திரையரங்குகளை நிரப்பும் வேற்றுமொழிப் படங்கள்: தமிழ் சினிமாவின் நிலை குறித்து வருந்தும் திரையுலகம்

தமிழ் சினிமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை. எனவேதான் சின்ன பட்ஜெட் படங்களை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது,” என்று கூறுகிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்

“ஓடிடியின் வருகை தமிழ் ரசிகர்களுக்கு எளிய வழியில் உலக சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இது அவர்களது ரசனையையும், ஒரு கதையைக் கொண்டாடுவதற்கான அளவுகோலையும், எதிர்பார்ப்பையும் உயர்த்தியுள்ளது.

எனவே படைப்பாளிகள் தங்களது கதை சொல்லும் திறனை மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே மக்களை திரையரங்கை நோக்கி வரவைக்க முடியும்,” என்று கூறுகிறார் அயலான் பட இயக்குநர் ரவிக்குமார்.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளை கடந்த சில மாதங்களாகவே புதிய தமிழ்ப் படங்களைக் காட்டிலும் மலையாளப் படங்களும், பழைய தமிழ்ப் படங்களும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற படங்கள் வருவதில் ஒரு முடக்கம் நிகழ்ந்துள்ளதோ என்ற விமர்சனத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் வரலாறு

தமிழ் சினிமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருத்துப் படங்களில் தொடங்கி காதல், காமெடி, வாழ்வியல், அறிவியல் எனப் பலதரப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முதல் ஒலியில்லா படமாக 1918இல் வெளிவந்த கீச்சக வதம் கருதப்படுகிறது. அதன் பிறகு 1931இல் வெளியான காளிதாஸ் தமிழின் முதல் பேசும் படமாகக் கருதப்படுகிறது.

நூறாண்டுகள் கடந்த தமிழ் சினிமாவால் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இலக்கியம், கலை மற்றும் பண்பாடு என திரைத்துறை ஆற்றிய பணி அளப்பரியது.

கருத்துப் படங்களில் தொடங்கி காதல், காமெடி, வாழ்வியல், அறிவியல் எனப் பலதரப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன.

இதில் பல்வேறு இயக்குநர்களின் மூலம் உலகளாவிய கலைநுட்பங்கள் முதல் தொழில்நுட்பம் வரை தமிழ் சினிமாவில் முயற்சி செய்யப்பட்டு, பல உலகத்தரம் வாய்ந்த படங்களும் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையரங்குகள் இப்போது எப்படி செயல்படுகின்றன?

தமிழ் சினிமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க இணையதளத்தின்படி, தமிழ்நாட்டில் 1104 திரையரங்குகள் உள்ளன.

தமிழ் திரைத்துறையின் முக்கியமான ஆன்மாக்களில் ஒன்று திரையரங்குகள். சினிமாவும், அதன் ரசிகர்களும் உரையாடல் நடத்தும் இடமே திரையரங்கம்தான். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க இணையதளத்தின்படி, தமிழ்நாட்டில் 1104 திரையரங்குகள் உள்ளன.

ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக இந்தத் திரையரங்குகளில் புதிய தமிழ்ப் படங்கள் அரிதாகவே தென்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்தான் அரண்மனை 4 படம் வெளியாகியுள்ளது.

இந்த இடைவெளியில் அடுத்தடுத்து வந்த மலையாளப் படங்களும், தமிழில் வெளியான கில்லி, வேட்டையாடு விளையாடு, தீனா போன்ற படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வசூல் வேட்டை செய்து கொண்டிருந்தன.

ஆனால், இதே காலகட்டத்தில் வெளியான சிறிய பட்ஜெட் தமிழ்ப் படங்கள் சில ஓரிரு நாட்கள்கூட திரையரங்குகளில் நீடிக்கவில்லை.

தமிழ் சினிமாவில் படங்களுக்கு பஞ்சமா?

தமிழ் சினிமா

பட மூலாதாரம், Getty Images

தமிழ் திரைத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுத்து முடிக்கப்பட்ட பிறகும் வெளியிடப்படாமல் இருப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுகிறார்.

இதற்குக் காரணம், “வெளியீட்டிற்கான செலவுகளைச் செய்ய பல தயாரிப்பாளர்களிடமும் பணம் இல்லை. முன்பெல்லாம் சிறிய படமாக இருந்தாலும் திரையரங்குகள் முன்பணம் கொடுத்து வாங்கியதால், அந்தப் பணத்தில் தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிடுவார்கள்.”

“இப்போதெல்லாம் யாரும் சிறிய படங்களை வாங்க முன்வருவதில்லை. பணம் வாங்காமல் வெளியிட்டுவிட்டு அந்தப் படம் ஓடினால் பணம் தருகிறோம் என்ற நிலை உருவாகிவிட்டது,” என்கிறார் அவர்.

இதனால் ஒரு படத்தின் முழு பணியும் முடிந்துவிட்டாலும்கூட அதை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதன்மூலம் பல நல்ல படங்கள் தேங்கிப் போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

நல்ல படங்கள் வருவதில்லையா?

