மியான்மர்
  • எழுதியவர், குவென்டின் சோமர்வில்
  • பதவி, பிபிசி செய்திகள்

மியான்மர் நாட்டின் மக்கள் பல தசாப்தங்களாக ராணுவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறப் போராடி வருகின்றனர். இது ‘மறக்கப்பட்ட போர்’ என்று அழைக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராணுவப்புரட்சி மூலம் ஜனநாயகம் கவிழ்க்கப்பட்டது. பல தசாப்த கால ராணுவ ஆட்சி மற்றும் மிருகத்தனமான அடக்குமுறைக்குப் பிறகு, இனக்குழுக்கள், இளம் கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் ராணுவ சர்வாதிகாரத்தை நெருக்கடி நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். பிபிசி நிருபர் குவென்டின் சோமர்வில், மியான்மரின் கிழக்கில் இருக்கும் காடுகளில் புரட்சிப் படைகளுடன் ஒரு மாதம் தங்கியிருந்தார்.

இருவர் இரண்டு ஆளளவு ஒலிபெருக்கிகளைச் சுமந்து செல்கின்றனர். அவை பெரிய பாறைகள் நிறைந்த மலையின் உச்சிக்குக் கொண்டு வரப்படுகின்றன. 800 மீட்டர் கீழே ஹசாங் நகரில், ஒரு பெரிய மியான்மர் ராணுவ தளம் உள்ளது.

மிகவும் வெப்பமான நாள். 40 டிகிரி செல்ஷியஸுக்கும் மேல் வெப்பம் நிலவுகிறது. பின்புறத்தில் மூங்கில் கம்புகளில் இளம் போராளிகள் ஒரு பெரிய, கனமான பேட்டரி பேக் மற்றும் ஆம்ப்ளிஃபயரை எடுத்துச் செல்கிறார்கள். ராணுவத்தில் 12 ஆண்டுகள் கழித்த பின்னர் எதிர்ப்பு தரப்பில் இணைந்த முன்னாள் ராணுவத் தலைவர் நே மியோ ஜின் இவர்களை வழிநடத்திச் செல்கிறார்.

அடர் பச்சை நிற ஜாக்கெட்டை ஒரு தோளில் மாட்டியிருக்கும் அவர் ஒரு மேடைக் கலைஞர் போல் இருக்கிறார். நாட்டை ஆளும் ராணுவத்திற்கு விசுவாசமாக இருக்கும் ராணுவ வீரர்களை தங்கள் பக்கம் வருமாறு வலியுறுத்துவதற்காக அவர் இங்கு வந்துள்ளார்.

மியான்மரின் கிழக்கே உள்ள கரேனி மாகாணத்தின் காடுகளின் உட்பகுதியில் இரண்டு படைகள் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் போர், ஏதோ ஒரு வடிவத்தில், பல தசாப்தங்களாக நடந்துவருகிறது. ஆனால் சமீபத்திய மாதங்களில் எதிர்ப்புப் படையின் விரைவான முன்னேற்றம் இந்த நேரம் அவர்களுக்குச் சாதகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மியான்மரில் பல தசாப்த கால ராணுவ ஆட்சி மற்றும் மிருகத்தனமான அடக்குமுறைக்குப் பிறகு, ஒரு மாற்றம் தோன்றியுள்ளது. இளம் கிளர்ச்சியாளர்களின் புதிய படையுடன் இணைந்த இனக்குழுக்கள், சர்வாதிகாரத்தை நெருக்கடி நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.

கடந்த ஏழு மாதங்களில் நாட்டின் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், இந்த எதிர்ப்ப்க் குழுக்களுடன் இணைந்துள்ளனர். 2021-இல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து குழந்தைகள் உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ராணுவம் தனது ஆட்சிக்கு எதிராக முன்னெப்போதுமில்லாத ஒரு சவாலை எதிர்கொள்கிறது. வளர்ந்து வரும் எதிர்ப்பைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தொடர்ந்து பொதுமக்கள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் மீது போர் விமானங்கள் குண்டுகள் வீசித்தாக்குகின்றன. (புரட்சிப் படையினரிடம் விமானங்கள் இல்லை.)

