சோழர் காலத்தில் சுத்தமான தங்கத்தை கல்லில் உரசாமல் துல்லியமாக எப்படி கண்டுபிடித்தார்கள்?

தங்கத்தின் தரம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கம் எப்போதுமே நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

தற்காலத்தில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் அதிகமாக தங்க நகைகளை அணிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்க ஹால்மார்க் முத்திரை தற்போது குறியீடாக பயன்படுத்தப்பட்டாலும் இடைப்பட்ட காலத்தில் மக்கள் கலப்படத் தங்கத்தையும் வாங்கிப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்தின் தரத்தை கல்லில் உரசிப் பார்க்காமல், மிகத் துல்லியமாகக் கணிக்கும் வகையில் நுண்ணறிவைப் பெற்ற பொன் வணிகர்கள் இருந்துள்ளனர்.

அவர்களின் பணி என்னவாக இருந்தது? அவர்கள் எங்கு, எந்தப் பகுதிகளில் வாழ்ந்தனர்? இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்.

சோழர் ஆட்சியில் எந்தக் கருவியும் இன்றியே தங்கத்தின் தரம் அளக்கப்பட்டதன் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

பொன் வணிகம்

தங்கத்தின் தரத்தை தமிழர்கள் துல்லியமாக கணக்கிட்டது எப்படி

பட மூலாதாரம், Getty Images

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகை செய்பவர்கள், பொன் வணிகர்கள், தங்கத்தின் தரத்தைப் பரிசோதிப்பவர்கள் பற்றி இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் க.பன்னீர்செல்வம் தமிழர்களுக்கு இருந்த தங்கத்தின் தரம் பார்க்கும் திறன் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார்.

அக்காலத்தில் தங்கம் தொடர்பான வணிகம் செய்தவர்களை காசுக்கடை வணிகர், பொற்கொல்லர், பொன்வாணிகன், வைசியர்கள் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார் முனைவர் க.பன்னீர்செல்வம்.

அக்காலத்தில் பொன் வணிகர்கள் இருந்துள்ளதை அகநானூற்று பாடல் தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார். “தமிழ் பிராமி கல்வெட்டுகள் பொன் வணிகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மிகவும் துணை புரிகின்றன.”

“இதற்கு எடுத்துக்காட்டாக மதுரைக்கு அருகில் உள்ள அழகர் மலை என்ற ஊரில் கிடைத்துள்ள தமிழ் பிராமி கல்வெட்டில் வந்துள்ள ‘மதிரை பொன் கொல்வன் அதன்’ என்ற தொடரைக் கொண்டும், புகலூர் தமிழ் பிராமி கல்வெட்டில் வந்துள்ள ‘கருவூர் பொன்வானிகன்’ என்ற தொடரைக் கொண்டும் பொன் வாங்குகின்ற அல்லது விற்கின்ற வியாபாரிகள் பற்றிய செய்தியைத் தெளிவாக அறிய முடியும்” என்றார்.

தங்கத்தின் தரத்தை தமிழர்கள் துல்லியமாக கணக்கிட்டது எப்படி

தங்க மதிப்பீடு பற்றி கூறும் உத்திரமேரூர் கல்வெட்டு

சங்கரபாடியார்கள் என்பவர்கள் சக்கரத்தை பயன்படுத்தி செக்கில் எள், நிலக்கடலை, தேங்காய் முதலியவற்றை அரைத்து எண்ணெய் எடுத்த வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இவர்கள் எண்ணெய் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

தச்சுத் தொழில், நகைத் தொழில் செய்யும் இவர்கள் பொன் பரிசோதிக்கின்ற பணியையும் செய்துள்ளனர் என்ற கூடுதல் தகவலையும் விளக்கினார் முனைவர் பன்னீர்செல்வம்.

