தூர்தர்ஷன் லோகோவில் நிறத்தை மாற்றியது ஏன்? தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம்

தூர்தர்ஷன் லோகோ

பட மூலாதாரம், @DDNEWSHINDI

அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தூர்தர்ஷனின் செய்தி சேனலான டிடி நியூஸின் லோகோ நிறத்தை சிவப்பில் இருந்து ‘காவி’ நிறமாக மாற்றியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் இவ்வாறு தூர்தர்ஷனின் லோகோ நிறம் மாற்றப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மாநிலங்களவை உறுப்பினரும் பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை அதிகாரியுமான ஜவஹர் சிர்க்கார், “இது பிரசார் பாரதி அல்ல, பிரசார பாரதி” எனக் கூறியுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரசார் பாரதியின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் திவேதி மறுத்துள்ளார். “பிரகாசமான நிறங்களை லோகோவில் பயன்படுத்துவது வியாபார உத்திக்காக மட்டுமே, அதில் அரசியல் தொடர்பு இல்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ‘தூர்தர்ஷன் பொதிகை’ தொலைக்காட்சியானது ‘டிடி தமிழ்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில் அதன் லோகோவும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

“கேரள மாநிலத்திற்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரியை ஒளிபரப்பும் முடிவை தூர்தர்ஷன் உடனடியாகக் கைவிட வேண்டும். பல மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக, பரஸ்பரம் சகோதரர்களைப் போன்று வாழும் மாநிலம் கேரளா. சங்பரிவாரின் வகுப்புவாத அஜண்டாவுக்கு தூர்தர்ஷன் கைப்பாவையாக செயல்படக்கூடாது” என அவர் கூறியிருந்தார்.

ஆனால் அதையும் மீறி, ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 8 மணிக்கு அப்படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து தூர்தர்ஷன் செய்தி சேனல் சர்ச்சையில் சிக்குவது ஏன்? எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல தூர்தர்ஷன் செய்தி சேனல் காவிமயமாக்கப்படுகிறதா?

தூர்தர்ஷனின் அறிவிப்பு

தூர்தர்ஷன் லோகோ

பட மூலாதாரம், DDTamilNews/X

இந்திய அரசின் அதிகாரபூர்வ அரசு தொலைக்காட்சியாக செயல்பட்டு வருகிறது தூர்தர்ஷன். அதன் லோகோ நிறம் மாற்றம் குறித்து தூர்தர்ஷனின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“எங்களது கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை, இப்போது நாங்கள் ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத ஒரு செய்தி பயணத்திற்குத் தயாராகுங்கள், புதிய டிடி செய்திகளின் அனுபவத்தைப் பெறுங்கள்!

வேகமான செய்தியைவிட துல்லியமான செய்திக்கு முன்னுரிமை மற்றும் பரபரப்பான செய்தியைவிட உண்மைக்கு முன்னுரிமை, தூர்தர்ஷன் செய்தி என்றாலே உண்மைதான்,” என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2012 முதல் 2014 வரை பிரசார் பாரதியின் தலைமை அதிகாரியாக இருந்தவர் ஜவஹர் சிர்க்கார். இவர் தற்போது திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். டிடி நியூஸின் லோகோ காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியவர், “இந்திய அரசின் சேனலான தூர்தர்ஷனின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னத்திற்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது.”

“ஒரு முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக, தூர்தர்ஷன் காவி மயமாக்கப்படுவதை நான் கவலையுடன் கவனித்து வருகிறேன். இனி இது பிரசார் பாரதி அல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரசார பாரதி.”

“தூர்தர்ஷன் தொடர்பான அனைத்தும் இப்போது காவி நிறமாகிவிட்டது. இங்கு, ஆளுங்கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்ச ஒளிபரப்பு நேரம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இப்போது இடம் கிடைப்பதில்லை.”

“ஆளும் பாஜக இதையெல்லாம் செய்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை அரங்கத்தின் நிறமும் மாற்றப்பட்டுள்ளது. ஊழியர்களின் சீருடைகூட காவி நிறமாக மாறியுள்ளது,” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார், “நாடு முழுவதும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தூர்தர்ஷன் லோகோ திடீரென காவி நிறத்துக்கு மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது.

