MI vs DC

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் “ ரன் திருவிழா” நடந்தது. மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்த டெல்லி, அதைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி என இந்த ஆட்டத்திலும் 504 ரன்கள் குவிக்கப்பட்டன.

ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து இரு நாட்கள் நடந்த ஆட்டத்திலும் 200க்கும் மேலாக இரு அணிகளும், 500க்கும் மேல் ஒரு ஆட்டத்திலும் தொடர்ந்து குவிக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும்.

டெல்லியில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. 258 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை இன்று பதிவு செய்தது.இதற்கு முன் 2011ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 231 ரன்கள் சேர்த்ததுதான் டெல்லி அணியின் அதிகபட்சமாகும்.

வாண வேடிக்கையுடன் தொடக்கம்

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. காயத்திலிருந்து வார்னர் இன்னும் முழுமையாக மீளாததையடுத்து, பிரேசர் மெக்ருக்குடன் இணைந்து அபிஷேக் போரெல் ஆட்டத்தைத் தொடங்கினார்.

உட் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலிருந்து பிரேசர் மெக்ருக் அதிரடியில் இறங்கினார். முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசிய பிரேசர் 5வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். முதல் ஓவரிலேயே டெல்லி அணி 19 ரன்ரேட்டில் பயணித்தது.

பும்ரா வீசிய 2வது ஓவரில் நோபாலில் ஒரு சிக்ஸர், அடுத்து ஒரு பவுண்டரி, கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி என பிரேசர் 18 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் பும்ரா முதல் ஓவரில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.

3வது ஓவரை துஷாரா வீசினார். முதல் பந்தில் அபிஷேக் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தைச் சந்தித்த பிரேசர் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசிஅந்த ஓவரில் 18 ரன்கள் சேர்த்தனர். 2.4 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை மின்னல் வேகத்தில் எட்டியது.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

பிரேசர் அதிரடியால் மிரண்ட பாண்டியா

3 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பிரேசர் காட்டடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேப்டன் பாண்டியா விழிபிதுங்கி நின்றார். 4வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். அந்த ஓவரையும் விட்டு வைக்காத பிரேசர் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி 15 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து, அடுத்தபந்தில் பவுண்டரி விளாசினார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 5வது ஓவரை துவைத்து எடுத்த மெக்ருக் 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் என 20 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் டெல்லி கேபிடல்ஸ் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தது.

பாண்டியா வீசிய 7-வது ஓவரிலும் மெக்ருக், அபிஷேக் இருவரு ம் ருத்ரதாண்டவம் ஆடினர். அபிஷேக் போரெல் ஒரு சிக்ஸர் பவுண்டரியும், மெக்ருக் ஒரு சிக்ஸரும் என 21 ரன்கள் விளாசினர்.

பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து மெக்ருக் ஆட்டமிழந்தார். அவர், 27 பந்துகளில் 84ரன்கள் குவித்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 11பவுண்டரிகள் அடங்கும். டெல்லி அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் கிடைத்தன.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

ஷாய் ஹோப் அதிரடி

அடுத்து களமிறங்கிய , அபிஷேக்குடன் சேர்ந்து நிதானமாக பேட் செய்தார். முகமது நபி வீசிய 10-வது ஓவரில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட போரெல் 36 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

3வதுவிக்கெட்டுக்கு கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கி, ஹோப்புடன் சேர்ந்தார். முகமது நபி வீசிய 12-வது ஓவரில் ஹோப் 2 சிக்ஸர்கள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். அணியின் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் துஷாரா வீசிய 13-வது ஓவரில் ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர் விளாசி 12 ரன்கள் சேர்த்தார்.

