சேலம்: பட்டியலின மக்கள் கோவில் நுழைவுக்கான பேச்சுவார்த்தையில் கலவரம் வெடித்தது ஏன்? பிபிசி கள ஆய்வு

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.

கலவரத்திற்கான உண்மை காரணம் என்ன? பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது தெரிய வந்தது என்ன?

கலவரத்தில் நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு மிக அருகிலுள்ள நாச்சினம்பட்டியில் 200 பட்டியலின குடும்பங்கள் உள்ளன.

இரு கிராமத்தின் மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இந்தாண்டுக்கான திருவிழா சில நாட்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன

இந்நிலையில், மே 1ஆம் தேதி இரவு, “ஆதிக்க சாதியினர் தங்களை கோவிலுக்குள்விட மறுக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டிய பட்டியலின மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் பிரச்னைக்குத் தீர்வு காண, மே 2ஆம் தேதி இருதரப்பையும் அழைத்த வருவாய்த்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இருதரப்பும் சமரசம் அடையாத நிலையில், அன்று மதியமே இருதரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த நகைக்கடை, காய்கறிக்கடை என 5 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், இது கலவரமாக மாறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் அங்கு என்ன நடந்தது? கலவரத்திற்கான காரணம் என்ன? என்பதை அறிய பிபிசி தமிழ் தீவட்டிப்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.

இதேபோன்ற பிரச்னை ஏற்பட்ட திருவண்ணாமலை அருகே உள்ள அம்மன் கோவில் ஒன்றில், கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்யத் தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.

‘இருதரப்பிலும் பாதிப்பு’

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன

நாங்கள் தீவட்டிப்பட்டி மற்றும் நாச்சினம்பட்டிக்குச் சென்றபோது, இரு கிராமங்களிலும் திரும்பிய திசையெல்லாம் போலீசாரும், திருவிழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் காட்சியளித்தன.

நாச்சினம்பட்டி நுழைவுப்பகுதியில் பரபரப்பான அந்த சாலையில், கலவரத்திற்கு சாட்சியாகத் தீக்கிரையான கடைகளும் அந்தக் கடைகளில் இருந்த பொருட்களும் இருந்தன.

தீக்கிரையான நகைக்கடைக்கு அருகே பூக்கடை நடத்தி வரும் சரஸ்வதியிடம் பேசியபோது, “இந்தக் கட்டடத்தில் ஆதிக்க சாதி, பட்டியல் சாதி எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கடை வைத்துள்ளனர். தீ பிடித்ததில் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது, அன்று மதியம் 1:00 மணிக்கு மேல் திடீரென இப்பகுதியில் பல இளைஞர்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டு இருந்தனர்,” என அன்று நடந்தது குறித்து விவரித்தார்.

அப்போது ஒரு காய்கறிக்கடையில் தீப்பிடித்ததாகவும் அந்தத் தீ மளமளவென அருகிலுள்ள கடைகளுக்குப் பரவியதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய சரஸ்வதி கூறினார். இருப்பினும் காய்கறிக்கடை அருகே ஒரு டிப்பர் லாரி நின்றிருந்ததால் யார் தீ வைத்தது எனத் தெரியவில்லை என்கிறார் அவர்.

சரஸ்வதியிடம் பேசிவிட்டு பட்டியலின மக்கள் வசிக்கும் நாச்சினம்பட்டி கிராமத்தினுள் சென்றபோது அங்குள்ள வேப்பமரத்தின் அடியில், சில பெண்கள், இளைஞர்கள் தலையில் காயத்திற்கான கட்டுகளுடன், மற்றவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கோவில் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்தும் அன்று என்ன நடந்தது எனவும் வினவினோம்.

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன

‘கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால் தான் பிரச்னை’

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு, ‘எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார் தங்காய்.

இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் “ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால்தான் பிரச்னை” எழுந்ததாகத் தெரிவிக்கிறார் தங்காய்.

‘‘எனக்கு 63 வயதாகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் உற்சவரான மாரியம்மனை வைத்து பூஜை செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் திருவிழா நடத்துவார்கள். அங்குள்ள சாதியினரும் நாங்களும் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம்.

ஆனால், இந்த ஆண்டு பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் கூறியதோடு சாதிப் பெயரை வைத்து மிக மோசமாகத் திட்டியதாகவும்” கண்ணீருடன் தழுதழுத்த குரலில் நம்மிடம் பேசினார் அவர்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய தங்காய், ‘‘பட்டியலின சாதியில் பிறந்தால் என்ன? நாங்களும் மனிதர்கள்தானே, எங்களுக்கும் கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், மீண்டும் நாங்கள் பிரச்னையின்றி வாழ வேண்டும்,’’ என்றார்.

