நீலகிரி, ஸ்ட்ராங் ரூமில் சலசலப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆ.ராசாவும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் போட்டியிடும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா நேரலை தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரலை தடைபட்ட அந்த 20 நிமிடங்களும் ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது? மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி என்ன சொல்கிறார்?

ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ‘ஸ்ட்ராங் ரூம்’ அமைக்கப்பட்டு, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, ‘ஸ்ட்ராங் ரூம்’ அறையை கண்காணிக்க 160 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட கேமராக்களின் நேரலை காட்சிகள் டிவியில் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 27ம் தேதி) இரவு 7:00 மணிக்கு, அனைத்து சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பும் திடீரென தடைபட்டதால் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா மற்றும் அதிகாரிகள் நிலைமையை ஆராய்ந்து, பிரச்னையை சரி செய்தனர்.

“முதலில் அதிர்ச்சி அடைந்தோம்”

பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி திமுக முகவர் விஜயகுமார், ” நாங்கள் ‘ஸ்ட்ராங் ரூம்’ நடவடிக்கைகளை கண்காணிக்க, டிவி அருகில் தான் இருந்தோம். அப்போது, திடீரென அனைத்து திரைகளிலும் ஒட்டுமொத்த கேமராக்களின் நேரலை தடைபட்டதால், அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரிகள் கேமரா பதிவு செய்யும் காட்சிகளை எங்களிடம் காண்பித்தனர். அதன் பிறகு தான் நேரலையில் தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினோம்,” என்றார்.

“தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்”

பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், ” இன்று காலையில் இரண்டு நிமிடங்களுக்கு இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது. இரவு சில நிமிடங்கள் நேரலை தடைபட்டுள்ளது. நேரலை தடைபட்ட உடனே நாங்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்தனர். இருந்தாலும் உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கமாக தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம்,” என்றார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?

‘தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்’

இதுகுறித்து பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, “சிசிடிவி கேமராவின் நேரலை தடைபட்ட போது நான் சம்பவ இடத்தில் தான் இருந்தேன். நேரலை அமைப்பின் உபகரணங்களில் ‘ஓவர் ஹீட்’ காரணமாக டிவிகளுக்கு வரும் நேரலை தான் தடைபட்டதே தவிர, கேமராக்கள் பதிவு செய்வதில் (Recording) எந்த தடையும் இல்லை. அவை வழக்கம் போல் எந்த பிரச்னையுமின்றி இயங்கின. அந்த 20 நிமிடமும் என்ன நடந்தது என்பதை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளன. சிசிடிவி காட்சிகளை நேரலை செய்வது மட்டுமே தடைப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு விட்டதால், பிரச்சனை ஏதும் இல்லை. நேரலை தடைபட்ட 20 நிமிடங்களும் ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது என்பதை சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் அதனை பார்த்துக் கொள்ளலாம். ,” என்றார்.

ஸ்ட்ராங் ரூம் என்றால் என்ன?

தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன.

அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?
படக்குறிப்பு, கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்.

வாகனங்களுக்கு அனுமதி இல்லை

ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம்.

அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.

பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?

ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

அதன்படி,

  • ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
  • மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும்.
  • தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
  • அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
  • ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
  • அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மூன்றடுக்குப் பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர்.

இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள்.

மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர்.