ஜார்கண்ட்: மிரட்டல்களை தாண்டி மக்கள் மத்தியில் பிரபலமாகும் திருநங்கை சுயேச்சை வேட்பாளர்

தன்பாத்: பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களைவிட பிரபலமாகும் திருநங்கை சுயேச்சை வேட்பாளர்
படக்குறிப்பு, காங்கிரஸ் வேட்பாளர் அனுபமா, சுயேச்சை வேட்பாளர் சுனைனா மற்றும் பாஜக வேட்பாளர் துல்லு மஹதோ (முறையே)
  • எழுதியவர், சல்மான் ராவி
  • பதவி, பிபிசி செய்தியாளர், தன்பாத்தில் இருந்து

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத், இந்தியாவின் நிலக்கரி தலைநகரமாக அடையாளம் காணப்படுகிறது. ‘கருப்பு வைரம்’ நிறைந்திருக்கும் இந்த நிலம் நிலக்கரி மாஃபியாக்கள் மற்றும் கோஷ்டி மோதல்களின் ரத்தக்களறி சகாப்தத்தையும் கண்டது.

இந்தியா முழுவதும் மின்சாரம் மற்றும் இரும்பு ஆலைகள் செயல்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையும் இந்த மோதல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் வெப்பம் தற்போது தேர்தல் பரபரப்பு காரணமாகவும் அதிகரித்துள்ளது.

தன்பாத்தில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்த பசுபதிநாத் சிங்கின் சீட்டை ரத்து செய்த பாரதிய ஜனதா கட்சி, பாக்மாராவில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த துல்லு மஹதோவை இந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆயினும் அவர் மீது பல கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சி மகளிர் வேட்பாளராக அனுபமா சிங்கை நிறுத்தியுள்ளது. அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனால் அவரது கணவரும் பெர்மோ சட்டமன்ற உறுப்பினருமான அனூப் சிங் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதன் காரணமாக தேர்தல் நடவடிக்கைகள் அதிகார பலம் மற்றும் சாதி சமன்பாடுகளைச் சுற்றியே மீண்டும் சுழலத் தொடங்கியுள்ளன.

தேர்தல் களத்தில் திருநங்கை சுனைனா

தன்பாத்: பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களைவிட பிரபலமாகும் திருநங்கை சுயேச்சை வேட்பாளர்
படக்குறிப்பு, நாட்டின் நிலக்கரி தலைநகரமாக தன்பாத் அறியப்படுகிறது.

ஆனால் இம்முறை தன்பாத் தொகுதியில் தேர்தல் களத்தில் இருக்கும் ஒரு வேட்பாளர் பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு திருநங்கை போராடி மக்களவையில் தனது உரிமையைக் கோரியுள்ளார். பட்டதாரியான அவர் பெயர் சுனைனா கின்னர்.

சுனைனாவின் பிரசாரம் செய்யும் முறை வேறாக உள்ளது. இதனால் அவரது பிரசாரத்தில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சுனைனா கின்னர் மிகவும் ஜாக்கிரதையாக தனது அடிகளை முன்னெடுத்து வைக்கிறார்.

சுயேச்சை வேட்பாளரான தனக்கு மிரட்டல் வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தன்பாத்தில் தேர்தலில் போட்டியிட அதிகார பலம் மற்றும் பண பலம் அவசியம் என்று கருதப்படுகிறது. ஆனால் சுனைனா கின்னர் செய்வது வித்தியாசமாக உள்ளது.

மனாய்டாண்டில் உள்ள குமார் பாடாவில் தனது வீட்டில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர், வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே தனக்கு நிறைய மிரட்டல்கள் வர ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

“இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று எனக்கு மிரட்டல் வந்தது. நீ கைநீட்டி பிச்சை எடுப்பவள், ஆசிர்வாதம் செய்பவள். அதையே தொடர்ந்து செய் என்று மிரட்டினார்கள்,” என்றார்.

தன்பாத்: பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களைவிட பிரபலமாகும் திருநங்கை சுயேச்சை வேட்பாளர்
படக்குறிப்பு, பிரசாரத்தில் சுனைனா

விரைவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்ததாகவும், தன்னை பயமுறுத்தும் விதமாக தொனி மாறியதாகவும் அவர் கூறுகிறார். தன்னை களத்தில் இருந்து விலக வைக்க அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. “என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்,” என்கிறார் அவர்.

நிலக்கரி மீது குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்துவதே தன்பாத்தின் மிகப்பெரிய பிரச்னை என்று சுனைனா கின்னர் நம்புகிறார். இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சட்டவிரோத நிலக்கரி வர்த்தகம் மற்றும் மேலாதிக்கத்திற்கான சண்டை காரணமாக தன்பாத், ஆபத்தான பகுதியாக மாறியது என்று அவர் கூறுகிறார்.

