இந்தியா, ஜப்பானை விமர்சித்த ஜோ பைடன்: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில்

நட்பு நாடுகளான இந்தியா மற்றும் ஜப்பானை ``அயல்நாட்டு வெறுப்பு கொண்டவர்கள்” என விமர்சித்த ஜோ பைடன்!

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர்
  • பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் மற்றும் இந்தியாவில் அயல்நாட்டு வெறுப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் மற்றும் இந்தியாவை “அயல்நாட்டு வெறுப்பு” கொண்ட நாடுகள் என விமர்சித்துள்ளார். “புலம்பெயர்ந்தவர்களை விரும்பாத” நாடுகள் என்று குறிப்பிட்டு ரஷ்யா மற்றும் சீனாவின் பெயர்களுடன் சேர்த்து ஜப்பான் மற்றும் இந்தியாவையும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசு பயணத்தின்போது ஜோ பைடன் அமெரிக்க-ஜப்பான் கூட்டணியை “உடைக்க முடியாதது” என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்வுக்கு சில வாரங்களுக்குப் பிறகு ஜப்பான் மீதான இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இந்தியா, அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளி நாடு என்ற போதிலும், அங்கு நிகழும் மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் தொடர்பான சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவலையை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் ஜப்பான் மற்றும் இந்தியா மீது பைடன் எந்தவித குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

புதன்கிழமை மாலை, பைடன் ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். பெரும்பாலும் ஆசிய-அமெரிக்க பார்வையாளர்கள் இருந்த அந்த நிகழ்வில் பேசிய பைடன், “இந்த நவம்பரில் நடக்கவீருக்கும் அமெரிக்க தேர்தல் `சுதந்திரம், அமெரிக்கா மற்றும் ஜனநாயகம்’ ஆகியவற்றைப் பிரதானமாகக் கொண்டது. ஏனென்றால் நாங்கள் புலம்பெயர்ந்தவர்களை வரவேற்கிறோம்,” என்று கூறினார்.

ஜோ பைடன் - நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோ பைடன் – நரேந்திர மோதி (கோப்புப்படம்)

“சிந்தித்துப் பாருங்கள். சீனா ஏன் பொருளாதாரத்தில் மிகவும் மோசமாகப் பின்தங்கியுள்ளது? ஜப்பான் ஏன் சிக்கலில் உள்ளது? ரஷ்யாவில் என்ன சிக்கல்? இந்தியாவில் ஏன் சிக்கல்? ஏனெனில் அவர்கள் அதீத தேசியவாத உணர்வு கொண்டவர்கள். அவர்கள் பிற நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை விரும்பவில்லை,” என்றும் பேசினார்.

இதுகுறித்து கருத்து கேட்க, ஜப்பான், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் அமெரிக்க தூதரகங்களை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால் உடனடியாக பதில் கிடைக்கவில்லை. மற்றொருபுறம் அமெரிக்காவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் பைடனின் கருத்தை விமர்சித்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில், டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய அமெரிக்க முன்னாள் துணைப் பாதுகாப்பு செயலாளரான எல்பிரிட்ஜ் கோல்பி, ”ஜப்பானும் இந்தியாவும் இரண்டு உறுதியான மற்றும் முக்கியமான நட்பு நாடுகள். நாம் அவர்களிடத்தில் மரியாதையுடன் பேச வேண்டும், குறுகிய மனம் கொண்ட ‘முற்போக்கு கருத்துகளை’ நமது நட்பு நாடுகள் மீது பயன்படுத்துவது முட்டாள்தனமானது,” என்று பதிவிட்டார்.

ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறைவாக இருந்தாலும், ரஷ்யாவை பொறுத்தவரை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பெரிதும் நம்பியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள்.

ஜப்பான் மற்றும் சீனாவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறது. ரஷ்யாவில் யுக்ரேனுடனான அதன் போர் தொடர்வதால் சர்வதேச தடைகளை மீறி, அதன் ராணுவமயமாக்கப்பட்ட பொருளாதாரம் கடந்த ஆண்டு சற்று மீண்டு வந்தது. இதற்கிடையில், இந்தியாவின் நிலையான வளர்ச்சியால் 2023இல் பிரிட்டனை விஞ்சி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங்

பைடனின் கருத்துகள் இழிவு செய்யும் அர்த்தத்தில் இருப்பதாக எழுந்த விமர்சனத்தை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ”பைடன் அமெரிக்க குடியேற்றக் கொள்கையின் மகத்துவத்தைப் பற்றித்தான் பேசினார்,” என்று கூறினார்

