தோனியை களத்தில் வைத்து சென்னையை திணறடித்த பஞ்சாப்

சிஎஸ்கே - ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவது கடினம் என்று கூறப்பட்ட வரலாறு மாறி வருகிறது. சிஎஸ்கே அணியின் பலவீனத்தைப் புரிந்து கொண்ட அணிகள் இந்த சீசனில் எளிதாக சொந்த மைதானத்தில் வீழ்த்தி வருகின்றன.

ஏற்கெனவே லக்னெள அணி சிஎஸ்கே அணியை தோற்கடித்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே-வை எளிதாக வென்றிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். சிஎஸ்கே அணியில் திறமையான பேட்டர்கள், அதிரடியான வீரர்கள் இருந்தும் பஞ்சாப் அணியை ஆட்டத்தின் எந்தச் சூழலிலும் முந்த முடியவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் வெற்றியால் அந்த அணிக்கு புள்ளிப்பட்டியலில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை என்றாலும், சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியை தொடர்ந்து 5 முறை வீழ்த்திய 2-ஆவது அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் பெற்றது. இதற்கு முன் 2018-19ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அந்த பெயரை பெற்றிருந்தது.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

பஞ்சாப் பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளதா?

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் அடிப்படையில் மைனஸ் 0.0.62 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்னும் 4 போட்டிகள் பஞ்சாப் அணிக்கு மீதம் இருப்பதால், அந்த 4 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனினும் வெற்றியால், இப்போதைக்கு ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படுவதை தாமதப்படுத்திக்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.

சிஎஸ்கே அணியுடன் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி விளையாடுகிறது. அந்த ஆட்டத்த்தில் ஒருவேளை பஞ்சாப் தோற்றாலே ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஏனென்றால், குறைந்தபட்சம் 16 புள்ளிகளுடன் இருந்தால்தான் ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்துக்கு மல்லுக்கட்ட முடியும், 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் செல்வது கடினமானதாக இந்த சீசனில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

பிளே ஆப் செல்வதில் சென்னைக்கு என்ன சிக்கல்?

சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 5 தோல்வி, 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 4-ஆவது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் லக்னெள அணியைவிட கூடுதலாக 0.627 வைத்துள்ளது. இருப்பினும் அடுத்து வரும் 4 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதில் பஞ்சாப் அணியுடன் மே-5ஆம் தேதி மீண்டும் சிஎஸ்கே மோதுகிறது.

இது தவிர்த்து குஜராத் (மே10), ராஜஸ்தான் (மே12), ஆர்சிபி(மே18) ஆகிய போட்டிகளும் சிஎஸ்கேவுக்கு உள்ளன. இதில் ராஜஸ்தான், குஜராத் அணிகளுடனான ஆட்டம் கடினமாக இருக்கும். ஏற்கெனவே ஆர்சிபி, குஜராத் அணிகளை முதல் ஆட்டங்களில் சிஎஸ்கே வென்றுள்ளது. ஆனால், ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் போட்டிகளில் இவ்விரு அணிகளும் நெருக்கடி கொடுத்தால், சிஎஸ்கே நிலை போராட்டமாக அமையும்.

சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே டேவன் கான்வே இல்லாதது தொடக்க ஆட்டத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசனை சிஎஸ்கே வாங்கியது. கடந்த போட்டியோடு வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானும் வங்கதேசம் செல்வதால் பந்துவீச்சில் பலவீனம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிதாக ஒரு பந்துவீச்சாளரை சேர்க்க இருக்கிறதா அல்லது இருக்கும் பந்துவீச்சாளர்களுடன் போட்டிகளை சிஎஸ்கே எதிர்கொள்ளப் போகிறதா என்பது கேள்வியாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் பந்துவீச்சில் வேரியேஷன்களை காண்பித்து பந்துவீசுவது முஸ்தபிசுர் ரஹ்மான் முன்னணியில் இருந்தார். அவரும் செல்வதால், தேஷ்பாண்டே, பதீராணா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் ஆகியோரை வைத்துதான் பந்துவீச வேண்டியதிருக்கும்.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

நேற்றைய போட்டியில் என்ன நடந்தது?

சிஎஸ்கே நிர்ணயித்த 163 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ(46), ரூஸோ(43) நல்ல அடித்தளம் அமைத்தனர். 2-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்துக் கொடுத்து வெற்றியை எளிதாக்கினர். குறைவான ரன்கள் என்பதால், விரைவாக ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று, ரன்ரேட்டில் தொய்வில்லாமல் பஞ்சாப் பேட்டர்கள் ஆட்டத்தைக் கொண்டு சென்றனர்.

சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க வாய்ப்பில்லாத வகையில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து நம்பிக்கை வளராத வகையில் பஞ்சாப் பேட்டர்கள் நேர்த்தியாக பேட் செய்தனர்.

