ஹாங்காங் மக்கள் சீன தேசிய கீதத்தை வெறுப்பது ஏன்? கால்பந்து போட்டியில் ஏற்பட்ட தடுமாற்றம்

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜான் டுயர்டன்
  • பதவி, பிபிசி விளையாட்டு பிரிவு

ஜனவரி 1ஆம் தேதி, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஹாங்காங் ஒரு கால்பந்து போட்டியில் சீனாவை வென்றது. ஆம், ஆசிய கோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தின்போது, 2-1 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் சீனாவை வீழ்த்தியது.

ஹாங்காங் அணியின் பெயர் 2023இல் மாற்றப்பட்டது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கில் தற்போது பெய்ஜிங் தனது கட்டுப்பாட்டை அதிகரித்து வருகிறது. எனவே, இனி வரும் காலகட்டங்களில் ஹாங்காங்கில் சுதந்திரமாக கால்பந்து போட்டிகள் நடத்தப்படுவது சந்தேகம் என்ற ஊகம் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

கடந்த 2012 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் ஹாங்காங் கால்பந்து சங்கத்தின் தலைவராக (HKFA) இருந்த மார்க் சட்க்ளிஃப், பிபிசியின் விளையாட்டுப் பிரிவுக்கு அளித்த பேட்டியில் “எதிர்காலத்தில், ஹாங்காங் கால்பந்து சங்கம் ஃபிஃபாவின் சுயேச்சை உறுப்பினராக இருப்பதுகூட நிறுத்தப்படலாம். இவ்வாறு நடப்பதை நம்மால் தவிர்க்க முடியாது, கூடிய விரைவில் நடக்கும். அல்லது கொஞ்ச காலம் எடுக்கலாம், ஆனால் கண்டிப்பாக இது நடக்கும்,” என்றார்.

ஹாங்காங் வெற்றியால் கொந்தளித்த சீன ரசிகர்கள்

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1959ஆம் ஆண்டில் சீன குடியரசு உருவாக்கப்பட்ட 10வது ஆண்டைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்ட 10 பெரிய கட்டுமானங்களில் தொழிலாளர் அரங்கமும் ஒன்று.

சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் சமீபத்திய வெற்றியை அவர்களின் வரலாற்று சாதனை என்றெல்லாம் சொல்ல முடியாது. இதைவிடப் பெரிய வெற்றியை ஹாங்காங் அணி ஏற்கெனவே பதிவு செய்துவிட்டது. 1985இல் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி வெற்றி பெற்று, பெய்ஜிங் தொழிலாளர் மைதானத்தில் குழுமியிருந்த 80,000 ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“ஹாங்காங்கில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். எங்களில் பலர் அப்போது பிறக்கவில்லை என்றாலும்கூட அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். ஹாங்காங் வரலாற்றில் அன்றைய இரவு, மிகச் சிறந்த இரவுகளில் ஒன்று,” என்றார் உள்ளூர் ரசிகர் கெய் லியுங்.

மற்றொருபுறம் இந்தப் போட்டி சீனாவின் வரலாற்றில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடாத ஒரு கசப்பான நிகழ்வாக மாறியது. ஹாங்காங்கால் வீழ்த்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சீன ரசிகர்கள் கொந்தளித்தனர். சீனாவில் கலவரம் வெடித்தது. இதனால், தலைமைப் பயிற்சியாளர் மற்றும் சீன கால்பந்து சங்கத் தலைவர் ராஜினாமா செய்தனர்.

அந்தப் போட்டி நடக்கையில் ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது, எனவே போட்டி தொடங்குவதற்கு முன்னர் `காட் சேவ் தி குயின்’ என்ற தேசிய கீதத்தை அவர்கள் பாடினர். 1997இல் ஹாங்காங் மீதான கட்டுப்பாட்டை பிரிட்டன் பெய்ஜிங்கிடம் ஒப்படைத்தபோது தேசிய கீதமும் மாறியது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 50 ஆண்டுகளுக்கு “ஒரு நாடு, இரண்டு அரசாங்கம்” அணுகுமுறையின் கீழ் ஹாங்காங்கில் சுதந்திரம் மற்றும் அந்தஸ்தை வழங்கி, “சிறப்பு நிர்வாகப் பகுதியாக” பராமரிக்க சீனா உறுதியளித்தது.

