இந்தியப் பொருளாதாரம்
  • எழுதியவர், நிகில் இனாம்தார்
  • பதவி, பிபிசி வணிகச் செய்தியாளர், மும்பையிலிருந்து

ஜனவரியில் டெல்லி செங்கோட்டையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பிரதமர் நரேந்திர மோதியின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

அன்று அவர் கொடுத்தது ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’, அதாவது 2047 க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் வாக்குறுதி.

மக்களை ஈர்க்கக்கூடிய வார்த்தைகளில் ஆர்வமுள்ள அவரது சமீபத்திய முழக்கம் அது.

‘வளர்ந்த இந்தியா’ என்பது ஒரு தெளிவற்ற உறுதிமொழியாகும். ஆனால் மோதி ஆட்சிக்கு வந்த முதல் 10 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சியின் காலகட்டத்திற்கு அடித்தளம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

மோதியும் அவரது அரசும் அதிகாரத்திற்கு வந்தபோது இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் இருந்தது. வளர்ச்சி மெதுவாக இருந்தது. முதலீட்டாளர் நம்பிக்கை குறைவாக இருந்தது. ஒரு டஜன் இந்திய பில்லியனர்கள் திவாலாகி, நாட்டின் வங்கிகள் மீது பெருமளவில் வராக் கடன்களின் சுமையை சுமத்தினார்கள். இதன் காரணமாக வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன் பலவீனமானது.

இப்போது, ​​10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி மற்ற பெரிய பொருளாதாரங்களை விட அதிகமாக உள்ளது. அதன் வங்கிகள் வலுவாக உள்ளன. கோவிட் பெருந்தொற்றைச் சமாளிக்கவேண்டி இருந்தும்கூட அரசின் நிதி நிலைமை நிலையாக உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா பிரிட்டனை முந்தி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 2027-ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தி இந்தியா மூன்றாவது இடத்தை அடையும் பாதையில் உள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி நாட்டில் நம்பிக்கைபூர்வமான சூழல் நிலவுகிறது. இந்தியா G20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ராக்கெட்டை அனுப்பிய முதல் நாடாக இந்தியா ஆனது. மேலும் சில டஜன் பெரிய நிறுவனங்களை (யூனிகார்ன்) உருவாக்கியது. ஏறுமுகமாக இருக்கும் பங்குச் சந்தைகள் நடுத்தர வர்க்கத்தின் செல்வத்தின் மீது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவிற்கான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) பொருளாதார தொலைநோக்கு பார்வையான ‘மோதினாமிக்ஸ்’ வேலை செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் ஆழமாகப் பார்த்தால், நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வாழ்வாதாரத்தின் விளிம்பில் வாழும் நிலையில் மிக சிறந்த காலகட்டம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

அப்படியானால் மோதினாமிக்ஸில் வெற்றியாளர்கள் மற்றும் தோற்றவர்கள் யார் யார்?

பொருளாதாரம்

டிஜிட்டல் புரட்சிக்கு மோதி அளித்த முக்கியத்துவம்

டிஜிட்டல் மேலாண்மைக்கு மோதி அளித்த முக்கியத்துவம் நாட்டின் பல ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றத் தொடங்கியுள்ளது.

இன்று நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் தொலைபேசிகளில் QR குறியீட்டைப் பயன்படுத்தி, ஒரு பாக்கெட் பிரெட்டிற்குகூட வெறும் 20 ரூபாய் செலுத்தி ரொக்கப்பணமில்லாமல் பல தினசரி பொருட்களை வாங்க முடிகிறது.

இந்த டிஜிட்டல் புரட்சியின் அடிப்படையானது மூன்று அடுக்கு நிர்வாக அமைப்பு ஆகும். உலகளாவிய அடையாள அட்டைகள், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் பணப்பரிமாற்றங்களை செயல்படுத்தும் கட்டணம் செலுத்தும் கட்டமைப்பு மற்றும் வருமான வரி தாக்கல் போன்ற பல முக்கியமான அணுகலை தனிநபர்களுக்கு அளிக்கும் தரவுக் களஞ்சியம் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ‘டிஜிட்டல் அடுக்குகளுடன்’ கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளை இணைப்பது நிர்வாகத்துறை தலையீடு மற்றும் ஊழலைக் குறைத்துள்ளது.

2021 மார்ச் மாதத்திற்குள், மொத்த உள்ளநாட்டு உற்பத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1%-க்கு சமமான சேமிப்புக்கு டிஜிட்டல் நிர்வாகம் வழிவகுத்தது. அதிக பற்றாக்குறை இல்லாமல், சமூக மானியங்கள், நிதி உதவிகள் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் செலவழிக்க இது அரசுக்கு வழியை ஏற்படுத்தியது.

