பேட்டரிகளுக்காக உலகமெங்கும் சீனா நடத்தும் கனிம வேட்டை; அதிகரிக்கும் பதற்றம் – பிபிசி கள ஆய்வு

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிலியின் அடகாமா பாலைவனத்தில் லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இது “லித்தியம் முக்கோணத்தில்” உள்ளது.
  • எழுதியவர், குளோபல் சைனா யூனிட்
  • பதவி, பிபிசி நியூஸ்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு அர்ஜென்டினாவில் தான் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே கோபமான முழக்கங்கள் எழுப்பப்படுவதைக் கேட்டபடி நள்ளிரவில் ஐ கிங் கண் விழித்தார்.

அவர் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார். அர்ஜென்டினா தொழிலாளர்கள் வளாகத்தைச் சுற்றி வளைப்பதையும், எரியும் டயர்களால் நுழைவாயிலைத் தடுப்பதையும் அவர் கண்டார்.

“எனக்கு பயமாக இருந்தது. ஏனென்றால் நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதை என்னால் பார்க்க முடிந்தது,” என்கிறார் ஆண்டிஸ் மலைகளில் உள்ள உப்பு அடுக்குகளில் இருந்து, பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்தை பிரித்தெடுக்கும் சீன நிறுவனத்தில் பணிபுரியும் ஐ கிங்.

பல அர்ஜென்டினா தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த காரணத்தால் நிகழ்ந்த இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம், சீன வணிகங்கள் மற்றும் சீனாவை முதலீட்டிற்கு அழைக்கும் சமூகங்களுக்கு இடையே வளர்ந்து வரும் பதற்றத்தின் பல நிகழ்வுகளில் ஒன்று. சீனா ஏற்கெனவே பசுமை பொருளாதாரத்திற்கு தேவைப்படும் முக்கியக் கனிமங்களை சேகரிப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறது. சுரங்க நடவடிக்கைகளிலும் தன்னை விரிவுபடுத்தி வருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீன நிறுவனம் உலகின் பெரும்பாலான லித்தியம் இருப்புகளைக் கொண்ட அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலியின் “லித்தியம் முக்கோணத்தில்” லித்தியம் பிரித்தெடுக்கும் திட்டத்தில் முதல் பங்குகளை வாங்கியது.

உள்ளூர் சுரங்க நடவடிக்கைகளில் இன்னும் பல சீன முதலீடுகள் தொடர்ந்தன என்று சுரங்கத்துறை வெளியீடுகள், பெருநிறுவன, அரசு மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களின் பங்குகளின் அடிப்படையில் பிபிசி அதைக் கணக்கிட்டபோது. சீன நிறுவனங்கள் தற்போது கனிமத்தை உற்பத்தி செய்யும் அல்லது கட்டுமானத்தில் உள்ள திட்டங்களில் 33% லித்தியத்தை கட்டுப்படுத்துகின்றன.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்காவின் “லித்தியம் முக்கோணம்” உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பெரிய அளவிலான பசுமைக் கனிமங்களைக் கொண்டுள்ளது.

ஆனால் சீன வணிகங்கள் விரிவடைந்த நிலையில், மற்ற சர்வதேச சுரங்க நிறுவனங்களின் மீது அடிக்கடி சுமத்தப்படும் அதே முறைகேடு குற்றச்சாட்டுகளை அவையும் எதிர்கொண்டன.

டயர் எரிப்பு போராட்டம் ஐ கிங்கிற்கு ஓர் அதிர்ச்சி தரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர் அர்ஜென்டினாவில் ஓர் அமைதியான வாழ்க்கையை எதிர்பார்த்தார். ஆனால் ஸ்பானிய மொழி தெரிந்த காரணமாக அவர் மத்தியஸ்தத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.