மதுராந்தகம் அருகே உத்திரமேரூரில் உள்ள முதலாம் பராந்தக சோழரின் 15ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில், “உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் உள்ள சபையார்களிடம் வியாபாரிகள் விற்பனை செய்த பொன்னின் (தங்கம்) உண்மைத்தன்மையைக் காண்பதற்காக பொன் மதிப்பீடு (நகை மதிப்பீடு) செய்வதற்காகச் செய்துள்ள விருத்தியரும் (முதியவர்கள்), குழந்தைகள் அல்லாதவர்களும், வரி செலுத்துகின்ற குடும்பத்தில் உள்ளவர்களில் பொன் பரிசோதிப்பதற்குத் தகுதி உடையவரை நோக்கி மாட வீதியார்கள் கூடியிருந்து குடவோலை எழுதிப் புகவிட்டு, தங்களது சேரியில் உள்ள நான்கு பேர்களை, தகுதியின் அடிப்படையில் சேனையர்களின் இரண்டு பேரையும் சங்கரபாடியாரில் மூன்று பேரையும் தேர்ந்தெடுத்துள்ளதைக் கல்வெட்டு தெளிவாக உணர்த்துகிறது.”

கல்லில் உரைத்துப் பார்க்காமல் தங்கத்தை தரம் பார்க்கும் திறன்

முனைவர் க.பன்னீர்செல்வம்.
படக்குறிப்பு, இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் க.பன்னீர்செல்வம்.

தற்போது தங்கத்தின் தரத்தைப் பரிசோதிக்க ஹால்மார்க் போன்ற பல்வேறு தர நிர்ணய முறைகள் பயன்படுகின்றன.

ஆனால் சோழர்கள் காலத்தில் தங்கத்தை கண்ணால் பார்த்தும், கைகளால் எடுத்துப் பார்த்தும் அதன் தரத்தை துல்லியமாக கண்டுபிடிக்கும் திறனாளிகள் இருந்துள்ளனர். அது பற்றிய கல்வெட்டு பதிவும் உத்திரமேரூரில் உள்ளது எனக் கூறி பன்னீர்செல்வம் அதன் விளக்கத்தையும் விரிவாகக் கூறினார்.

“மேலும் இவர்கள் மக்களுக்கு மதிப்பீடு செய்து நல்ல தங்கத்தை அடையாளம் காட்டுபவர்களாகவும், உரைக்கல்லில் உரைக்காமல் பொன்னின் தரத்தை அறிந்திருக்கும் அறிவுடையவர்களாக இருக்க வேண்டும். மேலும் அன்றைக்கு உரைத்த மெழுகை ஏரி வாரிய பெருமக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.

அதாவது, தங்க நகைகள் செய்யும் போது மெழுகை வைத்து அச்சு வார்ப்பார்கள். அதற்கு பயன்படும் பொருள் மெழுகு.அதில் தங்க நகை துகள் ஒட்டிக் கொண்டிருக்கும் அதைத் தூய்மைப்படுத்தி காண்பிப்பார்கள்.

இத்துடன் மூன்று மாதங்கள் போன பிறகு சம்வச்சாரிய பெருமக்களிடம் (ஆண்டு வாரியம்) சென்று தாங்கள் செய்து கொடுத்துள்ள சாசனப்படி பிழைப்பதற்கு எடுக்காமலும், பசித்தாலும் இதிலிருந்து எடுக்காமலும் வாழ்வோம் என்று சொல்லி உறுதி கொடுத்துள்ளதைத் தெரிவிக்கின்றது.

மேலும் சங்கரபாடியார்கள் என்பவர்கள் பொன்னின் தரம் பார்க்கின்ற பணியைத் தெரிந்தவர்கள்” என்று கல்வெட்டில் உள்ளதாகத் தெரிவித்தார்.

