ஷெங்கன் விசா: இந்தியர்கள் இனி எளிதில் ஐரோப்பா செல்லும் வகையில் விதிகள் மாற்றம் – முழு விவரம்

இந்தியர்கள், ஐரோப்பியா, ஷெங்கன் விசா, மாணவர்கள், தொழில், கனடா, நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், தனீஷா சௌஹான்
  • பதவி, பிபிசி பஞ்சாபி செய்தியாளர்

ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. இதன் கீழ், நீங்கள் விசாவை பெற்றவுடன், பலமுறை ஐரோப்பாவிற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும் புதிதாக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் ‘ஷெங்கன் விசா’ விதிகளைச் சமீபத்தில் மாற்றியுள்ளது. இது இந்திய மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.

விதிகளில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்தப் புதிய மாற்றத்தால் வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி ஐரோப்பாவுக்கு செல்பவர்களுக்குச் செயல்முறைகள் எளிதாக இருக்கும்.

ஷெங்கன் விசா என்றால் என்ன?

ஷெங்கன் விசா என்பது ஐரோப்பியர் அல்லாதவர்கள் 29 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு வகை விசா.

இருப்பினும், இந்த விசா மூலம் வெளிநாட்டில் வேலை செய்ய அனுமதி கிடைக்காது. இந்த விசா அதிகபட்சம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இந்தியர்கள், ஐரோப்பியா, ஷெங்கன் விசா, மாணவர்கள், தொழில், கனடா, நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

விதிகளில் புதிய மாற்றங்கள் என்ன?

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று, இந்திய குடிமக்களுக்குப் பலமுனை நுழைவு விசாக்களை (multiple entry Schengen visa) வழங்குவதற்கான புதிய விதிகளை ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டது.

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் கடந்த காலத்தில் ஐரோப்பாவுக்கு குறிப்பிட்ட முறைகள் பயணம் செய்த விவரங்கள் சரியாக இருந்தால், அதாவது நல்ல பயண வரலாறு இருந்தால், இந்தப் பலமுனை நுழைவு ஷெங்க்கன் விசாவை எளிதாகப் பெறலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை ஷெங்கன் விசா சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்திய குடிமக்கள் இரண்டு வருட காலத்திற்குப் பலமுனை நுழைவு ஷெங்கன் விசாவை பெறலாம்.

ஒருவரது பாஸ்போர்ட் அங்கீகரிக்கப்பட்டால், இரண்டு வருட விசாவிற்குப் பிறகு 5 வருட விசாவும் பெற முடியும். இந்த விசா அங்கீகாரம் இருக்கும் வரை, இதை வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய நாட்டுக் குடிமக்களுக்கு இருக்கும் அதே பயண உரிமைகள் இருக்கும்.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் பொதுக் குறிக்கோள்களின்’ கீழ் குடிபெயர்வு தொடர்பான உறவை வலுப்படுத்த இந்தப் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசா இருந்தால் எந்தெந்த நாடுகளுக்குச் செல்லலாம்?

இந்தியர்கள், ஐரோப்பியா, ஷெங்கன் விசா, மாணவர்கள், தொழில், கனடா, நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்த விசா வைத்திருப்பவர், ஒவ்வொரு 180 நாட்களிலும், அதிகபட்சமாக 90 நாட்களுக்கு ஷெங்கன் நாடுகளுக்குப் பயணம் செய்யலாம். ஷெங்கன் பகுதி என்பது 29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது.

  • பெல்ஜியம்
  • பல்கேரியா
  • க்ரோஷியா
  • செக் குடியரசு
  • டென்மார்க்
  • ஜெர்மனி
  • எஸ்தோனியா
  • கிரேக்கம்
  • ஸ்பெயின்
  • பிரான்ஸ்
  • இத்தாலி
  • லாட்வியா
  • லிதுவேனியா
  • லக்சம்பர்க்
  • ஹங்கேரி
  • மால்டா
  • நெதர்லாந்து
  • ஆஸ்திரியா
  • போலந்து
  • போர்ச்சுகல்
  • ருமேனியா
  • ஸ்லோவேனியா
  • ஸ்லோவாகியா
  • பின்லாந்து
  • ஸ்வீடன்
  • ஐஸ்லாந்து
  • லிச்சென்ஸ்டீன்
  • நார்வே
  • சுவிட்சர்லாந்து

கனடாவின் சர்வதேச மாணவர்கள் கொள்கை

இந்தியர்கள், ஐரோப்பியா, ஷெங்கன் விசா, மாணவர்கள், தொழில், கனடா, நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ஏராளமான இந்திய மாணவர்கள் கனடா சென்று படித்து நிரந்தர குடியுரிமை பெறுகின்றனர். ஆனால் சமீபத்தில் கனடா அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளை மாற்றியது.

