2014-ல் மோதியுடன் ‘தேநீர் உரையாடல்’ நடத்திய விவசாயிகளின் நிலை 10 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது? பிபிசி கள ஆய்வு

சாய் பே சர்ச்சா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஸ்ரீகாந்த் பங்காலே
  • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

“பிரதமர் நரேந்திர மோதி இங்கு வந்தபோது 16-17 வாக்குறுதிகளை அளித்தார். அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுதான் மோதியின் உத்தரவாதமா?” என கேள்வி எழுப்புகிறார் திகம்பர் குல்ஹானே. மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள தாப்டி கிராமத்தில் அவர் வசிக்கிறார்.

இதே கிராமத்தில், 2014, மார்ச் 20ஆம் தேதி அன்றைய தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோதி விவசாயிகளுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ‘தேநீர் கலந்துரையாடல்’ (சாய் பே சர்ச்சா) நடத்தினார்.

2014 தேர்தலுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 1,500க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் ஆன்லைனில் பங்கேற்றனர். அதே நேரத்தில் தாப்டியில் விவசாயிகள் மோதியுடன் நேரில் உரையாடினர்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, திகம்பர் குல்ஹானே

இந்த கலந்துரையாடலின் போது ​​விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்த மோதி அவற்றுக்கான தீர்வு என்னவாக இருக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோதி, “நாட்டின் விவசாயத் துறையை மாற்ற முடியும். நாட்டின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற முடியும். நாட்டின் கிராமங்களை மாற்ற முடியும் என்று நாட்டின் விவசாயிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்களின் ஆதரவு தேவை. நாட்டின் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்,” என்றார்.

2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்பட்டு நரேந்திர மோதி பிரதமரானார். இது நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இப்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க நரேந்திர மோதி மும்முரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த வாக்குறுதிகளின் நிலை என்ன? அவரது ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

 'தேனீர் கலந்துரையாடல்'

பட மூலாதாரம், Getty Images

‘சாய் பே சர்ச்சா’ (தேநீர் கலந்துரையாடல்)

‘சாய் பே சர்ச்சா’ நிகழ்ச்சியில், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருடன் மோதி பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களது வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது? இதை அறிய பிபிசி மராத்தி குழுவினர் தாப்டியை அடைந்தனர்.

நாங்கள் காலை 9 மணியளவில் தாப்டியை அடைந்தோம். இந்த கிராமம் யவத்மால் மாவட்டத்தில் அர்னி தாலுகாவில் உள்ளது. கிராமத்தின் பிரதான குறுக்கு வீதிக்கு அருகில் வயல்வெளி உள்ளது. இந்த வயலில்தான் பிரதமர் மோதியின் ‘சாய் பே சர்ச்சா’ நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறிது தூரம் சென்றதும் வழியில் நாங்கள் பாஸ்கர் ரவுத் என்பவரை சந்தித்தோம். அவர் பருத்திப் பயிரை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். தாப்டி கிராமம் அமைந்துள்ள அர்னி தாலுகாவில், காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதாவது சிசிஐ, கொள்முதலை நிறுத்திய காரணத்தால் தனியார் வியாபாரிகளுக்கு பருத்தி விற்பனை செய்வதாக அவர் தெரிவித்தார். பாஸ்கருக்கு நான்கு ஏக்கர் வயல் உள்ளது. இதில் அவர் பருத்தி உற்பத்தி செய்கிறார்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, இந்த கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோதி 2014 இல் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

‘புலி மற்றும் பாம்பினால் ஆபத்து’

பருத்தி விலை குறித்து கேட்டபோது, ​​”பருத்தி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை 7,700 ரூபாயாக இருந்தது. இன்று 7,200 அல்லது 7,300 ஆக உள்ளது. ஆனால் எங்களுக்கு 9-10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று நம்பியிருந்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

2014ஆம் ஆண்டு தனது கிராமத்தில் நடைபெற்ற நரேந்திர மோதியின் நிகழ்ச்சியில் பாஸ்கர் பங்கேற்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? இக்கேள்விக்கு பதிலளித்த அவர், ”2014 க்கு பின் நிலைமை திருப்திகரமாக இல்லை. ஆனால், கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விவசாய விளைபொருட்களின் விலையை பொருத்தவரை சர்வதேச சந்தையை பொருத்து அது நிர்ணயமாகிறது. 2014 க்கு முன்பும் பருத்தி விலை குறைவாகவே இருந்தது. இது 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது,” என்றார்.