சோழர் ஆட்சியில் எந்தக் கருவியும் இன்றியே தங்கத்தின் தரம் அளக்கப்பட்டதன் பின்னணி
படக்குறிப்பு, சோழர்கள் காலத்தில் தங்கத்தைக் கண்ணால் பார்த்தும், கைகளால் எடுத்துப் பார்த்தும் அதன் தரத்தைக் கூறும் திறனாளிகள் இருந்துள்ளனர் என கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

பொன் தானம் வழங்கிய சங்கரபாடியார்கள்

மேலும் இவர்கள் கோவில்களுக்கு பொன் தானமும் வழங்கியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் உள்ள முதலாம் பரந்தக சோழனின் 15ஆம் ஆட்சி ஆண்டு மற்றும் 19ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டுகளில் முறையே சங்கரபாடியார்கள் விளக்கு ஏற்றுவதற்கு பொன் தானம் கொடுத்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் “அக்காலத்தில் தங்க நகைகளை அரசர்கள் மட்டுமல்லாது சாமானிய மக்களும் பயன்படுத்தி உள்ளதை கோவிலில் பல இடங்களில் காணப்படும் சிற்பங்களை வைத்து நாம் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், அவர்கள் வணங்கும் கடவுளுக்கும் அணிகலன்கள் அணிவித்து மகிழ்ந்தார்கள். அதனால்தான் கோவில்களுக்கு நிலதானங்களுடன் பொன் தானமும் வழங்கியுள்ளனர். இது பல்வேறு கல்வெட்டுகள் மூலம் நமக்குத் தெரிய வந்துள்ளன,” என்று விளக்கினார் முனைவர் பன்னீர்செல்வம்.

கோவில் சிற்பங்களில் கழுத்தில் செயின் டாலர்கள் போன்ற உருவங்கள் உள்ளதையும் நாம் பெரும்பாலான கோவில்களில் காண முடியும். அதேபோல் நடன மங்கைகள் மன்னர்களின் ஓவியங்களிலும் கழுத்து காது மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் நகைகள் இருப்பதைப் பார்க்கலாம். சிதம்பரம் காஞ்சிபுரம் தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் அணிகலன்கள் அணிந்த உருவ ஓவியங்கள் காணப்படுவதும் இதற்கு ஒரு சான்று.

ஆபரண வணிகம்

சோழர் ஆட்சியில் எந்தக் கருவியும் இன்றியே தங்கத்தின் தரம் அளக்கப்பட்டதன் பின்னணி
படக்குறிப்பு, தங்க நகைகளை அரசர்கள் மட்டுமல்லாது சாமானிய மக்களும் பயன்படுத்தி உள்ளதை கோவிலில் பல இடங்களில் காணப்படும் சிற்பங்களை வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் பொன் வணிகர்கள் என்பவர்கள் தங்கத்தை விற்கும் வணிகக் குழு அமைத்து அதன் மூலம் வணிகத்தை எளிதாகச் செய்துள்ளனர்.

தங்க வணிகர்களின் குழுவினர் உள்நாட்டு வணிகத்திலும் வெளிநாட்டு வணிகத்திலும் சிறந்து விளங்கியுள்ளனர். இவர்கள் தங்கத்தைப் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் விவரித்தார்.

“மக்களின் பயன்பாட்டிலும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டிலும் பொன் அதாவது தங்கம் முதன்மைத்தன்மை கொண்டதாக இருந்தது.

இந்த பொன் வணிகக் குழுவில் பொற்கொல்லர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் பல்வகை வடிவில் அணிகலன்களைச் செய்யும் திறனுடையவர்கள்,” என்றும் கூறினார்.

வாரியங்களின் செயல்பாடுகள்

பழங்கால கல்வெட்டுகளின்படி, சோழர்கள் காலத்தில் பல்வகை வாரியங்கள் அமைக்கப்பட்டு மக்களின் தேவைகளை அறிந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக சோழர் காலத்தில் ஊராட்சி நடத்தி வந்த சபைகளுக்குப் பல்வேறு கடமைகள் இருந்தன.

