கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு – வரலாற்றை மாற்றி எழுதிய கொல்கத்தா அணி

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம், SPOORTZPICS

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 தொடரில் அனைத்து அணிகளும் 10 ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில் எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும், வெளியேறும் என்று தெரியாமல் இருந்து வந்தது.

அனைத்து அணிகளுக்குமே வாய்ப்புகள் திறந்திருந்ததால், எந்தப் போட்டியிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், நேற்றைய கொல்கத்தா-மும்பை ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறவுள்ளது.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் பல போட்டிகளில் விளையாடியிருந்தாலும், மும்பை அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது 12 ஆண்டுக்குப் பின் சொந்த மண்ணில் வைத்து மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இது 4வது முறை. ஒரே போட்டியில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதற்கு முன் 2018, ஏப். 24 (மும்பை-சன்ரைசர்ஸ்), 2017 ஏப். 23 (கொல்கத்தா-ஆர்சிபி), 2010 ஏப். 5 (டெக்கான்-ராஜஸ்தான்) ஆகிய போட்டிகளில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளன. அதற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கின்றன.

கொல்கத்தா அணி 12 ஆண்டுகள் கழித்துப் பெற்ற வெற்றி

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம், SPORTZPICS

வெற்றிக்குப் பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், “நாங்கள் சரியான நேரத்தில் கதவைத் தட்டியிருக்கிறோம். நாங்கள் தோற்றுவிட்டோம் என தொடக்கத்தில் பேசினார்கள். 12 ஆண்டுகளாக வான்ஹடேவில் கொல்கத்தா வென்றதில்லை. இன்று அந்தப் பெயரை மாற்றியுள்ளோம்,” என்றார்.

தங்களுக்குச் சிறப்பாக உதவியதாகவும் மணிஷ் பாண்டே கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்ததாகவும் தெரிவித்தார் ஸ்ரேயாஸ் அய்யர்.

“எந்த ஸ்கோர் கிடைத்தாலும் டிபெண்ட் செய்ய வேண்டும் என வீரர்களிடம் தெரிவித்தேன். சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அற்புதம். லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறவிட்டனர். வெங்கடேஷ் பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

வலுப்பெற்ற ப்ளே ஆஃப் வாய்ப்பு

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை நன்கு பிரகாசப்படுத்திக் கொண்டது. இதுவரை 10 போட்டிகளில் ஆடிய கொல்கத்தா 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில், நிகர ரன்ரேட்டில் 1.098 என வலுவாக இருக்கிறது.

புள்ளிப் பட்டியலில் உள்ள எந்த அணியையும்விட நிகர ரன்ரேட்டில் வலுவாக இருப்பது கொல்கத்தா என்பதால், இன்னும் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலே கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும்.

கொல்கத்தா அணிக்கு இனி லக்னெள(மே 5), மும்பை(மே11) குஜராத்(மே13) ராஜஸ்தான்(மே 19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. இதில் மும்பை அணியுடன் வரும் 11ஆம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது முறையாக மோதுகிறது. இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னெள அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு சவாலாக இருக்கக்கூடும்.

கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம், SPORTZPICS

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய கணக்குப்படி, ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால் டாப்-3 அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகள் தாங்களே முன்வந்து தோற்க வேண்டும், இவையெல்லாம் நடந்தால் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை.

“மோசமான கேப்டன்சி, அணிக்குள் குழுவாகப் பிரிந்திருத்தல், மோசமான வீரர்கள் தேர்வு, பலமான பந்துவீச்சின்மை போன்றவைதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்குக் காரணம்,” என்று விமர்சிக்கப்படுகிறது.

இதற்கு முன் நடந்த பல சீசன்களில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோற்றாலும், மீண்டு வந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை சென்றுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்சியில் இது பலமுறை நடந்துள்ளது. ஆனால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி “அப்படி மீண்டெழ வேண்டுமென்ற உணர்வற்று இருந்ததே தோல்விக்கான பிரதான காரணம்” என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகள் மட்டுமே மும்பையால் பெற முடியும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்துக்கு இந்த முறை 16 புள்ளிகள் வரை போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மும்பையின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது.

ஆட்டநாயகன் வெங்கடேஷ்

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம், SPORTZPICS

கொல்கத்தா அணி 169 ரன்கள் எனும் கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கும், பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வதற்கும் முக்கியக் காரணமாக முதுகெலும்பாக இருந்தவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர்.

கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மணிஷ் பாண்டேவுடன் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெங்கடேஷ் அணியை மீட்டெடுத்தார். இறுதியில் 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை 5 ஓவர்களில் இழந்தாலும், 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 83 ரன்கள் என ரன்ரேட்டை குறையவிடாமல் வெங்கடேஷ், மணிஷ் பாண்டே பார்த்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

குறிப்பாக வெங்கடேஷ்-மணிஷ் பாண்டே ஆடிய ஆட்டம்தான் ஆட்டத்தின் உயிராக இருந்தது. இருவரும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையாமல் கொண்டு சென்றனர். மணிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தாலும், வெங்கடேஷ் 20வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆட்டமிழந்தார்.

டிபெண்ட் செய்த பந்துவீச்சாளர்கள்

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம், SPORTZPICS

அதேபோல ஒரு கட்டத்தில் ஆட்டம் கொல்கத்தா அணியின் கையைவிட்டு நழுவுவதுபோல் இருந்தது. களத்தில் சூர்யகுமார், டிம் டேவி என இரு ஆபத்தான பேட்டர்கள் இருந்தபோது மும்பை வெற்றிக்கு 28 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது.

ஆட்டம் எந்த நேரத்திலும் மும்பை பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க், ரஸல் வீசிய ஓவர்கள் ஆட்டத்துக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின.

குறிப்பாக மிட்ஷெல் ஸ்டார்க் 3.5 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். வருண், நரைன் இருவரும் மும்பை அணியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து ரன்ரேட்டை சுருக்கினர். இருவரும் 8 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆண்ட்ரே ரஸல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 5 பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு பேட்டர்கள் பலம் அதிகம் இருக்கும் மும்பை அணியை மும்பை மைதானத்தில் கொல்கத்தா சுருட்டியது பாராட்டுக்குரியது.

பும்ரா சரியாக பயன்படுத்தப்படவில்லையா?

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம், SPORTZPICS

கொல்கத்தா அணியின் 5 விக்கெட்டுகளை ஆட்டத்தின் முதல் 37 பந்துகளிலேயே எடுத்தும்கூட மும்பை அணி தோல்வியடைந்துள்ளது.

ஆறாவது விக்கெட்டுக்கு வெங்கடேஷ்-மணிஷ் பாண்டேவை 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டதுதான் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. பும்ரா ஏற்கெனவே ஒரு ஓவரை விளையாட முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக வீசி 2 ரன்கள் மட்டுமே அளித்திருந்தார். துல்லியமாகப் பந்துவீசும் பும்ராவை தொடர்ந்து பந்துவீச வைத்து வெங்கடேஷ்-பாண்டே பார்ட்னர்ஷிப்பை உடைத்து எளிதாக ஆட்டத்தை முடித்திருக்கலாம்.

வெங்கடேஷ்-பாண்டே செட்டிலான பிறகு நடுப்பகுதி ஓவர்களை வீச பும்ரா அழைக்கப்பட்டபோது, அவரின் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, சிக்ஸரை விளாசினார்.

ஆனால் டெத் ஓவருக்கு பும்ரா தேவை என்று நினைத்து பும்ராவுக்கு கடைசி ஓவர்களை ஹர்திக் பாண்டியா வழங்கினார். 18வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கிய பும்ரா, கடைசி ஓவரில் வெங்கடேஷ் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பும்ராவை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஹர்திக் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

‘தொடர்ந்து போராடுவோம்’

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம், SPORTZPICS

மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது என்று தெரிந்தபின், பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை பேட்டிங்கில் அமைக்கவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதற்கு பதிலளிக்க அவகாசம் தேவை என்றார்.

“இப்போது அதுபற்றி கூற முடியாது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை நன்கு பயன்படுத்தினர். நான் தவறு செய்யாமல் இருந்திருந்தால், விக்கெட் நல்ல விக்கெட்டாக இருந்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்தது.

இந்த ஆட்டத்தில் என்ன தவறுகள் செய்தோம் என்று ஆலோசிப்போம், இன்னும் சிறப்பாக வரும் போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது எனச் சிந்திப்போம். தொடர்ந்து போராட வேண்டும், அதைத்தான் எனக்கு நானே கூறிக்கொள்வது. வாழ்க்கை என்பது சவாலானது. சவால்களை எதிர்கொண்டால்தான் சுவரஸ்யமாக இருக்கும்,” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம், SPORTZPICS

மும்பையின் தோல்விக்கு காரணம் பேட்டர்களா?

சூர்யகுமார் யாதவ்(56), டிம்டேவிட் (24) ரன்களை தவிர்த்துப் பார்த்தால் 80 ரன்கள்கூட தேறாது. எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 19.18 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பையில் விளையாட பிசிசிஐ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாததும் பேசுபொருளாகியுள்ளது.

பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணி இஷான் கிஷன்(13), நமன்திர்(11), ரோஹித் சர்மா(11) விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் திலக் வர்மா(4), நேஹல் வதேரா(6), ஹர்திக் பாண்டியா(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மும்பை வான்ஹடே மைதானம் குறித்து நன்கு தெரிந்தும், சொந்த மைதானத்தில்கூட 170 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் மும்பை அணி தோற்றதற்கு தொடக்க வரிசை பேட்டர்களும், நடுவரிசை பேட்டர்களும் செயல்படாமல் போனதே முக்கியக் காரணம்.