“அவர்களின் நட்பு மற்றும் ஒத்துழைப்பை அதிபர் பைடன் எந்தளவுக்கு மதிக்கிறார் என்பது நமது நட்பு நாடுகளுக்குத் தெரியும். நட்பு நாடுகளின் யோசனைகளை எவ்வளவு முழுமையாக அவர் மதிக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்,” என்று கிர்பி கூறினார்.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட்டில் தெற்காசிய நிபுணரான சதானந்த் துமே பிபிசியிடம் பேசுகையில், ”பைடனின் கருத்துகள் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அங்கு தேசியவாத எழுச்சியை அனுபவிப்பதால் பைடனின் கருத்துகள் மோசமான வரவேற்பைப் பெறும். பைடன் இந்தியாவுடன் நட்பானவர் அல்ல என்ற இந்தியர்களின் ஒரு பிரிவினரின் கருத்தை இது உறுதிப்படுத்தும். சீனா போன்ற சர்வாதிகார நாடுகளுடன் இணைத்து பேசப்படுவதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்று கூறினார்.

விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

ஏப்ரல் மாத பிற்பகுதியில், அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் “இந்தியாவில் ‘குறிப்பிடத்தக்க’ மனித உரிமை மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன, அங்கு அரசாங்கம் ஒரு சார்புடையதாக உள்ளது. இது இந்தியாவைப் பற்றிய மிக மோசமான புரிதலைப் பிரதிபலிக்கிறது” என்று கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பைடனின் கருத்துகள் “அமெரிக்க-இந்திய உறவுகளை கணிசமாகப் பாதிக்க வாய்ப்பில்லை” என்றும் துமே கூறினார்.

ஜப்பான் பல ஆண்டுகளாக உலகின் மிகக் கடுமையான குடியேற்றக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்குள் வருவதை எளிதாக்குவதன் மூலம், படிப்படியாகக் குறைந்து வரும் மக்கள் தொகைக்குத் தீர்வு காண அது சமீபத்தில் முயற்சி செய்தது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தனது 2020 பிரசாரத்தின்போது மீண்டும் மீண்டும் அயல்நாட்டு வெறுப்பு கொண்டவர் என்று வகைப்படுத்திய பைடன், பல்வேறு தரப்பினரின் கோபத்திற்கு மத்தியில் குடியேற்றத்திற்கு அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கும் அணுகுமுறையைக் கையாள்கிறார். எனவே அமெரிக்க-மெக்சிகோ எல்லைப் பிரச்னையை அவர் கையாள்வது தொடர்பாக இருதரப்பில் இருந்தும் அவர் மீது அதிருப்தி வெளிப்பட்டது.

ஜெய்சங்கர் கூறியது என்ன?

இந்தியா, ஜப்பானை விமர்சித்த ஜோ பைடன்: 'அயல்நாட்டு வெறுப்பு அதிகரித்துள்ளதாக' கூறியதன் பின்னணி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

இந்தியா மற்றும் ஜப்பானை ‘அயல்நாட்டு வெறுப்பு’ கொண்ட நாடுகள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை எகனாமிக் டைம்ஸிடம் பேசிய அவர், “முதலாவதாக, நமது பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. இந்தியா எப்போதும் ஒரு தனித்துவமான நாடாக இருந்து வருகிறது. உண்மையில் சொல்ல வேண்டுமெனில், உலக வரலாற்றில் இந்திய சமூகம் மிகவும் அன்பான சமூகமாக இருந்திருக்கிறது. அதனால்தான், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்,” என்றார்.

அந்தப் பேட்டியில், ஜெய்சங்கர், இந்தியாவின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், இந்தியா பிற நாட்டு மக்களை எவ்வாறு வரவேற்கிறது என்பதை விளக்கினார். சிக்கலான சூழலில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காகத்தான் இந்தியாவில் இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் (CAA) சட்டம் கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.

‘நாட்டுக்குள் வர வேண்டியவர்களை வரவேற்கவும், வருவதற்கு உரிமை உள்ளவர்களை வரவேற்கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ என்றார்.

இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்திய அவர், “சிஏஏ காரணமாக இந்தியாவில் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் குடியுரிமையை இழக்க நேரிடும் என்று பகிரங்கமாகப் பலர் கூறினர். இருந்தபோதிலும், இந்தியாவில் யாரும் தனது குடியுரிமையை இழக்கவில்லை,” என்று கூறினார்.

“மேற்கத்திய ஊடகங்கள் பல உலகளாவிய நடப்புகளை அதன் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப திரித்துச் செய்தியாக்குகின்றன. இந்த வரிசையில் அவை தற்போது இந்தியாவைக் குறிவைப்பதாக” ஜெய்சங்கர் கூறினார்.