“இது எளிதாக இருக்கவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

”தொழிலாளர்கள் சோம்பேறிகள், தொழிற்சங்கத்தை அதிகம் நம்பியிருக்கிறார்கள் என்று நிர்வாகம் நினைக்கிறது, சீனர்கள் தங்களைச் சுரண்டுவதற்காக மட்டுமே இங்கு இருக்கிறார்கள் என்று உள்ளூர்வாசிகள் நினைக்கிறார்கள். இதுபோன்ற எண்ணங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டியிருந்தது.”

பிபிசி குளோபல் சீனா யூனிட் உலகெங்கிலும் சீன நிறுவனங்களின் பங்கு உள்ள குறைந்தது 62 சுரங்கத் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. லித்தியம் அல்லது பசுமை தொழில்நுட்பங்களுக்கு முக்கியமான மூன்று தாதுக்களான கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசில் ஏதாவது ஒன்றை பிரித்தெடுக்க அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தத் தொழில்கள் சீனாவின் உயர் முன்னுரிமைகளாக உள்ளன. உலகில் இந்தக் கனிமங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக இவற்றில் சில திட்டங்கள் உள்ளன.

சாதம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, லித்தியம் மற்றும் கோபால்ட்டை சுத்திகரிப்பதில் சீனா நீண்ட காலமாக முன்னணியில் உள்ளது. 2022இல் உலக விநியோகத்தில் முறையே 72% மற்றும் 68% பங்குகளை அது கொண்டிருத்தது.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உற்பத்தி செய்யவும், காற்றாலை விசையாழிகள் உற்பத்தித் திறனில் 60% அளவை எட்டவும், சோலார் பேனல் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் 80% அளவை எட்டவும், லித்தியம், மற்றும் பிற முக்கியமான கனிமங்களைச் செம்மைப்படுத்தும் அதன் திறன் உதவியது.

இந்தத் துறையில் சீனாவின் பங்கு இந்தப் பொருட்களை மலிவானதாகவும், உலகளவில் எளிதாக கிடைக்கக் கூடியதாகவும் மாற்றியுள்ளது.

ஆனால் பசுமைப் பொருளாதாரத்திற்குத் தேவையான கனிமங்களைத் தோண்டி எடுப்பது மற்றும் பதப்படுத்துவது என்பது சீனாவுக்கானது மட்டுமல்ல. 2050ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை நிகர பூஜ்ஜியமாக ஆக்க வேண்டுமென்றால், அவற்றின் பயன்பாடு 2040க்குள் ஆறு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை சீன விநியோகங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான உத்திகளை உருவாக்கியுள்ளன.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

சீன நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு சுரங்க நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதால், இந்தத் திட்டங்களால் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

தன்னார்வ அமைப்பான, வணிகம் மற்றும் மனித உரிமைகள் வள மையம், இத்தகைய பிரச்னைகள் “சீன சுரங்க தொழிலுக்கு மட்டுமே உரியது அல்ல” என்று கூறுகிறது. ஆனால் கடந்த ஆண்டு அது சீன நிறுவனங்களுக்கு எதிராக 102 புகார்களை விவரிக்கும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. உள்ளூர் சமூகத்தின் மீது இழைக்கப்படும் உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம் மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் இதில் அடங்கும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் 2021 மற்றும் 2022இல் செய்யப்பட்டவை. 2023இல் செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட அதிகப்படி குற்றச்சாட்டுகளை பிபிசி கணக்கிட்டது. தன்னார்வ அமைப்புகள் அல்லது ஊடகங்கள் இவை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

உலகின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கதைகளை எங்களிடம் சொன்னார்கள்.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

பட மூலாதாரம், BBC Byobe Malenga

படக்குறிப்பு, காங்கோ குடியரசில் உள்ள ருவாஷி சுரங்கத்திற்கு அருகில் தன்னார்வலர் கிறிஸ்டோஃப் கப்விடா வசிக்கிறார்

ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கில் உள்ள லுபும்பாஷியின் புறநகர்ப் பகுதியில் கிறிஸ்டோஃப் கப்விடா, 2011ஆம் ஆண்டு முதல் ஜின்சுவான் குழுமத்திற்குச் சொந்தமான ருவாஷி கோபால்ட் சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார்.