இந்தியப் பொருளாதாரம்

எங்கு பார்த்தாலும் கிரேன்கள்!

இந்தியாவில் எங்கு பார்த்தாலும், கிரேன்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் வேலை செய்வதைக் காண முடியும். அது சிதைந்து வரும் பொது உள்கட்டமைப்பிற்கு ஒரு பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது.

இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

புதிய சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை உருவாக்குவது மோதியின் பொருளாதாரக் கொள்கையின் மையமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் உள்கட்டமைப்புச் செலவினங்களுக்காக (மூலதனச் செலவு) ஆண்டுதோறும் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவழிக்கப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2024-க்கு இடையில் கிட்டத்தட்ட 54,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டன. இது முந்தைய 10 ஆண்டுகளில் போடப்பட்ட சாலை நீளத்தை விட இருமடங்காகும்.

பல தசாப்தங்களாக இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்த நிர்வாக வர்க்கத்தின் தலையீட்டையும் அரசு கணிசமாக குறைத்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவிட்-19 பொதுமுடக்கத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஆனால் மோதியின் கொள்கைகள் அனைவருக்கும் பயனளிக்கவில்லை.

கொரோனா தொற்றுநோய்கால கட்டத்தில் விதிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம், 2016-இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய விளைவுகள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தமான, நாட்டின் மறைமுக வரிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அமல்செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறை ஆகியன இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது ஆழமான கட்டமைப்பு விளைவுகளை ஏற்படுத்தின.

மிகப் பெரிய அமைப்புசாராத் துறையின் கீழ் வரும் இந்தநாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு தொழில் நிறுவனங்கள், இந்த முடிவுகளில் சிலவற்றின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.

மேலும் தனியார் துறை பெரிய முதலீடுகளைச் செய்வதில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் தனியார் முதலீடு, 2007-08 இல் 27.5% என்ற உச்சத்தில் இருந்து 2020-21 இல் 19.6% ஆக குறைந்தது.

இந்தியப் பொருளாதாரம்

வேலையின்மை குறித்த அச்சம்

வடக்கு நகரமான லக்னெளவில் உள்ள அரசு ஆட்சேர்ப்பு மையங்களுக்கு வெளியே கடந்த ஜனவரி மாதம், கட்டுமானத் துறையில் வேலைக்காக இஸ்ரேலுக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அந்த இடத்தில் எனது சக செய்தியாளர் அர்ச்சனா ஷுக்லா இருந்தார்.

இந்தத் தொழிலாளர்களின் விரக்தி, இந்தியாவில் நிலவும் வேலை நெருக்கடி உண்மையானது என்பதைக் காட்டுகிறது. மேலும் இது எல்லா இடங்களிலும் லட்சியங்களை நசுக்குகிறது.

“என் குடும்பத்தில் முதுகலை பட்டம் பெற்ற முதல் நபர் நான்தான். ஆனால் நான் வசிக்கும் இடத்தில் தொழிற்சாலை இல்லை. அதனால் நான் இப்போது டியூஷன் எடுக்கிறேன். அதில் அதிக பணம் இல்லை,” என்று மேற்கு இந்தியாவில் உள்ள மிராஜ் நகரத்தைச் சேர்ந்த 23 வயது பட்டதாரியான ருக்கையா பெபாரி கூறினார்.

கடந்த இரண்டு வருடங்களாக ருக்கையா அல்லது அவரது சகோதரருக்கு முழுநேர வேலை இல்லை. அவர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கு அல்ல.

வேலையற்ற மக்களிடையே படித்த இளைஞர்களின் பங்கு 2000-ஆம் ஆண்டில் இருந்த 54.2% இலிருந்து 2022-இல் 65.7% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 2014 முதல் உண்மையான ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை என்று புகழ்பெற்ற பரிணாம பொருளாதார நிபுணர் ஜான் த்ரேஸ் மதிப்பிட்டுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் வயது மக்களிடமிருந்து வரக்கூடிய பொருளாதார வளர்ச்சி சாத்தியத்தை இந்தியா இழக்கும் அபாயம் உள்ளது என்று உலக வங்கியின் பிராந்திய பொருளாதார நிபுணர் ஒருவர் பைனான்சியல் டைம்ஸுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.

இந்தியப் பொருளாதாரம்

வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது மோதியால் தீர்க்க முடியாத ஒரு பிரச்னை.

