சென்னையிலிருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம் - கோடையை குளிர்ச்சியாக்கும் ஐந்து அருவிகள்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. 40 டிகிரி செல்சியஸை கடந்து, வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் தலைநகரம் தகிக்கிறது. அருவி, அதை சுற்றி ஓடை, குட்டைகள் என நீர்நிலைகள் சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா?

ஆனால், பல்வேறு சூழல்களால் ஒருநாளை தாண்டி உங்களால் விடுப்பும் எடுக்க முடியாதா? ஒரே நாளில் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று திரும்ப வேண்டுமா? சென்னையை சுற்றி சுமார் 100-150 கி.மீ. தொலைவில் இருக்கக்கூடிய நீர்வீழ்ச்சிகளின் பட்டியல் இதோ.

தடா அருவி

சென்னையிலிருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம் - கோடையை குளிர்ச்சியாக்கும் ஐந்து அருவிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சென்னை அருகேயுள்ள அருவி என்றாலே அந்த பட்டியலில் முதலிடம் தடா அருவிக்குத்தான். சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த தடா அருவி. சென்னையிலிருந்து தூரம் குறைவு என்றாலும் இந்த அருவி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உள்ளூரில் உப்பலமடுகு அருவி என இது அழைக்கப்படுகிறது.

சென்னையின் புழல், கும்மிடிப்பூண்டி வழியே தடா செல்லலாம். எல்லாவித போக்குவரத்து மூலமாகவும் தடாவுக்கு செல்லலாம். கார், பைக்கில் சென்றால் தடா நீர்வீழ்ச்சியின் நுழைவுவாயில் வரை செல்லலாம். பேருந்து என்றால் சென்னை கோயம்பேட்டில் இருந்து தடா வரை செல்லும் பேருந்துகளும் உள்ளன. ரயிலில் செல்ல வேண்டுமென்றால் சூலூர்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் தடாவுக்கு செல்லலாம். பொதுப் போக்குவரத்தில் செல்பவர்கள் தடா வரை சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் நுழைவு வாயிலுக்கு செல்ல வேண்டும்.

நுழைவுவாயிலில் உங்களுக்கும் உங்களின் வாகனத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அங்கிருந்து நடந்துதான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். மலைப்பாங்கான பகுதி என்பதால் டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற இடம். அதனால், டிரெக்கிங் செல்வதற்கு தகுந்த ஷூ எடுத்துச்செல்ல வேண்டும். சுமார் 10 கி.மீ தூரம் வரை டிரெக்கிங் சென்றுதான் தடா அருவியை அடைய முடியும். அதனால் சற்று கடினமான பயணமாகத்தான் இது இருக்கும். நடக்கும் வேகத்தைப் பொருத்து 2 மணிநேரமாவது ஆகும்.

முதியவர்கள், குழந்தைகள் தடா அருவி வரை செல்வது கடினமானதுதான் என்றாலும் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகள், குட்டைகளை அவர்கள் கண்டுகளிக்கலாம். எனவே, குடும்பத்துடன் இங்கு செல்லலாம். கரடுமுரடான பாதைகளும் பாறைகளும் இருக்கும் என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். நீச்சல், டிரெக்கிங் பிடிக்கும் என்பவர்கள் இங்கு நிச்சயம் செல்லலாம்.

கைலாசகோனா அருவி

சென்னையிலிருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம் - கோடையை குளிர்ச்சியாக்கும் ஐந்து அருவிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கைலாசகோனா அருவியும் சித்தூர் மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 92 கி.மீ. தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. திருப்பதிக்கு அருகிலுள்ள நகரி மலைகளின் பள்ளத்தாக்கில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து செல்பவர்கள் அம்பத்தூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வழியாக நாகலாபுரம் என்ற கிராமத்தை அடையலாம். நாகலாபுரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கைலாசகோனா நீர்வீழ்ச்சி. அருவி வரை செல்வதற்கான பொதுப் போக்குவரத்து இல்லை என்பதால், பைக் அல்லது காரில் செல்வது சிறந்தது.

கைலாசகோனாவில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பிரதான நீர்வீழ்ச்சி 40 அடி உயரம் கொண்டதாகும்.

அந்த நீர்வீழ்ச்சிக்கு முன்பாக கைலாசநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த முதல் நீர்வீழ்ச்சி வரை குடும்பத்துடன் செல்லலாம். ஆனால், அதனைக் கடந்து இரண்டாவது நீர்வீழ்ச்சி, மூன்றாவது நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது வழியில் மிகவும் ஏற்ற-இறக்கமான பாறைகள் நிறைந்திருப்பதாலும் சரியான பாதை இல்லாததாலும் நிச்சயம் அங்கு செல்வது எல்லோருக்கும் ஏற்றதல்ல.

டிரெக்கிங்கில் அனுபவம் உள்ளவர்கள் அந்த நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லலாம். அங்கு மலை மேலே நின்று பார்த்தால் சிறப்பான இயற்கை காட்சியை ரசிக்கலாம்.