அவரது வீட்டு வாசலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திறந்தவெளி சுரங்கம், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பாறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். வெடிப்பு தொடங்குவதற்கு முன்பு ஒரு சைரன் சத்தம் கேட்கிறது. மக்கள் தாங்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை இந்த சைரன் அறிவுறுத்துகிறது.

“வெப்பநிலை என்னவாக இருந்தாலும், மழை அல்லது புயல் என்று எதுவாக இருந்தாலும், நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சுரங்கத்திற்கு அருகில் உள்ள தக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பிரசவித்த பெண்கள் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும், ஏனென்றால் வேறு எந்த இடமும் பாதுகாப்பானது அல்ல.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

பட மூலாதாரம், BBC Byobe Malenga

படக்குறிப்பு, ருவாஷி சுரங்கத்தின் எல்லையில் இருக்கும் கிராமம்

கடந்த 2017ஆம் ஆண்டில் டீனேஜ் பெண் கேட்டி கபாசோ, பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது பறந்து வந்த பாறையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் சில பாறைகள் உள்ளூர் வீடுகளின் சுவர்கள் மற்றும் கூரைகளில் துளைகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ருவாஷி சுரங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எலீசா கலாசா “அப்பகுதியில் ஒரு சிறுமி இருந்தார். அவர் அங்கு இருந்திருக்கக்கூடாது. அவர் பறந்து வந்த பாறையால் தாக்கப்பட்டார்,” என்று ஒப்புக் கொண்டார்.

அதன்பிறகு, “நாங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளோம். இப்போது நாங்கள் செய்யும் வெடிப்பு மூலம் பாறைகள் பறந்து செல்வதில்லை,” என்று அவர் கூறினார்.

இருப்பினும் பிபிசி, அந்த நிறுவனத்தின் செயலாக்க மேலாளரான பேட்ரிக் டிஷாண்டிடம் பேசியது. அவர் கூறியது வேறுவிதமாக இருந்தது. “நாங்கள் சுரங்க வேலை செய்கிறோம். வெடிமருந்துகளைப் பயன்படுத்துகிறோம். வெடிமருந்துகள் பாறைகளை பறக்கச் செய்யலாம். மக்கள் சுரங்கத்திற்கு மிக அருகில் வசிப்பதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம். அதனால் இதுபோன்ற பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன,” என்றார் அவர்.

இந்த நிறுவனம் 2006 மற்றும் 2012க்கு இடையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுரங்கத்தில் இருந்து தூரமாக இடம்பெயர்வதற்கு இழப்பீடு வழங்கியதாகவும் கலாசா கூறினார்.

இந்தோனீசியாவின் தொலைதூர ஓபி தீவில், லிகண்ட் ரிசோர்சஸ் & டெக்னாலஜி என்ற சீன நிறுவனம் மற்றும் இந்தோனீசிய சுரங்க நிறுவனமான ஹரிதா குழுவிற்கும் சொந்தமான சுரங்கம், கவாசி கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளை வேகமாக விழுங்கியுள்ளது.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

கிராம மக்கள் அரசு இழப்பீடுகளை ஏற்று வெளியேற வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர் என்று உள்ளூர் சுரங்க கண்காணிப்பாளர் ஜாதம் கூறுகிறார். வழங்கப்படும் தொகை சந்தை மதிப்பைக் காட்டிலும் குறைவாக இருப்பதாகக் கூறி டஜன் கணக்கான குடும்பங்கள் இடம் பெயர மறுத்துள்ளன. இதன் விளைவாக தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் அச்சுறுத்தப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

சுரங்கத்திற்கு வழி செய்யும் வகையில் பழங்கால காடுகள் வெட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இருந்த பழமையான கடல் சூழல் மாசுபடுத்தப்பட்டு, ஆறுகள் மற்றும் பெருங்கடல்கள் எவ்வாறு வண்டல்களால் நிரம்பியுள்ளன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஜாதம் கூறுகிறார்.