மேலும் இந்த நடவடிக்கை, தேசிய பொது ஒளிபரப்பாளரின் பா.ஜ.க சார்பு பற்றி உரக்கப் பேசுகிறது. தேர்தல் நேரத்தில் இத்தகைய காவி சார்பு தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? தேர்தல் ஆணையம் இதை உடனடியாகத் தடுத்து, தூர்தர்ஷன் லோகோவை மீண்டும் பழைய நிறத்துக்கு மாற்றியமைக்க வேண்டும்,” என்று அதில் கூறியுள்ளார்.

காவிமயமாக்கப்படுகிறதா தூர்தர்ஷன்?

தூர்தர்ஷன் லோகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதியின் உரையை தூர்தர்ஷனில் காணும் பள்ளி மாணவர்கள்.

இந்த சர்ச்சை குறித்து தூர்தர்ஷனில் பணிபுரியும் பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசினார்.

“தூர்தர்ஷன் 90களில் ஆரம்பிக்கப்பட்ட போதே, ஆளும் அரசின் சேனல் என்ற முத்திரையுடன்தான் இது தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கப்பட்ட போது இந்த சேனலின் நோக்கம் என்ன, அடுத்த கட்ட வளர்ச்சி என்ன என்பது குறித்த புரிதல் இங்கிருந்த அதிகாரிகளுக்கு இல்லை.

அப்போது வேறு எந்த சேனல்களும் பெரிதாக இல்லை என்ற காரணத்தால் தூர்தர்ஷன் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், 2000 காலகட்டத்தில் தனியார் சேனல்கள் அதிகரிக்கத் தொடங்கின. அப்போதும்கூட இதில் மாற்றம் கொண்டு வர யாரும் முயற்சிகள் எடுக்கவில்லை. அடுத்தடுத்து வந்த அரசுகளும் இதைக் கண்டுகொள்ளவில்லை.”

“எப்படி பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அழித்தார்களோ, அதேதான் தூர்தர்ஷனுக்கும் நடந்தது. இங்கு என்ன நடந்தாலும் கேட்க யாரும் இல்லை. இந்த தைரியம்தான் குறிப்பிட்ட சிலரின் கைக்குள் அனைத்தும் செல்லக் காரணம்,” என்கிறார் அந்த அதிகாரி.

தொடர்ந்து பேசிய அவர், “எடுத்துக்காட்டாக, தூர்தர்ஷனில் ஒரு தேர்தல் பிரசாரக் காணொளி வருகிறது என்றால் அதில் எல்லோருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு மாநிலத்தில் ஒளிப்பரப்படும் தேர்தல் காணொளியில், எதிர்கட்சியைச் சேர்ந்த அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு ஏழாவது இடம். ஆனால் எந்தப் பதவியிலும் இல்லாத பாஜக தலைவர் ஒருவருக்கு மூன்றாவது இடம் மற்றும் அதிக நேரமும் வழங்கப்படுகிறது என்றால் இதில் என்ன சம உரிமை உள்ளது?”

“இங்கு நிரந்தரமாகப் பணியில் உள்ள அதிகாரிகள் தேர்வு எழுதி வந்தவர்கள்தான். ஆனால் இப்போது ஒப்பந்தப் பணிக்காக உள்ளே வருபவர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சிபாரிசு மூலமாக வருகிறார்கள். பின்னர் அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தில் செயல்படுகிறார்கள்.”

“ஒரு கட்சிக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் தூர்தர்ஷனில் அனைத்துப் பணிகளும் கிடைக்கும். தமிழ் தூர்தர்ஷனிலும் இதுதான் நடக்கிறது. சமீபத்தில் ஒரு பிரபலத்திற்கு மெகா தொடர் எடுப்பதற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அவர் இப்போது பாஜகவில் இணைந்துவிட்டார்.”

“இங்குள்ள ஊழியர்களும் இத்தகைய ஒரு கட்சி சார்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிகார பலத்திற்கு முன்னால் அவர்களின் குரல்கள் எடுபடுவதில்லை. தூர்தர்ஷனை முன்னேற்ற எத்தனையோ ஆக்கப்பூர்வ வழிகள் உள்ளன. அதை விட்டுவிட்டு, இது போன்ற காவிமயமாக்கலால் எந்தப் பயனும் இல்லை,” என்றார் அந்த அதிகாரி.

‘தொடர்ந்து காவிமயமாகும் இந்திய ஊடகங்கள்’

தூர்தர்ஷன் லோகோ

பட மூலாதாரம், AadhavanDheetchanya/Facebook

படக்குறிப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா

“இந்திய ஊடகங்கள் காவிமயமாவது தொடர்ந்து சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்று. தூர்தர்ஷனின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவனித்தாலே அது எப்போதோ காவி மயமாகிவிட்டது என்பது தெளிவாகப் புரியும். இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது, அவ்வளவு தான்,” என்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா.