“மக்கள் வந்தால்தானே திரையரங்குகள் சிறிய பட்ஜெட் படங்களை வாங்க முடியும். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருவதில்லை. அதனால் மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை. எனவேதான் சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது” என்று கூறுகிறார் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.

தற்போது வெளியாகியிருக்கும் அரண்மனை 4 படம் இந்த இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், இது தற்காலிக இடைவெளி மட்டுமே என்றும் கூறுகிறார் அவர்.

நல்ல கதைகளைத் தேர்வு செய்வதில் என்ன பிரச்னை?

தமிழ் சினிமா

பட மூலாதாரம், ANTHANAN

படக்குறிப்பு, நல்ல கதைகள் வராததே மக்கள் திரையரங்குக்கு வராததற்குக் காரணம் என்கிறார் சினிமா விமர்சகர் அந்தணன்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றைப் பல நூறு நாட்களுக்கு ஓட வைத்து மக்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால், தற்போது வரும் திரைப்படங்கள் பலவும் மூன்று நாட்களைத் தாண்டுவதே குதிரைக் கொம்பாக இருப்பதாகக் கூறுகிறார் சினிமா விமர்சகர் அந்தணன்.

அதற்கு காரணம், நல்ல கதைகள் வராததே என்பது அவரது கூற்று.

“இயக்குநர்கள் நல்ல கதையோடு வந்தாலும், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அந்தக் கதைகளைப் படமாக்கத் துணிவதற்குப் பதிலாக, வழக்கமான கதையையே எடுக்க விரும்புகிறார்கள். இதனால் பல நல்ல இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை,” என்கிறார் அவர்.

அதேபோல், மலையாள சினிமாவில் இருப்பது போல் இயற்கைத்தன்மை இல்லாமல் இருப்பதும் நல்ல படங்கள் வருவதில் தடையாக இருப்பதாகக் கூறுகிறார் கே.ராஜன்.

“மலையாள சினிமாவில் கதைக்காக ஹீரோ நடிக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவில் ஹீரோவுக்காக பல கதைகள் எழுதப்படுகின்றன. அதுவே அவற்றின் தோல்விக்குக் காரணம்” என்கிறார் அவர்.

எது நல்ல படம்?

தமிழ் சினிமா

பட மூலாதாரம், Gopi Nainar / X

படக்குறிப்பு, வெகுமக்கள் விரும்புகின்ற படங்களை எடுக்காததால்தான் மக்கள் திரையரங்குகளை நோக்கி வருவதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்கிறார் கோபி நயினார்.

ஒரு திரைப்படம் என்று வரும்போது, அதைப் பார்க்கும் பலதரப்பட்ட மக்களையும் அது திருப்திபடுத்தாது. அப்படியிருக்க ஒரு நல்ல படம் என்றால் என்ன?

இதற்குப் பதிலளித்த இயக்குநர் கோபி நயினார், “ஒருவருக்கு மட்டுமே பிடித்த படம்கூட சிறந்த படமாக இருக்க முடியும். ஆனால், அது வெகுமக்களுக்குப் பிடிக்கிறதா என்பதைப் பொறுத்தே அது அவர்களுக்கான படமா என்பதை அளவிட முடியும்,” என்கிறார்.

அப்படி வெகுமக்கள் விரும்புகின்ற படங்களை எடுக்காததால்தான் மக்கள் திரையரங்குகளை நோக்கி வருவதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இதற்கு ஒரு முக்கியக் காரணம், “படத்தின் கதைக்காக நடிகர்கள் நடிப்பதைவிட, நடிகர்களுக்காக படத்தின் கதை எழுதப்படுவது” என்று கூறுகிறார் கோபி நயினார்.

இதே கருத்தை ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர் கே.ராஜன், ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையை, இயக்குநரை மட்டும் சில தயாரிப்பு நிறுவனங்கள் தேர்வு செய்வதன் விளைவே மக்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் வெளியாவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறுகிறார்.

மக்களின் மனநிலை என்ன?

தமிழ் சினிமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய படங்களாக இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்குகளை நோக்கி வருகிறார்கள்,” என்கிறார் அந்தணன்.

முன்பெல்லாம் சிறிய படம் என்றாலும் குறைந்தபட்சம் மக்கள் திரையரங்கம் சென்று என்னதான் இருக்கிறது என்றாவது பார்ப்பார்கள். ஆனால், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் வந்த பிறகு அந்த ரசனைத்தன்மை குறைந்துவிட்டது என்கிறார் அந்தணன்.

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய படங்களாக இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்குகளை நோக்கி வருகிறார்கள்.” சிறிய படங்களில் பெரும்பாலும் சாதாரண படங்களே வெளியாவதாலும், அவற்றை ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்றும் அந்தணன் கூறுகிறார்.