2014-இல் வெற்றி பெற்றவுடன் இந்தியாவை உலகின் தொழிற்சாலையாக மாற்றும் லட்சியமான மேக் இன் இந்தியா பரப்புரையை பிரதமர் தொடங்கினார். 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்காக, செமி-கண்டக்டர்கள் முதல் மொபைல் எலக்ட்ரானிக்ஸ் வரையிலான துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு 25 பில்லியன் டாலர்கள் ஊக்கத்தொகையை அவரது அரசு வழங்கியது.

ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

ஆப்பிளுக்கு ஐபோன்களை உருவாக்கும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள், உலகளாவிய `சீனா பிளஸ் ஒன்` பல்வகைப்படுத்தல் உத்தியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு தங்கள் விநியோகச் சங்கிலிகளை மாற்றுகின்றன என்பது உண்மைதான். மைக்ரான் மற்றும் சாம்சங் போன்ற பிற முக்கிய உலக நிறுவனங்களும் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. ஆனாலும் இந்த எண்ணிக்கை இதுவரையில் கணிசமாக இல்லை.

இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி துறையின் பங்கு கடந்த பத்தாண்டுகளில் தேக்க நிலையிலேயே உள்ளது.

மோதிக்கு முந்தைய பிரதமர்களின் கீழ் ஏற்றுமதி வளர்ச்சியும் வேகமாக இருந்தது.

“2050-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உற்பத்தி 8% வளர்ச்சியடைந்தாலும், 2022 மட்டத்திலேயே சீனாவின் வளர்ச்சி நிலையானதாக இருந்தாலும், 2050-இல் இந்தியாவின் உற்பத்தி அளவு, 2022-இல் இருந்த சீனாவின் அளவுடன் பொருந்தாது,” என்று கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியரான வித்யா மஹம்ப்ரே கூறுகிறார்.

பெரிய அளவிலான தொழில்துறை இல்லாததால் இந்தியாவின் மக்கள்தொகையில் பாதி பேர் இப்போதும் லாபம் குறைந்துவரும் விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரத்திற்கு நம்பியுள்ளனர்.

இந்தியப் பொருளாதாரம்

பட மூலாதாரம், Reliance Industries

படக்குறிப்பு, சமீபத்தில் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம், நாட்டின் புதிய சகாப்தத்தைப் பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்தது

அதிவேக மீட்பு?

இதன் நேரடி விளைவு? உள்நாட்டு பட்ஜெட்டின் சுருக்கம்.

பொருட்களை வாங்குவதற்கு மக்கள் செலவிடும் பணம் அதாவது ஒட்டுமொத்த தனியார் நுகர்வு செலவினங்களின் வளர்ச்சி 3%-ஆக உள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிக மெதுவான வளர்ச்சியாகும்.

வீடுகளில் கடன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நிதிச் சேமிப்புகள் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றுள்ளன என்று புதிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தொற்றுநோயைத் தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தன்மை சீரற்றதாக அல்லது ‘கே-வடிவத்தில்’ இருப்பதாக பல பொருளாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர். அதாவது ஏழைகள் தொடர்ந்து போராடுகின்றனர். பணக்காரர்கள் செழிப்படைந்துள்ளனர். இந்தியா ஒட்டுமொத்த அளவில் ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கலாம். ஆனால் தனிநபர் பொருளாதார அடிப்படையில் அது இன்னும் 140-வது இடத்தில்தான் உள்ளது.

சமத்துவமின்மை நூறு ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலைக்கு அதிகரித்துள்ளது என்று உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. எனவே சமீபத்திய தேர்தல் பரப்புரையில் சொத்து மறுபகிர்வு மற்றும் பரம்பரை சொத்துக்கள் மீது வரி பற்றி நிறைய விவாதங்கள் நடப்பதில் ஆச்சரியமில்லை.

இந்தியப் பொருளாதாரம்

சமீபத்தில் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம், நாட்டின் புதிய சகாப்தத்தைப் பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்தது. மார்க் ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ் மற்றும் இவாங்கா டிரம்ப் ஆகியோர் கலந்து இதில் கொண்டனர். உலகளவில் பிரபலமான பாடகியான ரிஹானா பாலிவுட்டின் மிகப்பெரிய பிரபலங்களுடன் மேடையில் நடனமாடி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதே நேரத்தில் அம்பானி இல்லப்பெண்கள், ஒருகாலத்தில் முகலாய பேரரசின் சேகரிப்பில் இருந்த வைரங்கள் மற்றும் நகைகளை அணிந்திருந்திருந்தனர்.

