வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது ஏன்? – பிபிசி கள ஆய்வு

வள்ளலார் சர்வதேச மையம்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஒருபுறம் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், மற்றொருபுறம் தொல்லியல் தடயங்கள் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது.

வள்ளலார் சர்வதேச மையத்தை அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் கட்டக் கூடாது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், சர்வதேச மையக் கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் “தொல்லியல் சுவர்கள்” கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க, அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இடம், வடலூரில் சத்ய ஞான சபையை ஒட்டியுள்ள சுமார் 70 ஏக்கர் பரந்த நிலபரப்பு. இந்த இடத்தை வள்ளலாரை பின்பற்றுபவர்கள் சிலர் ‘பெருவெளி’ என்றழைக்கின்றனர்.

வள்ளலார் விரும்பியபடி இந்த பெருவெளி காலியாக இருக்க வேண்டும், எந்த கட்டுமானமும் இருக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

வள்ளலார் யார்?

வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார், தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாத பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை முன்வைக்கிறது. கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார் வள்ளலார்.

அவர் எழுதிய திருவருட்பாவில்,‌ முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீகம் குறித்து பேசிய வள்ளலார், தனது வாழ்நாளின் கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதியதான ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதச்சீர்திருத்தம் வேண்டிய வள்ளலாரின் கருத்துகளை ஆறாம் திருமுறையில் பார்க்கலாம்.

‘வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர், வேத ஆகமத்தின் விளைவு அறியீர்’ என்று வேத நம்பிக்கைகளை விமர்சித்துள்ளார் அவர்.

1927-ஆம் ஆண்டு வெளிவந்த ‘குடியரசு’ இதழின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை வெளியிட்டார் தந்தை பெரியார்.

பிபிசி

வள்ளலார் சர்வதேச மையம் எதற்காக?

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.18 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தச் சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“இவை வள்ளலார் கூறிய சமரச வேத தருமசாலையின் கிளைச்சாலைகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. விவகார சாலை (தகவல் மையம்), உபகார சாலை (முதியோர் இல்லம்), சாத்திர சாலை (படிப்பகம்), விருத்தி சாலை (வளர்ச்சி மையம்) ஆகியவை சர்வதேச மையத்தில் கட்டப்படுகின்றன,” என்றார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வள்ளலார் சர்வதேச மையம்

பார்வதிபுரம் மக்கள் போராடுவது ஏன்?

இந்தச் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, அதை எதிர்த்து குழிக்குள் இறங்கி போராடியவர்கள் பார்வதிபுரத்தை சேர்ந்த மக்கள்.

சத்திய ஞான சபைக்குப் பின்புறம் உள்ள பகுதியே பார்வதிபுரம்.

வள்ளலார் தரும சாலை அமைப்பதற்காக, 1867-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்தை தானமாக கொடுத்தனர். தங்கள் முன்னோர்கள் கொடுத்த நிலம் வள்ளலார் விரும்பியது போல் பெருவெளியாக இருக்க வேண்டும், கட்டுமானங்கள் நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்வதேச மையம் அமைப்பது குறித்து தங்களிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள். வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், இந்த இடத்தில் கட்ட வேண்டாம் என்று கூறுவதாகத் தெரிவித்தனர்.

வள்ளலார் சர்வதேச மையம்

‘பெருவெளி’ என்பது என்ன?

சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் பெருவெளி என்பதை இருவேறு விதமாக பார்க்கிறார்கள். சத்திய ஞான சபையை சுற்றி இருக்கும் 70 ஏக்கர் நிலத்தை பெருவெளி என்று அழைக்கின்றனர் வள்ளலாரை பின்பற்றுபவர்கள் சிலர். ஆனால், பெருவெளி என்பது எந்த குறிப்பிட்ட நிலமும் கிடையாது, அண்ட பெருவெளி தான் வள்ளலார் கூறியது என்கின்றனர் வேறு சிலர்.

வெளி என்பது இடம் அல்ல, தங்களுக்கான தத்துவம் என்கிறார் வள்ளலார் படிப்பக ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப்ரமணிய சிவா.

“வள்ளலார் ‘ஓங்கார நிலை நின்றேன்’ என்ற பாடலில் ‘நானும் இறைவனும் உறைந்த அனுபவம் தான் தோழி நிறைந்த பெருவெளியே’ என்கிறார். அதாவது வள்ளலாரும் இறைவனும் கலந்த அனுபவத்தின் குறியீடு தான் பெருவெளி என்று வள்ளலாரே கூறியுள்ளார். பெருவெளிக்குள் தான் சத்ய ஞான சபை இருக்கிறது,” என்றார்.

