ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசன் ப்ளே ஆஃப் சுற்றை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் உறுதி செய்துள்ளது. அடுத்த 3 இடங்களைப் பிடிக்க 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, நிகர ரன்ரேட்டிலும் வலுவாக 1.428 என இருக்கிறது.

கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் சாதாரண வெற்றி பெற்றாலே 22 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைக்கும். ஆக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலாவது அல்லது 2வது இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், மற்ற 3 இடங்களுக்கான போட்டிதான் கடினமானதாக மாறியுள்ளது. 3 இடங்களைப் பிடிக்க 6 அணிகள் கோதாவில் இறங்கியுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் இன்னும் ப்ளே ஆஃப் சுற்று உறுதியாகவில்லை.

இன்று சென்னையில் நடக்கும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். தோல்வி அடைந்தால், அடுத்த 2 போட்டிகளில் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

ஐபிஎல் டி20  2024

பட மூலாதாரம், SPORTZPICS

படக்குறிப்பு, ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசன் ப்ளே ஆஃப் சுற்றை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உறுதி செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் 3வது அல்லது 4வது இடத்தைப் பிடிக்க சன்ரைசர்ஸ் அணியும் கடுமையாகப் போராடும்.

சிஎஸ்கே அணி, லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் உள்ளன. இதில் மற்ற 3 அணிகளைவிட சிஎஸ்கே அணிதான் நிகர ரன்ரேட்டில் 0.491 என வலுவாக இருக்கிறது. மற்ற இரு அணிகளின் நிகர ரன்ரேட்டும் மைனசில் இருப்பது பின்னடைவாகும். ஆர்சிபி அணியும் 10 புள்ளிகளுடன் அடுத்த 2 வெற்றிகளுக்காக காத்திருக்கிறது.

14 புள்ளிகள் பெற்றால் ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகம்தான் என்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி ஆர்சிபிக்கு சாதகமாக மாறக்கூடும் என்பதால் அந்த அணி பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து இன்னும் வெளியேற்றப்படவில்லை.

குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது.

ஐபிஎல் டி20  2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோற்றாலும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்வது கடினமாகிவிடும்.

சிஎஸ்கே அணி தகுதி பெறுமா?

சிஎஸ்கே அணி 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் 0.491 என சாதகமாக இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாகும். சிஎஸ்கே அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன.

இன்று நடக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும், ஆர்சிபிக்கு எதிரான கடைசி லீக்கிலும் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது.

இதில் ஒரு போட்டியில் தோற்றாலும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்வது கடினமாகிவிடும். ஒருவேளை ராஜஸ்தான், ஆர்சிபி அணிகளை சிஎஸ்கே வென்றுவிட்டால் 16 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.

ஒருவேளை சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் வென்று, ஒரு போட்டியில் தோற்றால், 14 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது, சன்ரைசர்ஸ் அணியும், டெல்லி அணியும் தங்களின் லீக் ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில், லக்னெள அணியும் மும்பையிடம் தோற்கும் பட்சத்தில், நிகர ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும்.

ஆனால், இந்த கணக்கு வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான், சிஎஸ்கே அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் வெல்வதுதான் பாதுகாப்பானது.

ஐபிஎல் டி20  2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவேளை டெல்லி கேபிடல்ஸ் அணி ஆர்சிபியை வென்று, லக்னெளவிடம் தோற்றாலும் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

டெல்லி கேபிடல்ஸ்க்கு வாய்ப்புள்ளதா?

சிஎஸ்கே அணி குஜராத்திடம் தோற்றது ஒரு விதத்தில் டெல்லி கேபிடல்ஸுக்கு சாதகமானதாக இருக்கிறது. டெல்லி அணி 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.316 ஆக இருக்கிறது.

இன்னும் ஆர்சிபி மற்றும் லக்னெள அணிகளுடன் டெல்லி அணி மோத இருக்கும் நிலையில் இரு ஆட்டங்களிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் 16 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டையும் உயர்த்தி ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்துக்கு சண்டையிட முடியும்.

ஒருவேளை சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால் நிகர ரன்ரேட்டில் வலுவாக இருந்து 4வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால், 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் 3வது இடத்தைப் பிடிக்கும்.

டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை 16 புள்ளிகள் பெற்றிருந்தாலும் இழக்க நேரிடும். ஒருவேளை 16 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட்டைவிட அதிகமாக வைத்திருந்தால், டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றில் பங்கேற்கலாம்.

ஒருவேளை டெல்லி கேபிடல்ஸ் அணி ஆர்சிபியை வென்று, லக்னெளவிடம் தோற்றாலும் ப்ளே ஆஃப் செல்ல முடியும். அதாவது, லக்னெள அணி மும்பையிடம் தோற்க வேண்டும், மற்ற அணிகள் அதாவது சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் அணிகள் தங்களின் மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும்.

இவை நடந்தால், டெல்லி கேபிடல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்க முடியும்.