பேர்ஸ்டோ, ரூஸோ ஆட்டமிழந்தபின் சஷாங் சிங், சாம் கரன் கூட்டணி ஆட்டத்தை வெற்றி பெறச் செய்தனர். சஷாங் சிங் ஒரு பவுண்டரி, சிக்ஸர் உள்பட 25 ரன்னிலும், சாம் கரன் 3பவுண்டரிகள் உள்பட 26 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

சென்னை வீரர்களை வீழ்த்திய பஞ்சாபின் சுழல்

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அந்த அணியில் இருக்கும் இரு சுழற்பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஹர்பிரி்த் பிரார், ராகுல் சஹர் இருவரும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர். இருவரின் பந்துவீச்சிலும் கெய்க்வாட் உள்ளிட்ட எந்த பேட்டராலும் பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை.

ஹர்பிரித் பிரார், ராகுல் சஹர் இருவரும் 8 ஓவர்கள் வீசி, 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சராசரியாக ஓவருக்கு 4 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இருவரும் தங்களின் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரைக் கூட சிஎஸ்கே பேட்டர்களை அடிக்க அனுமதிக்கவில்லை.

இதில் இரு திருப்புமுனையான விக்கெட்டுகளான ரஹானே, ஷிவம் துபேவை வெளியேற்றி 4 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்த ஹர்பிரித் பிரார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பிரார், சஹர் இருவரும் 8 ஓவர்கள் பந்துவீசி அந்த 8 ஓவர்களிலும் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவிடாமல் சிஎஸ்கே அணியின் ரன்ரேட்டை கட்டிப்போட்டனர்.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

தோனி களமிறங்கிய பிறகு என்ன நடந்தது?

வழக்கமாக தோனி களமிறங்கியதும் பெரிய ஷாட்களை அடித்து ரன்களைக் குவிப்பதுதான் இந்த சீசனில் வழக்கமாக இருக்கிறது. ஆனால் பஞ்சாப் வீரர்களிடம் அதி பெரிய அளவில் நடக்கவில்லை. அதுவும் ரன்கள் குவிக்கப்படவேண்டிய 19-ஆவது ஓவரில் தோனியை பேட் செய்ய வைத்தே, ரன்களைக் கட்டுப்படுத்தினர் பஞ்சாப் வீரர்கள்.

19-வது ஓவரை வீசிய ராகுல் சஹர் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து, மொயின் அலியின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த ஓவரில் 4 பந்துகளைச் சந்தித்த தோனியால் 2 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனினும் கடைசி ஓவரில் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கக்கூடும்.

பவர் பிளேயில் ஓரளவு சிறப்பாகத் தொடங்கிய சிஎஸ்கே, 7-ஆவது ஓவர் தொடங்கி, 15-ஆவது ஓவர்கள் வரை மிக மெதுவாகவே ஆடியது. இந்த 8 ஓவர்களில் ஷிவம் துபே, ஜடேஜா, ரஹானே, ஆகியோர் விக்கெட்டுகளையும் சிஎஸ்கே இழந்தது.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே தோல்விக்கு மைதானம் காரணமா?

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நிலவிய பனிப்பொழிவு, ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் மாறியதும், சிஎஸ்கே பேட்டர்களுக்கு சவாலாக அமைந்திருந்தது.

இந்த சீசனில் ரஹானே தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். இருப்பினும் தொடக்க ஆட்டத்துக்கு வேறுவீரர் இல்லை என்பதால், அவருக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பளித்து வருகிறது சிஎஸ்கே நிர்வாகம். இந்த ஆட்டத்தில்கூட பவர்ப்ளேயில் 5 பவுண்டரிகள் உள்பட 29 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரஹானே-கெய்க்வாட் சேர்த்த 64 ரன்கள்தான் பெரிய பார்ட்னர்ஷிப். அதன்பின் வந்த எந்த பேட்டரும் பெரிதாக கெய்க்வாட்டுடன் சேர்ந்து ரன்களைச் சேர்க்கவில்லை.

குறிப்பாக ஷிவம் துபே(0), ஜடேஜா(2) இருவரும் 6 ரன்கள் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே அணியை பெரிய இடரில் தள்ளியது. அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே ரன்ரேட்டை தோளில் சுமக்கும் பேட்டர் துபே ஆட்டமிழந்தது சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. ஆல்ரவுண்டர் எனக் கூறப்படும் ஜடேஜாவும் வெளியேறியது சிஎஸ்கேயின் நம்பிக்கையை உடைத்தது.

ஐபிஎல் ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட உத்தரப் பிரதேச பேட்டர் சமீர் ரிஸ்வி பேட்டிங் மீது நேற்று பெரிய கேள்வி எழுந்தது. இளம் வீரர், பெரிய ஹிட்டர், பவர் ஹிட்டர் என்றெல்லாம் பாராட்டப்பட்ட சமீர் ரிஸ்வியை ஏலத்தில் சிஎஸ்கே எடுத்து, அதனால் எந்தப் பலனையும் பெறவில்லை.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

இந்த சீசனில் ரிஸ்வி தனது ஆட்டத்திறமையை நிரூபிக்க இந்த ஆட்டம் சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால், அவர் 23 பந்துகளில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிலும் தான் சந்தித்த 23 பந்துகளில் 22-வது பந்தில்தான் தேர்டுமேன் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார். அதுவரை 21 பந்துகள்வரை ஒருபவுண்டரிகூட ரிஸ்வி அடிக்கவில்லை.