‘போலீசார் எங்களை மட்டுமே தாக்கினார்கள்’

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு, ‘போலீசார் தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்’, என்கிறார் வீரம்மா.

கலவரம் முடிந்ததும் போலீசார் தங்கள் கிராமத்தினுள் நுழைந்து கடுமையாக தங்களைத் தாக்கியதாகவும், வீடு புகுந்து பெண்களையும் தாக்கியதாகவும் குற்றம் சாட்டுகிறார் வீரம்மா.

‘‘நான் அன்று வீட்டில்தான் இருந்தேன். திடீரென பிரச்னை எனத் தெரிந்ததும் சென்று பார்த்தபோது, அங்கு எங்கள் பகுதி இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். பலரும் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர்.

கலவரம் முடிவதற்குள் நான் வீட்டுக்கு வந்தபோது, எங்கள் பகுதிக்கு வந்த போலீசார் எங்களை கடுமையாகத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அவர்களின் தாக்குதலில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்,’’ என்கிறார் வீரம்மா.

‘நான் வேலைக்கு போயிட்டு வந்தேன், என்னையும் அடித்தார்கள்’

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு, கலவரம் நடந்த அன்று கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தன்னை போலீசார் தாக்கியதாகக் கூறுகிறார் பசுபதி.

வீரம்மாவின் கூற்றையே பசுபதியும் கூறுகிறார். காலில் காயமடைந்து படுக்கையில் இருந்தபடி நம்மிடம் பேசிய பசுபதி, ‘‘அன்று கலவரம் நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை நான் வீட்டுக்கு வந்தபோது திடீரென வீட்டிற்குள் வந்த போலீசார் என்னை லத்தியால் கடுமையாக அடித்தார்கள். எதற்காக அடிக்கிறீர்கள் என நான் கேட்டபோது என்னைத் திட்டியதுடன், கலவரம் செய்கிறாயா? எனக் கூறி அடித்தார்கள்,’’ என்கிறார்.

மேலும் தனது காயத்தைக் காண்பித்து, இரு நாட்களாகப் படுக்கையில் இருப்பதாகவும், தனக்கு ஏற்கெனவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த நிலையில் போலீஸார் தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் பசுபதி.

ஆனால், போலீசார் தாக்கியதாக பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன்.

பிபிசி தமிழிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘நாங்கள் கலவரத்தில் ஈடுபட்டோரைத்தான் கைது செய்தோம். அப்போது, ஆதாரத்திற்காக நாங்கள் வீடியோ எடுத்துதான் கைது நடவடிக்கையில் ஈடுபட்டோம். பட்டியலின மக்கள் புகார் தெரிவித்தால், வீடியோவை ஆய்வு செய்து தவறு இருந்தால் அத்துமீறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனக் கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து ஆதிக்க சாதி மக்களின் கருத்துகளைக் கேட்டறிய தீவட்டிப்பட்டி கிராமத்திற்குச் சென்றோம்.

கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த மாரியம்மன் கோவில் திருவிழாக் கோலத்தில் அலங்காரம், விளக்குகளுடன் காட்சி அளித்தாலும், கலவரத்தால் திருவிழா தடைபட்டுள்ளதால் கோவிலே வெறிச்சோடி வெறும் போலீசாருடன் காணப்பட்டது.

‘பட்டியலின மக்கள் உள்ளே வரக்கூடாது’

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு, மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா கோபிநாத்.

அந்தக் கோவிலைக் கடந்து சென்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர்கள் பட்டியல் சாதி மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எனவும் இது தங்கள் பாரம்பரியம் எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

நம்மிடம் பேசிய கோவிலின் தர்மகர்த்தாவான கோபிநாத், ‘‘பல தலைமுறையாக நாங்கள் இந்தக் கோவிலை நடத்தி வருகிறோம். இதை எங்கள் சாதி உள்பட ஐந்து சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறோம். அவர்கள் (பட்டியலின மக்கள்) கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபாடு செய்வார்கள், பல தலைமுறையாக அப்படித்தான் கடைபிடிக்கிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியத்தைக் கடைபிடிப்போம், அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை எங்கள் கோவிலுக்கு அவர்கள் வர வேண்டாம்,’’ என்று கூறினார் அவர்.