மியான்மர்
படக்குறிப்பு, நே மியோ ஜின், கீழே உள்ள முகாமுக்கு ஒலிபரப்பு செய்கிறார்.

இதுவரை கேட்கப்படாத கதைகள்

நே மியோ ஜின்-இன் ஒலிபெருக்கி ‘ஆன்’ செய்யப்படுவதற்குமுன் ராணுவம் அவர் இருக்கும் இடம் நோக்கிச் சுடத் துவங்கியது.

எந்த பயமுமின்றி, சுவிட்சையும், மைக்கையும் கையில் வைத்துக்கொண்டு அவர் உரக்கப் பேசுகிறார்: “எல்லோரும் சண்டையை நிறுத்துங்கள்! தயவுசெய்து சண்டையை நிறுத்துங்கள். ஐந்து நிமிடம், 10 நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள்.”

ஆச்சரியகரமாகத் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

வடக்கு ஷான் மாகாணத்தில் எதிர் தரப்பிற்குச்சென்ற 4,000 வீரர்களைப் பற்றியும், நாட்டின் தலைநகரான நே பியி தாவில் உள்ள ராணுவக்கட்டிடங்கள் மீது கிளர்ச்சியாளர்களின் சமீபத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பற்றியும் அவர் அவர்களிடம் கூறுகிறார். நாங்கள் வெல்கிறோம், உங்கள் ஆட்சி வீழ்கிறது, கைவிடும் நேரம் வந்துவிட்டது என்ற செய்தியை அவர் சொல்கிறார்.

நாட்டின் பெரும்பகுதியைப் போலவே ஹசாங் (Hpsang) மற்றும் கரேனி (Karenni) மாகாணத்திலும் ராணுவ ஆட்சிக்குழுவின் ஆட்சிக்கு ஒரு பெரிய கிளர்ச்சி அச்சுறுத்தலாக இருப்பதால், சண்டையும் முட்டுக்கட்டையும் அதிகரித்துள்ளன. 2021-இல் ராணுவப் புரட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அரசு முடிவுக்கு வந்தது. ஜனநாயக அரசின் தலைவர் ஆங் சான் சூச்சியும், மற்ற அரசியல் தலைவர்களும் சிறையில் உள்ளனர்.

ஆயினும்கூட இது பற்றிக் குறைவான செய்திகளே வெயிடப்பட்டுள்ளன. உலக நாடுகளின் கவனத்தின் பெரும்பகுதி யுக்ரேன் மற்றும் இஸ்ரேல்-காஸா மோதல்கள் மீது உள்ளது. மியான்மரில் பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லை. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அரிதாகவே அதிகாரப்பூர்வமாக நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் நாட்டிற்குள் வந்தாலும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்கள் மூலம் இந்தக் கதையின் எதிர்தரப்ப்பைக் கேட்க வழி இல்லை.

மியான்மர்
படக்குறிப்பு, KNDF என்ற Karenni Nationalities Defense Force-இன் பட்டமளிப்பு விழா

ராணுவத்தினர் கிளர்ச்சிப்படையில் சேர அழைப்பு

நாங்கள் மியான்மருக்குப் பயணம் செய்து, தாய்லாந்தின் எல்லையில் உள்ள கரேனி மாகாணத்திலும், நாட்டின் கிழக்கில் சீனாவின் எல்லையில் இருக்கும் ஷான் மாகாணத்திலும் சண்டையிடும் எதிர்ப்புக் குழுக்களுடன் ஒரு மாதம் வாழ்ந்தோம்.