“சபையைச் சுற்றிதான் வள்ளலார் கூறும் வெளிகள் உள்ளன. திருக்கோயில்களில் எப்படி பிரகாரம் இருக்கிறதோ அதே போன்று சத்திய ஞான சபையை சுற்றி 30-க்கும் மேற்பட்ட வெளிகள் உள்ளன. அவை அருவுருவமாக உள்ளன. கண்ணுக்கு தெரியாததாலேயே அவை இல்லை என்றாகிவிடாது. அகவல், அருள்விளக்கமாலை, ஆறாம் திருமுறை என பல இடங்களில் வள்ளலார் இந்த பெருவெளியை குறிப்பிட்டுள்ளார்,” என்றார்.

“இங்கு கட்டுமானம் மேற்கொள்வது, திருக்கோயிலில் உள்ள திருச்சுற்றை இடிப்பதற்கு சமமாகும்,” என்கிறார் அவர்.

வள்ளலார் சர்வதேச மையம்
படக்குறிப்பு, முனைவர் சுப்ரமணிய சிவா

வடலூரில் உள்ள மூத்த சன்மார்கி முருகன், 153 ஆண்டுகளாக பெருவெளியாக இருக்கும் நிலத்தை அப்படியே காக்க வேண்டும் என்கிறார்.

“மக்கள் அந்தப் பெருவெளியில் நின்று ஒளிவழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக தான், பார்வதிபுரம் மக்களிடமிருந்து இந்த இடத்தை வாங்கினார் வள்ளலார். 153 ஆண்டுகளாக இது பெருவெளியாக தான் உள்ளது. இனியும் அப்படி தான் இருக்க வேண்டும்,” என்கிறார்.

வள்ளலார் குறித்த நூல்களை எழுதியிருக்கும் உமாபதி, “இந்த இடத்தில் கட்டுமானங்கள் நடைபெறக் கூடாது என்று கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. வெளி என்பதை எந்த இடத்துக்குள்ளும் சுருக்க முடியாது. வள்ளலார் கூறும் வெளி என்பது அண்டப் பெருவெளி. வள்ளலாரின் கூற்று படி அது கணக்கு வழக்கற்றது,” என்கிறார்.

இந்தத் தத்துவார்த்த மோதல் ஒரு புறம் இருக்க, வேறு சில காரணங்களுக்காகவும் இந்தச் சர்வதேச மையம் எதிர்க்கப்படுகிறது. தற்போது அமைந்திருக்கும் சத்திய ஞான சபை அனைவருக்கும் தங்கு தடையின்றி வந்து செல்லக் கூடிய இடமாக, ஆதரவற்றோர் இளைப்பாறக் கூடிய இடமாக உள்ளது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டால், அந்த இடம் கட்டுப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிடும் என்ற அச்சம் அப்பகுதியினருக்கு இருக்கிறது.

பார்வதிபுரத்தைச் சேர்ந்த சங்கீதா, “எனக்கு சிறு வயதிலிருந்தே வள்ளலாரைப் பிடிக்கும். எனக்கு ஊர், அருகில் உள்ள குறிஞ்சிபாடி. எனக்கு திருமணமாகி இங்கு வந்த போது, இனி தினம் தினம் வள்ளலாரை காணலாம் என்று மகிழ்ந்தேன். அனைவரும் சமம் என்று வள்ளலார் கூறியதால் அவரைப் பிடிக்கும். இந்த ஞான சபைக்கும் எங்கள் ஊருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எங்கள் ஊருக்கு ஒரு பெண் புதிதாக திருமணம் ஆகி வந்தால் முதலில் சபைக்கு கூட்டி சென்று வணங்கிய பிறகே ஊருக்குள் அழைத்து வரப்படுவார். அதே போன்று திருமணமாகி வெளியூர் சென்றாலும், சபையின் முன் சென்ற பிறகே செல்வார். இங்கு 2,000 வீடுகள் உள்ளன. நாங்கள் ஊருக்குள் வருவது, பள்ளிக்கு செல்வது, வேலைக்கு செல்வது எல்லாம் இந்த வழியாக தான். சர்வதேச மையம் அமைக்கும் போது எழுப்பப்படும் சுவர் எங்கள் பாதையைத் தடுக்கும்,” என்றார்.

