கோவிட் தடுப்பூசி: பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கூறி இழப்பீடு கோரும் வழக்கில் முன்னேற்றம்

கோவிட் தடுப்பூசி

பட மூலாதாரம், EPA

அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசியால், தனக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் ஒரு தந்தையின் சார்பில் வழக்காடி வரும் வழக்கறிஞர், தடுப்பூசி நிறுவனத்தின் சட்ட நிலைப்பாட்டில் “குறிப்பிடத்தகுந்த மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது கோவிட் தடுப்பூசியால் மிகவும் அரிதான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று முதன்முறையாக நீதிமன்ற ஆவணங்களில் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த மருந்து நிறுவனம் தயாரித்த கோவிட் தடுப்பூசி மீது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் பல வழக்குகளில் சிலர் இந்த தடுப்பூசியால் தங்களது உறவினர்களை இழந்து விட்டதாகவும், சிலருக்கு தீவிரமான உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட கோவிட் தடுப்பூசிகள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்னை மீதான முதல் புகார், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஜேமி ஸ்காட் என்பவரால் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2021-இல் இவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, ரத்த உறைதலால் பாதிக்கப்பட்ட இவர், மூளை பாதிப்புடன், அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

பிரிட்டனின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி, தனிநபர்கள் எதிர்பார்ப்பதற்கு மாறாக இதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் இந்தத் தடுப்பூசி “குறைபாடுள்ளது” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி

பட மூலாதாரம், Press Association

படக்குறிப்பு, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தான் பிரிட்டனில் செலுத்தப்பட்ட முதல் தடுப்பூசி ஆகும். பர்மிங்காம் மசூதி ஜனவரி 2021.

அஸ்ட்ராஜெனெகா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த போதிலும், பிப்ரவரி மாதம் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்ட ஆவணத்தில், அதன் கோவிட் தடுப்பூசி “மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் (TTS) பாதிப்பை ஏற்படுத்தும்” என்று ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் கூற்றுப்படி, டிடிஎஸ் என்பது த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோமோடு கூடிய த்ரோம்போசிஸ் என்பதைக் குறிக்கிறது.

மேலும் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு இது ஏற்படும் போது விஐடிடி (VITT) (தடுப்பூசியால் தூண்டப்பட்ட இம்யூன் த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா) என்றும் அறியப்படுகிறது.

டிடிஎஸ் / விஐடிடி என்பது ரத்தம் உறைதல் மற்றும் த்ரோம்போசைட்டோபீனியா (குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை) ஆகியவை ஒன்றிணைந்து வகைப்படுத்தப்படும் ஒரு அரியவகை நோய் ஆகும்.

டிடிஎஸ் / விஐடிடி-இன் விளைவுகள் உயிருக்கு ஆபத்தானவை. இதில் பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு மற்றும் உறுப்பு நீக்கம் ஆகியவையும் அடங்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

த்ரோம்போசிஸ் பாதிப்பு தடுப்பூசி போடாதவர்களுக்கும் பல வடிவங்களில் ஏற்படலாம். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அரிதான நோய் பாதிப்பான டிடிஎஸ் / விஐடிடி, த்ரோம்போசிஸ் உள்ளவர்களுக்கு ஏற்படும்.

கோவிட் தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் , “AZ தடுப்பூசி போடப்படாத போதும் கூட டிடிஎஸ் ஏற்படலாம்” என்று கூறியுள்ளது.

மே 2023 இல் ஸ்காட்டின் வழக்கறிஞர்கள் பிபிசிக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் “பொதுவான அளவில் (பெரிய அளவில்) தடுப்பூசியால் தான் டிடிஎஸ் ஏற்படுகிறது என்பதை நாங்கள் ஏற்கவில்லை” என்று அஸ்ட்ராஜெனெகா கூறியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் பிப்ரவரி மாதம் இதே அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில், “AZ தடுப்பூசி மிகவும் அரிதான சூழல்களில், டிடிஎஸ்-ஐ ஏற்படுத்தும். ஆனால் அது எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

டிடிஎஸ் எனப்படும் த்ரோம்போசிஸ் பாதிப்பை தங்களுக்கு ஏற்படுத்தியது தடுப்பூசி மட்டுமேயன்றி, வேறு எந்த காரணிகளும் இல்லை என ஒவ்வொரு புகார்தாரரும் நிரூபிக்க வேண்டுமென அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மேலும் அந்நிறுவனம், “AZ தடுப்பூசி அல்லது ஏதேனும் ஒரு தடுப்பூசி போடப்படாத போதும் கூட டிடிஎஸ் ஏற்படலாம். ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிலும் பாதிப்புக்கான காரணம் நிபுணர்களின் சான்றுகளை பொறுத்தே அமையும்” என்று கூறியுள்ளது.