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பெறுவதாக பாஸ்கர் கூறினார். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இந்த திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதி 2024 பிப்ரவரி 28 ஆம் தேதி யவத்மாலில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இதன்போது பிஎம் கிசான் பயனாளிகள் குறித்த தகவல்களை அளித்து பேசிய மோதி, “பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகளின் கணக்குகளில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா விவசாயிகள் 30 ஆயிரம் கோடி ரூபாயும், யவத்மால் விவசாயிகள் 900 கோடி ரூபாயும் பெற்றுள்ளனர்,” என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான பாஸ்கரின் அனுபவம் சிறப்பாக இல்லை. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், போதிய மழையின்மை, ஆலங்கட்டி மழை, வெள்ளம், புயல், வறட்சி அல்லது பயிர் மீது பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை பேரிடர்களால் பயிர்கள் சேதமடையும் போது மட்டுமே விவசாயிகள் காப்பீட்டின் பலனைப் பெறுகிறார்கள்.

“பயிர் காப்பீடு திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. கிராமத்தை சேர்ந்த இரண்டு, மூன்று விவசாயிகள் மட்டுமே பலன் பெறுகின்றனர். காப்பீடு கோரி விண்ணப்பித்திருந்தேன். பருத்தியில் சேதம் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை,” என்று பாஸ்கர் தெரிவித்தார்.

பிரதம மந்திரி கிசான் யோஜனா மற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளைப் பற்றி அறிய தாப்டியில் உள்ள விவசாய அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம்.

“தாப்டி கிராமத்தைச் சேர்ந்த 383 விவசாயிகள் பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் பலனைப் பெறுகின்றனர். 2023-24 இல் 550 விவசாயிகள் உள்ளூர் பேரிடர் இழப்பீடாக 32 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் காப்பீடு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அறுவடைக்குப் பிந்தைய காப்பீடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை,” என்று அர்னி தாலுகாவின் வேளாண் அதிகாரி ஆனந்த் பட்கல் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

’சாய் பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோதி, “விவசாயிகளின் உற்பத்தியின் குறைந்தபட்ச மூலதன செலவை ஏற்க வேண்டியது அரசின் பொறுப்பு. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். இது இளைஞர்களை விவசாயத் துறைக்குள் கொண்டு வரும். இதை செய்ய முடியும்,” என்று கூறியிருந்தார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தாப்டி விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலைக்காக காத்திருக்கின்றனர். “விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசிடமிருந்து விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு. எங்களுக்கு இலவசம் எதுவும் வேண்டாம். உற்பத்திச் செலவுக்கேற்ப விலை இருக்க வேண்டும்” என்று விளக்குகிறார் பாஸ்கர்.

செலவு அதிகமாகவும், கிடைக்கும் விலை குறைவாகவும் இருப்பதால், விவசாயிகளின் நிலை பொருளாதார ரீதியாக மோசமாகி வருகிறது என்கிறார் பாஸ்கர்.

விவசாயத்திற்கு பகலில் மின்சாரம் கிடைக்க வேண்டும். இரவு கொடுக்கப்படும் மின்சாரம் விவசாயிகளுக்கு புலி மற்றும் பாம்புகளின் ஆபத்தை கொண்டு வருகிறது என்றும் பாஸ்கர் கூறுகிறார்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, விவசாயி பாஸ்கர் ரவுத்

‘இப்போதெல்லாம் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாது’

பாஸ்கரிடம் பேசிவிட்டு நாங்கள் முன்னேறிச் சென்றபோது, ​​ஒரு வீட்டின் முன் ஒரு பசுவும் கன்றும் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தோம். இது டிகே குடும்பத்தின் வீடு, பிரதமர் மோதி இந்த குடும்பத்துடன் ‘சாய் பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பேசினார்.

வீட்டின் அருகே சென்று பார்த்தபோது ​​சுவர்களில் சேறு படிந்திருந்தது. அனிகேத் ஹாலில் அமர்ந்திருந்தார். ‘சாய் பே சர்ச்சா’ நடக்கும் போது அவருக்கு 14 வயது.