“இங்கு நிலக்கரியின் மிகப்பெரிய மற்றும் சிக்கலான பிரச்னை உள்ளது. பரஸ்பர போட்டி மற்றும் வியாபாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் காரணமாக சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடினமாகி வருகிறது,” என்று சுனைனா குறிப்பிட்டார். சுனைனா புவியியலில் பட்டம் பெற்றுள்ளார்.

ஆனால் இதுவும் அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பத்தாம் வகுப்பில் இருந்தே ‘ராகிங்கை’ சந்திக்க நேர்ந்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.

”பத்தாம் வகுப்பில் முதல் முறையாக நான் யார் என்று சிந்திக்கத் தொடங்கினேன். எனக்குள் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அப்போதுதான் நான் ஒரு திருநங்கை, அவர்களிடம் இருந்து நான் வித்தியாசமானவன் என்பதை மக்கள் எனக்கு உணர்த்தினார்கள்,” என்று அவர் கூறினார்.

பாஜக வேட்பாளர் என்ன சொல்கிறார்?

தன்பாத்: பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களைவிட பிரபலமாகும் திருநங்கை சுயேச்சை வேட்பாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மனாய்டாண்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள முஜி நகரில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. இம்முறை பாஜக சார்பில், 3 முறை வெற்றி பெற்ற பிஎன் சிங்குக்கு பதிலாக துல்லு மஹதோவுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பிபிசியிடம் பேசிய அவர், தனது எதிரிகள் அனைவருக்கும் சவால் விடுக்கும் தொனியில், “அவர்களுக்கு என்ன தைரியம்? நான் விடுக்கும் சவாலை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ராகுல் காந்தியைவிட என் மீது அதிக வழக்குகள் இருந்தால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்,’ என்றார்.

தனது சமூக மக்கள் பல தலைமுறைகளாகக் கூலி வேலை மட்டுமே செய்ததாக அவர் கூறுகிறார். ”நிலக்கரியின் மீது உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஆதிக்கத்தால், நிலக்கரி அவர்களுடையதாகவே இருந்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“எல்லா திருடர்களும் ஒரே இடத்தில் கூடி எனக்கு எதிராக உள்ளனர். குற்றப் புள்ளி விவரங்களைப் பாருங்கள். இந்த மண்ணில் கொலைகளைச் செய்து கொலை விதைகளை விதைத்தவர்கள் யார்? தன்பாத்திற்கு குற்றத்தைக் கொண்டு வந்தவர்கள் யார்? இப்போது இவர்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்,” என்று துல்லு மஹதோ கூறினார்.

பாஜக-வின் மாநில பிரிவு மஹதோவை ஆதரித்து வருகிறது. முன்னாள் முதல்வரும், கட்சியின் மாநிலப் பிரிவின் தலைவருமான பாபுலால் மராண்டி, மஹதோவுக்கு ஆதரவாகப் பல இடங்களில் தேர்தல் பேரணிகளை நடத்தி வருகிறார்.

அப்படி ஒரு பேரணியின்போது நேரம் ஒதுக்கி பிபிசியிடம் பேசிய அவர், தன்பாத் தொகுதியில் மட்டுமல்ல, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல்களில் பல்வேறு வகையான சவால்கள் உள்ளன என்று கூறினார்.

தன்பாத் தொகுதியில் ஒவ்வொரு தொண்டரும் பிரதமர் நரேந்திர மோதியின் பெயரில் போராடுகின்றனர் என்று அவர் சொன்னார்.

“துல்லு மஹதோ தன்பாத்தில் இருந்து போட்டியிடுகிறார். அவர் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். நாங்கள் அனைவரும்கூட கடினமாக உழைக்கிறோம். கிரிமினல் விஷயங்களைப் பொறுத்தவரை, துல்லு மஹதோ ஒரு வீரர் போன்றவர். அவர் மக்களுக்காகப் போராடி வருகிறார். பொதுமக்கள் நலனுக்காகப் போராடி வருகிறார். எனவே அவர் மீதும் வழக்குகள் இருப்பது இயல்புதான்,” என்று மராண்டி குறிப்பிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளரின் வாதம் என்ன?