கோவிட் தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், 2021 ஆம் ஆண்டில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து குறைந்தபட்சம் 1 பில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொண்டது. அது கோவிஷீல்ட் என்ற பெயரில் நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

‘குறிப்பிடத்தகுந்த மாற்றம்’

ஸ்காட் மற்றும் மேலும் 51 நபர்களுக்காக இந்த வழக்கில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் கூறுகையில், இது இந்த வழக்கில் அஸ்ட்ராஜெனெகாவின் நிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை குறிக்கும் என்று கூறியுள்ளார்.

சட்ட நிறுவனமான லீ டேயின் சாரா மூர் பிபிசியிடம் பேசுகையில், “இது பாதிப்பை ஏற்படுத்துவதற்கான காரணங்கள் தொடர்பான முக்கியமான ஒப்புதல் – அதாவது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி டிடிஎஸ் மற்றும் விஐடிடி-ஐ ஏற்படுத்தக்கூடும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “தற்போது அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வழியாக அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது”, என்றும் கூறுகிறார் அவர்.

தடுப்பூசி நிறுவனத்தின் இந்த ஒப்புதல், புகார்தாரர்கள் கோரும் நியாயமான இழப்பீடு மற்றும் பொருளாதார பாதுகாப்பை மீட்பதற்கான இழப்பீடுகளை பெறுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

செவ்வாயன்று பிபிசியிடம் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் பேசிய போதிலும், சாரா மூரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. பிபிசியிடம் ஒரு அறிக்கை வழியாக கீழ்க்கண்ட கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டது அந்நிறுவனம்.

“அன்பானவர்களை இழந்த அல்லது உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு எங்களது அனுதாபங்களை பகிர்ந்துக் கொள்கிறோம். நோயாளிகளின் பாதுகாப்பே எங்களின் மிக முக்கிய முன்னுரிமை. மேலும் தடுப்பூசிகள் உட்பட அனைத்து மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய, எங்களது ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு தெளிவான மற்றும் கடுமையான தரநிலைகள் உள்ளன.”

“மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கி தற்போதைய உலகத் தரவுகள் வரை அஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியானது ஏற்றுக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதாகத் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் மிக அரிதான பக்கவிளைவுகளை விட அதிகமாக இருப்பதாக உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.”

கோவிட் தடுப்பூசி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கொரோனா பொதுமுடக்கம் தொடங்கிய ஒரே ஆண்டிற்குள் சீனாவை தவிர உலக நாடுகள் முழுவதிலும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்கப்பட்டது.

மருத்துவ ஆலோசனையில் மாற்றம்

ஜூன் 2022 இல், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி “18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது” என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

“மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் ரத்த உறைதலால் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்ததை அடுத்து” 7 ஏப்ரல் 2021 அன்று, தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக் குழுவின் கூட்டுக் குழு 30 வயதிற்குட்பட்ட வயது வந்தோருக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு பதிலாக மாற்று தடுப்பூசி வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அஸ்ட்ராஜெனெகாவும் இந்த விஷயத்தை பிரதிபலிக்கும் வகையில் தனது தடுப்பூசி பெட்டிகள் மற்றும் குப்பிகளில் லேபிளிங்கை மாற்றியது.

7 மே 2021 அன்று, இந்த வழிகாட்டுதல் 40 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு என்கிற வகையில் திருத்தப்பட்டது.

“இதுவரை, உலகளவில் தங்களுக்கெதிரான 30க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, கைவிடப்பட்டுள்ளன அல்லது அஸ்ட்ராஜெனெகாவிற்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளது அஸ்ட்ராஜெனெகா.

கோவிட் தடுப்பூசி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கோவிட் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வழக்கு தொடர்ந்திருக்கும் நபர்கள் தங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

‘நியாயமான இழப்பீடு’

ஜேமியின் மனைவியான கேட் ஸ்காட், பிபிசியிடம் முன்பு பேசுகையில், “ஜேமி 250-க்கும் மேற்பட்ட மறுவாழ்வு நிபுணர்களின் அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். அவர் மீண்டும் நடக்கவும், சாப்பிடவும், பேசவும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு நினைவாற்றல் பிரச்னையும் இருந்தது” என்று கூறியிருந்தார்.

“அவர் மருத்துவர்களுக்கு சிறப்பாக ஒத்துழைத்தாலும், ஜேமியின் இந்தப் புதிய வாழ்க்கை முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அவருக்கு அறிவாற்றல் பிரச்சனைகள் உள்ளன. பேசுவதில் சிரமம், கடுமையான தலைவலி மற்றும் கண்பார்வை பிரச்னை உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன.”

மேலும் பேசிய அவர், “தடுப்பூசி ஏற்படுத்திய சேதத்திற்கான இழப்பீடுகளை வழங்கும் திட்டத்தை மறுசீரமைவு செய்ய எங்களுக்கு பிரிட்டன் அரசு உதவ வேண்டும். இது திறன் மற்றும் நியாயமற்றது.. மேலும் எங்களுக்கு நியாயமான இழப்பீடு வேண்டும்” என்று கூறினார்.