இந்த நிகழ்ச்சியில் தனது தந்தை ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று அவர் மோதியிடம் கூறியிருந்தார். 51 வயதான மீரா திலிப்ராவ் டிகே அனிகேத்தின் தாய். அனிகேத் அவரை அழைத்ததும் ஹாலுக்குள் வந்து அவர் பேச ஆரம்பித்தார்.

”விவசாயம் செய்து வருமானம் வராததால் 2005 இல் என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வங்கிக் கடன் இருந்தது. அன்று நான் கூலித்தொழிலாளர்களுடன் வயலுக்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அனிகேத் இரண்டாம் வகுப்பிலும், சினேகா ஆறாம் வகுப்பிலும் இருந்தார்கள்,” என்று அவர் சொன்னார்.

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலை, அரசு விதிகளின்படி, ‘தற்கொலை’ என்ற பிரிவின் கீழ் வந்தால் அந்த குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மீராவுக்கு அந்த உதவி கிடைத்தது. ஆனால் இந்த தொகையால் அவரால் வாழ்க்கை முழுவதையும் கழிக்கமுடியாது. 2006 ஆம் ஆண்டு முதல் மீரா ஆங்கன்வாடியில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் மனைவி மீரா டிகே.

மீரா அனிகேத்தைப் பார்த்தவாறு “நான் என் குழந்தைகளை இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன். இவ்வளவு படிப்பு கொடுத்தும் பலனில்லை. வேலை எதுவும் இல்லை. இப்போதெல்லாம் லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது” என்கிறார்.

அனிகேத் அமராவதியில் பிசிஏ படிப்பை முடித்துள்ளார். தற்போது வேலை தேடி வருகிறார்.

பிரதமர் மோதியின் நிகழ்ச்சிக்குப் பிறகு விவசாயிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்த மீரா, “விவசாயிகளுக்காக நிறைய செய்வோம் என்று மோதி கூறினார். ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. சோயாபீன் மற்றும் பருத்திக்கு சரியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. மறுபுறம் கூலிவேலைக்கான ஊதியம் அதிகரித்துள்ளது,” என்று கூறினார்.

“இன்று வரை எதுவும் மாறவில்லை,” என்று அனிகேத் குறிப்பிட்டார்.

தனக்கு எந்த வகையான திட்டத்தின் பலனும் கிடைக்கவில்லை என்றும் மீரா கூறுகிறார். இதுமட்டுமின்றி தந்தையின் தற்கொலைக்குப் பிறகு அவரது பெயரில் இருந்த நிலம் தனது சித்தப்பா பெயருக்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக தனது சித்தப்பாவுக்கு பிரதமர் கிசான் சம்மான் நிதி கிடைக்கிறது என்கிறார் அனிகேத்.

2024 இல் உங்கள் வருமானம் இரட்டிப்பாகியுள்ளதா என்ற கேள்வியை கேட்டபோது ​​அனிகேத்தின் பதில், “இல்லை” என்பதுதான்.

“விவசாயிகளுக்கான திட்டங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு அவற்றின் பலன்கள் கிடைக்கின்றன. மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று கூற முடியாது. இங்கும் மாநில அரசு தன் மட்டத்தில் எதுவும் செய்யவில்லை. மூன்று கட்சி அரசு உள்ளது. மூன்று பேர் ஒரு தட்டில் இருந்து உணவு சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். எல்லார் வயிறும் நிரம்பியுள்ளது என்று நீங்கள் கூறலாம்.” என்று அனிகேத் குறிப்பிட்டார்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, விவசாயிகளுடன் ’சாய் பே சர்ச்சா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றும் நரேந்திர மோதி.

‘மோதிக்கு எதிராக பேச முடியாது’

நாங்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ​​அனிகேத்தின் சித்தப்பா வினோத் டிகே வீட்டிற்குள் வந்தார். வயல்வெளியில் இருந்து வருவதுபோல அவர் காணப்பட்டார்.

என்ன நடக்கிறது என்று நான் பேச்சு கொடுத்தேன். “15 நாட்களாக வயலில் மின்சாரம் இல்லை. பழுதை கண்டறிந்து அது சரிசெய்யப்பட்டது. இன்று மின்சாரம் வராமல் இருந்திருந்தால் பயிர்கள் முழுவதும் சேதமடைந்திருக்கும்” என்றார் அவர்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, விவசாயி வினோத் டிகே

இதைச் சொல்லியபடி கைகளில் இருந்த கருமையை அவர் காட்டினார். பத்து வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் வந்துள்ளது என்ற கேள்விக்கு, “எதுவும் மாறவில்லை, நிலைமையைப் பாருங்கள். தற்கொலை செய்து கொண்டவர்களின் மகன்களுக்கு வேலை தருவோம் என்று மோதி கூறியிருந்தார். ஆனால் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் மோதி இந்தியாவின் பிரதமர். அவரை எதிர்த்து பேச முடியாது,” என்று பதிலளித்தார்.

