம் மூடி எக்ஸ் தளத்தில் இம்பாக்ட் விதி பற்றி பதிவிட்ட கருத்தில் “பந்துவீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் சமநிலையற்ற சூழலை இம்பாக்ட் ப்ளேயர் விதி உருவாக்கும். ஏலத்தில் மோசமாக வீரர்களைத் தேர்வு செய்ததை மூடி மறைக்கவே இந்த முறை இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இம்பாக்ட் ப்ளேயர் விதி மீது தனக்கு பெரிய உடன்பாடு இல்லை என்று கூறுகிறார் ரோகித் சர்மா.

விதியை எதிர்த்தவரே இம்பாக்ட் பிளேயர் ஆனது எப்படி?

“இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. அந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டும், 12 வீரர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல. இந்த விதிமுறை சமநிலையான அணியைத் தேர்ந்தெடுத்த முக்கியத்துவத்தை அழித்துவிடும்” என்று கூறி இம்பாக்ட் பிளேயர் விதிக்கு எதிரான விவாதத்தை தொடங்கிவைத்த ரோஹித் சர்மாவே இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் சூழலும் உருவானது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரை இம்பாக்ட் பிளேயராக மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தியது. முதுகில் ஏற்பட்ட பிரச்னையால் ரோஹித் சர்மா இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் நிலை ஏற்பட்டதாக ஆட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் சக அணி வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்தார்.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்தால், தோனியை இன்னும் அதிகமான காலம் கிரிக்கெட் விளையாட வைக்கலாம் என்று கூறுகிறார் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டுவைன் பிராவோ.

“தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடலாம்”

இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை செயல்பாட்டில் இருக்கும் வரை வயதான வீரர்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட மூத்த வீரர்கள் அவரவர் அணிகளில் இருந்து விடைபெற விடாமல் தொடர்ந்து இருக்க வைக்கும்.

இது குறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டுவைன் பிராவோ“ இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்து இருந்தால், தோனியை இன்னும் அதிகமான காலம் கிரிக்கெட் விளையாட வைக்கும்”என்று சமீபத்தில் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால், கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் விளையாடுவதைக் காணவே ரசிகர்கள் அரங்கிற்கு வருகிறார்கள். நட்சத்திர வீரர்கள் இல்லாத ஆட்டத்தைக் காண ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

வணிக ரீதியான நோக்கத்திற்காக, மூத்த வீரர்களை தொடர்ந்து தக்க வைக்கும் நோக்கில் இம்பாக்ட் ப்ளேயர் விதியை அணிகள் பயன்படுத்தக் கூடும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.