ஐபிஎல் டி20  2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவேளை ராஜஸ்தான் அணி கடைசி 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, டெல்லி, லக்னெள அணிகளின் நிகர ரன்ரேட்டைவிட மோசமாகச் சரிந்தால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறும்.

ராஜஸ்தான் அணிக்கு ஒரு வெற்றி தேவை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. இன்று சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும்.

ஒருவேளை சிஎஸ்கேயிடம் தோற்று, அடுத்துள்ள 2 லீக் ஆட்டங்களில் வென்றாலும் ராஜஸ்தான் அணி 20 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை ராஜஸ்தான் அணி கடைசி 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, டெல்லி, லக்னெள அணிகளின் நிகர ரன்ரேட்டைவிட மோசமாகச் சரிந்தால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறும்.

மாறாக ராஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் வென்று மற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பெறும்.

ஆனால், சன்ரைசர்ஸ் அணி அடுத்த இரு ஆட்டங்களிலும் வென்று ராஜஸ்தான் அணியைவிட நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருந்தால், 2வது இடத்துக்கு செல்லும், ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு செல்லும் இல்லாவிட்டால் ராஜஸ்தான் அணி 2வது இடத்தை உறுதி செய்யும்.

ஐபிஎல் டி20  2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி ஒரு ஆட்டத்தில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் 16 புள்ளிகள்தான் கிடைக்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

சன்ரைசர்ஸ் அணி 12 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் 0.406 என வலுவாக இருந்தாலும்,சிஎஸ்கே அணியைவிட குறைவுதான். சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் இரு ஆட்டங்களிலும் வென்றால் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி ஒரு ஆட்டத்தில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் 16 புள்ளிகள்தான் கிடைக்கும். அதேசமயம் சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால், 16 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் வலுவாக சன்ரைசர்ஸ் அணியை 4வது இடத்துக்கு தள்ளி 3வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே அணி ஒரு ஆட்டத்தில் தோற்றால்கூட, சன்ரைசர்ஸ் அணி ஒரு ஆட்டத்தில் தோற்று மற்றொன்றில் வென்றாலும் ப்ளே ஆப் வாய்ப்பில் 3வது இடத்தைப் பிடிக்க முடியும்.

ஒருவேளை கொல்கத்தா அணி தனக்கிருக்கும் கடைசி இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து 18 புள்ளிகளுடன் நிற்கும் பட்சத்தில், சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி இரு போட்டிகளிலும் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்து, இரு போட்டிகளிலும் சேர்த்து 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், சன்ரைசர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் கொல்கத்தா அணியின் நிகர ரன்ரேட்டை கடந்து, 2வது இடத்தைப் பிடிக்க முடியும்.

ராஜஸ்தான் அணி ஒருவேளை 20 புள்ளிகளுடன் இருந்தால் முதலிடத்தைப் பிடிக்கும். ராஜஸ்தான் அணியும் ஒரு போட்டியில் வென்று மற்ற 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்து 18 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தால், சன்ரைசர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கலாம்.

கொல்கத்தா அணி 2வது இடத்தையும், ராஜஸ்தான் 3வது இடத்தைப் பிடிக்க முடியும். ஆனால் இது கணிப்பு மட்டும்தான்.

ஐபிஎல் டி20  2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவேளை லக்னெள அணி 16 புள்ளிகள் பெறும் பட்சத்தில், ராஜஸ்தான், கொல்கத்தா, சன்ரைசர்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் தோற்றால், ப்ளே ஆஃப் சுற்று உறுதி செய்யலாம்.

லக்னெளவுக்கு கதவுகள் அடைக்கப்பட்டதா?

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் படுமோசமாக மைனஸ் 0.769 என்று குறைந்துள்ளது. அடுத்த 2 ஆட்டங்களிலும் லக்னெள அணியால் வென்று 16 புள்ளிகள் பெற முடியும் என்றாலும் நிகர ரன்ரேட் அந்த அணிக்கு பெரிய தடைக்கல்லாக மாறியுள்ளது.

ஒருவேளை லக்னெள அணி 16 புள்ளிகள் பெறும் பட்சத்தில், ராஜஸ்தான், கொல்கத்தா, சன்ரைசர்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் தோற்றால், ப்ளே ஆஃப் சுற்று உறுதி செய்யலாம்.

லக்னெள அணி தனக்கிருக்கும் 2ஆட்டங்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நிகர ரன்ரேட்டை உயர்த்தி, சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், டெல்லி அணிக்கு போட்டியாக மாறினால் ப்ளே ஆஃப் செல்லலாம்.

ஆனால், லக்னெள அணியைவிட ஆர்சிபி ரன்ரேட் வலுவாக 0.217 புள்ளி என வைத்துள்ளது. டெல்லி அணி மைனஸ் 0.316 என லக்னெளவைிட குறைவாக வைத்துள்ளது. ஆதலால், லக்னெள அணி தனக்கிருக்கும் கடைசி இரு லீக் ஆட்டங்களில் சாதாரண வெற்றி பெறாமல் பிரமாண்ட வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் தோல்விக்காக காத்திருக்க வேண்டும்.