மதியம் கிராமத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ’சர்வே நடக்கிறதா’ என்று சிலர் கேட்டனர். கிராமத்தின் பெயர்ப் பலகையை புகைப்படம் எடுக்க முற்பட்டபோது, ​​இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ’உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டார்கள்.

”ஜவுளி ஆலைகள், சோயாபீன் பதப்படுத்தும் தொழில் என்று மோதி வாக்குறுதி அளித்தார். அவர் இதை உண்மையிலேயே செய்யப் போகிறார் என்று மக்கள் நினைத்தனர். மோதி பிரதமரான பிறகு இங்கு மக்களிடையே மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று மக்கள் நம்பினர்.”

மோதியின் வாக்குறுதிகளை அவருக்கு நினைவுபடுத்தும் வகையில், ’நீங்கள் வாக்குறுதிகளை அளித்தீர்கள், ஆனால் நிறைவேற்றவில்லை’ என்று கூறும் பேனர்கள் கிராமத்தில் வைக்கப்பட்டன. ஆனால் ”அன்று சேனலில் பேசியவர்கள் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் மோதியின் நிகழ்ச்சியில் பிரச்னை ஏற்படுத்துவார்கள் என்று கருதி இவ்வாறு செய்தனர்,” என்று விஜய் குறிப்பிட்டார்.

 'தேனீர் கலந்துரையாடல்'

பட மூலாதாரம், GANESH RATHOD

படக்குறிப்பு, பிரதமர் மோதியின் கூட்டத்திற்கு முன்னதாக அர்னி போலீசார் கிராம மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்

‘சேனலில் பேசிய பிறகு நோட்டீஸ் கிடைத்தது’

2024 பிப்ரவரி 28 ஆம் தேதி யவத்மாலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நரேந்திர மோதி திட்டமிட்டிருந்தார். அவரது கூட்டம் அங்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு முன்பு தாப்டி கிராம மக்கள் மோதியின் வாக்குறுதிகளை நினைவுபடுத்தும் வகையில் கிராமத்தில் பேனர் வைத்தனர்.

இந்த பேனருக்கு முன்னால் நின்றுகொண்டு சிலர் செய்தியாளர்களிடம் பேசினர். இதில் திகம்பர் குல்ஹானே, கணேஷ் ராத்தோர் ஆகியோர் அடங்குவர். மோதியின் கூட்த்திற்கு முன் அவர்களுக்கு அர்னி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

“நாங்கள் பிப்ரவரி 25 அன்று சேனலில் பேசினோம். அதன்பிறகு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நாங்கள் எந்த குழப்பத்தையும் உருவாக்கக் கூடாது என்பதற்காக மோதியின் கூட்டத்திற்கு முன்பு கணேஷ் ராத்தோரும் நானும் நாள் முழுவதும் ஆர்னி காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டோம். நாங்கள் முழு நாளும் அங்கே உட்கார வைக்கப்பட்டோம். மோதியின் கூட்டம் முடியும்வரை எங்களால் வெளியே வரமுடியவில்லை,” என்று திகம்பர் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

”நான் உண்மையைத்தான் சொன்னேன். அப்படி சொல்லவில்லை என்றால் பாபா சாகேப்புக்கு என்ன பதில் சொல்வேன்?’ என்று அவர் வினவினார்.

திகம்பரருக்கு மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவர் பருத்தி உற்பத்தி செய்கிறார்.

“இது உங்கள் பருத்தி மாவட்டம். இங்கு ஜவுளித் தொழில் அமைப்போம், விவசாயிகளின் மகன்களுக்காக கடைகளைத் திறப்போம் என மோதி பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அவர் இவற்றில் எதையும் செய்யவில்லை.”

