இந்தியா: முஸ்லிம் சமூகத்தினரின் இட ஒதுக்கீடு எப்படி வழங்கப்படுகிறது? அதன் வரலாறு என்ன?

முஸ்லிம் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு எப்போது, எப்படி வழங்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
  • எழுதியவர், பாக்யஸ்ரீ ரௌத்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பிரதமர் நரேந்திர மோதி தனது தேர்தல் பேரணிகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் குறிவைத்து, முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதாக அக்கட்சி மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் நடந்த பேரணியில் பிரதமர் மோதி, “கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் ஃபத்வாவை வெளியிட்டு ஒரே இரவில் அனைத்து முஸ்லிம்களையும் ஓபிசிகளாக அறிவித்தது. ஓபிசிகளுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு மீது காங்கிரஸ் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் அதைs செயல்படுத்துவதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது,” எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கு முன்பும் ராஜஸ்தானில், “தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்டி), பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் குறைத்து முஸ்லிம்களுக்கு வழங்கியது,” என்று கூறியிருந்தார். ஆனால், முஸ்லிம் சமூகம் ஓபிசியில் இடஒதுக்கீடு பெறுவது புதிய விஷயம் அல்ல.

முஸ்லிம் சமூகத்தின் சில சாதிகள் ஏற்கெனவே ஓபிசியில் இடஒதுக்கீடு பெற்றுள்ளன.

ஆனால், பொதுவாக நாட்டில் முஸ்லிம் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு எப்படி வழங்கப்படுகிறது? முஸ்லிம் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?

எப்போது இடஒதுக்கீடு கிடைத்தது?

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி

ஓபிசி சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையை ஆய்வு செய்ய, பி. பி. மண்டல் தலைமையில் மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்டது. மொரார்ஜி தேசாய் நாட்டின் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் 1979ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நிறுவப்பட்டது.

இந்த ஆணையம் 1980இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது. ஆனால், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், 1989இல், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அப்போதைய பிரதமர் வி.பி.சிங் முடிவு செய்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் சில மாற்றங்களுடன் அதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.

பிறகு 3,743 சாதிகளைச் சேர்த்து, அவர்களுக்கு ஓபிசியில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதே மண்டல் கமிஷன் முஸ்லிம் சமூகத்தின் சில சாதிகளையும் ஓபிசியில் சேர்த்தது.

பின்னர், 1994ஆம் ஆண்டு மகாராஷ்டிர முதல்வராக சரத் பவார் இருந்தபோது, ​​மண்டல் கமிஷன் பரிந்துரைகளை மகாராஷ்டிராவில் அமல்படுத்தினார். மகாராஷ்டிராவில் ஓபிசிக்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதிலும், மகாராஷ்டிராவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில சாதிகள் ஓபிசியில் இடஒதுக்கீடு பெற்றுள்ளன.

மகாராஷ்டிராவில் ஓபிசியின் கீழ் வரும் முஸ்லிம் சாதிகள்

வி.பி. சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வி.பி. சிங்

மகாராஷ்டிராவில், முஸ்லிம்களில் கசாப்பு, குரேஷி, கசாப், லோஹர், மைதாசி உள்ளிட்ட முஸ்லிம்களின் சில சாதிகள் ஓபிசியின் கீழ் வருகின்றன.

இதுதவிர, முஸ்லிம் சமூகத்தின் சில சாதிகளுக்கு VJNT (B) மற்றும் VJNT (D) போன்ற இரண்டு இடஒதுக்கீடு பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

சரத் ​​பவார் காலத்தில் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது. ஆனால் பாஜக முதலமைச்சர் கோபிநாத் முண்டேவும் மகாராஷ்டிராவில் முஸ்லிம் ஓபிசிகளுக்கு ஆதரவாகப் பல முடிவுகளை எடுத்தார்.

முஸ்லிம் சமூகத்தின் நிபுணரான சர்பராஸ் அகமது கூறுகையில், அவரது காலத்தில் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், “எல்லா முஸ்லிம்களும் ஓபிசி அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள் என்பது இல்லை. முஸ்லிம்களிடையே பல சாதிகள் உயர் சாதி, பழங்குடி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வருகின்றன. எனவே, அனைத்து முஸ்லிம்களையும் ஓபிசி என்று கருத முடியாது,” என்றார்.

மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பாக இதுவரை என்ன நடந்தது?

சரத் பவார்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சரத் பவார்

சரத் பவார் முதலமைச்சராக இருந்தபோது மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டதால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில சாதியினர் ஓபிசியில் இடஒதுக்கீடு பெற்றனர். ஆனால், அதற்குப் பிறகும், கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையின் அடிப்படையில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது.

மகாராஷ்டிராவில் இதற்கான இயக்கங்கள் நடந்தன. இறுதியாக, 2009இல், மாநிலத்தின் அப்போதைய கூட்டணி அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை விசாரிக்க மஹ்மூத் உர் ரஹ்மான் குழுவை நிறுவியது.

அக்டோபர் 21, 2013 அன்று, அக்குழு முஸ்லிம் சமூகத்திற்கு 8 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. 2014 தேர்தலுக்கு முன்னதாக, பிருத்விராஜ் சௌஹான் அரசாங்கம் 9 ஜூலை 2014 அன்று முஸ்லிம் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை நிறைவேற்றியது.