கார்கள், கடிகாரங்கள் மற்றும் மதுபானங்கள் உற்பத்தி செய்யும் சொகுசு பிராண்ட் நிறுவனங்கள், இந்தியாவின் வெகுஜனச் சந்தை நிறுவனங்களை விட வேகமாக வளர்ந்து வருகின்றன என்று கோல்ட்மேன் சாக்ஸில் இந்திய நுகர்வோர் பிராண்டுகளை ஆய்வு செய்யும் அர்னப் மித்ரா கூறுகிறார்.

‘சிறிய நிறுவனங்களின் பலியான அதே சமயம்’ ஒரு சில பெரிய கூட்டு நிறுவனங்கள் வளர்ந்துள்ளன என்று நியூ யார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் விரால் ஆச்சார்யா தெரிவித்தார்.

பெரும் பணக்காரர்கள் பெரும் வரிக் குறைப்புகளாலும், `தேசிய சாம்பியன்களை` உருவாக்கும் கொள்கையாலும் பயனடைந்துள்ளனர். சில நிறுவனங்களுக்கு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற விலைமதிப்பற்ற பொது சொத்துக்களை உருவாக்க அல்லது நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.

அவர்களில் பலர் ஆளும் பா.ஜ.க-வுக்கு மிக அதிக அரசியல் நன்கொடையாளர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகள் மூலம் வெளியான தகவல்கள் காட்டுகின்றன.

இந்தியப் பொருளாதாரம்

இது இந்தியாவின் தசாப்தமா?

மொத்தத்தில் இது இந்தியாவின் பொருளாதாரத்தின் சீரற்ற நிலைமையை முன்வைக்கிறது. ஆனால், எல்லா பிரச்சனைகளையும் தாண்டி நாடு வேகமாக முன்னேறி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

“இந்தியாவின் அடுத்த தசாப்தம் 2007 முதல் 2012 வரையிலான சீனாவின் (அதிக வளர்ச்சி) பாதையை ஒத்திருக்கும்” என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்கள் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் எழுதினார்கள்.

நாட்டிற்கு பல சாதகமான நிலைமைகள் உள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். இளமையான மக்கள்தொகை, சீனாவின் ஆபத்து குறைவான உலகளாவிய புவிசார் அரசியல், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளை சீராக்குதல், டிஜிட்டல் மயமாக்கல், தூய்மையான ஆற்றலுக்கு மாறுதல் மற்றும் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்து போன்ற பெரிய போக்குகள் எதிர்காலத்தில் வளர்ச்சியைத் தூண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது நீண்ட கால நன்மைகளைக் கொண்ட ஒன்று. சாலைகள், மின்சார துறையில் மேம்பாடு மற்றும் விரைவான துறைமுகங்கள் உருவாக்கம் ஆகியவை மூலம் இந்தியா `உற்பத்தி செழிக்கக்கூடிய சூழலை உருவாக்குகிறது` என்று CRISIL இன் இந்திய பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி கூறுகிறார்.

இந்தியப் பொருளாதாரம்

பட மூலாதாரம், Reuters

ஆனால், ‘சொத்து உருவாக்க மூலதனத்தில்’ கவனம் செலுத்துவதுடன், ‘மனித மூலதனத்தை’ உருவாக்குவதில் மோதி கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியாவின் மத்திய வங்கியான ரிஸர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜன் கூறுகிறார்.

இந்தியக் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவு உலகை எதிர்கொள்ளத் தேவையான அளவிற்கு சரியாகக் கற்பதில்லை. 14 முதல் 18 வயதுடையவர்களில் கால் பகுதியினர் எளிய உரையை சரளமாகப் படிக்க முடியாமல் உள்ளனர் என்று லாப நோக்கற்ற பிரதம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையை கோவிட்-19 மாணவர்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கு அரசு தொடர்ந்து குறைவான நிதியே ஒதுக்கி வருகிறது.

அதன் முதல் தசாப்தத்தில், மோடினாமிக்ஸ் குறிப்பிட்ட சிலருக்கு பயனளித்ததாகத் தெரிகிறது. ஆனால் ஜாடி இன்னும் பாதி காலியாக இருப்பது போலவே பலருக்கும் உள்ளது.

“வளர்ச்சி வேகமாகவும் சமத்துவமாகவும் இல்லை என்றால், நாம் பணக்காரர் ஆவதற்கு முன்பு நமக்கு வயதாகிவிடும்,” என்கிறார் டாக்டர் ராஜன்.