2014 இல் தாப்டியில் நடந்த நிகழ்ச்சியில், அப்போதைய பஞ்சாயத்து தலைவர் பிரதமர் மோதியிடம், விதர்பா மற்றும் யவத்மால் விவசாயிகளுக்கு பருத்தி-சோயாபீனுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்வீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த மோதி, ”இங்கு பருத்தி பயிரிடுபவர்கள் மதிப்பு கூட்டலுக்கு செல்ல வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? பருத்தி இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. நூல் தயாரிக்க கோலாப்பூர் செல்ல வேண்டும். பருத்தி இங்கே இருக்கும்போது ஏன் இங்கு நூல் தயாரிக்கப்படவில்லை? இங்கு நூல் தயாரிக்கப்பட்டால் இங்கு துணி ஏன் தயாரிக்கப்படவில்லை? இங்கே துணி தயாரிக்கப்படுகிறது என்றால் ரெடிமேட் ஆடைகள் ஏன் தயாரிக்கப்படுவதில்லை? இதன்மூலம் பருத்தியின் மதிப்பு கூட்டல் நடக்கும். இதன் மூலம் பருத்தி விவசாயிகள் பயனடைவார்கள்,” என்று கூறியிருந்தார்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 2,000 ரூபாய் கிடைக்கிறது என்று திகம்பர் கூறினார்.

“பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் மோதி இரண்டாயிரம் ரூபாய் தருகிறார். நாங்கள் டிஏபி உரம் வாங்குகிறோம். காங்கிரஸ் காலத்தில் அதன் விலை 500 ரூபாயாக இருந்தது. அதற்கு இப்போது 1,700 ரூபாய் ஆகிறது.

1 லட்சம் ரூபாய் மதிப்பிலான உரத்திற்கு நாங்கள் 18 ஆயிரம் ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஒரு குழந்தையின் பென்சிலுக்கு 25 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது,” என்று திகம்பர் மேலும் கூறினார்.

போலீஸ் நோட்டீஸ் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அப்படிச் செய்வது சரியல்ல. ஏனென்றால் பாபா சாகேப் கொடுத்த அதிகாரத்தைப்பயன்படுத்தி வருகிறோம். நான் பேசவில்லை என்றால், பாபா சாகேப்புக்கு என்ன பதில் சொல்வேன். நான் உண்மையைச் சொல்வதை நிறுத்த மாட்டேன்,” என்று பதிலளித்தார்.

பாஸ்கர் ரவுத்தை போலவே திகம்பர் குல்ஹானேயும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ”பயிர்க் காப்பீட்டில் இன்ஸ்பெக்ஷன் செய்கிறார்கள். அதற்கு வருபவர்கள் 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆகவே இந்த அரசு ஊழல் செய்யவில்லை என்று நீங்கள் எப்படிக்கூறுவீர்கள்?,” என்று அவர் வினவினார்.

”பயிர்க் காப்பீட்டு ஆய்வுக்கு யாராவது 500 ரூபாய் வசூலித்தால் அதை விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக புகார் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,” என்று அர்னி தாலுகா வேளாண் அதிகாரி ஆனந்த் பட்கல் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

பயிர் காப்பீட்டின் பலன் கிடைக்கவில்லை என விவசாயிகள் வாய்மொழியாக புகார் கூறுகின்றனர். ”பயிர் காப்பீட்டு ஆய்வுக்கு யாரும் பணம் செலுத்த வேண்டாம் என்று நாங்கள் முறையிட்டோம்,” என்று பட்கல் கூறினார்.

“எங்களுக்கு பிரதமர் கிசான் சம்மான் நிதி வேண்டாம், கடன் தள்ளுபடி வேண்டாம். விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். விவசாயிகள்தான் நாட்டிற்கு உணவு தருகிறார்கள். இதைப் பற்றி அரசு சிந்திக்க வேண்டும்,” என்று திகம்பர் குறிப்பிட்டார்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, தபாடி கிராம சாலை

அப்பகுதி எம்எல்ஏ என்ன சொல்கிறார்?

பாஜகவின் சந்தீப் துர்வே, அர்னி-கோலாபூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.

தாப்டி கிராமத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தாப்டி கிராமத்தில் பாலம் மிகப்பெரிய பிரச்னை. அதற்கு 2.5 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. அதன் பூமி பூஜையும் நடந்தது. இது தவிர தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கான வேலையும் செய்யப்பட்டது,” என்று தெரிவித்தார்.