வனப் பாதைகளிலும், பின்புறச் சாலைகளிலும் நாங்கள் பயணம் செய்தோம். ராணுவ முன்னேற்றம் துண்டிக்கப்பட்டு வாரக்கணக்கில் சுற்றி வளைக்கப்பட்ட முன் வரிசைகளுக்கு நாங்கள் பயணித்தோம். அங்கும் ஹசாங் போலவே, போராளிகளுக்குச் சாதகமான நிலை காணப்படுகிறது. ஆனால் வடக்கில் உள்ள மொபே போன்ற இடங்களில், பெருமளவில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலத்தில் நேரடித் தாக்குதலை நடத்த முயன்றதால், எதிர்தரப்பு பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அங்கேயும், மாகாணத் தலைநகர் லோய்காவிலும், கிளர்ச்சியின் வலிமையும் அதன் வரம்புகளும் தெளிவாகத் தெரிகின்றன.

ஹசாங்கில் தங்கள் நிலை வலுவாக உள்ளது என்று கருதும் எதிர்ப்பாளர்கள் காத்திருப்பு விளையாட்டை விளையாடுகிறார்கள். சுமார் 80 வீரர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தளத்திற்குள் சிக்கியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மலையின் உச்சியில், நே மியோ ஜின் தனது ஒலிபெருக்கி மூலம் சரணடைவதற்கான வாதத்தை முன்வைக்கிறார். “நாங்கள் உங்களைச் சுற்றி வளைத்துள்ளோம். ஹெலிகாப்டர் வர வாய்ப்பே இல்லை. தரைப்படைகளின் ஆதரவு இல்லை. பொதுமக்களின் பக்கம் இருப்பதா இல்லையா என்பதை இன்று நீங்கள் தீர்மானிக்கவேண்டும்.”

கீழே ராணுவ முகாமில் அமைதி நிலவுகிறது.

ஆளும் ஆட்சிக்குழுவின் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கை கைவிடுமாறு நே மியோ ஜின் வலியுறுத்தினார்.

“உங்கள் அனைவரது உயிரும் நிச்சயமாகக் காப்பாற்றப்படும். இது நான் கொடுக்கும் மிகப்பெரிய வாக்குறுதி. எனவே ஏமாளியாக இருக்காதீர்கள். சர்வாதிகாரி மின் ஆங் ஹ்லைங்கின் முறைகேடான செல்வத்தை உங்கள் இறுதி மூச்சு வரை பாதுகாப்பீர்களா? இப்போது, ​​உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்கிறார்.

சில கணங்கள் கடக்கின்றன. ராணுவ ஆட்சிப் படைகள் தங்கள் பதிலைப் பரிசீலிக்கும் நேரத்தில் மலை உச்சியில் ஈக்களின் சத்தம் மட்டுமே கேட்கிறது. இது எளிதான முடிவு அல்ல. அவர்கள் சரணடைந்து அதன் பிறகு ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் திரும்பினால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.

பதில் சத்தமாக வருகிறது. அவர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். கிளர்ச்சியாளர்கள் மறைவிடங்களில் ஒளிகின்றனர். இன்று சரணடைதல் இருக்காது.

இதை பொருட்படுத்தாமல் நே மியோ ஜின் தொடர்ந்து பேசுகிறார். அவரது பக்கத்தில் இருக்கும் ஒரு தளபதி ஒரு தளத்தைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் மாறுபட்ட அணுகுமுறையை எடுக்கிறார். இது நடப்பது ரேடியோவில். ராணுவ வீரர்களின் அதே அதிர்வெண்ணில் அவர் வீரர்களை அவமானப்படுத்துகிறார்.

அவர்கள் மின் ஆங் ஹ்லைங்கின் காவல் நாய்கள் என்றும் சொந்த நாட்டிற்கு விசுவாசமற்றவர்கள் என்றும் வசைமாரி பொழிகிறார்.

