மும்பையில் விமானம் மோதி இறந்த 30க்கும் மேற்பட்ட பூநாரைகள் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜான்வி மூலே
  • பதவி, பிபிசி செய்தியாளர், மும்பையில் இருந்து

மே 20 திங்கட்கிழமை இரவு மும்பையில் விமானம் மோதியதால் 30க்கும் மேற்பட்ட பூநாரைகள் (ஃபிளமிங்கோ பறவைகள்) இறந்தன. மும்பையின் காட்கோபர் புறநகர் பகுதியில் உள்ள லக்ஷ்மி நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

வனத்துறையினர் இறந்த பூநாரைகளை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் காயமடைந்த பூநாரைகளை தேடும் பணி செவ்வாய் காலையிலும் நடைபெற்றது.

துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் E508, மும்பை சஹாரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) தரையிறங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இரவு 8:40 – 8:50 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. விமான நிலைய வட்டாரங்கள் இதை உறுதி செய்துள்ளன.

இந்த விமானத்தில் 300 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பறவைகள் மோதியதை அடுத்து விமானத்தின் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“துபாயில் இருந்து மும்பைக்கு வந்த விமானம் EK508 தரையிறங்கும் போது, அதன்மீது பறவைகள் மோதின. விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல பூநாரைகள் உயிரிழந்தன.”

“எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாத்தியமான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கியது,” என்று எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த மோதல் காரணமாக மும்பையில் இருந்து இரவு புறப்படவிருந்த விமானம் EK509 ரத்து செய்யப்பட்டது. மாற்று விமானத்திற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்

மும்பையில் விமானம் மோதி இறந்த 30க்கும் மேற்பட்ட பூநாரைகள் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

மே 21ஆம் தேதி இரவு 9 மணிக்கு பயணிகள் மாற்று விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு எமிரேட்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.

“எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இதில் எந்த சமரசமும் செய்யப்பட மாட்டாது,” என்று எமிரேட்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்ததும், வனக்காவலர்கள் மற்றும் கண்டல்வன் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் விசாரணைக்காக விமான நிலையத்திற்குச் செல்ல தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பூநாரைகள் இறந்த பகுதி விக்ரோலிக்கு கிழக்கே காட்கோபர் அருகே உள்ளது. இந்தப் பகுதி விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதைக்கு அருகே உள்ளது. அதேநேரம் கிழக்கில் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையும் அதற்கு அப்பால் தானே விரிகுடா ஈரநிலமும் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பூநாரைகள் இந்த விரிகுடாவிற்கு அருகிலுள்ள கண்டல் காடுகளுக்கு இடம் பெயர்கின்றன. எனவே இங்கு பாதுகாக்கப்பட்ட பகுதியும், சரணாலயமும் உள்ளது. ஆனால் பூநாரைகள் விமானம் மீது மோதிய சம்பவம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

இந்தப் பறவைகள் ஏன் விமானத்தின் பாதையில் வந்தன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்குக் காரணமாக அப்பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மும்பையில் விமானம் மோதி இறந்த 30க்கும் மேற்பட்ட பூநாரைகள் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

“பூநாரைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியில் புதிய மின்கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இது பறவைகளுக்கு இடையூறு விளைவிக்கிறது. இந்த மின்கம்பிகளை இங்கு அனுமதித்திருக்கக் கூடாது. வேறு மாற்று வழிகள் இருந்தன. முன்னதாக சரணாலயத்தின் வழியாக மின்கம்பிகள் செல்ல அனுமதி இல்லை. ஆனால் வனத்துறை அதிகாரிகள் மின்வாரியத்திடம் அடிபணிந்துவிட்டனர்,” என்று காடு வளர்ப்பு குறித்து செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சதுப்பு நிலங்களுக்கான குழு உறுப்பினர் ஸ்டாலின் தெரிவித்தார்.

“நவி மும்பையில் உள்ள விரிகுடா மற்றும் சாணக்யா ஏரிக்கு அருகில் கட்டுமான நோக்கங்களுக்காக பூநாரைகளை இடப்பெயர்வு செய்யும் முயற்சிகள் கடந்த மாதம் முதல் நடந்து வந்தன. யாரேனும் இரவில் இந்தப் பறவைகளை அகற்ற முயன்றிருந்தால் அவை இப்படித்தான் பறந்திருக்க வாய்ப்பிருக்கிறது,” என்றும் ஸ்டாலின் கூறினார்.

நவி மும்பையின் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடும் மகாராஷ்டிரா நகர மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (சிட்கோ) மின் நிறுவனத்திடம் இருந்து இது தொடர்பாக எந்தப் பதிலும் இல்லை. இது தொடர்பாக சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு (ஏப்ரல் 27, 2024), நவி மும்பையில் உள்ள டிபிஎஸ் குளம் அருகே பூநாரைகள் இறந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மும்பைக்கு அருகில் பூநாரைகள் எப்போது வர ஆரம்பித்தன?

மும்பையில் விமானம் மோதி இறந்த 30க்கும் மேற்பட்ட பூநாரைகள் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

பூநாரைகள், காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் (1972) கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினம்.

கடந்த 1997 முதல் இந்த பூநாரைகள் மும்பை நகரத்திற்கு அதிக அளவில் வரத் தொடங்கின. முன்னதாக ஆயிரக்கணக்கான பறவைகள் ஷிவ்டி காட் அருகே காணப்பட்டன. ஆனால் ஷிவ்டி-நவாஷேவா கடல் பாலம் கட்டப்பட்டதால் அவற்றின் வாழ்விடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாயின. இந்தக் காரணத்திற்காக, தானே மற்றும் வாஷி விரிகுடாவில் 1,690 ஹெக்டேர் பரப்பளவில் பூநாரைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது.

தானே, வாஷி, பாண்டுப் பம்பிங் ஸ்டேஷன்களில் அடர்ந்த சதுப்பு நிலங்கள் இருப்பதால் இப்பறவைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இது தவிர ஒரு சிறப்பு வகை பாசி, இறால் ஆகியவை அவற்றின் முக்கிய உணவாகும். இந்த உணவில் அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இந்தப் பொருள் அவற்றின் இறகுகளுக்கு சிவப்பு இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

மும்பைக்கு வரும் இந்த சுற்றுலாப் பயணிகளின் அசல் வீடு ரன் ஆஃப் கட்ச் ஆகும். அங்குள்ள பாழடைந்த உப்பளங்களில் ஆயிரக்கணக்கான பூநாரைகள் வாழ்கின்றன. அவற்றின் இனப்பெருக்கமும் அங்கேயே நடக்கிறது. அதனால் இந்தப் பகுதிக்கு ‘ஃபிளமிங்கோ சிட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பூநாரைகளின் வாழ்விடத்தை ஆய்வு செய்வதற்காக பறவையியல் நிபுணர் டாக்டர் சாலிம் அலி ஒட்டகத்தில் பல மைல்கள் பயணம் செய்து திரும்பினார்.

இந்தப் பூநாரை கூட்டங்கள் நவம்பர் மாதத்தில் குளிர்காலத்தில் உணவு தேடி மும்பையை நோக்கி வருகின்றன. இங்கு வரும்போது அவற்றின் பழுப்பு நிற குஞ்சுகளும் அவற்றுடன் காணப்படுகின்றன. இந்தக் குஞ்சுகள் மும்பையின் கரையில் வளர ஆரம்பிக்கின்றன. திரும்பும் நேரத்தில் அவற்றின் இறகுகள் சிவப்பு நிறமாக மாறத் தொடங்குகின்றன.