நரேந்திர மோதி 2014 இல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இது குறித்து கிராம மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதுபற்றி சந்தீவ் துர்வேயிடம் கேட்டபோது, ​​”நரேந்திர மோதி அப்போது மதிப்பு கூட்டல் தொழில் பற்றி பேசினார். ஆனால் தொழில்முனைவோரும் முன்வரவேண்டும். பருத்தி, சோயாபீன் பதப்படுத்த தொழில்துறையினர் யாரும் முன்வரவில்லை,” என்று பதிலளித்தார்.

“எனது தொகுதி சந்திராபூர் மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது. மேலும் தற்போதைய வேட்பாளர் சுதிர் முங்கந்திவார் பருத்தி சார்ந்த மதிப்பு கூட்டல் தொழிலைக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார்,” என்றார் அவர்.

‘விவசாயிகளுக்கு மோதி நிறைய செய்துள்ளார்’

2014 ஆம் ஆண்டு ‘சாய் பே சர்ச்சா’ நிகழ்ச்சிக்கு முன் நரேந்திர மோதி கைலாஷ் அரங்கரின் வயலுக்குச்சென்று சேதங்களை ஆய்வு செய்தார். நாங்கள் கிராமத்தின் பிரதான சதுக்கத்திற்குத் திரும்பியதும் வயல்வெளிகள் மீண்டும் தெரிந்தன.

” நிகழ்ச்சி நடந்த நாளில் மோதி மதியம் 3 மணிக்கு எங்கள் வயலில் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்தார். அப்போது ஆலங்கட்டி மழை பெய்ததால், பருப்பு மற்றும் கோதுமை பயிர்கள் சேதமடைந்தன. அந்த ஆண்டு கிராமத்தில் சுமார் 17 தற்கொலைகள் நடந்தன,” என்று வயல் உரிமையாளர் கைலாஷ் அரங்கர் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

மோதியின் 10 ஆண்டு பதவிக்காலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘கிராமத்துக்கு மோதி வந்தபோது, ​​‘உங்கள் பிரச்னைகள் என்னவென்று சொல்லுங்கள்?’ என்றார். மோதி எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் நிறைய செய்துள்ளார். மக்களுக்கு இது புரிவதில்லை. கிராமத்தில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. சாலைகள் போடப்பட்டுள்ளன. கோவிலில் ’ஒரு சந்திப்பு’ அறை கட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக மோதி நிறைய செய்துள்ளார்,” என்று சுட்டிக்காட்டினார்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, தாப்டியின் பிரதான நாற்சந்தியில் பேசிக்கொண்டிருக்கும் கிராம மக்கள்.

‘சேனல்கள் எங்கள் கிராமத்திற்கு தீங்கு விளைவித்துள்ளன. நீங்கள் வெளியேறுங்கள்’

மதியம் 1 மணியளவில் கிராமத்தின் பிரதான நாற்சந்தியை அடைந்தபோது ​​சிலர் அங்கு பேசிக் கொண்டிருந்தனர். தேர்தல் சூழல் எப்படி உள்ளது என்று கேட்டபோது, ​​“நாங்கள் இதைப் பற்றி பேசவிரும்பவில்லை” என்று ஒருவர் சொன்னார்.

மற்றொருவர், “என்ன கேட்கிறீர்கள்?” என்றார். என்னுடன் இருந்தவர் உள்ளூர் பேச்சு வழக்கில் அவர்களுடன் பேசினார். பிறகு அவர்கள் பேச ஆரம்பித்தனர்.

பிரதமர் மோதி வந்து சென்ற பிறகு என்ன மாற்றம் ஏற்பட்டது என்ற கேள்விக்கு, “கிராமத்தில் எதுவும் நடக்கவில்லை. எனவே நாங்கள் இங்கே ‘சாய் பே சர்ச்சா’ பேனரை வைத்துள்ளோம்” என்று ஒருவர் கூறினார்.

அவரது பேச்சை இடைமறித்த அனில் ராத்தோர், கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை சுட்டிக்காட்டினார். “2014 ஆம் ஆண்டுக்கு பின் கிராமத்தில் குடிநீர் வசதிக்காக 1 கோடி ரூபாய் செலவில் தொட்டி கட்டப்பட்டது. ஹன்ஸ்ராஜ் அஹிர் உள்துறை இணை அமைச்சராக இருந்த போது, ​​50 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராமத்தில் சிமெண்ட்-கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டன. பணிகள் நடந்துள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை,” என்று அவர் கூறினார்.