“ஐஆர்சிடிசியின் செயலி, வந்தே பாரத் ரயில்கள், இதெல்லாம் ஒருசில உதாரணங்கள்தான், இப்படி எங்கும் காவியைக் கொண்டு வருவதன் மூலம் காவிமயமாக்கலை அவர்கள் சகஜமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாற்ற முயல்கிறார்கள்.”

“பாடப் புத்தகத்தில் அவர்களுக்கு ஆதரவான கருத்துகளைப் புகுத்துவது, அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும்போது ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும் எனச் சொல்வது, அது போலத்தான் இதுவும். தூர்தர்ஷன் மட்டுமல்ல, நம்மைச் சுற்றிப் பாருங்கள், இந்த பத்து ஆண்டுகளில் என்னவெல்லாம் காவியாகியிருக்கிறது என்று தெரியும்.”

மேலும், “தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும் பிரதமர், எதிர்க்கட்சிகள் அசைவம் சாப்பிட்டார்கள், கோவில் திறப்பு விழாவுக்கு வரவில்லை எனக் கொஞ்சம்கூட பிரதமருக்கான மாண்பு இல்லாமல் பேசுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தூர்தர்ஷன் லோகோ காவி நிறத்திற்கு மாறியிருப்பது பெரிய விஷயமில்லை,” என்கிறார் அவர்.

‘அரசு சேனலில் கேரளா ஸ்டோரி ஒளிபரப்பியது தவறு’

“கேரளா ஸ்டோரி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, அரசு செய்தி சேனலான தூர்தர்ஷனில், தேர்தல் நேரத்தில் அப்படத்தை ஒளிப்பரப்பினார்களே. அதையே தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. எனவே தூர்தர்ஷனின் இந்தப் புதிய அவதாரம் என்பது கண்டிப்பாக காவி அவதாரம்தான்,” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.

“ஒரு மாநிலத்திற்கு எதிரான, ஒரு சமூகத்திற்கு எதிரான திரைப்படம் எனத் தெரிந்தும் அதை அரசு செய்தி சேனலில் ஒளிப்பரப்பியது ஏன்?” என்ற கேள்வியை முன்வைக்கும் ப்ரியன், “தூர்தர்ஷன் யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்று தேர்தல் ஆதாயத்திற்காக அதைச் செய்யும்போதே தெரிய வேண்டாமா!” என்று கூறுகிறார்.

நாடாளுமன்றத்துக்கே காவி அடிக்கும்போது, இது மிகவும் சாதரணமானதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னும் ஆறு கட்ட தேர்தல்கள் மீதம் இருப்பதால், “ஒரு பெரும்பான்மை சமூகத்திற்கு நாங்கள் ஆதரவானவர்கள், சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்பதை மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் பதிவு செய்துகொண்டே இருக்க இதுபோன்ற உத்திகளைக் கையிலெடுப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்தது இது மட்டும்தான்” என்று கூறுகிறார்.

தூர்தர்ஷன் லோகோ
படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.

தூர்தர்ஷன் லோகோவில் நிறத்தை மாற்றியது ஏன்?

பிரசார் பாரதியின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் திவேதி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். புதிய லோகோவில் இருப்பது ஆரஞ்சு நிறம் என்றும், அழகுக்காக மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“இது ஆரஞ்சு நிறம். ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பு, ஜி20க்கு முன்னதாக டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை இதே நிறத்தில் புதுப்பித்தோம். அதன் தொடர்ச்சியாகத்தான் சேனலுக்கான புதிய கிராபிக்ஸை முடிவு செய்தோம்.”

“காட்சி அனுபவ ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு புதிய அவதாரத்தில் டிடி நியூஸை கொண்டு வரும் பணியைத் தொடங்கியுள்ளோம். லோகோ மட்டுமில்லாது புதிய அரங்குகள், நவீன சாதனங்கள் எனப் பல மாற்றங்கள் வந்துள்ளன.”

“இதற்கு முன்பு நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களை தூர்தர்ஷன் லோகோவில் பயன்படுத்தியுள்ளோம். பிரகாசமான நிறங்களை லோகோவில் பயன்படுத்துவது விளம்பர உத்தியின் ஒரு பகுதி. எனவே இது சேனலின் வளர்ச்சிக்காக மட்டுமே. அரசியல் தொடர்பு ஏதும் இல்லை,” என்றார்.