வீரர்களும் பதிலுக்கு ஏசினர். ஆட்களும் உணவும் இல்லாத நிலையிலும் அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். நாட்டை ஆள்வது ராணுவத்தின் உரிமை என்ற தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.

இரு தரப்புக்கும் இடையே உள்ள கருத்தியல் இடைவெளியை குறைப்பது சாத்தியம் இல்லை.

மியான்மர்
படக்குறிப்பு, பார்ஸிலோனா மேல்சட்டை மற்றும் நீல நகச்சாயம் அணிந்துள்ள நாம் ரீ-க்கு 22 வயது

25 வயதுக்குட்பட்ட போராளிகள்

வீரர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சி சுமார் 30 நிமிடங்கள் தொடர்கிறது. பின்னர் எதிர்ப்புப் போராளிகள் பின்வாங்குகின்றனர்.

சரணடைவதற்கான தனது தீவிர வேண்டுகோளின்போது நே மியோ ஜின் கவனக்குறைவாக தங்கள் வீரர்களின் நிலையை கூறிவிட்டார். (“நான் ஒலிபெருக்கிக்கு அருகில் 400 கெஜம் தொலைவில் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்). பீரங்கி அல்லது மோர்டர் குண்டு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். அன்று மாலை மலைப்பகுதி தாக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது ஒரு கருத்தியல் போர் என்பதை விட தலைமுறைகளாகத் தொடரும் போர் என்று சொல்லலாம். அதாவது இளைஞர்கள் அதிகாரத்திற்கு எதிராக உள்ளனர். இது பழைய ஒழுங்கில் இருந்து விடுபட போராடிக்கொண்டிருக்கும் புதிய ஒழுங்கு. தோல்வியுற்ற புரட்சிகளின் கதைகளைக் கேட்ட அதே இளைஞர்கள் இது தங்கள் நேரம் என்று முடிவு செய்துள்ளனர்.

அரை நூற்றாண்டு ராணுவ ஆட்சிக்குப் பிறகு, மியான்மர் 2015-இல் ஆங் சான் சூச்சி மற்றும் அவரது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் கீழ் குறுகிய காலத்திற்கு ஜனநாயகத்தை ருசித்தது.

பல இளைஞர்களுக்கு அந்த ஆண்டுகள், சில பிரச்சனைகள் இருந்தாலும்கூட சுதந்திரத்தின் மிகக்குறுகிய பொற்காலத்தைக் குறித்தன. வாக்குப்பெட்டி தோல்வியடைந்தது. ராணுவப் புரட்சிக்குப்பின்னர் நடந்த அமைதியான போராட்டங்கள், கொலைகள் மற்றும் கைதுகளை எதிர்கொண்டன. ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று போராடியவர்களில் பலர் எங்களிடம் கூறினர்.

யாங்கூன் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், கணிதவியலாளர்கள் மற்றும் தற்காப்புக் கலைப் போராளிகள் படிப்பையும் தொழிலையும் கைவிட்டு நகரங்களை விட்டு வெளியேறி, நீண்டகாலமாக ராணுவ ஆட்சியை எதிர்க்கும் இன மற்றும் எதிர்ப்புக் குழுக்களில் சேர்ந்தனர்.

இந்தப் போர்முனையில் உள்ள எல்லாப் போராளிகளும் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

மியான்மர்
படக்குறிப்பு, ஆங் நக்லேயின் கால் வீங்கியிருக்கிறது

‘எங்களிடம் மன உறுதி உள்ளது’

நாம் ரீ என்ற 22 வயதான போராளி, கே.என்.டி.எஃப் (KNDF என்ற Karenni Nationalities Defense Force)-இன் உறுப்பினர். தான் எதிர்ப்பில் சேர்ந்தது ஏன் என்பதை விளக்குகிறார்.

“நாய்கள் [ராணுவத்திற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் அவமதிப்பு வார்த்தை] சட்டவிரோத ராணுவப் புரட்சியை மேற்கொண்டனர். இதனால் இளைஞர்களாகிய நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம்,” என்றார்.

