மூன்று மாதங்கள் முன்பு இறந்த குட்டியை இன்னும் மடியில் சுமக்கும் சிம்பன்சியின் நெகிழ்ச்சிக் கதை

மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த குழந்தையை இன்னமும் மடியில் சுமக்கும் சிம்பன்சி நடாலியா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சிம்பன்சி நடாலியா ஈன்றெடுத்த குட்டி பிறந்து 14 நாட்களில் இறந்து போனது
  • எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

நடாலியா என்ற பெண் சிம்பன்சிக் குரங்கு தன் குட்டியை இழப்பது இது இரண்டாவது முறை.

ஸ்பெயினில் இருக்கும் வலென்சியா நகரில் உள்ள உயிரியல் பூங்காவான ‘பயோபார்க்’-இல் (Bioparc), நடாலியா கடந்த பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. எல்லாம் நன்றாகத் தான் சென்றது. ஆனால் பிறந்து 14 நாட்கள் ஆன நிலையில், ஒரே இரவில், அந்தச் சிம்பன்சிக் குட்டி மிக விரைவாக பலவீனமடைந்து இறந்துபோனது.

“சிம்பன்சிக் குட்டி ஏன் இறந்தது என்பதற்கான சரியான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அதன் தாய் நடாலியாவுக்கு போதுமான பால் உற்பத்தி இல்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்,” என்று பயோபார்க்கின் இயக்குனர் மிகெல் காசரேஸ் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

21 வயதான சிம்பன்சி நடாலியா, தன் குட்டி இறந்ததிலிருந்து, அதன் உடலை தன்னுடனேயே வைத்துக் கொண்டது. தன் குட்டியைப் பிரிய விரும்பாததால், கடந்த மூன்று மாதங்களாக எங்கு சென்றாலும், தன் குட்டியின் உயிரற்ற உடலை கூடவே சுமந்து செல்கிறது.

“நடாலியா தன் குட்டியின் இறந்த உடலை எப்போதும் கூடவே வைத்துக் கொண்டிருக்கிறது. சிம்பன்சிகள் வாழ்வியலில் இது ஒரு இயல்பான நடத்தை தான். மிருகக்காட்சிசாலை அல்லது காடுகளில் வசிக்கும் பெண் சிம்பன்சிகள் சில சமயங்களில் தங்கள் இறந்த குட்டியைக் கூடவே சுமந்து செல்வது வழக்கம்,” என்று கால்நடை மருத்துவ நிபுணர் காசரேஸ் விளக்குகிறார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த குழந்தையை இன்னமும் மடியில் சுமக்கும் சிம்பன்சி நடாலியா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உயிரியல் பூங்கா ஊழியர்கள் இயற்கையான உடல் சிதையும் செயல்முறையில் தலையீடு செய்யவில்லை

உணர்ச்சிப்பூர்வமான சிம்பன்சிகள்

பெண் சிம்பன்சிகள் தங்கள் உயிரற்ற குட்டிகளைப் பிரிய முடியாமல், பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அவற்றின் உடலை நான்கு மாதங்கள் வரை சுமந்து செல்லும் என்று கூறப்படுகிறது.

“இது எல்லா சமயங்களிலும் நடக்காது. ஆனால் எப்போதாவது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சிம்பன்சிகள் இறந்த குட்டியை சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு கூடவே வைத்துக் கொள்ளும். அல்லது, மிகவும் அரிதாக, நடாலியா போன்ற மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சிம்பன்சிகள் சில மாதங்கள் வரை தங்கள் குட்டியின் உடலைச் சுமந்து கொண்டிருக்கும்,” என்று பயோபார்க் இயக்குநர் விவரித்தார்.