வரலாற்றில் முதன்முறையாக, தற்காலிக குடிமக்களின் எண்ணிக்கையைப் புதிதாக வருபவர்கள் சார்ந்து மட்டும் கட்டுப்படுத்த கனடா கருதியது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். அதேநேரம் செப்டம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரும். இந்த வரம்பு, சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்குப் பொருந்தும்.

கனடாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் தங்குமிட நெருக்கடி காரணமாக அந்த நாட்டுக்கு வரும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதாக மார்க் மில்லர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

மில்லர் தனது அறிவிப்பில், தற்போது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 6.2% தற்காலிக குடிமக்கள் என்றும், அதை 5% ஆக குறைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கனடாவிற்குள் நுழையும் தற்காலிக பிரஜைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில், கனடாவுக்கு வரும் தற்காலிக குடிமக்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

கனடாவின் புள்ளியியல் முகமைப்படி, 2024ஆம் ஆண்டுக்குள் கனடாவில் 25 லட்சம் தற்காலிக குடிமக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2021ஐ விட அதிகம்.

‘கோல்டன் விசா’வை நிறுத்திய ஆஸ்திரேலியா

இந்தியர்கள், ஐரோப்பியா, ஷெங்கன் விசா, மாணவர்கள், தொழில், கனடா, நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டு ஜனவரி மாதம் `கோல்டன் விசா` வசதியை நிறுத்துவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்தது.

இந்த விசா வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் இருந்தது. ஆனால் அதன்மூலம் `கணிசமான பொருளாதார நன்மைகள்` இல்லை என்று அந்நாட்டு அரசாங்கம் கண்டறிந்தது.

கோல்டன் விசா போன்ற விசாக்கள் வெவ்வேறு நாடுகளின் அரசுகளால் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் முதலீட்டாளர்கள் அந்தந்த நாடுகளின் குடியுரிமையைப் பெற அதிக அளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

அந்த நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கம். கோல்டன் விசா வழங்க வெவ்வேறு நாடுகளுக்கு அவற்றின் சொந்த விதிகள் உள்ளன.

‘இன்வெஸ்டோபீடியா’ இணையதளத்தின்படி, கோல்டன் விசா என்பது ஒரு முதலீட்டுத் திட்டம். இது ஒரு முதலீட்டாளர் ஒரு நாட்டில் அதிக முதலீடு செய்வதன் மூலம் தனது குடும்பத்துடன் குடியுரிமை அல்லது நிரந்தர தங்கும் அனுமதியைப் பெறுவதற்கான வழியைக் கொடுக்கிறது.

நியூசிலாந்தின் புலம்பெயர் மாணவர் கொள்கை

கடந்த ஏப்ரல் மாதம், நியூசிலாந்து அரசு தனது பணி விசா விதிகளை மேலும் கடுமையாக்கியது.

அந்நாட்டு அரசாங்கத்தின் கூற்றுப்படி, நியூசிலாந்துக்கு வரும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை ‘கட்டுப்படுத்த முடியாத’ அளவை எட்டியதால் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்விதிகளின்படி, திறன் குறைந்த விசா விண்ணப்பதாரர்கள் இப்போது ஆங்கில மொழித் தகுதியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதனுடன், அவர்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள், முன்பு அவர்கள் ஐந்து ஆண்டுகள் தங்கலாம்.

“பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு எங்கள் குடியேற்றக் கொள்கை முக்கியமானது,” என்று குடியேற்ற விவகாரங்களுக்கான அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் கூறினார்.

கடந்த ஆண்டு 1,73,000 பேர் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.