அவர் பார்சிலோனா எஃப்.சி சட்டை, ஃபிளிப் ஃப்ளாப் செருப்புகள், நீல நிற நெயில் பாலிஷ், மங்கிப்போன போர் கால்சட்டை மற்றும் தோட்டாக்கள் தாங்கிய பெல்ட் அணிந்துள்ளார். அவரைச் சுற்றியுள்ள பெரும்பாலான ஆண்களைப் போலல்லாமல், அவர் ஒரு பாலிஸ்டிக் ஹெல்மெட் வைத்திருக்கிறார். யாரிடமும் உடல் கவசம் இல்லை.

KNDF என்பது சதிப்புரட்சிக்குப் பின்னர் உருவாகியுள்ள இளம் போராளிகள் மற்றும் தளபதிகளின் புதிய படையாகும். கயா மாகாணம் என்றும் அழைக்கப்படும் கரேனியில் இன ஆயுதக் குழுக்கள் பல தசாப்தங்களாக ராணுவத்துடன் போரிட்டு வருகின்றன. ஆனால் KNDF அவர்களுக்கு ஒற்றுமையையும், போர்க்களத்தில் வெற்றியையும் தந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி, நாட்டின் வடக்கில் ராணுவ நிலைகள் மற்றும் எல்லைக் கடப்புகளைச் சில குழுக்கள் கைப்பற்றியபோது, போரின் போக்கு ​​ராணுவ ஆட்சிக்குத் திரும்பியது. நாடு முழுவதும் டஜன் கணக்கான நகரங்கள் ஆயுதமேந்திய எதிர்தரப்பிடம் விழுந்தன. முக்கிய நகரங்களின் கட்டுப்பாடு இன்னும் ராணுவத்தின் கைகளில் உள்ளது. ஆனால் கிராமப்புறங்கள் மற்றும் மியான்மரின் எல்லைகளின் கட்டுப்பாட்டை அது இழந்து வருகிறது.

இப்போது கரேனி மாகாணத்தின் 90% கட்டுப்பாடு தனது மற்றும் பிற கிளர்ச்சிக் குழுக்களிடம் இருப்பதாக KNDF கூறுகிறது. இது நாட்டின் சிறிய பகுதியாக இருக்கலாம். ஆனால் அது ஒரு உறுதியான எதிர்ப்பின் மையமாக மாறியுள்ளது.

வலிமையான கட்டுமஸ்தான உடல் அமைப்புடன், உடலில் பச்சை குத்திக்கொண்டுள்ள KNDF துணைத் தளபதி மௌய் ஃபோ தைகே, ஒரு மாந்தோப்பின் நிழலில் அமர்ந்துள்ளார். அமெரிக்காவில் படித்த சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கையில் துப்பாக்கியை எடுத்தார்.

ராணுவ ஆட்சிக் குழுவை ஒரு அரசாக தான் அங்கீகரிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். இது நாட்டின் பல இனப்பகுதிகளை ஒடுக்கும் ஒன்று என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒட்டுமொத்த நாடும் தற்போது ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

“உத்திகள் மாறிக்கொண்டிருக்கின்றன. இப்போது எல்லா தாக்குதல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன,” என்கிறார் அவர்.

KNDF-இடம் வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களின் இருப்பு மிகக் குறைவு. வெளிநாடு வாழ் குடிமக்களின் நன்கொடைகளால் கிளர்ச்சியின் செலவுகளின் பெரும்பகுதிக்கு நிதியளிக்கப்படுகிறது.

“எங்களிடம் போதுமான இதயம் உள்ளது, போதுமான மன உறுதி உள்ளது, போதுமான மனிதாபிமானம் உள்ளது. அப்படித்தான் நாங்கள் அவர்களை வெல்லப் போகிறோம்,” என்று மௌய் கூறுகிறார்.