ரஹானே களத்தில் இருந்தவரை அடிக்கப்பட்ட 5 பவுண்டரிகள்தான் சிஎஸ்கே கடைசியாக அடித்தது. அதன்பின் 55 பந்துகளாக ஒரு பவுண்டரிகூட சிஎஸ்கே அணி அடிக்கவில்லை. கேப்டன் கெய்க்வாட், துபே, ஜடேஜா, ரிஸ்வி ஆகியோர் களத்தில் வந்து சென்றபோதிலும் 55 பந்துகளாக பவுண்டரி இல்லை. ஐபிஎல் சீசனில் பவுண்டரி அடிக்காமல் நீண்டநேரம் இருந்த ஆட்டமாக இருந்தது, இதற்கு முன் குஜராத்-டெல்லி அணிகளுக்கு இடையே 38 பந்துகளாக பவுண்டரி அடிக்காமல் இருந்ததை சிஎஸ்கே முறியடித்துவிட்டது.

கடைசியில் களமிறங்கிய மொயின் அலி(15), தோனி(15) ஆகியோரால்தான் 150 ரன்களை சிஎஸ்கே கடந்தது.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

தோல்வி பற்றி கெய்க்வாட் கூறியது என்ன?

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம் இது தோல்விக்கு பிரதான காரணம். நாங்கள் பேட் செய்தபோது, ஆடுகளம் சிறப்பாக இல்லை, பனிப்பொழிவு இருந்தது. இந்த ஆடுகளத்தில் அதிகமாக பயிற்சி எடுத்துள்ளேன், வென்றுள்ளேன். ஆனால், இந்த ஆட்டத்தில் என்னால் வெல்ல முடியவில்லை.” என்றார்.

“டாஸ் போடும்போது அழுத்தம் இருந்தது, பனிப்பொழிவு ஆட்டத்தை இன்னும் கடினப்படுத்தியது. கடந்த ஆட்டத்தில் நாங்கள் சன்ரைசர்ஸ் அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இதே மைதானத்தில்தான் வென்றோம் என்பது வியப்பாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த 2 போட்டிகளாக நாங்கள் 200 ரன்களுக்கு மேல்சேர்க்க முயன்றோம். இந்த முறை விக்கெட் கடினமாக இருந்தது. பதிரணா, தேஷ்பாண்டே இல்லாதது முக்கிய குறைபாடு. இரு பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினம். இது தவிர பனிப்பொழிவும் சேர்ந்து கொண்டது. எங்களால் பெரிதாக முயற்சிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார் கெய்க்வாட்.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

முதல் முறையாக ஆட்டமிழந்த தோனி

இந்த சீசனில் கடந்த 9 ஆட்டங்களில் தோனி ஆட்டமிழக்காமல் பேட் செய்து வருகிறார் என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால், நேற்று அந்த சாதனை தகர்க்கப்பட்டது. தோனி களமிறங்கிய சிறிய கேமியோ ஆடி 14 ரன்னில் மோகித் சர்மாவால் ரன்அவுட் செய்யப்பட்டார். ஆட்டமிழக்காமல் ஆடிவந்த தோனியின் சாதனையும் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த சீசனில் தோனி ஆட்டமிழந்துவிட்டாரே தவிர, எந்த பந்துவீச்சாளராலும் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் ஒரு ரன், 2 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதைவிட, பவுண்டரி, சிக்ஸர்கள் அடிப்பதுதான் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்லும். ஆனால் நேற்று சிஎஸ்கே பேட்டர்கள் யாரும் பெரிய ஷாட்களுக்குச் செல்லவில்லை, பவுண்டரி, சிக்ஸர்கள் அதிகமாக அடிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தரப்பில் மொத்தம் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன.

தனி ஒருவனாக போராடிய கெய்க்வாட்

இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தவுடன் நிதானமாக ஆடிய கெய்க்வாட் 44 பந்துகளில் அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 5பவுண்டரிகள் அடங்கும். அதிலும் குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் கெய்க்வாட் ஆட்டம் சிறப்பாக இருந்து 396 ரன்களை சேப்பாக்கத்தில் மட்டும் சேர்த்துள்ளார்.

இந்த சீசனில் 5-ஆவது அரை சதத்தை கெய்க்வாட் அடித்துள்ளார். இதற்கு முன் கடந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் டேவான் கான்வே அதிகபட்சமாக 390 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் அதை கெய்க்வாட் முறியடித்தார்.