விதர்பாவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர். மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்துள்ளார்.

கிராமத்தில் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு “கிராமத்தில் எங்களுக்கு ஒரு வங்கி வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு ஒரு ஸ்டேடியம் வேண்டும். எங்களுக்கு ஒரு சேமிப்பு கிடங்கு வேண்டும். அதனால் விவசாயிகள் தங்களுடைய 1,000- 2000 சாக்குபைகளை வைத்திருக்க முடியும்,” என்று அனில் சொன்னார்.

“நமது நாடு பெரியது. எல்லாவற்றையும் அரசே பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் ஒரேயடியாக நடக்காது. ஆயினும் ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட எங்களை சந்திக்க எம்.எல்.ஏ வரவில்லை.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிஷன் சவான், தாப்டி கிராமத்தின் தகராறுகளைத் தீர்க்கும் ’தந்டாமுக்த்’ கமிட்டியின் முன்னாள் தலைவர்.

”யவத்மாலுக்கு வரும்போதெல்லாம் மோதி எங்கள் கிராமத்தின் பெயரை சொல்வார். இந்த ஆண்டு அவர் யவத்மாலுக்கு வந்தார். ஆனால் எங்கள் கிராமத்தின் பெயரை அவர் சொல்லவில்லை,” என்றார் அவர்.

இது குறித்து மேலும் தெரிவித்த அனில் ராத்தோர், “செய்தி சேனல்களால் எங்கள் கிராமம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. சேனல் வந்ததும், கிராமத்தில் எந்த பணியும் நடக்கவில்லை’ என்று கிராம மக்கள் கூறினர். இவ்வளவு வேலை செய்தபிறகும் ஊர் மக்கள் அதைப்பற்றி பேசவில்லை என்று தலைவர்கள் நினைக்கிறார்கள். இந்த தகவல் தலைமைவரை செல்கிறது. பிறகு தலைவர்கள் கிராமத்திற்காக எதுவும் செய்வதில்லை. எனவே நீங்கள் வெளியேறுங்கள்,” என்று சொன்னார்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, தாப்டி கிராமத்தில் விவசாயத்திற்கு கால்வாய்கள் மற்றும் கிணறுகள் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

2014க்குப் பிறகும் தற்கொலைப் போக்கு தொடர்கிறது

விவசாயப் பிரச்னைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வல்ல என்று பிரதமர் மோதி 2014ஆம் ஆண்டு இந்தக் கிராமத்தில் கூறியிருந்தார்.

“நாம் அனைவரும் சேர்ந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்போம். விவசாயிகள் மீது உணர்வுப்பூர்வமாக செயல்படும், கொள்கைகள் முற்போக்கானதாக இருக்கும், விவசாயிகளை பாதுகாக்கும், விவசாயிகளை முன்னேற்றும் அரசு டெல்லியில் அமையும் என்று நம்புகிறேன்,” என்று பிரதமர் கூறியிருந்தார்.

ஆனால் 2014க்குப் பிறகும் தாப்டி கிராமத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. கணேஷ் ராத்த்ப்ப்ரின் சித்தப்பா ராத்தோர் 2015 இல் தற்கொலை செய்து கொண்டார்.

“மோதி ஆட்சிக்கு வந்த பிறகு எனது சித்தப்பா விட்டல் ராத்தோர் 2015 இல் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்குப் பிறகு எங்களுக்கு அரசிடம் இருந்து நிதியுதவி கிடைத்தது,” என்று கணேஷ் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

கியானேஷ்வர் மான்கரின் விவசாயி சகோதரர் 2017 இல் தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயர் கைலாஷ் மான்கர். கடன் தொல்லையால் கைலாஷ் தற்கொலை செய்து கொண்டதாக கியானேஷ்வர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மகாராஷ்டிராவில் 427 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக யவத்மாலில் 48 தற்கொலைகள் நடந்துள்ளன என்று மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 பிப்ரவரி 28 ஆம் தேதி நரேந்திர மோதி யவத்மாலுக்கு வந்தார். இவ்விழாவில் பல்வேறு திட்டப்பணிகள் அவரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் யவத்மால் மக்களை மோதி பாராட்டினார்.