மியான்மர் ஜனநாயகத்தை நோக்கிச்சென்ற அந்த சுருங்கிய காலகட்டத்தில் அவர், ‘சுதந்திர சிந்தனையாளர்’ என்று தனது கையில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். நான் அவரிடம், ‘நீங்கள் இன்னும் ஒரு சுதந்திர சிந்தனையாளரா?’ என்று கேட்டேன். “இந்தச் சீருடையில், இல்லை,” என்று அவர் பதிலளித்தார். “ஆனால் இந்த சீருடை இல்லாமல், நான் ஒரு சுதந்திர மனிதன். மேலும் இது எங்கள் கனவு. நாங்கள் அதை மீண்டும் கட்டி எழுப்புவோம்,” என்றார் அவர்.

மியான்மர்
படக்குறிப்பு, மௌய் ஃபோ தைகே, கே.என்.டி.எஃப் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கிறார்

உலகிலிருந்து துண்டிக்கப்பட்ட இடம்

மியான்மருக்குள் நுழைவது என்பது மறக்கப்பட்ட போர் நிகழும் இடத்திற்கு செல்வது மட்டுமல்ல, வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு நாட்டிற்குச் செல்வதாகும். கரேனி மாகாணத்தில் பெரும்பாலான மொபைல் போன் நெட்வொர்க்குகள், இணையம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் கை சிறிது தாழ்ந்து இருக்கலாம் ஆனால் அவர்களின் மீதமுள்ள தளங்கள், மாகாணத்தின் முக்கியச் சாலைகளைக் கட்டுப்படுத்துகின்றன.

ஹசாங்லிருந்து மேலும் வடக்கே டெமோசோ நகருக்குக் கரடுமுரடான அழுக்குப் பாதைகள், மலைகள், ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக 60கி.மீ. (37 மைல்) தூரம் செல்ல 10 மணிநேரத்திற்கு மேல் ஆனது.

ராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தோல்வியுற்ற தாக்குதலின் பின்னணியில் நாங்கள் அருகிலுள்ள நகரமான மோபியை வந்தடைந்தோம். இந்த தாக்குதலில் 27 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.

காட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் KNDF இளைஞர்கள் மண் தரையில் படுக்கைகளில் படுத்துள்ளனர். சிலர் சிரிக்கிறார்கள் மற்றும் கட்டைவிரலை உயர்த்துகிறார்கள், பெரும்பாலானவர்களுக்கு கை-கால்கள் இல்லை.

இந்தத் தளம் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 23 வயதான ஆங் நக்லேயின் தொடை தமனியில் குண்டின் இரும்புத்துகள்கள் தாக்கியதால் இடது கால் மோசமாக வீங்கியிருக்கிறது. அவர் பேச முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஆனால் அவர் அழ ஆரம்பித்தவுடன், அவரது தோழர்கள் மூன்று பேர் அவரிடம் வந்து அவரை அரவணைத்து ஆறுதல் கூறுகிறார்கள். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யமுடியாது. மேல் சிகிச்சைக்காக அவர் தாய்லாந்துக்கு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர் பிழைப்பாரா என்று மருத்துவரிடம் கேட்கிறேன். “அவர் சரியாகிவிடுவார்,” என்று கூறிய அவர் ”இப்போது அவர் சோகமாக நிலையில் இருக்கிறார். ஏனென்றால் அவரால் இனி சண்டையிட முடியாது,” என்று குறிப்பிட்டார்.

ராணுவ பதுங்குக் குழிகளின் மீது காலாட்படை தாக்குதல்களுடன் மோபேயில் சண்டை பல நாட்கள் நீடித்தது.

