தைவானுக்கு ‘வலுவான தண்டனை’ தர ராணுவ ஒத்திகை நடத்தும் சீனா – என்ன பிரச்னை?

தைவான், சீனா, ராணுவம்

பட மூலாதாரம், Reuters

  • எழுதியவர், கெல்லி மற்றும் ரூபர்ட் விங்க்ஃபீல்ட்-ஹேயெஸ்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • இருந்து சிங்கப்பூர் மற்றும் தைபே

சீனா, தைவானைச் சுற்றி இரண்டு-நாள் ராணுவ ஒத்திகையை துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கை தைவானின் ‘பிரிவினைவாத செயல்களுக்கான’ ஒரு ‘வலுவான தண்டனை’ என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

தைவானின் புதிய அதிபர் வில்லியம் லாய் பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த ஒத்திகைகள் நடந்துள்ளன. அவர், தைவானை அச்சுறுத்துவதை நிறுத்தவும், அதன் ஜனநாயகத்தின் இருப்பை ஏற்கவும் சீனாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தைவான் தன்னிலிருந்து பிரிந்துசென்ற ஒரு மாகாணமாகச் சீனா பார்க்கிறது. அதனை சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என நினைக்கிறது. ஆனால் தைவான் தன்னை தனி நாடாகப் பார்க்கிறது.

தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் சீனாவின் இந்த ராணுவப் பயிற்சிகளை ‘காரணமற்ற தூண்டுதல்’ என்று கண்டனம் செய்திருக்கிறது.

இதற்கு பதிலாக, தைவான், தனது கடற்படை, விமானப்படை, மற்றும் தரைப்படைகளை ‘தனது இறையாண்மையைப் பாதுகாக்க’ அனுப்பியது, என்று அதன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

வியாழன் (மே 23) அன்று நடந்த இந்த ராணுவ நடவடிக்கைகள் முதன்முறையாக, முழு அளவிலான ஒரு தாக்குதல் போன்ற சூழ்நிலையை உருவாக்கின, என்று தைவான் ராணுவ நிபுணர்கள் கூறினார்.

தைவான், சீனா, ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா தைவானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது

சீனாவின் நோக்கம் என்ன?

சீனாவின் ராணுவம் வெளியிட்ட வரைபடங்களின்படி, இந்த ராணுவ ஒத்திகைகள் தைவானின் பிரதானத் தீவைச் சுற்றி நடந்தன. முதன்முறையாக தைபேயின் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மாட்சு, வுகியு மற்றும் டோங்கியின் தீவுகளையும் குறிவைத்தன. இந்தத் தீவுகள் சீனக் கடற்கரைக்கு அருகில் உள்ளன.

இந்த ராணுவ ஒத்திகையில் தைவானின் கிழக்கே உள்ள ஒரு அங்கமும் அடங்கும். இது தீவின் கரடுமுரடான கிழக்குக் கடற்கரை. ஒரு மலைத்தொடரின் மறுபுறம் இப்பகுதி, நீண்ட காலமாக தைவானின் ராணுவத் தளமாக உள்ளது.

தைவான் தனது தீவிரமான ராணுவ உள்கட்டமைப்பை இந்தக் கடற்கரையில் அமைத்துள்ளது. இதில் ஹுவாலியன் நகருக்கு அருகிலுள்ள மலையின் உள்ளே ஒரு பெரிய நிலத்தடி விமானப்படை தளம் உள்ளது. இது ஜப்பானின் தெற்குத் தீவுகளுக்கு அருகில் உள்ளது. இது ஒரு இயற்கையான மறு விநியோகப் பாதை.

தைவானின் கிழக்கே தனது கடற்படை மற்றும் விமானப்படை ஒத்திகைகளை நிகழ்த்துவதன் மூலம், தைபேயின் கிழக்குப்பகுதியை தாக்கமுடியும் என்று அமெரிக்காவுக்குக் காட்ட நினைக்கிறது சீனா. மேலும் கிழக்கிலிருந்து தைவானுக்கு உதவி வழங்கும் எந்தவொரு முயற்சியும் சீன ஏவுகணைகளால் தாக்கப்படலாம் என்பதை அமெரிக்காவுக்கு சீனா காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சீன ராணுவம், தனது ஒத்திகைகள் மற்றும் கூட்டுக் கடல்-வான் போர்-தயாரிப்பு ரோந்துகள், தைவானின் முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தும் திறனையும், அதன் படைகளின் ‘உண்மையான கூட்டுப் போர் திறன்களையும்’ சோதிப்பதற்காகவும், தைவானின் உள்ளேயும் வெளியேயும் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகள் மீது கவனம் செலுத்தவும் நடத்தப்பட்டன என்று தெரிவித்தது.

தைவான் ஊடகங்கள், ராணுவ நிபுணர் சீஹ் சுங்கை மேற்கோள் காட்டி, தற்போது நடைபெற்று வரும் ஒத்திகை ‘தைவான் மீது முழு அளவிலான ராணுவப் படையெடுப்பு போன்ற ஒரு நிலையை உருவாக்குவதை’ நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று தெரிவித்தன.

தைவான், சீனா, ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தைவானின் புதியஅதிபர் வில்லியம் லாய் பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த ஒத்திகைகள் நடந்துள்ளன

‘பிரிவினைவாதச் செயல்களுக்கு தண்டனை’

கடந்த ஒரு வருடத்தில், தனது போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மூலம் தைவானைச் சுற்றி வளைக்கும் ஒத்திகையை சீனா பலமுறை செய்திருக்கிறது. வில்லியம் லாய் அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னதாக தனது கடல் மற்றும் வான்வெளியில் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவானுக்கு மேற்கொண்ட வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து, சீனா தனது முதல் ராணுவ ஒத்திகை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் தைவானின் பிரதான தீவை முற்றுகையிடுவதை சீனா ஒத்திகை பார்த்தது.