ஐபிஎல் டி20  2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்சிபி அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களில் வென்றாலும் 14 புள்ளிகள்தான் பெற முடியும்.

ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லுமா?

ஆர்சிபி அணி தொடர்ந்து 4 வெற்றிகளுடன் 12 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட் 0.217 என வலுவாக வைத்துள்ளது.

ஆர்சிபி அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களில் வென்றாலும் 14 புள்ளிகள்தான் பெற முடியும். ப்ளே ஆஃ செல்ல முடியுமா என்றால், இவை நடந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்புக் கிடைக்கும்.

அதாவது, சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் அணிகள் தங்களுக்குரிய கடைசி 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். லக்னெள அணி ஒரு போட்டிக்கு மேல் வெல்லக் கூடாது.

இவ்வாறு நடந்தால், ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ரன்ரைட்டை முறியடித்து ப்ளே ஆஃப் சுற்றில் 3வது இடம் பிடிக்க முடியும். டெல்லி, லக்னெள அணிகளின் ரன்ரேட்டைவிட ஆர்சிபி உயர்வாக வைக்க முடியும். இது நடந்தால் ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்று உறுதி.

சிஎஸ்கே தோற்றால் என்ன நடக்கும்?

சிஎஸ்கே அணி தற்போது 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு இணையாக லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் அணிகளும் 12 புள்ளிகளுடன் உள்ளன. ஆனால், லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் அணிகளின் நிகர ரன்ரேட்டைவிட சிஎஸ்கே அணி பிளஸ் 0.491 என இருப்பதால் 4வது இடத்தில் இருக்கிறது.

சென்னையில் இன்று நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோற்று, ஆர்சிபிக்கு எதிரான கடைசி லீக்ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகள் பெறும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறதா என்றால், மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே இருக்கிறது.

அதாவது லக்னெள, டெல்லி அணிகளில் ஏதாவது ஒரு அணி 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இரு அணிகளும் 14ம் தேதி மோதும் நிலையில் ஏதாவது ஒரு அணி தோற்கும். அப்போது, எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி கடைசி லீக்கில் தோற்க வேண்டும். அவ்வாறு நடந்தால் லக்னெள அல்லது டெல்லி அணி 14 புள்ளிகளுடன் முடிக்கும். ஆனால், நிகர ரன்ரேட் மைனசில்தான் இருக்க வாய்ப்புள்ளது, மிகப்பெரிய வெற்றி பெற்றால்தான் பிளசுக்குள் வரலாம்.

அதேசமயம், ஆர்சிபி அணி, டெல்லி அணியை வீழ்த்தி, சிஎஸ்கே அணியிடம் தோற்க வேண்டும். அவ்வாறு நடந்தால், ஆர்சிபி 12 புள்ளிகள் மட்டுமே பெறும். இவை நடந்தால், சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் பெற்றிருந்தாலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஆர்சிபி தோற்றால் என்ன ஆகும்?

ஆர்சிபி அணி இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 10 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணி கடைசி இரு லீக் ஆட்டங்களில் வென்றாலும் 14 புள்ளிகள்தான் பெறும். ஆனால், இது ப்ளே ஆஃப் செல்ல உதவுமா என எனத் தெரியாது. சிஎஸ்கே அணி கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் வென்றுவிட்டாலே ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு கலைந்துவிடும்.

ஆர்சிபி ப்ளே ஆப் செல்ல வேண்டுமெனில், சிஎஸ்கே அணி ராஜஸ்தான் அணியை வென்று, ஆர்சிபியிடம் தோற்க வேண்டும். ஆர்சிபி அணி டெல்லி, சிஎஸ்கே இரு அணிகளையும் வெல்ல வேண்டும்.

லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் இதில் ஏதாவது ஒரு அணி மட்டுமே 14 புள்ளிகள் பெற வேண்டும். இவ்வாறு நடந்தால், சிஎஸ்கே, ஆர்சிபி, லக்னெள அல்லது டெல்லி ஆகிய 3 அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்று கடைசி இடத்துக்கு போட்டியிடும். இதில் சிஎஸ்கே அணியைவிட ஆர்சிபிக்கு நிகர ரன்ரேட் அதிகமாக இருக்க வேண்டும் இவ்வாறு நடந்தால், ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்க முடியும்.

இன்றைய போட்டியில் ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்கும் அதேநேரத்தில், இரவில் நடக்கும் போட்டியில் டெல்லியை ஆர்சிபி வென்றால் என்ன நடக்கும் தெரியுமா?

ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றாலும், 12 புள்ளிகள் பெற்றிருப்பதால் பிளேஆஃப் வாய்ப்புக்கான போட்டியில் தொடர்ந்து இருக்கும். அதேநேரத்தில், டெல்லியை வென்றதன் மூலம் ஆர்சிபியும் 12 புள்ளிகளைப் பெற்றிருக்கும்.

மற்ற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுகள் சாதகமாக அமையும் பட்சத்தில், சிஎஸ்கே – ஆர்சிபி மோதும் கடைசி லீக் ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போராட்டமாக அமையும்.