இந்த நாளில் மராத்தா சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மராத்தா இடஒதுக்கீடு உயர்நீதிமன்றத்தில் நிற்காது. ஆனால், முஸ்லிம் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட கல்வி இட ஒதுக்கீட்டின் செல்லுபடியை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பிபிசி மராத்தியிடம் பேசிய வழக்கறிஞர் ஃபிர்தௌஸ் மிர்சா, “அப்போது முஸ்லிம் சமூகம் இடஒதுக்கீடு பெற முடியவில்லை, ஏனெனில் இந்த உத்தரவு ஆறு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருந்தது. மேலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, புதிய பாஜக-சிவசேனா அரசு இந்த அவசர சட்டத்தை சட்டமாக மாற்றவில்லை,” என்றார்.

முஸ்லிம் சமூக நிபுணர் ஹுமாயூன் முர்சல் அவருடன் உடன்படுகிறார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், “பிருத்விராஜ் சௌஹான் அரசு வழங்கிய இடஒதுக்கீடு மதத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அப்போதைய சிவசேனா-பாஜக அரசு இதைச் செய்தது. வெறும் அரசியலுக்காக முஸ்லிம் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்காதீர்கள்,” என்றார்.

இதற்குப் பிறகும், மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருடன் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மராத்தா இடஒதுக்கீட்டிற்காக ஆணையம் அமைக்கப்பட்டது.

பிப்ரவரி 20, 2024 அன்று, ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் மராத்தா சமூகத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது. ஆனால், முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பாக எந்த இயக்கமும் காணப்படவில்லை.

நாட்டில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?

மண்டல் கமிஷன் அமலில் உள்ள மாநிலங்களில் சில முஸ்லிம் சாதிகள் மத்திய பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் இடஒதுக்கீடு பெறுகின்றன.

பத்திரிகை தகவல் பணியகத்தில் (PIB) கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலி முஸ்லிம்கள் மற்றும் உத்தர பிரதேசம், பிகார், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில சாதிகளுக்கு ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

கேரளாவில் கல்வியில் 8 சதவீத இடங்களும், வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடங்களும் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்கூட, 90 சதவீத முஸ்லிம் சமூகம் இடஒதுக்கீட்டின் கீழ் வருகிறது. அதேநேரம், பீகாரில், முஸ்லிம் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு எப்போது, எப்படி வழங்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஆந்திராவில் முஸ்லிம் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைக் கலந்தாலோசிக்காமல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2005ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமும் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இட ஒதுக்கீடு வரம்பு 51 சதவீதத்தைத் தாண்டியது. எனவே, இந்த இட ஒதுக்கீடு நீதிமன்றத்தில் நிற்க முடியாது.

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் முஸ்லிம் இடஒதுக்கீடு 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால் 50 சதவீத இடஒதுக்கீடு என்ற வரம்பைத் தாண்டவில்லை. அதன் பிறகும் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. தற்போது விசாரணை நடந்து வருகிறது.

கர்நாடகாவில் இட ஒதுக்கீடு அளித்து அனைத்து முஸ்லிம்களையும் ஓபிசி என காங்கிரஸ் அறிவித்தது என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார். அப்படியென்றால் கர்நாடகாவில் முஸ்லிம் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கியது யார்?

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது யார்?

கர்நாடகாவில் இப்போதுதான் முஸ்லிம் சமூகம் இட ஒதுக்கீடு பெறுகிறது எனக் கருதக்கூடாது. பாஜகவுடன் இப்போது கூட்டணி வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தள அரசு, ஓபிசி பிரிவினரிடையே துணை ஒதுக்கீட்டை ஏற்படுத்தி முஸ்லிம் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது.

சின்னப்பா ரெட்டி கமிஷன், ‘பிரிவு 2’ மூலம் ஓபிசிக்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பரிந்துரை செய்தது.

இதற்குப் பிறகு, 90களில், காங்கிரஸ் ஆதரவு பெற்ற வீரப்ப மொய்லி அரசு, ஓபிசியில் ‘பிரிவு 2பி’-யை உருவாக்கி, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய பட்டியல் சாதியினருக்கு 6 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது.

இதில் முஸ்லிம் சமூகத்திற்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பைத் தாண்டியதால், உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்தது. இதையடுத்து வீரப்ப மொய்லி மற்றும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், ANI

ஹெச்.டி.தேவே கௌடா 1994இல் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார். 1995இல், முந்தைய அரசின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்து அமல்படுத்தினார்.

பௌத்தம் மற்றும் கிறித்தவத்தைக் கடைப்பிடிக்கும் பட்டியல் சாதியினர் ‘1 மற்றும் 2A’ வகைகளாகவும், முஸ்லிம்கள் 2B வகைகளாகவும் மறுவகைப்படுத்தப்பட்டனர். இதற்குப் பிறகு, மாநில அரசு வேலை மற்றும் கல்வியில் முஸ்லிம் சமூகத்தினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அப்போதைய முதல்வர் பொம்மை ரத்து செய்தார். பின்னர் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

அமித் ஷா - நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

முஸ்லிம் சமூகத்தினரிடையே இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. அரசமைப்பு சட்டப்படி இந்த சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா?

மகாராஷ்டிராவின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீ ஹரி அனே, “அரசமைப்புச் சட்டத்தின்படி, மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எங்கும் இடமில்லை,” என்கிறார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், “அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குத் தனி உரிமைகள் உள்ளன. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் அதன் கீழ் வரலாம் என்றால் சிறுபான்மை அல்லது பிற்படுத்தப்பட்டோர் அடிப்படையில் இடஒதுக்கீடு பெறலாம்.

ஆனால், இடஒதுக்கீடு மட்டும் இருக்க முடியாது. ஆனால், அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 15 மற்றும் 16இன் கீழ் மதத்தின் அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது. அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லைம்,” என்று தெரிவித்தார்.