நடாலியா, இறந்த தன் குட்டியைச் சுமந்தபடி சுற்றுவதை மிருகக்காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர், சிலர் இதுகுறித்து விசாரிக்கின்றனர், சிலர் கோபமடைகின்றனர். பார்வையாளர்களின் பல வகையான எதிர்வினைகளை ஊழியர்கள் சந்திக்கிறார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த குழந்தையை இன்னமும் மடியில் சுமக்கும் சிம்பன்சி நடாலியா

பட மூலாதாரம், Reuters

“குட்டி இறந்த ஆரம்ப நாட்களில் அது ஒரு பச்சிளம் குட்டி என்பதையும், அது இறந்து விட்டதையும் பார்வையாளர்களால் தெளிவாகக் காண முடிந்தது. நடாலியாவின் செய்கையைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். பலர் அனுதாபத்தை வெளிப்படுத்தியதை நாங்கள் கவனித்தோம். சிலர் அதன் மீது மரியாதையையும் வெளிப்படுத்தினர்,” என்கிறார் காசரேஸ்.

சில வாரங்களில் இறந்த சிம்பன்சி குட்டியின் உடலில் இயற்கையான சிதைவு நிலை தொடங்கியது. மேலும் இதனால் நடாலியாவுக்கு எந்த உடல்நல பிரச்னையும் ஏற்படாமல் ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். தன் குட்டியைப் பிரிய நடாலியா தயாராகி, படிப்படியாகப் பிரிந்து செல்ல அனுமதிக்கும் வரையில் மிருகக்காட்சிசாலை அதன் உடல்நலத்தை கவனித்துக் கொள்வதை உறுதி செய்கிறது.

‘நடாலியாவிடம் இருந்து குட்டியைப் பிரிக்க மனமில்லை’

மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த குழந்தையை இன்னமும் மடியில் சுமக்கும் சிம்பன்சி நடாலியா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பயோபார்க் சிம்பன்சி குழுவில் தற்போது ஆறு பெரிய சிம்பன்சிகளும் இரண்டு குட்டிகளும் உள்ளன

“நடாலியாவிடம் இருந்து இறந்த குட்டியின் உடலைப் பிரித்தெடுப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஏனென்றால் நடாலியா ஏற்கனவே 2018-இல் ஒரு குட்டியை இழந்தது. அந்த சமயத்தில் அது சில நாட்களிலேயே அதிலிருந்து மீண்டது. ஆனால், இம்முறை நடாலியா மீண்டு வரவில்லை. இயற்கையான சூழலில் வாழும் பிற விலங்குகளைப் போலவே, வலென்சியா பயோபார்க்கில் உள்ள சிம்பன்சிகளும் மிகவும் நேசமான மற்றும் ஒன்றுபட்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறது,” என்று காசரேஸ் நடந்ததை விளக்கினார்.

” நடாலியாவின் குட்டி இறந்து போன ஆரம்ப நாட்களில், அதன் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் நெருக்கமாக அதை சுற்றி அமர்ந்து கொண்டனர். அதன் பின்னர் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டனர் . இந்த செயல் பார்ப்பதற்கு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது, மனிதர்கள் மத்தியில் நடக்கும் துக்கம் அனுசரிப்பு போலவே இருந்தது. இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலை,” என்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்ற சிம்பன்சிகள் தங்கள் வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபட்டன. ஆனால் நடாலியா தன் குட்டியின் உடலை தன்னோடு வைத்து கொள்ள முடிவு செய்தது.

மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு, நடாலியாவின் முடிவை மதித்து அதன் போக்கில் விட்டனர். ஒருவேளை நடாலியாவிடம் இருந்து குட்டியின் இறந்த உடலைப் பிரித்தால், நடாலியா ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டிருக்கும்.

“நடாலியா உட்பட சிம்பன்சிகள் அனைத்தும் எப்போதுமே குழுவாக ஒன்றாக இருக்கும். எனவே, இறந்த குட்டியை அப்புறப்படுத்த, தாய்க்கு மயக்க மருந்து கொடுக்கும் சூழல் ஏற்பட்டால், நாங்கள் நிச்சயமாக நடாலியாவின் குடும்பத்தின் பல உறுப்பினர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கும்,” என்கிறார் பயோபார்க் இயக்குநர்.

“எங்களிடம் இருக்கும் மற்றொரு பெண் சிம்பன்சி, அதாவது நடாலியாவின் சகோதரிக்கு, ஒரு குட்டி உள்ளது. மயக்க மருந்து கொடுப்பது குட்டிக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே நாங்கள் அதைச் செய்ய முடியாது. இதுபோன்ற சம்பவங்களை ஏற்கனவே பார்த்த மிருகக்காட்சி நிபுணர்களின் கருத்து படி இதை நடாலியாவின் போக்கில் விட்டுவிடுவது நல்லது என்று கருதுகின்றனர்,” என்றார்.

‘மரணமும் வாழ்வின் ஒரு பகுதி’

மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த குழந்தையை இன்னமும் மடியில் சுமக்கும் சிம்பன்சி நடாலியா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நடாலியாவின் நிலையை அறிந்த பார்வையாளர்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தினர்

இன்று நடாலியா தனது அன்றாட நடவடிக்கைகளைச் சாதாரணமாகச் செய்கிறது. முன்பை விட அதன் உடல்நிலை தேறி விட்டது. இத்தனை மாதங்களாக இறந்த குட்டியின் உடலைத் தன் அருகில் வைத்திருப்பதால், மற்ற சிம்பன்சிகளைப் போல நடாலியாவுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படவில்லை.

“இறந்த குட்டியின் உடல் சிதைந்து வருவதால் அது மற்ற விலங்குகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே வயதான விலங்குகளின் உடல்நிலையை நாங்கள் கண்காணித்து வருகிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், குட்டியின் உடல் மிகவும் சிதைந்து விட்டது. இது ஒரு இயற்கையான செயல்முறை. அதிர்ஷ்டவசமாக, சிம்பன்சிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, அவை மிகவும் ஆற்றல் வாய்ந்தவை,” என்று காசரேஸ் விளக்குகிறார்.

“தேவைப்பட்டால், மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தலையிட்டு குட்டியை அப்புறப்படுத்தலாம். ஆனால் நடாலியாவின் சொந்த நலன் கருதி இயற்கையான சூழ்நிலையை ஒருங்கிணைக்க முன்னுரிமை அளித்துள்ளனர். இயற்கையான அடர்ந்த காடுகள் போல அல்லாமல் மிருகக்காட்சிசாலையில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருக்கும், ஆனாலும் இங்கு உள்ள சிம்பன்சிகள் வளர்ப்பு விலங்குகள் அல்லது செல்லப்பிராணிகள் போன்று வளர்க்கப்படாது. அவை இயற்கையான போக்கில் வளரும்,” என்றார்.

“சிம்பன்சிகள் போலவே மற்ற விலங்குகள் மத்தியிலும் இவ்வாறு இயற்கையாகவே நிகழ்கிறது. மற்ற உணர்வுப்பூர்வமான விலங்குகள், பெரிய குரங்குகள், பபூன்கள், யானைகள், விலங்குகள் ஆகியவற்றிலும் இதுபோன்ற செய்கை காணப்படும். பொதுவாக மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகள், தாய் மற்றும் குட்டிகள் மத்தியில் வலுவான உறவு இருக்கும் விலங்குகள், மேம்பட்ட குடும்ப நடத்தையுடன் இருக்கும் விலங்குகள் ஆகியவை சில சமயங்களில் இறந்த குட்டிகளை கூடவே வைத்திருக்கும் செய்கையில் ஈடுபடும்,” என்று காசரேஸ் சுட்டி காட்டுகிறார்.

“மிருகக்காட்சிசாலையில் சிறிய விலங்குகள் மற்றும் அழகான குட்டிகள் மட்டும் கொஞ்சி விளையாடுவதில்லை. அங்கு துக்கமும் இருக்கும். மரணமும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், விலங்குகளுக்கும் இது பொருந்தும்,” என்றார்.

இறந்த குட்டியை நடாலியா சுமப்பது பார்வையாளர்களை வியக்க வைத்தாலும் சிலர் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் என்ன நடந்தது என்பதற்கான பொருத்தமான விளக்கங்களை வழங்கி வருகின்றனர்.

“ஊழியர்கள் சூழலை விளக்கும்போது பெரும்பான்மையானவர்கள் அதைப் புரிந்து கொள்கின்றனர், அவர்கள் அனைவரும் குட்டியை இழந்த துக்கத்தில் இருக்கும் ஒரு தாய்க்கு அனுதாபத்தையும் மரியாதையையும் காட்டுகின்றனர்,” என்றார்.