மக்களவைத் தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம்

by admin
  • தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்

    வாக்குப் பதிவு

    இந்தியாவில் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.

    மேலும் படிக்க

    next

  • கைகுலுக்கிக் கொண்ட தமிழிசையும் பிரேமலதாவும்

    தமிழிசை வாக்குப்பதிவு

    Copyright: BBC

    சென்னை சாலிகிராமத்தில் அருகருகே வசிக்கும் தேமுதிமுக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும் ஒரே வாக்குச்சாவடி மையத்தில் தங்களுக்கான வாக்குகளை பதிவு செய்ய வந்திருந்தனர். அப்போது இருவரும் கை குலுக்கி சிரித்து பேசி பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர்.

  • ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ – பிரதமர் மோதி

    நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார்.

  • தருமபுரியில் சௌம்யா அன்புமணி வாக்களித்தார்

    சௌம்யா அன்புமணி வாக்குப்பதிவு

    Copyright: BBC

    தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணி தனது வாக்கை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.

    அவர் வாக்கு செலுத்திய சிறிதுநேரத்திற்கு பிறகு தனது மகள்களுடன் வந்த அன்புமணி ராமதாஸும் தனது வாக்கைச் செலுத்தினார்.

    நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்களித்தார்.

    தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை நீலாங்கரையில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

  • எடப்பாடி பழனிசாமி, ப சிதம்பரம், தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர்

    சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர்.

    வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

  • நாடாளுமன்ற தேர்தல்: நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை – 15 கேள்விகளும் பதில்களும்

    நாடாளுமன்ற தேர்தல் 2024

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா தயாராகிவிட்டது. முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் – 15 கேள்விகளும் பதில்களும் இங்கே.

    மேலும் படிக்க

    next

  • நடிகர் அஜித் வாக்களித்தார்

    அஜித்

    Copyright: BBC

    தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார்.

    முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

  • எந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பது என்பதை அறிவது எப்படி?

    வாக்குப் பதிவு

    Copyright: BBC

    ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால், வாக்காளராகப் பதிவுசெய்திருக்க வேண்டும். தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய இதற்கென உள்ள தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் ( https://electoralsearch.eci.gov.in/ )சென்று தேடிப் பார்க்கலாம்.

    பெயர் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், அவர்கள் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரமும் அதிலேயே இடம்பெற்றிருக்கும். அல்லது voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

    இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

    அல்லது 1950 எண்ணுக்கு ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்)பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பினால் உரிய தகவல்கள் வந்துசேரும். பொதுவாக வாக்குச் சாவடிகள் அவர்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்படும்.

  • மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது

    வாக்குப் பதிவு

    Copyright: BBC

    இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

    தற்போது பல்வேறு தொகுதிகளிலும் மாதிரி வாக்குப் பதிவு நடந்திருக்கிறது.

    21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

    “முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 16.5 கோடி மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தல்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஜனநாயகத்தின் வெளிப்பாடு. இதற்காக, வாக்குப்பதிவு எளிமையாகவும் தடைகள் இல்லாமலும் நடைபெற, இந்திய தேர்தல் ஆணையமும் அதன் பல லட்சம் அதிகாரிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளனர்.” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

  • நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடர்பான நேரலைக்கு உங்களை வரவேற்கிறோம்.

  • தொடர்புடைய செய்திகள்