தற்போது, வியாழனன்று நடந்த ராணுவ ஒத்திகைகள் ‘தைவான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாதச் செயல்களுக்கு வலுவான தண்டனை மற்றும் வெளி சக்திகளின் குறுக்கீடு மற்றும் தூண்டலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கை’ என்று சீன ராணுவம் கூறியிருக்கிறது.

இதற்கிடையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம், இந்த ஒத்திகை தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ‘தேவையான மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கை’ என்று வலியுறுத்தியது.

“தைவான் சீனாவின் எல்லையில் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை நான் வலியுறுத்த வேண்டும். இது வரலாற்றின் அடிப்படையிலான உண்மை, மற்றும் இதுதான் நிதர்சனம். இது எதிர்காலத்தில் மாறாது. தைவான் சுதந்திரம் தோல்வியடையும்,” என்று சீன செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை தனது பதவியேற்பு உரையில், தைவான் அதிபர் வில்லியம் லாய், ‘தைவானை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்’ என்று சீனாவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த உரையைக் கண்டித்தது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, வில்லியம் லாய்-ஐ ‘அவமானகரமானவர்’ என்று வர்ணித்தார்.

கடந்த ஜனவரி மாதம் வில்லியம் லாயின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சீனா ‘தைவான் சீனாவின் ஒரு பகுதி’ என்று வலியுறுத்தும் அறிக்கையை வெளியிட்டது. வில்லியம் லாயின் பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளையும் அது மீண்டும் நிராகரித்துள்ளது.

தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதாக கடந்த காலத்தில் அவர் தெரிவித்த கருத்துக்களால் லாய் ஒரு ‘பிரிவினைவாதி’ மற்றும் ‘பிரச்னை செய்பவர்’ என்று சீனா முத்திரை குத்தியது.

தைவான், சீனா, ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தைவான் தன்னை சுதந்திரமான தனி நாடாகப் பார்க்கிறது

தைவான் என்ன சொல்கிறது?

தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வியாழன் அன்று பயிற்சிகள் “சீனாவின் ராணுவ மனநிலையை எடுத்துக்காட்டுகின்றன,” என்று கூறியது.

“சமீபத்திய ஆண்டுகளில், சீன விமானங்கள் மற்றும் கப்பல்களின் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க வகையில் தீங்கு விளைவித்துள்ளன,” என்று அது கூறியது.

தைவான் அதிபர் அலுவலகம், “தைவானின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் சீனா ஒருதலைப்பட்ச ராணுவ ஒத்திகைகளைப் பயன்படுத்தப் பார்ப்பது ‘வருந்தத்தக்கது’,” என்று கூறியுள்ளது.

இதற்கிடையில், சீனாவுடனான உறவுகளை மேற்பார்வையிடும் தைவானின் ‘மெயின்லேண்ட் விவகார கவுன்சில்’ சீனாவுடன் அமைதியை பராமரிக்கும் தைவானின் நோக்கத்தில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறது.

“சீனாவின் அச்சுறுத்தும் தந்திரங்கள் இதயங்களையும் மனதையும் வெல்லாது என்பதை அது புரிந்துகொள்ள வேண்டும்,” என்று செய்தித் தொடர்பாளர் தைவான் லியாங் வென்-சீ கூறினார்.

சீனாவும் தைவானும் வர்த்தகப் பங்காளிகளாக இருந்தாலும், இரு நாடுகளிடையேயும் முறையான தகவல்தொடர்பு கடமைப்பு இல்லை. மேலும் உலகின் பெரும்பாலன நாடுகள் சீனாவுக்கு இராஜதந்திர அங்கீகாரத்தை வழங்குகின்றன. ஆனால் தைவானுக்கு வழங்க்குவதில்லை.

கடந்த டிசம்பர் மாதம், தைவான் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு, தைவான் சீனாவுடன் ‘மீண்டும் ஒன்றிணைக்கப்படும்’ என்ற சீனாவின் அறைகூவல்கள் வலுவடைந்தன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை, தைவானைச் சுற்றியுள்ள சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் படையெடுப்பாக வலுவடையவில்லை.

இந்தச் ‘சாம்பல் மண்டலப் போர் தந்திரங்கள்’ நீண்டகாலமாக ஒரு எதிரியை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று ஆய்வாளர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர். மேலும், அதைத்தான் சீனா தைவானுடன் செய்ய முயற்சிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

தைவான், சீனா, ராணுவம்
படக்குறிப்பு, சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரிக்கின்றன

சீனா-தைவான் – ஒரு விளக்கம்

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே என்ன பிரச்னை?

சீனா தைவானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக அதைத் தன்னுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், தைவான் தன்னை சுதந்திரமான தனி நாடாகப் பார்க்கிறது.

தைவான் எவ்வாறு ஆளப்படுகிறது?

தைவானுக்கு அதன் சொந்த அரசியலமைப்பு உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் உள்ளனர். அதன் ஆயுதப்படைகளில் சுமார் 3 லட்சம் துருப்புக்கள் உள்ளன.

தைவானை அங்கீகரிப்பது யார்?

சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரிக்கின்றன. சீன அரசாங்கத்தைப் பெரும்பாலானோர் அங்கீகரிக்கின்றனர். தைவானுடன் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ உறவுகள் இல்லை, ஆனால் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை தைவானுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது.