அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது ராஜ தந்திரமா? உத்தரபிரதேசத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

மக்களவைத் தேர்தல், காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

  • எழுதியவர், வினீத் கரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த சில நாட்களாகவே, ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தவிர அமேதியில் போட்டியிடுவாரா என்றும், பிரியங்கா காந்தி ரேபரேலியில் இருந்து தனது தேர்தல் அரசியல் வாழ்க்கையைத் துவங்குவாரா என்றும் ஊகங்கள் நிலவி வந்தன.

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று (வியாழன், மே 2) காலை, ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவார் என்றும், காங்கிரசின் கோட்டையான அமேதியில் போட்டியிடவில்லை என்றும், பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.

அமேதியில் பா.ஜ.க எம்.பி ஸ்மிருதி இரானிக்கு எதிராக, நேரு-காந்தி குடும்பத்துடன் நீண்டகாலமாக தொடர்புடைய கிஷோரி லால் வர்மாவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காந்தி குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகின்றன. பெரோஸ் காந்தி 1952 மற்றும் 1957- ஆகிய ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் இருந்து எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு வந்தார். சஞ்சய் காந்தி அமேதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தை அடைந்தார்.

சஞ்சய் காந்தியின் மரணத்திற்குப் பிறகு, ராஜீவ் காந்தி 1981-ஆம் ஆண்டு அமேதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்தார். 1999-ஆம் ஆண்டு சோனியா காந்தியும் அமேதி தொகுதியில் இருந்தே அரசியலுக்கு வந்தார். பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து தேர்தலில் போட்டியிட்டார்.

ராகுல் காந்தி அமேதிக்குப் பதிலாக ரேபரேலியில் போட்டியிடுவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சிலர் இந்த முடிவில் அரசியல் தர்க்கத்தைத் தேடுகிறார்கள். அதே நேரத்தில் சிலர் இந்த முடிவு சரியானது என்றும் கூறுகின்றனர்.

தற்போது இந்த அறிவிப்பு வெளியானதும், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்ந்து சவால் விடுத்து வரும் ஸ்மிருதி இரானி, தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல், காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

‘இந்த முடிவை புரிந்துகொள்ள முடியவில்லை’

ராகுல் காந்தியை குறிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “இவர்கள் எல்லோரிடமும் ‘பயப்படாதீர்கள்’ என்று சொல்கிறார்கள். நான் இன்று முழு மனதுடன் அவர்களுக்குச் சொல்கிறேன். பயப்படாதீர்கள். பயந்து ஓடாதீர்கள்,” என்றார்.

ஆனால், காங்க்கிரசின் இந்த முடிவு, நரேந்திர மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராக வருவதைத் தடுக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது முக்கியமான கேள்வி.

மேலும், இது குறித்து காங்கிரசின் கூட்டணி கட்சிகள் என்ன நினைக்கின்றன?

இதுபற்றிப் பேசிய தேர்தல் ஆய்வாளர் யஷ்வந்த் தேஷ்முக், இந்த முடிவோ, இதன் பின்னணியில் உள்ள அரசியல் தர்க்கமோ தனக்கு புரியவில்லை என்றார்.

“அவர்கள் பயந்து ஓடிவிட்டதான ஒரு பிம்பத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இதுவரை இரண்டு சுற்று வாக்குப்பதிவுதான் நடந்திருக்கிறது. இன்னும் ஐந்து சுற்றுகள் மீதம் உள்ளன,” என்கிறார்.

மறுபுறம், `ஹிந்துஸ்தான் டைம்ஸ்` நாளிதழின் அரசியல் ஆசிரியர் வினோத் சர்மாவின் கருத்துப்படி, “ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் இரண்டாவது விஷயம் என்னவென்றால், அவர் அமேதியில் இருந்து ஓடிவிட்டார் என்று மக்கள் சொல்வார்கள். அதனை எதிர்கொள்ள காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்தே அடுத்தக்கட்டம் அமையும்.”

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா, பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடாததும், ராகுல் அமேதிக்குப் பதிலாக ரேபரேலியில் போட்டியிடுவதும் தனக்குப் புரியவில்லை என்கிறார். “ராகுல் காந்தி அமேதியில் தோற்றாலும் என்ன பெரிய விஷயம்? கடந்த முறையும் அவர் அத்தொகுதியில் தோற்றார். அவர் நின்று போராடியிருக்க வேண்டும்,” என்கிறார்.

எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான ரஷித் கித்வாயின் கருத்துப்படி, `காங்கிரஸ் நடத்திய கருத்துக்கணிப்புகளில், நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால், அமேதியை விட ரேபரேலியில் தெளிவான வெற்றியைக் கண்டனர், அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது`.

“காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இடையே கூட்டணி உருவானபோது, ​​நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். மேலும் அந்த கூட்டணியின் அழுத்தத்தால் தான் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுகிறார்,” என்று அவர் கூறுகிறார்.

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷ்யாம் திவாரி காங்கிரஸ் கட்சியின் முடிவு புரிந்துகொள்ள முடியாதது என்றும், இந்த முடிவின் நேரம் சரியில்லை என்றும் கூறுகிறார்.

அவர், “இந்த முடிவின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அமேதி போன்ற ஒரு தொகுதியில், கடைசி நிமிடத்திற்கு முன்பே முடிவு எடுக்கப்படும் என்றால், அது உங்கள் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும். கடைசி நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதன் அரசியல் தர்க்கம் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தால், அது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தாது,” என்கிறார்.

மக்களவைத் தேர்தல், காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ‘ராகுல் காந்தியின் தனது அரசியல் போட்டியாளர் ஸ்மிருதி இரானி என்ற உரையாடல் உருவாக்கப்படுவதை விரும்பவில்லை’

ராகுல் காந்தியின் முடிவு ராஜ தந்திரமா?

அமேதி மற்றும் ரேபரேலி தொடர்பான அறிவிப்புகளில் ‘தாமதம்’ ஏன் என காங்கிரஸ் தலைவர்களிடம் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ‘எந்த தாமதமும் இல்லை’ என்று மறுத்து வந்தனர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் வினோத் ஷர்மா கூறுகையில், “ராகுல் காந்தி அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்துப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியைப் பற்றிச் செய்தி சேகரிப்பது சுவாரசியமானதாக இருக்கும் என்று நினைத்த பல பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்,” என்றார்.

“இப்போது அமேதியில் கிஷோரி லாலை வெற்றிபெறச் செய்வது நேரு-காந்தி குடும்பத்தின் பொறுப்பாகிவிட்டது. ஸ்மிருதி இரானி பற்றி கேட்டபோது, ‘​​​​அவர் யார்?’ என்று பிரியங்கா காந்தி கேட்டார். அப்போது பிரதமர் தானே ஸ்மிருதி இரானியின் வெற்றிக்கு உறுதியளிப்பதாகத் தெரிவித்திருந்தார்,” என்றார்.

2004 முதல் 2019 வரை அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியை 2019 மக்களவைத் தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ஸ்மிருதி இரானி.

தற்போது ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி சார்பில் எம்.பி-யாக உள்ளார்.

யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், “ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்று வயநாடு தொகுதியைக் காலி செய்தால், அது கேரள அரசியலுக்கு ஏற்ற சரியான முடிவாக இருக்காது என்று நினைக்கிறேன். வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுவதை கருத்தில் கொள்ளுங்கள். இடதுசாரிகள் வயநாட்டில் வெற்றி பெற்றால் அது எப்படி காங்கிரசுக்கு நல்ல செய்தியாக இருக்கும்?” என்கிறார்.

இந்த விவாதங்களைப் பற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் இருந்து மூன்று முறையும், கேரளாவில் இருந்து ஒரு முறையும் எம்.பி ஆனார். ஆனால் மோதிக்கு ஏன் விந்தியாஞ்சலில் தேர்தலில் போட்டியிட தைரியம் வரவில்லை?” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறுகையில், “இந்த முடிவின் பின்னால் அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியின் போட்டி பிரதமர் மோதியுடன் உள்ளது. அவர் தனது அரசியல் போட்டியாளர் ஸ்மிருதி இரானி என்ற உரையாடல் உருவாக்கப்படுவதை அவர் விரும்பவில்லை,” என்கிறார்.

மறுபுறம், ரேபரேலி போன்ற பாதுகாப்பான இடத்தில் காங்கிரஸ் ஏன் இந்த முடிவை எடுத்தது என்பது ஒரு பெரிய கேள்வி என்கிறார் யஷ்வந்த் தேஷ்முக்.

அவர் கூறுகிறார், “ரேபரேலி போன்ற பாதுகாப்பான தொகுதியில் சோனியா காந்தி ‘நான் இப்போது ஓய்வு பெறுகிறேன், எதிர்காலத்தில் அதை ராகுல் சமாளிப்பார்’ என்று கூறுகிறார். பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களிப்பார்கள். இவ்வளவு பாதுகாப்பான தொகுதியை ஏன் வீணாக்குகிறார்கள்? இது ஒரு பெரிய தவறு. இந்த முடிவு எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது ராகுல் காந்தியைவிட அகிலேஷ் யாதவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது,” என்கிறார்.

இந்த விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸிடம் பிபிசி பதில் கேட்டபோது, ​​இது தொடர்பாக தாங்கள் எதுவும் கூற முடியாது என்று பதில் கிடைத்தது.

ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலியிலும் போட்டியிட்டிருக்க வேண்டும் என்றும், தற்போதைய முடிவு மக்களுக்கு நல்ல செய்தியை அனுப்பாது என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.

“ராகுல் அமேதியிலும், பிரியங்கா ரேபரேலியிலும் போட்டியிட்டிருந்தால், அது உத்திரபிரதேசத்திற்கு உதவியிருக்கும். பொதுப் பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஜனநாயகத்தில் தேர்தல் மூலம்தான் உங்கள் அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது,” என்றார்.

மக்களவைத் தேர்தல், காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் என எங்கு தேர்தல் நடக்கவில்லையோ அங்கெல்லாம் பிரியங்கா காந்திக்கு பெரும் கிராக்கி உள்ளது

பிரியங்கா காந்தி குறித்த கேள்விகள்

மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடாததும் விவாதத்திற்குரிய விஷயமாகியிருக்கிறது. அவர் பிரதமர் மோதி மற்றும் பா.ஜ.க மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும் விதம், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அவரது அந்தஸ்தை அதிகரித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற பிரியங்காவின் முடிவு குறித்து, வினோத் ஷர்மா கூறுகையில், “அவரிடம் திறமையும் ஆற்றலும் உள்ளது,” என்றார்.

ஆனால், அவர் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?

‘எல்லோரும் அவரவர் மக்களவைத் தொகுதிகளுக்கு கட்டுப்பட்டால், யார் பிரசாரம் செய்வார்கள்?’ என்று வினோத் சர்மா கேட்கிறார்.

மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் என எங்கு தேர்தல் நடக்கவில்லையோ அங்கெல்லாம் பிரியங்கா காந்திக்கு பெரும் கிராக்கி உள்ளது. சோனியா காந்தி இன்னும் பிரசாரத்திற்குச் செல்லவில்லை. காங்கிரஸைத் தவிர நேரு-காந்தி குடும்பம் தவிர மல்லிகார்ஜுன கார்கே பிரசாரத்திற்குச் செல்கிறார், ஆனால் மக்களை அவர் ஈர்க்கவில்லை.

ரஷித் கித்வாயின் கூற்றுப்படி, ராகுல் காந்தி மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி விரும்புகிறார்.

“கடந்த 2019-ஆம் ஆண்டு ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாட்டில் போட்டியிட்ட போது, ​​ராகுல் காந்தி விட்டுச் செல்லும் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இப்போதும் அதேதான் சொல்லப்படுகிறது. ராகுல் காந்தி வயநாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றும், ரேபரேலியில் வெற்றி பெற்ற பிறகு அந்தத் தொகுதியை பிரியங்காவுக்குக் கொடுப்பார் என்றும், பிரியங்கா ஆறு மாதங்களுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிடுவார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

மறுபுறம், பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடாதது ‘முற்றிலும் தவறு’ என்று சஞ்சய் ஜா நம்புகிறார்.

மக்களவைத் தேர்தல், காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

உத்தரபிரதேசத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷ்யாம் திவாரி, இந்த முடிவு நாட்டின் அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார், ஏனெனில் “இந்த தேர்தல் ஒரு தொகுதி மற்றும் ஒரு வேட்பாளரை மட்டுமே சார்ந்தது அல்ல.”

அவர் மேலும் கூறுகிறார், “இந்தத் தேர்தல் ‘மோதி வெர்சஸ் ராகுல்’ என்பது அல்ல. இந்தத் தேர்தல் மோதிக்கும் சாமானிய மக்களுக்கும் இடையிலான தேர்தல். வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிற பிரச்னைகள் முக்கியமானவை,” என்று அவர் கூறுகிறார்.

தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார், மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் கட்சிகளின் தேர்தல்தான் மக்களவைத் தேர்தல் என்ற எண்ணம் நிலவுகிறது. இந்தப் பிராந்தியக் கட்சிகளின் செயல்பாடு நன்றாக இருந்தால், பா.ஜ.க-வுக்குச் சவால்கள் அதிகரிக்கும்.

சஞ்சய் ஜா, ​​”காங்கிரசின் முடிவு இந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் இது காங்கிரஸில் நம்பிக்கையின்மை என்ற கருத்து வெளிப்படும்,” என்றார்.