“ஆற்று நீரை இனி குடிக்க முடியாது. அது மிகவும் மாசுபட்டுள்ளது, பொதுவாக தெளிவான நீல நிறத்தில் இருக்கும் கடல், மழை பெய்யும் போது சிவப்பு நிறமாக மாறுகிறது,” என்கிறார் கவாசி கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் நூர் ஹயாடி.

சுரங்கத்தைப் பாதுகாப்பதற்காக இந்தோனீசிய துருப்புகள் தீவில் நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் பிபிசி அங்கு சென்றபோது அங்கு ராணுவ இருப்பைப் பார்க்க முடிந்தது. சுரங்கத்திற்கு எதிராகப் பேசும் மக்களை அச்சுறுத்தவும் தாக்கவும்கூட ராணுவ வீரர்களைப் பயன்படுத்தப்படுவதாக ஜாதம் கூறுகிறார்.

“சுரங்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக ராணுவம் உள்ளது. சமூகத்தின் நலனுக்காக அல்ல என்று மக்கள் நினைக்கிறார்கள்,” என்று நூர் கூறுகிறார்.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

மிரட்டல் குற்றச்சாட்டுகளை “நிரூபிக்க முடியாது” என்றும், “சுரங்கத்தைப் பாதுகாப்பதற்காக” படையினர் இருக்கின்றனர், “உள்ளூர் மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு” அல்ல என்றும் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சுரங்கத்தின் செயல்பாட்டிற்காக நடக்கும் கிராம மக்களின் இடமாற்றம்,”அமைதியான மற்றும் சுமூகமான முறையில்” காவல்துறையால் கண்காணிக்கப்படுவதாக ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தோனீசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் சுரங்கத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடிய கிராமவாசிகள் குழுவில் நூர் இருந்தார். ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை என்று உள்ளூர் அரசு பிரதிநிதி சம்சு அபுபக்கர், பிபிசியிடம் தெரிவித்தார்.

“ஹரிதா குழுமம் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு கடமைகளுக்கு இணங்கச் செயல்படுகிறது” என்ற அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

தங்கள் நிறுவனம் “நெறிமுறை வணிக நடைமுறைகள் மற்றும் உள்ளூர் சட்டங்களைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கிறது” என்றும், “எந்தவித எதிர்மறையான தாக்கங்களையும் நிவர்த்தி செய்வதற்கும் தணிப்பதற்கும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது,” என்றும் ஹரிதா குழுமம் எங்களிடம் தெரிவித்தது.

தான் பெரிய அளவிலான காடழிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தைக் கண்காணித்ததாகவும், தண்ணீரானது அரசின் தர நிர்ணயத்திற்கு ஏற்றபடி இருப்பதை சுதந்திரமான சோதனைகள் உறுதிப்படுத்தியதாகவும் அக்குழு கூறியது. வலுக்கட்டாயமான வெளியேற்றம் அல்லது நியாயமற்ற நில பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவில்லை என்றும் யாரையும் மிரட்டவில்லை என்றும் அது மேலும் கூறியது.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கவாசியில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளும், கடலும் தற்போது சிவப்பு நிறமாக மாறியுள்ளன

சிசிசிஎம்சி எனப்படும் சீனாவின் சுரங்க வர்த்தக அமைப்பு, ஓராண்டுக்கு முன்பு சீனாவுக்குச் சொந்தமான சுரங்கத் திட்டங்களுக்கு எதிரான புகார்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புகார் தீர்ப்பு நடைமுறையை அமைக்கத் தொடங்கியது. உள்ளூர் சமூகங்கள் அல்லது சிவில் சமூக அமைப்புகளுடன் தொடர்புகொள்வதற்கான “கலாசார மற்றும் மொழியியல் திறன் இரண்டும் நிறுவனத்திடம் இல்லை” என்று செய்தித் தொடர்பாளர் லீலியா லி கூறுகிறார்.