இதற்கிடையில், ஹாங்காங்கின் தாராளவாத ஜனநாயக வரலாற்றுப் பின்னணி மற்றும் தற்போதைய பிரதான நிலப்பரப்பின் சர்வாதிகார மரபுகள் மோதிக்கொள்ளும் ஒரு களமாக கால்பந்து மாறியது.

பெய்ஜிங்கின் கட்டுப்பாடுகள் இறுக்கமடைந்தது. எனவே உள்ளூர்வாசிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இழந்தனர். அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் சில வழிகளில் ஹாங்காங்கின் விளையாட்டுகள் ஒன்றாக மாறின.

“ஹாங்காங்கில் இயற்கையாகவே பெரும்பாலானோருக்கு கால்பந்து பிடிக்கும். இது மற்ற விளையாட்டுகளைவிட முக்கியமானது. எனவே மக்கள் கால்பந்து ஆட்டங்களில் தங்களின் உணர்வை வெளிப்படுத்தத் துவங்கினர்,” என்கிறார் லியுங்.

கடந்த 2014ஆம் ஆண்டு ”குடை இயக்கம்” தொடங்கிய பிறகு கால்பந்தின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்தது. நிதி மையத்தில் தொடர்ச்சியான ஜனநாயக சார்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் போலீஸ் பயன்படுத்தும் கண்ணீர் புகை மற்றும் மிளகு ஸ்ப்ரே ஆகியவற்றில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள குடைகளைப் பயன்படுத்தியதால் இந்த இயக்கம் `குடை இயக்கம்’ எனப் பெயர் பெற்றது.

கடந்த 2017 தேர்தலில் ஹாங்காங்கை வழிநடத்த, முன் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற பெய்ஜிங்கின் முடிவால் மக்கள் கொந்தளித்தனர். 2015ஆம் ஆண்டில் ஹாங்காங் 2018 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் சீனாவை ஹோஸ்ட் செய்தது. அந்தp போட்டியின்போது சில ஹாங்காங் ரசிகர்கள் தங்கள் சொந்த தேசிய கீதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர், ’தி மார்ச் ஆஃப் தி வாலண்டியர்ஸ்’ என்ற அந்த தேசிய கீதம் சீனாவுக்குமானது.

சிலர் “ஹாங்காங் சீனாவை சேர்ந்தது அல்ல” என்று எழுதப்பட்ட பலகைகளைக் கையில் பிடித்திருந்தனர். இதனால், உள்ளூர் விளையாட்டு சங்கத்திற்கு ஃபிஃபா அபராதம் விதித்தது.

தேசிய கீதத்திற்கு அவமரியாதை

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 2019இல் இரானுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டின் தேசிய கீதத்தை ஹாங்காங் ரசிகர்கள் புறக்கணித்தனர்.

கலவரம் நடந்த அந்தப் போட்டியில், கலந்து கொண்டவர்கள் அனைவரும் கால்பந்து ரசிகர்கள் அல்ல என்பது சட்க்ளிஃப்ஃபின் கருத்து.

“சந்தேகத்திற்கு இடமின்றி, ஹாங்காங் உள்ளூர்வாசிகள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த சர்வதேச போட்டிகள் நடக்கும் அரங்கைப் பயன்படுத்தி கொள்கின்றனர்,” என்கிறார் சட்க்ளிஃப்.

“தேசிய கீதத்துக்கு எதிராக ஆரவாரம் செய்தது, அவர்களுக்குப் பெரும் விளம்பரத்தைத் தேடி கொடுத்தது. சாதாரண சூழ்நிலையில் கால்பந்து போட்டிக்கு வராதவர்கள்கூட, அடுத்து வந்த போட்டிகளுக்கு வருகை தந்தனர். இந்தப் பிரச்னைகள் குறித்து பெய்ஜிங் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் எழவில்லை.”

