உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன.

மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 – 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ.

சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன?

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம்.

ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது.

அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும்.

நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ.

அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும்.

நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease)

நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

அறிகுறிகள்

  • குமட்டல் மற்றும் வாந்தி
  • பசியின்மை
  • கால் மற்றும் கணுக்கால் வீக்கம்
  • மூச்சுத்திணறல்
  • தூங்குவதில் சிரமம்
  • அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்
சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது.

சிறுநீரகத்தில் கல்

சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

அறிகுறிகள்

  • சிறுநீர் கழிக்கும் போது வலி
  • சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
  • சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல்
  • கல் உள்ள இடத்தில் வலி

நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy)

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

  • கால்கள் வீக்கம்
  • நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்
  • உடல் சோர்வு
  • எடை குறைதல்
  • உடல் அரிப்பு
  • குமட்டல் மற்றும் வாந்தி

ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis)

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம்

சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது.

அறிகுறிகள்

  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தலை சுற்றல்
  • உடல் மந்தம்
  • தலை வலி
  • கழுத்து வலி

சிறுநீர் பாதைத் தொற்று

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது.

இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்

  • முதுகுப் பக்கத்தில் வலி
  • காய்ச்சல்
  • சிறுநீர் கழிக்கும்போது வலி
  • அடிவயிற்றில் வலி
  • சிறுநீரில் ரத்தம்
  • குமட்டல் மற்றும் வாந்தி

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது.

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும்.

அறிகுறிகள்

  • மேல்வயிற்றில் வலி
  • அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி
  • முதுகில் வலி
  • சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
  • சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்

ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy)

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது.

ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும்

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார்.

சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும்.

அறிகுறிகள்

  • பசியின்மை
  • வாந்தி
  • கடுமையான உடல் சோர்வு
  • உடல் வீக்கம்
  • தூக்கமின்மை
  • உப்பசம்