இருப்பினும், இந்த நடைமுறை இன்னும் முழுமையாகச் செயல்பட ஆரம்பிக்கவில்லை.

இதற்கிடையில், வெளிநாட்டு சுரங்க நடவடிக்கைகளில் சீனாவின் ஈடுபாடு அதிகரிக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இது ஒரு முக்கிய சந்தையைக் கட்டுப்படுத்தும் “புவிசார் அரசியல் நடவடிக்கை” மட்டுமல்ல, வணிகக் கண்ணோட்டத்திலும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஆம்பர் நிறுவனத்தின் ஆசிய திட்ட இயக்குநர் ஆதித்யா லோலா கூறுகிறார்.

“சீன நிறுவனங்களால் கையகப்படுத்துதல்கள் செய்யப்படுகின்றன, ஏனெனில், அவர்களுக்கு இது லாபம்,” என்று அவர் கூறுகிறார்.

இதன் விளைவாக சீனத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ள சுரங்கத் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுப்பப்படுவார்கள். மேலும் இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நல்ல பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றன.

காங்கோ குடியரசில் உள்ள சீனாவுக்கு சொந்தமான கோபால்ட் சுரங்கங்களில் 10 ஆண்டுகளாக பணியாற்றுகிறார் வாங் கேங். 48 வயதான அவர் நிறுவனத்தின் தங்குமித்தில் வசிக்கிறார் மற்றும் ஊழியர்களின் கேண்டீனில் சாப்பிடுகிறார். அவர் தினமும் 10 மணி நேரம் வேலை செய்கிறார். மாதத்தில் நான்கு நாட்கள் அவருக்கு விடுமுறை.

சீனாவின் கனிம வேட்டை: பேட்டரி உற்பத்திக்காக உலகமெங்கும் செல்லும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் சம்பாதிப்பதைவிட அதிகமாக சம்பாதிப்பதால், ஹூபே மாகாணத்தில் உள்ள தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். காங்கோ குடியரசில் தெளிவான வானம் மற்றும் வானுயர்ந்த காடுகளையும் அவர் அனுபவிக்கிறார்.

அவர் உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்களுடன் பிரெஞ்சு, ஸ்வாஹிலி மற்றும் ஆங்கிலம் கலந்த கலவையான மொழியில் பேசுகிறார். “வேலை தொடர்பான விஷயங்களைத் தவிர அவர்களுடன் அதிகம் பேசுவது இல்லை,” என்றார் அவர்.

தான் வாழும் நாட்டின் மொழியை சரளமாகப் பேசும் ஐ கிங் கூட, வேலைக்கு வெளியே அர்ஜென்டீன தொழிலாளர்களுடன் அதிகம் பேசுவதில்லை. அவர் தனது சக சீன ஊழியருடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். அவர்கள் பெரும்பாலும் தங்களைப் போன்ற மற்றவர்களுடன் மட்டுமே வேலைக்கு வெளியிலான பழக்கத்தை வைத்துக்கொள்கிறார்கள்.

லித்தியம் வெட்டப்பட்டு வாழ்க்கை “குளிர்ச்சியாக” இருக்கும் ஆண்டிஸ் மலை சிகரத்தில் உள்ள உப்பு அடுக்குகளைப் பார்வையிடுவது அவருக்கு பிடித்தமான ஒன்று.

“மலையேற்றத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகள் என்னை எப்போதும் தொந்தரவு செய்கின்றன. என்னால் தூங்கவும் சாப்பிடவும் முடியாது,” என்று அவர் கூறுகிறார். “ஆனால் நான் அங்கு செல்வதை மிகவும் ரசிக்கிறேன். ஏனென்றால் அங்கு விஷயங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் அலுவலக அரசியல் எதுவும் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

(ஐ கிங் மற்றும் வாங் கேங் இரண்டுமே புனைப்பெயர்கள்)

(கூடுதல் செய்தி சேகரிப்பு – எமிரி மேக்யூமெனு, பியாக் மேலிங்கா, லூசியன் கெஹோஸி)