பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இருக்கும் ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து – கொந்தளிக்கும் இஸ்ரேல்

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு முறையான அங்கீகரிக்கப்பட்ட நாடாக அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன.

பாலத்தீன அரசை உருவாக்குவது இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகளை முன்னேற்றுவதற்கு உதவும் என பாலத்தீன நாட்டை அங்கீகரிக்க ஆதரவளிக்கும் நாடுகள் நம்புகின்றன. ஆனால் அது பதற்ற நிலையை அதிகரிக்கும் என்று இஸ்ரேல் கூறுகிறது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், பாலத்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியதோடு, அதை மே 28ஆம் தேதி செய்யப் போவதாகவும் அறிவித்தார்.

இதற்கிடையே இரு நாடுகள் தீர்வை இஸ்ரேல் ஆபத்தில் ஆழ்த்துவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார். அதோடு பாலத்தீனம் தொடர்பான இஸ்ரேலின் கொள்கையை வலி மற்றும் அழிவுக்கான கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை “ஹமாஸ் கொலையாளிகளுக்கு தங்கப் பதக்கம் கொடுப்பதைப் போன்றது” என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் வர்ணித்துள்ளார். மற்றொருபுறம், ஹமாஸ் மற்றும் பாலத்தீன அதிகாரம் இந்த முடிவை வரவேற்றுள்ளது.

இந்த அறிவிப்பிற்குப் பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், “பாலத்தீனிய அரசை அங்கீகரிப்பது அதிக பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும், பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் மற்றும் அமைதிக்கான அத்தனை வாய்ப்புகளையும் பாதிக்கும்.”

“ஹமாஸின் கைப்பாவையாக மாறிவிடாதீர்கள். ஒரு பரந்த பிராந்திய சூழலில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

நார்வே பிரதமர் கூறியது என்ன?

நார்வே மற்றும் அயர்லாந்து கூறியது என்ன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செய்தியாளர்களிடம் பேசும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர்

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், பாலத்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறினார்.

மேலும், “நிரந்தரத் தீர்வு என்பது இரு நாடுகளின் ஆதரவின் மூலம் மட்டுமே அடையப்படும். பாலத்தீனிய மக்களுக்கு ‘சுய நிர்ணய உரிமைக்கான அடிப்படை மற்றும் சுதந்திரமான உரிமை உள்ளது’. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்கள் அந்தந்த நாடுகளில் நிம்மதியாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு,” என்று கூறினார்.

“காஸாவில் நடந்து வரும் போர், பாலத்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில்தான் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என்பது தெளிவாகியுள்ளது”, என நார்வே பிரதமர் ஸ்டோர் கூறுகிறார்.

அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் பாலத்தீனிய அதிகாரத்தில் இருந்து பெறப்பட்ட ஓர் அரசை அடைவதே குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். இரு நாடுகளுக்கான தீர்வு என்பதில்தான் இஸ்ரேலின் ‘சிறந்த நலன்களும்’ அடங்கியிருப்பதாக நார்வே நம்புவதாக ஸ்டோர் கூறுகிறார்.

“பாலத்தீனிய அரசை அங்கீகரிப்பதுதான் மோதலுக்கு ஒரே மாற்றாக இருக்கும். இரண்டு நாடுகள், அருகருகே, அமைதி மற்றும் பாதுகாப்பில் வாழ்கின்றன. நார்வேவின் அடிச்சுவடுகளை ‘பின்தொடர’ மற்ற நாடுகளுக்கு இந்த நடவடிக்கை ஒரு ‘வலுவான’ செய்தியை அனுப்புகிறது” என்று நார்வே பிரதமர் கூறினார்.

ஸ்பெயின் பிரதமர் கூறியது என்ன?

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், மூன்று காரணங்களுக்காக பாலத்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாகக் கூறினார்.

“அமைதி, நீதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய மூன்று வார்த்தைகளின் மூலம் இதை நாம் புரிந்துகொள்ள முடியும். இரு நாடு தீர்வுக்கு மதிக்கப்பளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்புக்கு பரஸ்பர உத்தரவாதமும் இருக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம், DIEGO RADAMES/EUROPA PRESS VIA GETTY IMAGES

“இருதரப்பும் அமைதிக்காகப் பேசுவது ஸ்பெயின் உட்படப் பல நாடுகளுக்கு முக்கியமானது. அதனால்தான் நாம் பாலத்தீனத்தை அங்கீகரிக்கப் போகிறோம்.”