உட் வீசிய 14-வது ஓவரை பதம் பார்த்த ஹோப் 2 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 17 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள் அடங்கும். 3வது விக்கெட்டுக்கு ஹோப் -ரிஷப் பந்த் கூட்டணி 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். உட் வீசிய 17-வது ஓவரை துவைத்து எடுத்த ஸ்டெப்ஸ் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 26 ரன்கள் சேர்த்தார்.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

7வது முறையாக பும்ரா பந்தில் ரிஷப் அவுட்

பும்ரா வீசிய 19-வது ஓவரில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ரிஷப் பந்த் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் பும்ரா வீசிய 46 பந்துகளைச் சந்தித்த ரிஷப் பந்த் 55 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 7-வது முறையாக பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்துள்ளார். பும்ரா பந்துவீச்சில் இதுவரை ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த்-ஸ்டெப்ஸ் கூட்டணி 55 ரன்கள் சேர்த்தனர். 6-வது விக்கெட்டுக்கு வந்த அக்ஸர் படேல், ஸ்டெப்ஸுடன் சேர்ந்தார். துஷாரா வீசிய கடைசி ஓவரில் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 17 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்தது.

2.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணி, அடுத்த 4 ஓவர்களில் அதாவது 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 11.6 ஓவர்களில் 150 ரன்களையும், 16.1 ஓவர்களில் 200 ரன்களையும், 19.4 ஓவர்களில் 250 ரன்களையும் டெல்லி கேபிடல்ஸ் எட்டியது.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

மும்பை தோல்விக்கு காரணம் என்ன?

மும்பை அணி பவர்ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா(8), இஷான் கிஷன்(20), சூர்யகுமார் யாதவ்(26) ஆகியோர் ரன்ரேட் நெருக்கடி, அழுத்தம் காரணமாக தவறான ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர்.

ஆனால், நடுவரிசையில் கேப்டன் பாண்டியா(46) திலக் வர்மா(63) இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி நம்பிக்கை அளித்தனர். இருவரும் 4வது வி்க்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். இதுதான் மும்பை அணியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அடுத்ததாக டிம் டேவிட்(37), திலக்வர்மா சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்களைத் தவிர பெரிதாக ஏதும் அமையவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய பலமே தொடக்க வரிசை பேட்டர்கள்தான். ரோஹித், இஷான் கிஷன், ஸ்கை ஆகிய 3 வீரர்கள் இன்று சொதப்பியதால், ஒட்டுமொத்த ரன்ரேட் நெருக்கடியும், அழுத்தமும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்தது. அதிலும் மிகப்பெரிய இலக்கைத் துரத்தும்போது, தேவைப்படும் ரன்ரேட் அதிகரிக்கும் போது பதற்றத்தில் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழக்க நேரிடும். அப்படித்தான் பாண்டியா விக்கெட்டை இழந்தார்.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

மும்பை அணியும் வெற்றிக்கான இலக்கை விடாமல் துரத்திய நிலையில் ராஸிக் சலாம் வீசிய 17வது ஓவர்தான் டெல்லி அணிக்கு திருப்புமுனையாக மாறியது. 24 பந்துகளில் மும்பை அணி வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரசிக் சலாம் 17-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய 7ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை ரன்ரேட் நெருக்கடியில் தள்ளினார். இந்த ஓவரில் மும்பை அணி கூடுதலாக 10 ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி கை மாறியிருக்கும்.

210 ரன்கள் வரை மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அடுத்த 37 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை ரன்ரேட் பதற்றத்தில் இழந்தது. டிம் டேவிட்(37), முகமது நபி(7), சாவ்லா(10), திலக் வர்மா ஆகியோர் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தது. 20வது ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா ரன் அவுட் ஆகியதுமே மும்பை இந்தியன்ஸ் தோல்வி உறுதியாகியது.

அதிரடி நாயகன் மெக்ருக்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இளம் ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பிரேசர் மெக்ருக்கின் அதிரடியான பேட்டிங்கும், இளம் பந்துவீச்சாளர் ரஷிக் சலாமின் பந்துவீச்சும்தான். ஜேக் பிரேசரின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணி பவர்ப்ளே ஓவர் கடந்து 4 பந்துகளில் 100 ரன்களை எட்டிவிட்டது. 2.4 ஓவர்களில் 50 ரன்களைத் தொட்டது.