தன்பாத்: பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களைவிட பிரபலமாகும் திருநங்கை சுயேச்சை வேட்பாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் வேட்பாளர்

காங்கிரஸ் வேட்பாளர் அனுபமா சிங்குக்கு இது முதல் தேர்தல். துல்லு மஹதோவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வாய்ப்பை அவர் தவறவிடுவதில்லை. அப்பகுதி முழுவதும் சுற்றி அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

“அவரிடம் (துல்லு மஹதோ) மிகப்பெரிய சான்றிதழ்கள் உள்ளன(நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்குகள்). சிலர் 53 வழக்குகள் என்கிறார்கள், சிலர் 51 என்கிறார்கள். ஆனால் நான் இதுவரை அவரது 40-45 வழக்குகளை ஆய்வு செய்துள்ளேன்,” என்று அனுபமா குறிப்பிட்டார்.

”பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் துன்புறுத்தியதற்காகவே துலு மஹதோ மீது பெரும்பாலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மக்களவையில் நுழைவதால் தன்பாத்தில் இதுபோன்ற வழக்குகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறேன். அவருடைய மக்கள் இங்கு வன்முறையைப் பரப்புவது நடக்கக்கூடாது. இப்போது என்ன நடக்கிறதோ அதுவும் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.

தன்பாத் தொகுதியில் அனுபமா சிங்கை களமிறக்கியது தங்களின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று காங்கிரஸ் கூறுகிறது. அவர் ஒரு பெண், கூடவே அவர் மீது எந்த வழக்கும் இல்லை. கறை படியாத அனுபமா சிங்கின் பிம்பம் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்கிறது காங்கிரஸ்.

ஜார்கண்ட் இளைஞர் காங்கிரஸின் மாநிலப் பிரிவு தலைவர் அபிஜீத் ராஜ். அனுபமா சிங் ஒரு பெண் மட்டுமல்ல, ஓர் இளம் பெண்ணும்கூட என்று கூறுகிறார்.

”மகளிருக்கு அதிகாரமும், வலுவும் கொடுப்போம் என்று ராகுல் காந்தி கூறுகிறார். அதற்கான உதாரணத்தை இந்தத் தேர்தலில் நீங்கள் பார்க்கிறீர்கள். அவர் ஒரு சிறந்த பெண். படித்த பெண். இந்த நேரத்தில் பாஜக.வுக்கு இப்படிப்பட்ட சவால்தான் அளிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

பொதுமக்களும், சிவில் சமூகத்தினரும் என்ன சொல்கிறார்கள்?

தன்பாத்: பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களைவிட பிரபலமாகும் திருநங்கை சுயேச்சை வேட்பாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸின் வேட்பாளர்கள் தேர்வு, தன்பாத்தின் சிவில் சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது. குறிப்பாக பாஜகவின் இந்த முடிவால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் பல இடங்களில் கூட்டங்களை நடத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

விஜய் ஜா ஒரு சமூக சேவகர் மற்றும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காகக் கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

கத்ராஸ்கடில் அவர் பிபிசியை சந்தித்தார். பாஜக அரசியல் சுத்தீகரிப்பைச் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் சிவில் சமூகத்திற்கு பாஜக மீது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் வாதிடுகிறார். “தன்பாத்தில் பாஜக நிறுத்தியுள்ள வேட்பாளர் மீது 53 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு வழக்குகளில், கீழ் நீதிமன்றம் அவருக்கு தண்டனையும் அளித்துள்ளது. அதனால் ஏமாற்றத்தை விட அதிகமாக நாங்கள் கவலையில் உள்ளோம்,” என்றார் அவர்.

தன்பாத்தின் தேர்தல் சூழலில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆனால் பொதுமக்களின் பிரச்னைகள் என்ன என்பது குறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் அதிகம் பேசுவதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

லோத்னா கோலியரியில் வசிக்கும் பிரபல தொழிலாளர் சங்கத் தலைவரான சத்யேந்திர சௌஹான், அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே முகத்தைக் காட்டுவார்கள் என்றும் அதன்பிறகு ஐந்து ஆண்டுகளாகத் திரும்பி வருவதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்.

“தலைவர்கள் வாக்கு கேட்டுவிட்டு, தங்கள் முகத்தைக் காட்டிவிட்டு, பெரிய கார்களை காட்டிவிட்டு செல்கிறார்கள். அதன்பிறகு எந்தக் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் ஏழைகள் வாழும் பகுதிகளுக்கு வருவதில்லை. வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு வர தைரியம் இல்லை,” என்றார் சத்யேந்திர சௌஹான்.

தன்பாத் மக்களவைத் தொகுதியில் பெரிய தலைவர்கள் மற்றும் பலம் வாய்ந்தவர்கள் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் பலர் இந்தத் தொகுதியில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால் இந்தத் தொகுதியில் வாழும் மக்களுக்கு உண்மையாகவே நிவாரணம் கிடைக்குமா?