அவற்றை நிறைவேற்றுவதற்குத் தனித்தனிக் கழகங்கள் அமைக்கப்பட்டன. அக்கழகங்கள் வாரியம் என்று அழைக்கப்பட்டன. சம்வத்சர வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம் எனப் பல வாரியங்கள் இருந்தன.

  • அறங்களை ஏற்று நடத்தல், அற நிலையங்களைக் கண்காணித்தல், ஊர் மக்கள் கொண்டு வந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு கூறுதல் போன்றவை சம்வத்சர வாரியத்தின் கடமைகள்.
  • ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாத்தலும், விளைநிலங்களுக்கு வேண்டிய நீரை முறையாகப் பாய்ச்சுதலும் ஏரிவாரித்தின் கடமைகள்.
  • விளைநிலங்கள், புறம்போக்கு நிலங்கள், தோட்டங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்வது தோட்ட வாரியத்தின் கடமை.
  • ஊரார் செலுத்த வேண்டிய நில வரியையும், பிற வரிகளையும் வசூலித்து அரசுக்கு ஆண்டுதோறும் அனுப்பி வைக்க வேண்டியது பஞ்சவார வாரியத்தின் கடமை.
  • பொன்னை தரம் காண்பதும், பொன் நாணயங்களை ஆராய்வதும் பொன் வாரியத்தின் கடமைகள்.

பொன் வாரியத்தின் கடமைகள் என்ன?

சோழர் ஆட்சியில் எந்தக் கருவியும் இன்றியே தங்கத்தின் தரம் அளக்கப்பட்டதன் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் க.பன்னீர்செல்வம் கூறுவதன்படி, “பொன்னை தரம் காண்பதும், பொன் நாணயங்களை ஆராய்வதும் பொன் வாரியத்தின் கடமைகள். மேலும் கோவிலில் இருக்கும் அணிகலன்கள், நகைகள் குறித்த எண்ணிக்கை விவரங்களைக் குறித்து வைப்பதும் இவர்களின் பணியாக இருந்தது.”

இந்த வாரியங்கள் மட்டுமின்றி “தடிவழி வாரியம், கழனி வாரியம், கணக்கு வாரியம் என்பன போன்ற வேறு பல வாரியங்களும் இருந்தன.

மேலே குறிப்பிட்ட வாரியங்களுக்கான உறுப்பினர்கள் பிற்காலச் சோழர் காலத்தில் ஒவ்வோர் ஊரிலும் குடவோலை என்னும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,” என்றும் கூறினார்.

தங்கத்தின் தரத்தை தமிழர்கள் துல்லியமாக கணக்கிட்டது எப்படி

பட மூலாதாரம், Getty Images

தற்காலத்தில் தங்க நகைகளின் தரத்தை நிர்ணயம் செய்திட அந்த நகையில் ஹால்மார்க் முத்திரை பயன்படுத்தப்படுகிறது. முக்கோண வடிவில் பயன்படுத்தப்படும் இந்த முத்திரையானது அதன் கீழ் பகுதியில் தற்போது 6 இலக்க நியூமரிக் எண்கள் பயன்படுத்தப்படுவதாக தங்க நகை மதிப்பீட்டுப் பணியைச் செய்து வரும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கே.ஆர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதன்மூலம் “அந்த நகையின் மதிப்பை எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அந்த ஆறு இலக்க நியூமரிக் எண்களை வலைதளத்தின் மூலமாகப் பதிவு செய்து அது எந்தக் கடையில் வாங்கியது. அதன் தரம் எவ்வளவு என்பதை எளிதில் கண்டறிய முடியும்,” என்று தெரிவித்தார்.

ஆனால் அக்காலத்தில் இதுபோன்ற முறைகள் இல்லை என்ற போதிலும் மிகச் சரியாகவே தரமான தங்க நகைகளைச் செய்து நேர்த்தியாக அணிந்து வந்தனர் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.