“இது அனைவருக்கும் பொதுவான கோவில்தானே? பிறகு ஏன் பட்டியலின மக்கள் வர வேண்டாம் என்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டபோது, ‘‘இது தான் எங்கள் பாரம்பரியம், பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கிறோம், விட்டுத் தரமாட்டோம்,’’ என்றார்.

‘வெளியில் நின்றுதான் வழிபடுவார்கள்’

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு, ‘எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறியதால் கலவரம் நடந்துள்ளது,’ என்கிறார் பாவையம்மாள்.

கோவிலுக்கு வெளியில் நின்றுதான் இத்தனை ஆண்டுகளாக பட்டியலின மக்கள் வழிபட்டார்கள் என்கிறார் பாவையம்மாள்.

‘‘பல தலைமுறைகளாக கோவிலுக்கு வெளியில் நின்று தான் அவர்கள் (பட்டியலின மக்கள்) வழிபடுவார்கள், தீர்த்தம் வாங்குவார்கள். அவர்கள் உள்ளே வந்து வழிபட்டது இல்லை, அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு இளைஞர்தான் கோவிலுக்குள் வர வேண்டும், எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறினார். அதனால்தான் கலவரம் நடந்துள்ளது,’’ என்கிறார் அவர்.

ஆதிக்க சாதி சார்பாக நம்மிடம் பேசிய கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த மணி மற்றும் சேனாதிபதியும், பாவையம்மாள் கருத்தைத்தான் எதிரொலித்தனர்.

கலவரம் தொடர்பாகவும், பட்டியலின மக்களின் கோரிக்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் நிலைப்பாடு குறித்தும், பிபிசி தமிழ் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது.

‘சமூக நீதியை உறுதிசெய்வோம்’ – மாவட்ட ஆட்சியர்

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு, போலீசார் தாக்கியதில் காயமடைந்த பெண்.

பிபிசி தமிழ் விளக்கம் கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டபோது, செல்போன் வாயிலாகப் பதிலளித்த ஆட்சியர் பிருந்தா தேவி, ‘‘கலவரம் ஏற்படுவதற்கு முன்பு இருதரப்பு மக்களையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக தங்களுக்குள் ஆலோசனை நடத்த ஒருநாள் அவகாசம் கேட்டனர். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை முடித்த அன்றே ஏன் கலவரம் செய்தார்கள் எனத் தெரியவில்லை,” என்றார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து வருவதாகவும் போலீசார் கண்காணிப்பில் நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்து, சமூக நீதியை உறுதிப்படுத்துவோம்,’’ என விளக்கம் அளித்துள்ளார்.

‘மீண்டும் சுமூகமாக திருவிழா நடத்த திட்டம்’ – காவல் கண்காணிப்பாளர்

தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு, பட்டியலின மக்கள் பகுதியில் போலீசார்

போலீசார் வேண்டுமென்றே வீடு புகுந்து தாக்கியதாக பட்டியல் சாதியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டபோது, செல்போன் வாயிலாக பதிலளித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘1972 முதல் அந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பட்டியலின சாதியினரை உள்ளே நுழையக்கூடாது என ஆதிக்க சாதியினர் கூறியதால், இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடைகளுக்குத் தீ வைத்தவர்களைத் தேடி வருகிறோம். இருதரப்பையும் கைது செய்யும்போது நாங்கள் ஆதாரத்திற்காக வீடியோவும் எடுத்துள்ளோம்.

போலீசார் வேண்டுமென்றே யாரையும் தாக்கவில்லை. அப்படி புகார் வரும் பட்சத்தில் எங்கள் வீடியோக்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் திருவிழாவை சுமூகமாக நடத்த இருதரப்பிடமும் பேச்சவார்த்தை நடத்துவோம்,’’ என விளக்கம் அளித்தார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?

பட்டியலின மக்கள் பகுதியில் போலீசார்

“அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில் பட்டியல் சாதியினர் நுழைவதில் சிக்கல் என்ன?” என்று இந்து சமய அறநிலையத்துறை காடையம்பட்டி ஆய்வாளர் கதிரேசனிடம் கேட்டபோது, ‘‘இதுவரை அந்தக் கோவிலில் இதுபோன்ற பிரச்னை, கலவரம் வந்தது இல்லை. பட்டியல் சாதியினர் சார்பில் எந்தப் புகாரும் வரவில்லை.

அரசு கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்வது தனிமனித உரிமை. இதை உறுதிப்படுத்த இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம், அதற்குள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னையை விரைவில் சரி செய்வோம்,’’ என்றார்.