”10 ஆண்டுகளுக்கு முன்பு யவத்மாலுக்கு ‘சாய் பே சர்ச்சா’ நிகழ்ச்சிக்காக வந்தபோது, ​​நீங்கள் என்னை நிறைய ஆசீர்வதித்தீர்கள். பிறகு 2019 பிப்ரவரியில் யவத்மாலுக்கு வந்தேன். அப்போதும் என் மீது அன்பைப் பொழிந்தீர்கள். இப்போது ​​2024 தேர்தலுக்கு முன் நான் வளர்ச்சிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன். இப்போது நாடு முழுவதும் ஒரே முழக்கம் கேட்கிறது – ‘அப் கி பார், சார் சௌ பார்’( இந்த முறை, நானூறு தாண்டும்),” என்று மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.

“யவத்மாலில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். ஏழைகளுக்கு உறுதியான வீடுகள் கிடைத்து வருகின்றன. கிராமப் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு கிடைக்கிறது,” என்றார் மோதி.

”மேலும் கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சனைகளையும் தீர்க்க கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்,” என்றும் மோதி கூறினார்.

 'தேனீர் கலந்துரையாடல்'
படக்குறிப்பு, கிஷோர் திவாரியின் கேள்விகளுக்கு நரேந்திர மோதி பதிலளிக்கிறார்.

மோதியிடம் பேசிய நிபுணர் இப்போது என்ன நினைக்கிறார்?

‘சாய் பே சர்ச்சா’ நிகழ்ச்சியின் போது, ​​விவசாயத் துறையில் நிபுணரான கிஷோர் திவாரியுடன் பிரதமர் மோதி பேசினார். அவர் பல ஆண்டுகளாக விதர்பாவில் விவசாயம் தொடர்பாக பணியாற்றி வருகிறார். UPA-1 மற்றும் UPA-2 ஆட்சியின் போது ​​விதர்பாவில் சுமார் 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

விவசாயிகளின் தற்கொலைக்கு அரசின் கொள்கைகளே காரணம் என்று தோன்றினால், UPA அரசின் இந்த விவசாயி விரோதக் கொள்கைகளைத் தொடர்வீர்களா அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருந்து வேறு எதையாவது எதிர்பார்க்கலாமா? என்று பிரதமரிடம் அவர் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோதி, நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் பாசனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அப்போது பிரதமர் மோதி, “முழு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், விவசாயத்திற்கு ஆதரவான கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும். அடல் பிஹாரி வாஜ்பாய் எடுத்த எல்லா முயற்சிகளையும் வலுப்படுத்த பாஜக மற்றும் என்டிஏ விரும்புகின்றன” என்று கூறினார்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான கொள்கைகளை மோதி அரசு வலுப்படுத்தியிருக்கிறதா? என்று கிஷோர் திவாரியிடம் கேட்டபோது, “விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாக எனது அரசு செயல்படும் என்று மோதி கூறியிருந்தார். 2019ஆம் ஆண்டு வரை அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், 2019க்குப் பிறகு அது கைவிடப்பட்டது. 2019 முதல் 2024 வரை அரசின் திட்டங்களால் விவசாயிகளுக்கு அதிகம் ஏதும் நடக்கவில்லை. பணிகளை செய்துவிட்டதாக அரசு கூறிக்கொள்கிறது. மோதியின் ஆட்சியின்போதும் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்,” என்று அவர் பதிலளித்தார்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த அனிகேத் மற்றும் மீரா இப்போதும் அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மத்தியில் ஆட்சிக்கு வரும் எந்த அரசும் முக்கியமாக இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறனர்.

“அரசு முடிந்தவரை வேலையில் காலியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மேலும் அரசு விவசாயிகளுடன் நிற்க வேண்டும். சில திட்டங்கள் அரசிடமிருந்து வருகின்றன. ஆனால் விவசாயிகளுக்கு இந்த திட்டங்கள் பற்றி தெரிவதில்லை. திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு சொல்ல வேண்டும்,” என்று அனிகேத் கூறுகிறார்.

”எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அரசு விலை கொடுக்க வேண்டும்,” என்று அவரது தாய் மீரா குறிப்பிட்டார்.

நாங்கள் அனிகேத்தின் வீட்டை விட்டு வெளியே வரும்போது எங்களை வழியனுப்ப அவரும் அவருடைய தாயும் வீட்டிற்கு வெளியே வந்தனர். நாங்கள் அவர்களிடம் விடைபெறும் போது, ​​அனிகேத், “சார், உங்களுக்கு வேலை பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்” என்றார்.