பெட்ரோ சான்செஸ் தனது உரையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, “பாலத்தீனத்துக்கான அமைதித் திட்டம் எதுவும் பிரதமர் நெதன்யாகுவிடம் இல்லை,” என்று கடுமையாக விமர்சித்தார்.

“அக்டோபர் 7 நிகழ்வுகளுக்குப் பிறகு ஒரு பயங்கரவாதக் குழுவை எதிர்த்துப் போராடுவது சரியானது மற்றும் அவசியமானது. ஆனால், நெதன்யாகுவின் நடவடிக்கைகள் காஸா மற்றும் பாலத்தீனத்தின் பிற பகுதிகளில் வேதனையையும் அழிவையும் மிகுந்த விரோதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இது இரு நாடு தீர்வை ஆபத்தில் ஆழ்த்துகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

அயர்லாந்து பிரதமர் கூறியது என்ன?

இதற்கிடையில், அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸும், “அயர்லாந்து நாடு பாலத்தீன அரசை அங்கீகரிக்கும்” என்று கூறினார்.

டப்ளினில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், “பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது அமைதியைக் கொண்டு வருவதற்கு மிகத் தேவையான நடவடிக்கை” என்று விவரித்தார்.

“இது இருநாடு தீர்வுக்கான ஆதரவு. பாலத்தீனம், இஸ்ரேல் இடையே சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கான ஒரே நம்பகமான பாதை இதுதான். பாலத்தீனத்தை அங்கீகரிப்பதற்கான முடிவு, குறிப்பாக அது சரியான செயலாக இருக்கும்பட்சத்தில், காலவரையின்றி காத்திருக்கக்கூடாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் பதிலடி என்ன?

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம், OREN BEN HAKOON/AFP VIA GETTY IMAGES

தற்போது பாலத்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவது குறித்து மூன்று நாடுகள் பேசிவரும் சூழலில், இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. இந்த மூன்று நாடுகளில் இருந்தும் தனது தூதர்களைத் திரும்ப அழைத்துள்ளது.

இது “ஹமாஸ் கொலையாளிகளுக்கு தங்கப் பதக்கம் கொடுப்பதைப் போன்றது” என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறேன். இஸ்ரேல் தனது இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு எதிராக மற்றும் அதன் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக ஒருபோதும் பின்வாங்காது,” என்று இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.

“இஸ்ரேல் இதை அமைதியாகக் கடந்து செல்லாது. வேறு கடுமையான விளைவுகளும் கண்டிப்பாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவிரும் வெளியுறவு அமைச்சரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

“இன்று பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாகப் பேசும் நாடுகள் நுக்பா படை (ஹமாஸின் உயரடுக்குப் படைகள்), கொலையாளிகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களுக்கு வெகுமதி அளிக்கின்றன. பாலத்தீன அரசைப் பிரகடனப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் அவர்களிடம் கூறுகிறேன்,” என்று அல்-அக்ஸா வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்ரேலின் பதிலடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்

இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் அவி ஹேமன் பிபிசியிடம் “இது எந்தத் தரப்புக்கும் உதவாது” என்று கூறினார்.

“இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு. ஒருவேளை இஸ்ரேல் மக்கள் இந்த முடிவை எடுத்தால், பேச்சுவார்த்தை நடந்து இந்த முடிவுக்கு வந்தால், இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறினார்.

“இது பாலத்தீனியர்களுக்கு உதவாது, இஸ்ரேலியர்களுக்கு உதவாது, அமைதிக்கு அருகில்கூட நம்மை அழைத்துச் செல்லாது,” என்றும் அவர் தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் தால் ஹென்ரிச், “உலகத்துக்கும், ஹமாஸுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும், அக்டோபர் 7ஆம் தேதி நடந்த படுகொலைக்குப் பணம் கொடுக்கப்பட்ட செய்தியை இன்று இந்த மூன்று நாடுகளும் வழங்குகின்றன,” என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் எதிர்வினை என்ன?

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகளின் முடிவுகளை ஹமாஸ் மற்றும் பாலத்தீன அதிகாரம் வரவேற்றுள்ளது.

இந்த முடிவு பாலத்தீன விவகாரத்தில் சர்வதேச சூழ்நிலையில் ‘முக்கியமான மற்றும் தீர்க்கமான’ திருப்புமுனையாக அமையும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், “பாலத்தீன மக்களின் வலுவான எதிர்ப்பின் காரணமாக இது சாத்தியமானது” என்று ஹமாஸின் மூத்த தலைவர் பாஸெம் நயீம் கூறினார்.