“ஹாங்காங்கை ஆளும் SAR (சிறப்பு நிர்வாகப் பகுதி) அரசாங்கத்தால் நாங்கள் அழுத்தங்களைச் சந்தித்தோம். கலவரத்தைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டோம்,” என்றும் ஹாங்காங் கால்பந்து சங்கத்தின் தலைவராக (HKFA) இருந்த மார்க் சட்க்ளிஃப் விவரித்தார்.

மேலும் பேசிய அவர், “சலசலப்பைத் தவிர்க்க நாங்கள் விளம்பர பிரசாரங்களை நடத்தினோம். அரங்கத்தினுள் சோதனைகள் மற்றும் பேனர்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் போட்டிகளில் அறிமுகப்படுத்தினோம். ஆனால், எங்களால் கலவரத்தை முழுவதுமாக நிறுத்த முடியவில்லை, அதன் விளைவாக, ஃபிஃபா எங்களுக்குப் பல முறை அபராதம் விதித்தது.

ஹாங்காங் சட்டமன்றம் 2020ஆம் ஆண்டில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்தது. தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்வதை குற்றமாகக் கருதும் மசோதாவை நிறைவேற்றியது. அப்படிச் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தது.

இந்தப் புதிய சட்டம் 2022 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படியிருந்தும், ஹாங்காங்கில் மியான்மருக்கு எதிராக நடந்த போட்டியில் ரசிகர் கூட்டத்தின் சில பகுதிகளில் தேசிய கீதத்துக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஹாங்காங்கில் உள்ள 83 விளையாட்டு சங்கங்கள் தங்கள் பெயர்களில் “சீனா” என்று சேர்க்க வேண்டும், இல்லையெனில் நிதியை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டது.

ஹாங்காங்கின் ஃபிஃபா அந்தஸ்து

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாங்காங் கொடி

ஹாங்காங் கால்பந்து அணியின் மேல் சட்டைகளின், டிராகன் முகட்டில் “சீனா” என்ற வார்த்தை சேர்க்கப்படுவதற்கு முன்பு, பழைய ஹாங்காங் லோகோவை கொண்ட கடைசி சட்டைகளை வாங்க கால்பந்து ரசிகர்கள் குவிந்தனர்.

சட்க்ளிஃப் தங்கள் அணியின் தனி அடையாளத்தை விட்டுக் கொடுக்காமல், சீனாவின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க முயற்சி செய்தார்.

“ஃபிஃபா ஹாங்காங்கின் தனிப்பட்ட உறுப்பினர் அந்தஸ்தைப் பறிக்க முடிவு செய்தால், சீனாவுடன் நெருக்கம் காட்டக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அப்படி நடப்பதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.

“நாங்கள் ஜப்பானுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தோம், அவர்கள் மிகவும் நற்பண்புடையவர்கள். சிறிய உறுப்பினர் சங்கங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆசியா முழுவதும் கால்பந்தை மேம்படுத்துவது தங்களின் கடமை எனக் கருதினர்.”

சீனா சூப்பர் லீக் (CSL) முன்னெடுக்கப்பட்டது பெரிய அச்சுறுத்தலாக மாறியது. 2010களின் தொடக்கத்தில், நிக்கோலஸ் அனெல்கா, டிடியர் ட்ரோக்பா, ஹல்க் மற்றும் கார்லோஸ் டெவெஸ் போன்ற உலகப் புகழ் பெற்ற வீரர்களுக்காக சீன முன்னணி கால்பந்து கிளப்புகள், பெரும் தொகையைச் செலவிடத் தொடங்கின. அதே நேரத்தில் மார்செல்லோ லிப்பி, லூயிஸ் பெலிப் ஸ்கோலாரி மற்றும் ஃபேபியோ கபெல்லோ போன்ற பயிற்சியாளர்கள் வந்தனர்.

ரசிகர்களின் வருகை அதிகரித்தது. இந்தப் போட்டித் தொடர் ஆசியாவிலேயே மிகப் பெரிதாக மாறியது. போட்டியின் தரநிலைகள் அதிகரித்தன. ஹாங்காங்கில் இருந்து ஒரு மணிநேர அதிவேக ரயில் பயண தூரத்தில் இருக்கும் குவாங்சோ எவர்கிராண்டே ஊர் அணியினர், 2013இல் சீனாவின் முதல் ஆசிய சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர் ஆனார்கள். 2015இல் மீண்டும் அவர்களே வெற்றி பெற்றனர்.

