மகாராஷ்டிராவில் பழங்குடியின பெண் உட்பட இருவர் உயிருடன் எரித்துக் கொலை : மாந்திரீகம் காரணமா?

பட மூலாதாரம், GETTY IMAGES

  • எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்
  • பதவி, பிபிசி மராத்தி

மகாராஷ்டிராவில், கட்ச்சிரோலி மாவட்டம் எடப்பள்ளி கிராமத்தில் ஒரு பெண் உட்பட இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில், பெண்ணை எரித்துக் கொன்றதாக அவரது கணவர் மற்றும் மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த 57 வயதான பெண்ணின் பெயர் ஜமானி தேவாஜி தெலமி. இவருடன் சேர்த்து தேவு கட்டியா அட்டலமி என்ற 57 வயது ஆணும் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

எடப்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட பர்சேவாடா பகுதிக்கு மிகவும் தொலைதூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குக்கிராமத்தில் `மடியா’ பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்கள் மத்தியில் பெருமளவில் மூட நம்பிக்கைகள் இன்னமும் நிலவி வருகின்றன.

அதன் விளைவாக மகாராஷ்டிரா தினத்தன்று (மே 1) இரவு 8 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாக இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘மடியா’ கிராமத்தில் நடந்தது என்ன?

எடப்பள்ளி போலீஸ் அதிகாரி சைதன்யா கடம், பிபிசி மராத்தியிடம் பேசுகையில்,

“பார்சேவாடா கிராமத்தில் வசிக்கும் ஜமானி தேவாஜி தெலமி சூனியம் போன்ற மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக அவரது குடும்பத்தினர் சந்தேகித்தனர். தன் சொந்த குடும்பத்தினருக்கு எதிராகவே மாந்த்ரீக செயல்களில் அவர் ஈடுபடுவதாக ஜமானி மீது அவர்கள் கோபம் கொண்டனர்.

ஜமானி தெலமியின் மூன்றரை வயது பேத்தி அரோஹி தெலமி சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மரணம் மாந்திரீகம் காரணமாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகித்தனர்” என்று கடம் கூறினார்.

சில நாட்களுக்குப் பிறகு, ஜமானியின் மருமகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால், ஆரோஹிக்குப் பிறகு, அவர்கள் மற்றொரு குழந்தையையும் இழந்தனர். இந்த இறப்புகளுக்கு ஜமானி தான் காரணம் என்று கிராமத்தில் பேச்சு இருந்துள்ளது. இந்த இறப்புகளுக்குப் பிறகு, ஜமானி சூனியம் செய்வதாக குடும்பத்தினர் சந்தேகித்தனர்.

மகாராஷ்டிராவில் பழங்குடியின பெண் உட்பட இருவர் உயிருடன் எரித்துக் கொலை : மாந்திரீகம் காரணமா?

ஜமானியின் கணவர் தேவாஜி தெலமி, மே 1 அன்று இரவு கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்து கூட்டத்தை அழைத்து இறுதியாக பிரச்னையை தீர்த்து வைத்தார்.

அன்று என்ன நடந்தது என்பதை தேவாஜி காவல்துறையிடம் விவரித்தார்..

“பஞ்சாயத்தில், ஜமானி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் ஜமானி நான் சூனியம் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். தேவு கட்டியா அட்டலமி என்பவர் தான் மாந்திரீகம் செய்வதாக ஜமானி கூறியதாக அவரது சகோதரர் பஞ்சாயத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, பஞ்சாயத்து முன்பு ஜமானி மற்றும் அட்டலமியை கிராம மக்கள் கொடூரமாக தாக்கினர். அதன் பிறகு, அவர்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவரையும் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துவிட்டனர்’’ இவ்வாறு வாக்குமூலம் அளிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறைக்கு தகவல் கிடைத்தது எப்படி?

பார்சேவாடா கிராமத்தில், மே 1ம் தேதி இரவு பஞ்சாயத்து கூட்டம் நடந்தபோது ஜமானியின் சகோதரர் சாது மாசா முஹோண்டா உடனிருந்தார். அதனால்தான் இந்த முழு சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது. தன் சகோதரி ஜமானியை ஊர் மக்கள் மற்றும் குடும்பத்தினர் அடிப்பதை பார்த்த சாது அவர்களைத் தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவர் மீதும் பெட்ரோலை ஊற்றியது, இதனால் சாது பயந்து ஓடினார்.

அடுத்த நாள், ஜமானியின் கணவர், ஜமானி உயிருடன் எரிக்கப்பட்டதாக சாதுவிடம் கூறினார். இதையடுத்து சாது, எடப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட போது, ​​இருவரது உடல்களும் கருகிய நிலையில் கிடந்தன.

15 பேர் கைது

வழக்கு பதிவு செய்த காவல்துறை, கிராமத்தில் விசாரணை நடத்தி, விசாரணைக்கு பின், 15 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் இறந்த பெண்ணின் கணவர் தேவாஜி தெலமி மற்றும் மகன் திவாகர் தெலமி மற்றும் கிராம மக்களும் அடங்குவர்.

அவர்கள் அனைவர் மீதும் 302, 307, 201, 143, 147, 149, ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் சூனியம் உள்ளிட்ட செயல்களுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

அஹேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

“இது மிகவும் ஒதுக்குப்புறமான பகுதி. நகரத்தில் இருந்து நீண்ட தூரத்தில் அமைந்துள்ளது. அதனால் இங்கு பெட்ரோல் சுலபமாக கிடைக்காது. அப்படியிருக்க அவர்களுக்கு எங்கிருந்து பெட்ரோல் கிடைத்தது? கொலைக்கு வேறு ஏதேனும் சதி நடந்ததா? நிஜமாகவே மாந்திரீகம் தான் காரணமா? என முழுமையான விசாரணை நடந்து வருகிறது” என்று காவல்துறை அதிகாரி சைதன்ய கடம் கூறினார்.

மகாராஷ்டிரா, மூட நம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் மக்களை சென்றடையவில்லை

மகாராஷ்டிராவில் கடந்த 2013-ம் ஆண்டு மூட நம்பிக்கை மற்றும் மாந்திரீக தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. “அந்த சட்டம் அமலுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆன பிறகும், மாந்திரீகத்தால் உயிரைப் பறிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன, இதற்கு அரசு தான் பொறுப்பு.” என்று அந்தஸ்ரத்தா நிர்முலன் சமிதி கூறியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தேசிய பணித் தலைவர் சுரேஷ் ஜுர்முரே பேசுகையில், “சூனியம் வைக்கிறார் என்ற சந்தேகத்தால் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது, ​​இதைப் போன்ற வெட்கக்கேடான சம்பவம் வேறு எதுவும் இல்லை.

மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் குறித்த மக்களை விழிப்புணர்வு அடைய செய்ய முயற்சிக்கிறோம். ஆனால், அதற்கான எந்த உதவியும் அரசு மட்டத்தில் இருந்து கிடைக்கவில்லை. இந்தச் சட்டத்தை அரசு அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் கிராமப் புறங்களுக்கு கொண்டு வந்திருந்தால் இது போன்ற கொலை சம்பவங்கள் நடந்திருக்காது” என்று கூறினார்.