“அதைத் தாண்டி ஏதாவது ஒரு சிறிய பட்ஜெட் படம் நல்ல கதையாக இருந்து கொஞ்சம் பிரபலமடைந்தால் மக்கள் திரையரங்கம் சென்று பார்க்கின்றனர். ஆனால், அது வெளியாகி மக்களைச் சென்று அடைவதற்குள் திரையரங்குகளில் இருந்து அவை வெளியேறி விடுகின்றன.”

‘மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன’

தமிழ் சினிமா

பட மூலாதாரம், RAVIKUMAR / INSTAGRAM

படக்குறிப்பு, மற்ற எந்த மொழியை விடவும் தமிழ் திரைத்துறை பல புதிய வகை நுட்பங்களை, கதைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறுகிறார் இயக்குநர் ரவிக்குமார்.

சமீப காலமாக மக்களின் சினிமா ரசனையும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதற்கு நுட்பமான காரணம் ஒன்றை முன்வைக்கிறார் அயலான் பட இயக்குநர் ரவிக்குமார்.

“ஓடிடி வந்த பிறகு உலகளாவிய போட்டி உருவாகியுள்ளது. மக்கள் பல மொழிப் படங்களையும் , உலகப் படங்களையும் தங்களது மொழியிலேயே பார்க்கிறார்கள். எனவே, அதற்கு இணையாக இங்கும் படம் வெளியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.”

“ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, சில நேரங்களில் ஏமாற்றமடைகிறார்கள். எனவே அதற்கு ஏற்றவாறு படங்களை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் படைப்பாளர்களுக்கு உருவாகியுள்ளது,” என்கிறார் ரவிக்குமார்.

மற்ற எந்த மொழியைவிடவும் தமிழ் திரைத்துறை பல புதிய வகை நுட்பங்களை, கதைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறும் அவர், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் படங்களை இயக்குகையில் சிறிய படம், பெரிய படம் எனப் பேதமின்றி அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்கிறார்.

ஓடிடியின் போட்டி

தமிழ் சினிமா

பட மூலாதாரம், K RAJAN

படக்குறிப்பு, தயாரிப்பாளர்கள் துணிந்து புதிய சிறந்த இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார் கே. ராஜன்.

தமிழ்ப் படங்கள் வெளியாவதன் சிக்கல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர், விமர்சகர் என அனைவரும் ஒரு சேர ஒப்புக்கொள்வது, ‘ஓடிடியின் வருகை சினிமாவில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது’ என்பதாகும்.

அதில் ‘சிலருக்கு நல்ல மாற்றங்கள் கிடைத்திருந்தாலும், சிலருக்கு பாதகங்களும் ஏற்பட்டுள்ளன.’ அப்படிப்பட்ட ஒன்றாகவே திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவைப் பார்க்கிறார்கள் இவர்கள்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் மிகப் பிரபலமாக உருவெடுத்த ஓடிடி தளங்கள் சினிமா துறையில் ஏற்பட்ட புரட்சியாக பரவலாகப் பார்க்கப்பட்டாலும், திரைத்துறையினர் பலரால் அப்படிப் பார்க்கப்படவில்லை.

தமிழ் சினிமா

பட மூலாதாரம், G Dhananjeyan / X

படக்குறிப்பு, “பெரிய படங்களை திரையரங்குகளில் பார்த்துக் கொள்ளலாம். சிறிய படங்கள் எப்படியும் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். அதில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமாக வளர்ந்துவிட்டது,” என்கிறார் ஜி.தனஞ்செயன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிய படங்களுக்கு மக்கள் திரையரங்கம் வருவது கடுமையான அளவில் குறைந்துள்ளதாகக் கூறுகிறார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின்(TFAPATN) பொருளாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.தனஞ்செயன்.

“பெரிய படங்களை திரையரங்குகளில் பார்த்துக் கொள்ளலாம். சிறிய படங்கள் எப்படியும் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். அதில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமாக வளர்ந்துவிட்டது. அதை மாற்றவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறுகிறார் அவர்.

இதே கருத்தை ஒப்புக்கொள்ளும் திருப்பூர் சுப்பிரமணியம், ஓடிடி வருகைக்குப் பிறகு சிறிய படங்களுக்கு மக்களிடம் சுத்தமாக ஆதரவு இல்லை என்று கூறுகிறார்.

ஆனால், அதைத் தாண்டியும் குட் நைட், டாடா, போர்த்தொழில் பழகு, பார்க்கிங், இறுகப்பற்று போன்ற படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெற்றுள்ளன என்கிறார்கள் அந்தணன் மற்றும் கே.ராஜன்.

மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற கதைகள், வேறு யாரும் கொடுக்க முடியாத படைப்பை வெளிக்கொண்டு வரும்போது அது எந்தப் படமாக இருந்தாலும் ஓடிடி போன்ற சவால்களையும் தாண்டி திரையரங்கில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று கூறுகின்றனர் கோபி நயினார் மற்றும் ரவிக்குமார்.