ஹாங்காங் அணி சுயேச்சையாக இருப்பது சீனாவுக்கு நல்லதா?

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் டோட்டன்ஹாம் மிட்ஃபீல்டர் பவுலின்ஹோ மற்றும் அவரது மேலாளர் லூயிஸ் ஃபெலிப் ஸ்கோலாரி

சீனா சூப்பர் லீக்கில் போட்டியிட ஹாங்காங்கில், ஒரு குழுவை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தரம் மற்றும் வருவாய் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

சீன கால்பந்தில் நிதிச் சிக்கல்கள், உலகளாவிய கொரோனா சூழல் ஆகியவற்றால், பல கால்பந்து கிளப்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஆனால் ஹாங்காங் அந்த முயற்சியை இன்னும் கைவிடவில்லை.

தற்போதைய ஹாங்காங் கால்பந்து சங்கத்தின் தலைமை இதுகுறித்துப் பேச நேர்காணலுக்கான கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை. ஆனால் அவர்கள் இன்னும் சீனாவை ஒரு வாய்ப்பாகப் பார்க்கின்றனர் என்பது மட்டும் புரிகிறது.

ஹாங்காங் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் எரிக் ஃபோக் கை-ஷான் 2023இல் பேசுகையில், “அணியைப் பலப்படுத்துவதே எங்கள் நோக்கம். அனைவரின் பார்வையும் சீன சந்தையை நோக்குகிறது. எங்களுக்கு இதுகுறித்துக் கவலை இல்லை. கால்பந்தை பொறுத்தவரை, வணிக மதிப்பை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதும் அதை நிலையானதாக மாற்ற என்ன செய்கிறோம் என்பதுமே முக்கியம்.”

“ஒரு பிராந்தியத்தில் வசித்துக்கொண்டு, மற்றொரு இடத்துக்கான லீக் போட்டிகளில் விளையாடுவது இயல்பான ஒன்று. அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆங்கில பிரமிட்டின் கீழ் உள்ள கார்டிஃப் சிட்டி, ஸ்வான்சீ சிட்டி மற்றும் ரெக்ஸ்ஹாம் ஆகியவை வெல்ஷ் கிளப்புகளுடன் விளையாடுகின்றன,” என்று கூறினார்.

தேசிய அணியின் பயிற்சியாளர் ஜோர்ன் ஆண்டர்சனும் சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கின் சிறந்த கிளப்புகள் போட்டியிடும் முயற்சியை வரவேற்றார்.

கடந்த 1968ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஹாங்காங் அணி ஜனவரி மாதம் ஆசிய கோப்பைக்குத் தகுதி பெற்றது. நார்வேயின் கீழ் ஹாங்காங் அணி விளையாடியது. இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாலத்தீனம் கொண்ட குழுவில் கடைசி இடத்தைப் பிடித்தது. அந்தப் போட்டிகளில் சீனா சிறப்பாகச் செயல்படவில்லை, குழுவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. முதல் ஆட்டத்தில் கோல் அடிக்காமல் தோற்றது.

அந்தப் போட்டிகளின்போது, சீனாவின் நீண்டகால ரசிகர்கள்கூட ஹாங்காங்கின் முயற்சிகளால் ஈர்க்கப்பட்டனர்.

“சமூக ஊடகங்களில், சீன மக்கள் ஹாங்காங்கின் சமீபத்திய வெற்றியைப் பாராட்டினர். மேலும் கத்தாரில் இருந்து வந்த ரசிகர்கள்கூட ஹாங்காங்கை பாராட்டினர்” என்று ஹாங்காங்கில் உள்ள விளையாட்டு, கலாசாரம் மற்றும் அடையாளத்தின் கல்வியாளரும் இணை ஆசிரியருமான டோபியாஸ் ஜூசர் கூறினார்.

“சிலர் ஹாங்காங்கை பார்த்து சீன அணி கற்றுக்கொள்ள வேண்டும் என்றுகூட நினைக்கிறார்கள்.”