வள்ளலார் சர்வதேச மையம்
படக்குறிப்பு, சங்கீதா, பார்வதிபுரம்

அதே பகுதியில் இருக்கும் சாந்தி, “அந்த நிலம் நாங்கள் கொடுத்த நிலம், எங்கள் நிலம், அது அரசின் புறம்போக்கு நிலமல்ல. எங்கள் இடத்தை நாங்கள் வள்ளலாருக்கு தான் தர விரும்புகிறோம். சாலையில் போகிறவர்கள் ஞான சபையின் கோபுரத்தை பார்த்துவிட்டு வணங்கி செல்கின்றனர். புதிய கட்டுமானத்தால் அந்த கோபுரம் மறைந்து விடும்” என்கிறார்.

வள்ளலார் சர்வதேச மையம்
படக்குறிப்பு, சாந்தி, பார்வதிபுரம்

குழிக்குள் இறங்கி போராடியதற்காக வழக்கு போடப்பட்டவர்களில் ஒருவரான மணிகண்டன், தங்கள் போராட்டம் திடீரென நடைபெறவில்லை என்கிறார். “ஆட்சியருக்கும், முதல்வருக்கும் மனு வழங்கினோம். எந்த பதிலும் இல்லை. அரசின் இந்த முனைப்பை பார்த்தால், வியாபார நோக்கத்துக்காக சர்வதேச மையத்தை அமைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. வசதி மிகுந்த பல சர்வதேச மையங்களை அரசு உருவாக்க முடியும். இது போன்ற பெருவெளியை அரசு நினைத்தால் உருவாக்க முடியுமா?” என்கிறார்.

“வள்ளலாருக்கு சொந்தமான 12.8 ஏக்கர் நிலம், நெய்வேலி சாலையில் காலியாக உள்ளது. இந்த பெருவெளியின் சுமார் 40 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை மீட்டெடுத்து சர்வதேச மையம் கட்டலாமே,” என்கிறார் மணிகண்டன்.

வள்ளலார் சர்வதேச மையம்
படக்குறிப்பு, மணிகண்டன், பார்வதிபுரம்

குழிக்குள் இருக்கும் தொல்லியல் படிமங்கள் என்ன?

சர்வதேச மையம் கட்டுவதற்காக அரசு தோண்டிய குழிகளில் தொல்லியல் படிமங்கள் சில கிடைத்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில் , “அங்கு கிடைத்துள்ள சுவர்களை ஆய்வு செய்ய வேண்டும். எனினும் அந்த இடத்தில் வீடுகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன, எனவே தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எனினும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு முடிந்த பிறகே கட்டுமானப் பணிகள் தொடரும்,” என்றார்.

அரசு கூறுவது என்ன?

இந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “வள்ளலாரின் கருத்தியலுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்யவில்லை. வள்ளலார் தனது எழுத்துகளில் 30 இடங்களில் பெருவெளியை குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் இங்கு உள்ள 70 ஏக்கர் தான் பெருவெளி என்று வள்ளலார் குறிப்பிடவில்லை. அவர் கூறியது அண்ட பெருவெளி. ‘கணக்கு வழக்கு அற்றது’ பெருவெளி என்கிறார். பார்வதிபுரம் மக்கள் கொடுத்தது 80 காணி நிலம் என்பதற்கு சான்றுகள் எதுவும் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை இந்த இடத்தை கையில் எடுக்கும் போது எவ்வளவு நிலம் இருந்ததோ, அது இப்போதும் இருக்கிறது, எதுவும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை,” என்றார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பிபிசி தமிழிடம் பேசுகையில், “வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பாக பார்வதிபுரம் மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த பெருவெளியை தற்போது அவர்கள் முழுமையாக நினைத்தபடி எல்லாம் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச மையம் அமைக்கப்பட்டால் தங்களால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது என்று நினைக்கின்றனர். சர்வதேச மையம் அமைப்பதால் யாரும் அவர்கள் உள்ளே வர தடை செய்ய போவதில்லை. இந்த மையம் அமைவதால், பொருளாதார, கலாசார ரீதியில் அந்த மக்களுக்கு தான் பலனளிக்கும். அந்த இடத்தில் உள்ள தொல்லியல் படிமங்களை ஆய்வு செய்ய, நீதிமன்ற உத்தரவு படி, தொல்லியல் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.