மும்பை பந்துவீச்சை துவைத்து எடுத்த பிரேசர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து, ஆட்டநாயகன் விருது வென்றார். டெல்லி அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் கிடைத்துள்ள சிறந்த தொடக்க வீரராக பிரேசர் திகழ்கிறார். காயத்திலிருந்து வார்னரும் மீண்டுவந்து அணியில் சேர்ந்தால் டெல்லி அணி இன்னும் வலிமை பெறும்.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

இளம் வீரர் சலாம் அசத்தல்

அதேபோல, பந்துவீச்சில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இளம் பந்துவீச்சாளர் அறிமுகமாகிய 2வது போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, நேகல் வதேரா, முகமது நபி விக்கெட்டுகளை சாய்த்து மும்பை அணியை தோல்விக் குழிக்குள் சலாம் தள்ளினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு மெக்ருக் தவிர்த்து, ஷாய் ஹோப் கேமியோ ஆடி 41 ரன்கள் சேர்த்தது, டிரிஸ்டென் ஸ்டப்ஸ் அதிரடியாக 48 ரன்கள் சேர்த்தது என இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தனர். இது தவிர கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்கள், அபிஷேக் போரெல் 36 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு உதவினர்.

என்ன சொல்கிறார் பாண்டியா?

தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ இதுபோன்ற ஆட்டங்களில் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். நாங்களும் இலக்கை விரட்ட முயன்றோம். நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்ப வாய்ப்பு இருந்தது. ஆனால் தவறவிட்டோம். டெல்லி வீரர் மெக்ருக் பேட்டிங் செய்த விதம் என்னை வியக்க வைத்தது. எந்தவிதமான பயமும் இன்றி அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார்” எனத் தெரிவித்தார்.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

டெல்லி அணி முன்னேற்றம்

இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனால், நிகர ரன்ரேட்டில் இன்னும் டெல்லி கேபிடல்ஸ் அணி மைனஸைக் கடக்காமல் 0.276 என்ற ரீதியில்தான் இருக்கிறது.

தற்போது 10 புள்ளிகளுடன் 4 அணிகள் உள்ளன. கொல்கத்தா, சன்ரைசர்ஸ், லக்னெள, டெல்லி அணிகள் இருப்பதால் முதல் 4 இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான்-லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவும், சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின் முடிவும் புள்ளிப்பட்டியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும்.

காத்திருக்கும் திருப்பங்கள்

டெல்லி அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே மீதம் இருப்பதால், அதில் அனைத்திலும் வென்றால் 8 புள்ளிகள் பெற்று 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். இதில் ஒன்று தோற்றாலும், நிகரரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகள் பெரிய நெருக்கடி கொடுக்கும். ஏனென்றால், சன்ரைசர்ஸ், கொல்கத்தா, லக்னெள அணிகள் 8 ஆட்டங்களே ஆடியிருப்பதால், இன்னும் அந்த அணிக்கு 6 லீக் ஆட்டங்கள் இருப்பதால், அவர்களுக்கு வாய்ப்புக் கதவுகள், டெல்லியை விட பரந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

மும்பை ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்விகள் என 6புள்ளிகளுடன் 9-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. அடுத்தடுத்த வெற்றியால் முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தோல்வியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நிகர ரன்ரேட்டிலும் மைனஸ் 0.261 என்ற ரீதியில் இருக்கிறது.

மும்பை அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்களே இருப்பதால், அனைத்திலும் கட்டாய வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். இதில் ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், 14 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு பல அணிகள் போட்டியிடும், அப்போது நிகர ரன்ரேட் சிக்கல் ஏற்படலாம். ஆதலால் வரும் ஆட்டங்களில் மும்பை அணி நிகர ரன்ரேட்டை உயர்த்தும்வகையிலும் விளையாடுவது அவசியமாகும். மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்று அந்த அணியின் அடுத்த இரு தோல்விகளில் முடிவு எழுதப்பட்டுவிடும்.