தலகோனா அருவி

சென்னையிலிருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம் - கோடையை குளிர்ச்சியாக்கும் ஐந்து அருவிகள்

பட மூலாதாரம், aptourism

படக்குறிப்பு, தலகோனா அருவி

சென்னையிலிருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் தலகோனா அருவி அமைந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ளது. சுமார் 270 அடி உயரத்தில் உள்ள இந்த தலகோனா அருவி, ஆந்திர மாநிலத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். சேசாசலத்தின் மலைப்பாங்கான அடர்ந்த காடுகளுக்கு நடுவே தலகோனாவுக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது.

இந்த அருவிக்கு செல்லும் வழியில் மயில்களை காண முடியும். நீங்கள் சொந்த வாகனங்களில் செல்பவராக இருந்தால், மயில்களுக்கு ஆபத்து நேராமல் வாகனங்களை இயக்குவது அவசியம்.

நுழைவுவாயிலில் இருந்து பார்க்கிங் வரை செல்ல சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கும். அருவிக்கு செல்லும் ஆரம்பப் புள்ளியில் அருவியிலிருந்து விழும் நீர் தேங்கி நீச்சல் குளம் போல காட்சியளிக்கும். அங்கிருந்து படிக்கட்டுகள், சிமெண்ட் பாதையைக் கடந்து செல்ல வேண்டும். நடப்பதற்கு சிரமம் பார்க்காமல் இந்த அருவிக்கு சென்றால், மிக உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியை ரசிக்க முடியும். இயற்கை விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த இடம் விருந்தாக அமையும்.

சதாசிவ அருவி

சென்னை - 5 அருவிகள்

பட மூலாதாரம், Getty Images

சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து அம்பத்தூர், திருவள்ளூர், நகரி, புத்தூர், தடுகு வாயிலாக வேணுகோபாலபுரத்தை அடைய வேண்டும். அங்கிருந்து செம்மண் நிறைந்த சாலையில் செல்ல வேண்டும். இங்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்வது கடினம் என்பதால் பைக்கில் செல்வது சிறப்பானது. இந்த சாலையில் பைக்கில் செல்லும்போது ஒருபுறத்தில் உள்ள வளைவான மலைகளை கண்டு ரசிக்க முடியும். நக்லேரு எனும் பகுதிதான் அந்த மலையின் அடிவாரம். அங்கிருந்து டிரெக்கிங் சென்றுதான் நீர்வீழ்ச்சியை அடைய முடியும்.

வழியெங்கும் உள்ள சிறு பாறைகளில் உள்ள அம்புக்குறிகளை பின் தொடர்ந்தால், அருவியை சென்றடையலாம். செல்லும் வழியில் சில சிறிய கோவில்களும் உள்ளன. வன விநாயகர், ஆகாய லிங்கேஷ்வரர் ஆகிய மிகச்சிறிய கோவில்களை கடந்து செல்ல வேண்டும். இங்கு இரண்டு அருவிகள் உள்ளன. அவற்றை ஐயாவாரி, அம்மாவாரி அருவிகள் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். அருவிகளுக்கு அருகிலேயே சதாசிவேஸ்வரா ஆலயமும் உள்ளது.

மலை மேலே உணவு உள்ளிட்டவை கிடைக்காது என்பதால், நிச்சயம் நீங்கள் முன்னதாகவே அவற்றை தயார் செய்து எடுத்து வரவேண்டும். அருவிகளை கடந்து கோவில்கள் இருப்பதால், அவற்றை தரிசிக்க நினைப்பவர்களும் இங்கு செல்லலாம். அருவி போன்ற இடங்களுக்கு அதிகாலையிலேயே சென்றால் மாலைக்குள் மீண்டும் திரும்புவதற்கு சரியாக இருக்கும்.

ஆரே அருவி

சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் ஆரே அருவி அமைந்துள்ளது. தடா உள்ளிட்ட அருவிகளுக்கு சென்றவர்கள் புதிதாக அருவிகளுக்கு செல்ல வேண்டும் என விரும்பினால் அவர்களுக்கு ஆரே அருவி பொருத்தமானதாக இருக்கும். இந்த அருவியின் உண்மையான பெயர் சுவாமி சித்தேஸ்வரா கோனா அருவி. ஆனால், ஆரே என்ற இடத்தில் இருப்பதால் இதை ஆரே அருவி என்று அழைக்கின்றனர். ஐந்து அருவிகள் இங்குள்ளன. அதில் ஒரு அருவியில் கீழே உள்ள தடாகத்தின் ஆழம் குறைவு என்பதால், குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் இந்த அருவிக்கு செல்லலாம். கோடைக்காலத்திற்கு செல்ல மிகவும் பொருத்தமானது இந்த அருவி.

சென்னை - 5 அருவிகள்

பட மூலாதாரம், Getty Images

மேற்குறிப்பிட்ட அருவிகளில் பல அருவிகளுக்கு செல்லும் வழிகளில் குரங்குகள் பல தென்படும். அதனால், அவற்றிடமிருந்து நம் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பலவும் வனம், மலைப்பகுதி என்பதால், அங்கு வாழும் மற்ற விலங்குகளுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படுத்தாமலும் குப்பைகள் போன்றவற்றால் அப்பகுதிகளை அசுத்தமாக்காமலும் சுற்றுலாப் பயணிகள் இருக்க வேண்டும்.