ஒருவருக்கு கை-கால்கள் மற்றும் வயிற்றில் பல காயங்கள் இருந்தன. இவை அனைத்தும் கையெறி குண்டு காரணமாக ஏற்பட்டதாக அவர் சொல்கிறார். காலில் காயம்பட்ட ஒரு தளபதியை காப்பாற்றச்சென்றபோது கையெறிகுண்டால் அவர் தாக்கப்பட்டார். “சுமார் 30 அடி தூரத்தில் இருந்து கையெறிகுண்டு வீசப்பட்டது,” என்று அவர் கூறுகிறார்.

தெற்கு ஷான் மாகாணத்திலுள்ள ஹ்சீசெங் நகரை நோக்கி வடக்கே நகர்ந்தபோது போரின் வேகம் மெதுவாக உள்ளதை நாங்கள் கண்டோம். மாகாணத் தலைநகர் லோய்காவுக்குச் செல்லும் பாதையை ராணுவம் கைப்பற்ற முயன்றபோது துவங்கிய எதிர்த் தாக்குதல் அங்கு நடந்து கொண்டிருந்தது.

இது அவர்களின் பிரதேசம் அல்ல. ஆனால் KNDF தர்தாவர் என்ற போராளியின் தலைமையில் அங்கு முன்னேறிச்செல்கிறது. அவரும் பல போராளிகளைப்போலவே, முந்தைய தாக்குதல்களில் காயமடைந்துள்ளார். அவரது டி-ஷர்ட்டின் ஸ்லீவின் கீழே இருந்து ஒரு அடர் சிவப்பு வடு வெளியே தெரிகிறது.

“எங்களைப் பொறுத்தவரை இந்த இடத்தைப் தற்காப்பது எங்கள் வீட்டைப் பாதுகாப்பதைப் போன்றது,” என்று அவர் என்னிடம் கூறுகிறார். அவர் ஷார்ட்ஸ் மற்றும் ஃபிளிப் ஃப்ளாப்களில் இருக்கிறார். அவருக்கும் அவரது ஆட்களுக்கும் உடல் கவசம் இல்லை. எங்களிடமும் அது இல்லை.

தாழ்வான மலையின் உச்சியில் வாழைத்தோட்டத்திற்கு அருகில் நாங்கள் நின்றோம். ​​அவர் 1.5கி.மீ. (0.9 மைல்) தொலைவில் உள்ள ராணுவ நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். குண்டுகள் அருகில் விழத் தொடங்குகின்றன. ஆழம் அதிகம் இல்லாத பதுங்குக் குழிகளை நோக்கி அனைவரும் ஓடுகின்றனர். மோர்டார் ரக குண்டுகள் அருகில் விழத்தொடங்குகின்றன. தானியங்கி துப்பாக்கிச் சூட்டின் ஒலி அருகில் கேட்கிறது. வீரர்கள் நினைத்தைக்காட்டிலும் மிகவும் நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறது.

படையினர் குழுவொன்று கண்ணிவெடி வழியாக நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்கிறது என்பது விரைவில் தெளிவாகிறது. ஷெல் தாக்குதல் தொடரும் நிலையில் நாங்கள் அங்கிருந்து அதிவேகமாக வாகனத்தில் புறப்பட்டோம்.

“அவர்களின் வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் எல்லா இடங்களிலும் சீரற்ற முறையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள்,” என்று தர்தாவர் கூறினார்.

காட்டின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கடினமான மண் அணிவகுப்பு மைதானத்தில் பட்டமளிப்பு விழாவில், புதிய போராளிகள் அணிவகுத்துச் செல்கின்றனர். அவர்கள் KNDF தலைமைக்கு சல்யூட் செய்கிறார்கள். அவர்களின் ரப்பர்-சோல்ட் கேன்வாஸ் ஷூக்கள் தூசியை கிளப்புகிறது. பெரும்பாலும் 18 வயதான இளைஞர்களும் பெண்களும், ஆங்கிலத்தில் ‘வாரியர் – warrior’ என்று தொடங்கும் பாடலின் இசைக்கு அணிவகுத்துச் செல்கிறார்கள்.

பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கும் அதிகம். படைவீரர்களின் பற்றாக்குறை காரணமாக ராணுவ ஆட்சிக்குழு கட்டாய ஆள்சேர்ப்பு கட்டளையை விதித்த பின்னர், நூறாயிரக்கணக்கான இளைஞர்கள் புரட்சிகர நடவடிக்கையில் சேர கிளர்ச்சிப் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.

மியான்மர்
படக்குறிப்பு, நாம் ரீ, துப்பாக்கியை எதிரி நிலையை நோக்கி குறிவைக்கிறார்

‘வாழ்வா மரணமா’ எனும் போராட்டம்

முன்பு நான் கிளர்ச்சி வீரர்களைப் பார்த்தபோது, ​​அவர்கள் மூங்கில் துப்பாக்கியில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். இப்போது அவர்களிடம் உண்மையான துப்பாக்கி இருக்கிறது.

பயிற்சிக்கு அதிக நேரம் இல்லை என்று அவர்களின் தளபதி மௌய் என்னிடம் கூறினார். “எங்கள் உத்தி இதுதான். ஒரு மாத தீவிரப் பயிற்சி, பிறகு சண்டைக்கு செல்கிறோம்.”

விழா முடிவடைந்தவுடன் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அன்றைய தினம் பட்டம் பெற்ற இளம் ராப்பரான எம்ஸி கேயர் லே, புதிதாக சேர்ந்த ஆட்களை நடனம் மற்றும் கொண்டாட்டத்தின் மாய உலகிற்கு அனுப்புகிறார்.

கிளர்ச்சி எங்கு கொண்டு செல்லும் என்று கணிப்பது கடினம். இரு தரப்பினருக்கும் இது ’இருப்பை நிலைநாட்டுவதற்கான’ போர். இரத்தக்களறி மற்றும் கசப்பு அதிகரித்து வருகிறது. திரும்பிப் போவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

மூன்றரை வாரங்களுக்குப் பிறகு, நாங்கள் ஹசாங்கிற்குத் திரும்பினோம். எதிர்ப்பால் தாக்கப்படவிருந்த ராணுவ தளம் இப்போதும் அப்படியே உள்ளது.

ராணுவம் வலுவூட்டல்களை, அதாவது சுமார் 100 பேரை அனுப்ப முயன்றது. ஆனால் கிளர்ச்சியாளர்களுடனான சண்டையில் 57 பேர் பிடிபட்டனர். மீதமுள்ளவர்கள் தப்பி ஓடிவிட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.

ராணுவம் தளத்திற்கு வலுவூட்டல் வழங்கத் தவறியது. ஆனால் எதிர்ப்புப் படைகளுடன் நடந்த மோதல் மற்றொரு விளைவை ஏற்படுத்தியது. அதாவது ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களின் வெடிமருந்துகள் குறைந்துவிட்டன. புறக்காவல் நிலையை அவர்களால் தாக்க முடியவில்லை.

நாங்கள் வருவதற்கு முந்தைய நாள் ராணுவப் போர் விமானங்கள் ஹசாங்கிற்கு மேலே உள்ள மலையுச்சியில் குண்டுவீசித் தாக்கியது. நாங்கள் முன்பு சந்தித்த மூன்று இளம் போராளிகள் இதில் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.

இதற்கு முன் பரந்த சல்வீன் ஆற்றின் கரையில் அவர்களின் நிலைகளில் இருந்து இசை மற்றும் பாடல்கள் ஒலித்தன. எதிரிக்காக காத்திருக்கும் அமைதியான சூழல் நிலவியது.

ஆனால் அந்த மனநிலை இப்போது மாறிவிட்டது. சரணடைவதற்கான கூடுதல் முறையீடுகள் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. இனி இது மரணப் போராட்டமாக இருக்கும்.