காவல் மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தொடரக்கூடாது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இந்தச் சம்பவங்களில் என்ன நடந்தது?

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை தமிழக காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் மட்டும் 3 காவல் மரணங்கள் நடந்திருந்தன.

முதலமைச்சர் இப்படிச் சுட்டிக்காட்டிப் பேசிய பிறகும்கூட போலீஸ் காவலில் இருப்பவர்கள் மரணமடைவது தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், இப்போது ஒரே மாதத்தில் 12 நாட்களுக்குள் நான்கு பேர் போலீஸ் காவலில் இறந்திருப்பதுதான் பலரையும் அதிர வைத்திருக்கிறது.

ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை நான்கு பேர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழந்திருக்கின்றனர். இந்த நான்கு பேரில் 2 பேர் காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டு பேர் நீதிமன்றக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர்.

12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம், Getty Images

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் காவலில் மரணம்

மணிமேகலையும் அவரது கணவர் கணேசனும் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையின் வாயிலில் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கடைகள் அங்கிருந்து அகற்றப்படவே, தற்போது கூலி வேலை செய்கிறார்கள் இந்தத் தம்பதி. இவர்களது ஒரே மகன் கார்த்திக். இவருக்குத் திருமணமாகி, ஒரு வயதிலும் 3 வயதிலும் குழந்தைகள் இருக்கின்றனர். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில்தான் ஒரு வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக், போலீஸ் காவலிலேயே இறந்து போயிருக்கிறார்.

“ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீஸ்காரர்கள் வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நான் வேலைக்குப் போயிருந்ததால், பிற்பகல் நான்கு மணி அளவில் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். நான் என் மருமகளிடம் விவரத்தைச் சொன்னேன். அதற்குப் பிறகு ஆறு மணிக்கு என் மகனே போன் செய்தான். தன்னை ரிமாண்ட் செய்யப்போவதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னான். உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். பத்து மணியளவில் அவனை ரிமாண்ட் செய்து ஜெயிலுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்.” என்கிறார் கார்த்தியின் தாயாரான மணிமேகலை.

“அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு காவல் துறையிடமிருந்து போன் வந்தது. என்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள். போய்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அன்று இரவு 2 மணிக்கு போலீஸிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. எனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னார்கள். நாங்கள் போய் பார்த்த சிறிது நேரத்திலேயே அவன் இறந்துவிட்டான். என்ன நடந்ததென்றே தெரியவில்லை” என்கிறார் மணிமேகலை.

அதீத காய்ச்சலால் இறந்ததாகக் கூறிய காவல்துறை

அவர் அதீதமான காய்ச்சலால் உயிரிழந்ததாக காவல் துறை கூறியிருக்கிறது. இருந்தாலும் குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை. நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மகன் எப்படி திடீரென இறக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்து போனார்.

12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, இட்லி கார்த்திக். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்

பாஜக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நேர்ந்தது என்ன?

பா.ஜ.கவின் பட்டியல் அணி பிரிவின் மாநிலப் பொருளாளரான சங்கர் என்பவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரான 30 வயது சாந்தகுமார் என்பவர் கைதுசெய்யப்பட்டு 11 மாதங்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவர் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுவந்தார். இதற்காக புட்லூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அவரையும் அவருடன் இருந்த வேறு ஆறு பேரையும் கைதுசெய்தனர். செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சாந்தகுமார் கூறியதாகவும் அதனால், அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம், Getty Images

திட்டமிட்ட படுகொலை எனக் கூறும் சாந்தகுமாரின் மனைவி

இது திட்டமிட்ட படுகொலை என்று குற்றம்சாட்டிய சாந்தகுமாரின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் சாந்தகுமாரின் மரணம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“என் கணவரின் சொந்த ஊரே புட்லூர்தான். அவருடைய அம்மா வழியில் வந்த நிலம் அங்கிருந்தது. அதை விற்பது குறித்து பேசத்தான் அவர் அங்கே போயிருந்தார். ஆனால், ஆயுதங்களோடு இருந்ததாகக் கூறி கைதுசெய்திருக்கிறார்கள். அன்று மாலை நான்கு மணியளவில்தான் எனக்குத் தகவல் தெரிந்தது. நான் வழக்கறிஞர்களை அனுப்பிவைத்தேன். உள்ளே விசாரணை நடந்துவந்ததால், அவர்களால் அவரை சந்திக்க முடியவில்லை. ஐந்தரை மணியளவில் போன் செய்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். அங்கே போனபோது, மார்ச்சுவரியில் என் கணவரின் உடல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள்” என்கிறார் அவரது மனைவி விஜயலட்சுமி.