ஹாங்காங் கால்பந்து சங்கத்தைப் பொறுத்தவரை, இன்னமும் குழப்ப நிலை நீடிக்கிறது. ஹாங்காங் ஒரு தனி அணியுடன், சுயேச்சையாக இயங்குவது பெய்ஜிங்கிற்கு பயனுள்ளதாக மாறும். ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஃபிஃபாவிற்குள் அவர்கள் வைத்திருக்கும் வாக்கெடுப்பு அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. ஆனால் அதன் இருப்பு சீனாவின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புடன் முரண்படுகிறது.

பிப்ரவரியில் கிட்டத்தட்ட 40,000 பேர் இண்டர் மியாமி ஹாங்காங் லீக் செலக்ட் லெவன் (Hong Kong League select XI) அணியுடன் விளையாடுவதைக் காண ஆவலுடன் டிக்கெட் வாங்கினார்கள். ஆனால், இன்டர் மியாமி பெஞ்சில் இருந்த லியோனல் மெஸ்ஸி தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஆட முடியாமல் போனதால், ரசிகர் கூட்டம் பணத்தைத் திரும்பக் கொடுக்குமாறு கோஷமிட்டது. மேலும், இன்டர் மியாமி உரிமையாளரும் சீன சூப்பர் லீக் தூதராக இருந்தவருமான டேவிட் பெக்காமின் போட்டிக்குப் பிந்தைய உரையைக் கேலி செய்தனர்.

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாங்காங்கில் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு, இண்டர் மியாமி விரைவில் ஹாங்காங் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார் மெஸ்ஸி.

“அரசியல் ரீதியாக, பெய்ஜிங்கில் உள்ள அரசாங்கம் ஹாங்காங்கை முக்கியமான பிரதான நிலப்பகுதியின் ஒரு பாகமாகவே பார்க்கிறது” என்று பிரான்சில் உள்ள ஸ்கெமா பிசினஸ் ஸ்கூலில் விளையாட்டு மற்றும் புவிசார் அரசியல் பொருளாதாரத்தின் பேராசிரியர் சைமன் சாட்விக் கூறுகிறார்.

“சமீபத்திய மெஸ்ஸி நிகழ்வு போன்ற ஏதேனும் சர்ச்சைகள் ஏற்பட்டால், சீனா தனது பிம்பத்தை இழக்காமல் இருக்க விரும்புகிறது. மேலும் இது போன்ற பிரச்னைகளின் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.”

“ஹாங்காங்கில் கால்பந்து நீண்ட ஆயுளைக் கொண்டிருக்க வேண்டுமானால், அதை அரசியலற்றதாக்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். சமூக சார்பு மற்றும் அச்சுறுத்தல் இல்லாத முடிவுகளை எடுக்க வேண்டும்.”

“ஹாங்காங்கில் கால்பந்து சிறப்பான நடுநிலையான எதிர்காலத்தைப் பெற வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், ஹாங்காங் நிலப்பகுதி கட்டமைப்புகள் மற்றும் ஆளுகைக்கு உட்படுத்தப்படுவதால் கால்பந்து அணி அழிவையும் எதிர்கொள்ளக்கூடும்.”

ஹாங்காங், ஹாங்காங் – சீனாவாக உடனடியாக மாறும் என்பதை அவர் நம்பவில்லை. “ஹாங்காங் 1997ஆம் ஆண்டு முதல் ஹாங்காங்- சீனாவாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. எனவே மற்ற தேசிய விளையாட்டு சங்கங்களில் சமீபத்திய மாற்றங்களும் இதை ஒத்திருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

“எது எப்படி மாறினாலும், மக்கள் கால்பந்து அணிகளை ஆதரிப்பதையும் அவர்களின் எண்ணங்களையும் மாற்ற முடியாது,” என்னும் சட்க்ளிஃப், எங்கள் அணியின் பெயருடன் ஒரு ஒற்றை வார்த்தையைச் சேர்ப்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பெயர் மாற்றம் பெற்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அனைத்தையும் காலம் தீர்மானிக்கும்,” என்று அவர் கூறுகிறார்.