காஸாவில் அமைதி திரும்புமா? சண்டையை நிறுத்த ஹமாஸ் தயார் – இஸ்ரேல் என்ன சொல்கிறது?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், டேவிட் கிரிட்டன்
  • பதவி, பிபிசி நியூஸ்

“காஸா போர் நிறுத்தம் குறித்த புதிய ஒப்பந்தத்தின் முன்மொழிவு, இஸ்ரேலின் முக்கிய கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை தொடரும்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்களால் போர் நிறுத்தத்திற்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அதை ஏற்றுக் கொண்டதாக ஹமாஸ் கூறியுள்ள நிலையில் நெதன்யாகுவின் அறிக்கை வெளிவந்துள்ளது.

ஹமாஸ் அதிகாரி, “முடிவு இப்போது இஸ்ரேலின் கைகளில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் அடிப்படை கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏன் ஒப்பந்தம் கைகூடவில்லை? காஸாவில் போர் நிறுத்தத்தின் நிபந்தனைகள் என்ன?

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இஸ்ரேலில் பணயக்கைதிகளை விடுவிக்க கோரும் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில், இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, தெற்கு காஸாவில் உள்ள ரஃபா கடவுப் பாதைக்கு அருகில் இஸ்ரேலிய படைகள் மற்றும் டாங்கிகள் தென்படுகின்றன.

அண்மையில், இஸ்ரேல் ரஃபாவில் தாக்குதல்களை ஆரம்பித்தது. அகதிகளை முகாமை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ஏற்கனவே கூறியிருந்தது. ரஃபாவில் ஹமாஸை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கையால் ரஃபாவில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலர், அப்பகுதியை காலி செய்ய, கழுதைகள் மீது சவாரி செய்து வருகின்றனர். கான் யூனிஸ் அருகே உள்ள முகாமில் இருந்து ஒரு லட்சம் பேரை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

ரஃபாவின் கிழக்குப் பகுதிகளில் இருந்து மக்கள் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை, போரின் “ஆபத்தான திருப்புமுனை” என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் விவரித்தார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார கால போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸால் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிப்பது.

ஹமாஸ் சொல்வது என்ன?

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏன் ஒப்பந்தம் கைகூடவில்லை? காஸாவில் போர் நிறுத்தத்தின் நிபந்தனைகள் என்ன?

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை குறித்த எச்சரிக்கையை அடுத்து மக்கள் கிழக்கு ரஃபாவை விட்டு வெளியேறுகின்றனர்.

திங்கட்கிழமை மாலை, ஹமாஸ் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதன்படி, `ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, கத்தார் பிரதமரிடமும் எகிப்திய உளவுத்துறை தலைவரிடமும் போர் நிறுத்த உடன்படிக்கை முன்மொழிவுக்கு சம்மதம் தெரிவித்ததாக அறிவித்தார்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த முன்மொழிவை பற்றி நன்கு அறிந்த ஒரு மூத்த பாலத்தீன அதிகாரி பிபிசியிடம், ”தனது நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ’இஸ்ரேல் விரோத நடவடிக்கைகளை’ முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் ஒப்புக்கொண்டது’’ எனக் கூறினார்.

இந்த அறிக்கை, ஹமாஸ் தனது ஆயுத தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர பரிசீலித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது, இருப்பினும் இது தொடர்பாக மேற்கொண்டு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவை அனைத்தும் இரண்டு கட்ட போர்நிறுத்த ஒப்பந்தங்களின் மூலம் மட்டுமே சாத்தியப்படும், அதன் கீழ் ஒவ்வொரு கட்டமும் 42 நாட்களுக்கு இருக்கும்.

முதற்கட்டமாக, பிணைக் கைதிகளாக பிடிபட்டுள்ள பெண் இஸ்ரேலிய படையினர் விடுவிக்கப்படுவார்கள். அதன் கீழ், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 50 பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், அவர்களில் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தின் போது, இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் இருக்கும். ஆனால் போர் நிறுத்தத்தின் 11 நாட்களுக்குள், இஸ்ரேல் தனது இராணுவ உபகரணங்களை அப்பகுதியின் ராணுவ மையத்திலிருந்து திரும்பப் பெறத் தொடங்கும் மற்றும் சலா அல்-தின் சாலையில் இருந்து வெளியேறும். இது வடக்கு-தெற்கு பாதை மற்றும் கடற்கரை சாலைகளில் நடைபெறும் செயல்முறை. 11 நாட்களுக்குப் பிறகு, இடம்பெயர்ந்து வாழும் பாலத்தீனர்கள், வடக்கே தங்கள் பகுதிகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் காஸாவில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும். பின்னர் `நீண்ட கால அமைதி’ ஒப்பந்தத்துடன் முடிவடையும்.

“போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பட்டாலும் தடையாக இருந்தாலும் முடிவு இப்போது இஸ்ரேலின் கைகளில் உள்ளது” என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இஸ்ரேலின் அறிக்கை

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏன் ஒப்பந்தம் கைகூடவில்லை?

பட மூலாதாரம், GETTY

ஹமாஸின் அறிக்கை வெளியானதும், இந்த தகவல் மக்கள் மத்தியில் பரவியது, இதனால் காஸா மக்களிடையே கொண்டாட்ட சூழல் காணப்பட்டது.

ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், ”ஹமாஸ் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம், எகிப்திய முன்மொழிவின் ‘மென்மையான பதிப்பு’, இது சாத்தியம் ஆகாது. இஸ்ரேல் தரப்பில் ஏற்க முடியாத இலக்குகளைக் கொண்டுள்ளது. எப்படியும் இஸ்ரேல் ஒப்பந்தத்தை நிராகரிக்கும். அவ்வாறு நிராகரித்தால், அதையே இஸ்ரேலின் பிம்பமாக கட்டமைக்க இந்த முயற்சி என்று தோன்றுகிறது” என்று கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டது, “ஹமாஸின் முன்மொழிவு இஸ்ரேலின் அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் குழுவை இஸ்ரேல் அனுப்பும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“அதனுடன், பணயக் கைதிகளை விடுவிக்கவும், ஹமாஸின் ராணுவப் பிரிவை ஒழிக்கவும் ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஃபாவில் தனது தாக்குதலை தொடர இஸ்ரேலின் போர் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில், காஸா இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்று இஸ்ரேல் விரும்புகிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு ரஃபாவில் ஹமாஸ் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

கத்தார் மற்றும் எகிப்துடன் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் ஹமாஸின் பதிலை மறுபரிசீலனை செய்து, நேச நாடுகளுடன் கலந்துரையாடும் முயற்சியில் இருக்கிறார்.

”பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் இஸ்ரேலிய மக்களின் நலன் சார்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம். பாலத்தீனர்களுக்கு இந்த ஒப்பந்தம் பலன் தரும். இது உடனடி போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் உதவும், எனவே இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினருடனும் பேச முயற்சிப்போம்.” என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்தப் போர் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் இதுவரை 34,700 பாலத்தீனர்கள் இறந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் 105 பணயக் கைதிகளை விடுவித்தது. அப்போது ஒரு வாரத்திற்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டு இஸ்ரேல் சிறைகளில் இருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

“காஸாவில் 128 பணயக்கைதிகள் எங்கிருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை” என்று இஸ்ரேல் கூறுகிறது. இந்த பணயக்கைதிகளில் 34 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.