இந்தத் தொடர்ச்சியான அங்கீகாரங்கள் பாலத்தீன மக்களின் உறுதி மற்றும் எதிர்ப்பின் விளைவு என்று நயீம் கூறினார்.

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில் பாலத்தீன அதிகார சபையின் உறுப்பினரும் ரமல்லாவில் உள்ள பலதரப்பு விவகாரங்களுக்கான உதவி அமைச்சருமான அம்மார் ஹிஜாசி, அமைதியைக் கொண்டு வர இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.

“எங்கள் கருத்துப்படி, மக்களிடையே அமைதியை மீட்டெடுப்பதற்கான சாத்தியங்களை இஸ்ரேல் அழிக்க முயலும் ஒரு முக்கியமான நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.”

“எனவே பாலத்தீன மக்களுக்கு அவர்களின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் குறிப்பாக சுயநிர்ணய உரிமையை வழங்குவதுதான் பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான ஒரே வழி என்பதை இந்நாடுகள் ஒன்றாகக் காட்டுகின்றன,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சௌதி அரேபியா என்ன சொல்கிறது?

இந்த முடிவை வரவேற்றுள்ள சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் இதுவொரு நேர்மறையான நடவடிக்கை என்றும் மற்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 1967ஆம் ஆண்டு மாநாட்டின்படி, பாலத்தீன அரசை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை (இன்னும் பாலத்தீன அரசை அங்கீகரிக்காதவர்கள்) சௌதி வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது பாலத்தீன மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு உதவும் எனவும் அனைவருக்கும் நீதி மற்றும் விரிவான அமைதிக்கு வழி வகுக்கும் எனவும் வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாலத்தீனப் பகுதிகள் எவை?

பாலத்தீனப் பகுதிகள்

பட மூலாதாரம், Getty Images

பாலத்தீனிய மக்கள் தொகை என்பது வரலாற்று பாலத்தீனத்தில் வாழ்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புலம்பெயர்ந்தோர் முக்கியமாக அண்டை அரபு நாடுகளில் உள்ளனர்.

இஸ்ரேலுடனான தொடர் மோதலால் மேற்குக் கரை மற்றும் காஸாவில் பாலத்தீன அரசை உருவாக்கும் முயற்சிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலத்தீனியர்கள் 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். மேற்குக் கரையில் இஸ்ரேல் கட்டியுள்ள குடியேற்றங்களில் 500,000 மக்கள் வசிக்கின்றனர், மேலும் அவை சர்வதேச சட்டத்தின் கீழ் சட்ட விரோதமானவை எனக் கருதப்படுகின்றன. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கிறது.

சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் பாலத்தீனியர்கள், தங்கள் விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டை மட்டுமே அடைந்துள்ளனர்.

பாலத்தீனிய அரசியல் தலைமையானது மேற்குக் கரையில் உள்ள ஃபத்தா கட்சிக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே பிளவுபட்டுள்ளது. காஸா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுடன் தற்போது ஒரு தீவிரமான போரில் ஈடுபட்டுள்ளது.

எத்தனை நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளன?

பாலத்தீன நாட்டிற்கு அங்கீகாரம் அளித்த நார்வே மற்றும் அயர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

குறைந்தபட்சம் 140 நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரித்துள்ளன என்று சமீபத்தில் ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 22 நாடுகளின் அரபுக் குழு, 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் 120 உறுப்பினர்களைக் கொண்ட அணிசேரா இயக்கம் ஆகியவை அடங்கும்.

பாலத்தீன அரசை முறையாக அங்கீகரிக்காத நாடுகளில் பிரிட்டனும் அமெரிக்காவும் அடங்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் லார்ட் கேமரூன், “பிரிட்டன் அரசாங்கம், அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, பாலத்தீனிய அரசை அங்கீகரிப்பது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அதைச் சேர்ப்பது பற்றிய பிரச்னையைப் பார்க்கலாம்” என்று பரிந்துரைத்தார்.

இஸ்ரேல் பாலத்தீனிய அரசை அங்கீகரிக்கவில்லை மற்றும் தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரை மற்றும் காஸாவில் பாலத்தீன அரசை உருவாக்குவதை எதிர்க்கிறது. அத்தகைய அரசு இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அது கருதுகிறது.