இப்போது இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சாந்தகுமாரிடம் விசாரணை நடத்திய நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது எப்படி நடந்தது என்பது குறித்து ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் ஷங்கரிடம் கேட்டபோது, “பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இதுவரை கிடைத்த தகவல்களின் படி அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இருதய நாளங்களில் அடைப்பு இருந்ததால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். ஆனால், காவல் நிலையத்தில் இருக்கும்போது இந்தச் சம்பவம் நேரிட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீதித்துறை நடுவர் விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவை வைத்து கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஆனால், சாந்தகுமாருக்கு வயது வெறும் 30தான் எனும்போது சந்தேகம் ஏற்படாதா எனக் கேட்டபோது, “இப்போது சிறு வயதினருக்கே மாரடைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி கூடத்தில்கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இருந்தாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்” என்கிறார் அவர்.

உயிரிழந்த சாந்தகுமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம், Getty Images

இதேபோல, ஏப்ரல் 10ஆம் தேதி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பிய கே. ராஜா என்பவர், வீட்டிற்குள் வந்தவுடன் உயிரிழந்தார்.

விழுப்புரம் டவுன் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த 44 வயதான கே. ராஜா என்பவரை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் காணவில்லை. ஏப்ரல் பத்தாம் தேதி காலையில் அவர் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதற்குப் பிறகு அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் கைதியை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்குப் பிறகு காலை 11.30 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.

டாஸ்மாக் ஒன்றுக்கு அருகில் இருந்த உணவகத்தில் வேலை பார்த்த ராஜா, மது விற்பனைக்கான நேரம் முடிந்த பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்ற குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

வீட்டுக்குத் திரும்பிய ராஜா, தன்னைக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் வாயிலிருந்து நுரை தள்ளி கீழே சாயவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இது தொடர்பாக விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட சிவகாசியை சேர்ந்த 60 வயதான ஜெயக்குமார் என்ற விசாரணைக் கைதி ஏப்ரல் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் வழக்கைத் தவிர, மற்ற மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 176 (1) (அ)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு சம்பவங்களிலும் தமிழ்நாடு அரசு இழப்பீடு ஏதும் அறிவிக்கவில்லை. விழுப்புரம் ராஜாவின் மரணம் சந்தேக மரணமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

“இந்த வழக்குகளின் புலன் விசாரணையை உடனடியாக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த மரணங்களில் தொடர்புடைய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த நான்கு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைத்து காவலர்கள், சிறைச்சாலை அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் (NHRC) தெரிவிக்க வேண்டும்” என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹென்றி திஃபேன்.

மேலும் சில விஷயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “இதுபோல நடந்தால் என்ன செய்ய வேண்டுமென ‘சந்தேஷ் VS மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்’ வழக்கின் தீர்ப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் போலீஸ் காவலில் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் பார்க்காமல் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கே அனுப்பக்கூடாது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையை உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். அவர்கள் அதனைப் படித்துப் பார்த்து, ஒப்புதல் தெரிவிக்க கால அவகாசம் வழங்கியே சடலத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தாலே, பாதி பிரச்னைகள் எழாது. இந்தப் பரிந்துரைகள் எல்லாமே காவல்துறைக்கு எதிரானவையல்ல. அவர்களுக்கு ஆதரவானவைதான். இந்த விதிமுறைகளின்படி நடந்தால், காவல்துறை அதிகாரிகள் எந்தச் சிக்கலிலும் சிக்க மாட்டார்களே.. ஆனால், அப்படி செய்யாமலிருப்பது ஏன் எனத் தெரியவில்லை” என்கிறார் ஹென்றி.

12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம், Getty Images

காவல்துறையில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதும் என்கிறார் முன்னாள் டிஜிபியான திலகவதி.

“ஒருவரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரும்போது பல சமயங்களில் அவரது உடல் நிலை மோசமாகக்கூட இருக்கலாம். அதனால்கூட மரணங்கள் நேரலாம். அதற்கு காவல்துறை பொறுப்பேற்க நேர்கிறது. ஆகவே, ஒருவரை விசாரணைக்கு அழைத்துவரும்போதே அவரை மருத்துவ பரிசோதனை செய்துதான் அழைத்து வரவேண்டும். அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்தால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமே தவிர, காவல் நிலையத்திற்கு அழைத்துவரக்கூடாது. கைது செய்யப்பட்டவுடனேயே உறவினர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். கைதி விரும்பினால் வழக்கறிஞர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும்.”

“எந்தக் கைதியையும் இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் தங்க வைக்கக்கூடாது. காரணம், இரவில் காவல் நிலையத்தில் மிகக் குறைவான காவலர்களே இருப்பார்கள். திடீரென கைதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஒன்றிரண்டு காவலர்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த விதிமுறைகளை திரும்பத் திரும்ப காவல்துறையினருக்கு சொல்லிவர வேண்டும். மனித உயிர் விலைமதிப்பற்றது” என்கிறார் திலகவதி.

தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 – 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன.