‘இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரிப்பு’ – அமெரிக்க அறிக்கை மணிப்பூர், காஷ்மீர் பற்றிச் சொல்வது என்ன?

'இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரிப்பு' - அமெரிக்க அறிக்கை மணிப்பூர், காஷ்மீர் பற்றிச் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மணிப்பூர் வன்முறையின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இந்த அறிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது.

வியாழன்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த அறிக்கை முற்றிலும் பாரபட்சமானது. இந்தியாவின் நிலையை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இந்த அறிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை, நீங்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை, பல்வேறு நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்தியா தொடர்பான பல விஷயங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான முதன்மை துணை செயலாளர்.

மணிப்பூர் மற்றும் காஷ்மீர் மனித உரிமை மீறல்

பட மூலாதாரம், MEA

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

ராபர்ட் எஸ். கில்கிறிஸ்ட் செவ்வாயன்று, “இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விஷயங்களில் உயர் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மனித உரிமைகள் தொடர்பான தனது முயற்சிகளை இந்தியா முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். இந்திய அரசு அந்நாட்டின் உறுதிமொழிகளைப் பின்பற்ற வேண்டும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “குடிமக்களுடன் தொடர்ந்து பேச வேண்டும் என இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு இந்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சகம் அல்லது அரசுத் தரப்பில் இருந்து அறிக்கை வந்தால், அது இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.

கடந்த காலங்களில் இந்தியா மீது எழுந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக திங்கட்கிழமை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான ‘2023 மனித உரிமைகள் அறிக்கை’ என்னும் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை ‘ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம்’ உருவாக்கியுள்ளது.

இந்த அறிக்கையில் சுமார் 200 நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த உண்மையான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிளிங்கன் கூறினார்.

2023 மனித உரிமைகள் அறிக்கையில் உள்ள தகவல்கள்

மணிப்பூர் மற்றும் காஷ்மீர் மனித உரிமை மீறல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மணிப்பூர் கலவரம்

சீனா, பிரேசில், பெலாரஸ், மியான்மர் ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் பெயரும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் உய்குர் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அட்டூழியங்கள், மியான்மரில் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்களின் இடம்பெயர்வு, நிகராகுவாவில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சூடானில் ராணுவம் மற்றும் விரைவு ஆதரவு படைகள் நடத்திய போர்கள் எனப் பல்வேறு குற்றங்கள் பற்றிய அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்கள் பெண்களின் கல்வி பயில்வதற்கான உரிமையைப் பறித்தது, உகாண்டாவில் தன்பாலினத்தவர்களுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது மற்றும் பால்புதுமை (எல்ஜிபிடி) சமூகத்தினருக்கு சிறைத் தண்டனை கொடுத்தது. அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது, இரானில் அறநெறி காவலர்களிடம் சிக்கி மாசா அமினி என்ற பெண் மரணம் அடைந்தது மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்கள், இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்தியா தொடர்பான பல தகவல்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவில் சர்வாதிகாரம் அதிகரித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, “சீன அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கைகள் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் மிகப்பெரிய குடியரசாக உருவெடுத்துள்ள இந்தியாவுடன் வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தியுள்ளன.”

“ஆனால் இந்தியாவில் மோதி தலைமையிலான பாஜக அரசு சீன அரசின் அதே அடக்குமுறை நடைமுறைகளைப் பின்பற்றுகிறது.

மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, அமைதி வழிப் போராட்டங்களை ஒடுக்குதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுதந்திரத்தை அழிப்பது, அதிகாரப் பிடியை அதிகரிக்கச் செய்வது ஆகியவை அடங்கும்,” என்று விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பற்றி மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிட்டது என்ன?

மணிப்பூர் மற்றும் காஷ்மீர் மனித உரிமை மீறல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய குக்கி மாணவர்கள்

”பாஜக தலைமையிலான அரசாங்கம், மத சிறுபான்மையினர் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்துக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட பாகுபாடுகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. பாஜகவை ஆதரிப்பவர்கள் குறிப்பிட்ட சமூக மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தினர்.

பொதுமக்களில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நபர்களை மௌனமாக்குவதற்கும், சுதந்திரமாகச் செயல்படும் ஊடகவியலாளர்களை மௌனமாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது தீவிரவாதம் உட்பட அரசியல் உள்நோக்கம் கொண்ட பிற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் கருத்து சுதந்திரத்திற்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு இந்தியா குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் மனித உரிமை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மனித உரிமைகள் அறிக்கையில், 80 பக்கங்கள் இந்தியாவை பற்றியது. அதில் முதல் பக்கத்தில், கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தேய் – குகி சமூகத்தினரிடையே நடந்த இன வன்முறையைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைப்படி, மணிப்பூர் கலவரத்தின்போது மனித உரிமை மீறல் நிகழ்வுகள் காணப்பட்டன. பாலியல் வன்முறை, கடைகள் மற்றும் வீடுகளை எரித்தல், வழிபாட்டுத் தலங்களை இடித்தல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஊடக அறிக்கைகளின்படி, மே 3 முதல் நவம்பர் 15 வரை, இந்த வன்முறை சம்பவத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அரசாங்கத்தாலும் அல்லது அரசு தொடர்பான பிரமுகர்களாலும் சட்டத்திற்குப் புறம்பான கொலை சம்பவங்கள் நடந்தது பற்றிய பல செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஊடக அறிக்கைகள் காவல்துறை அல்லது பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல மரணங்களை ‘என்கவுண்டர் கொலைகள்’ என்று விவரித்தன.

அந்த அறிக்கையில், ஒடிசாவில் போலீஸ் காவலில் இருந்த தனேஷ்வர் பெஹேரா கொல்லப்பட்டதாகவும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் எம்.பி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சேத்தன் சிங் என்ற பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூர் மற்றும் காஷ்மீர் மனித உரிமை மீறல்

பட மூலாதாரம், Getty Images

முஸ்லிம்களின் பெயரைக் கேட்டு அவர்களைக் கொன்ற சம்பவம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து காணாமல் போனவர்கள், ராஜஸ்தானில் 21 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த வழக்கு, பத்திரிகையாளர் சித்திக் காப்பன் கைது, 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது, பலரைக் கைது செய்ய UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தைப் பயன்படுத்தியது தொடர்பான விவாதம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, 2019 முதல் ஜம்மு-காஷ்மீரின் குறைந்தது 35 பத்திரிகையாளர்கள் மீது போலீஸ் விசாரணைகள், சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பலர் சுதந்திரமாக நடமாடுவதற்குக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானின் பிவானியில் பசு கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் முகமது ஜுனைத், முகமது நசீர் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அறிக்கையில் சேர்த்துள்ளனர். அதன்படி, “மாடுகளைக் கடத்திச் சென்றதாகவும் கொன்றதாகவும் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளை வன்முறைக் குழு கொன்றதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன,” என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.