கே.எல்.ராகுலுக்கும் லக்னெள அணி உரிமையாளருக்கும் இடையே நடந்தது என்ன? சமூக வலைத்தளம் கொந்தளிப்பது ஏன்?

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கே.எல்.ராகுல்

புதன்கிழமை (8.5.2024) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

ஆனால், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தோல்வியை விட அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவுக்கு இடையில் நடந்த விவாதமே தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

நேற்றைய போட்டி முடிவடைந்த பிறகு கே.எல்.ராகுலும், சஞ்சீவ் கோயங்காவும் நீண்ட நேரம் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த விவாதம் அவ்வளவு நிதானமானதாக காட்சியளிக்கவில்லை. நீண்ட நேரம் கோபத்தில் கே.எல்.ராகுலிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தார் சஞ்சீவ். ராகுலும் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இடையிடையே ராகுல் பேச முற்பட்டபோதும் கூட, சஞ்சீவ் சமரசம் ஆவது போன்று தெரியவில்லை.

இதை பார்த்துக் கொண்டிருந்த வர்ணனையாளரும், இது போன்ற விவாதங்களை கேமராக்கள் முன்னால் செய்யக் கூடாது. தனியாக அறையில் பேசிக்கொள்ளலாம் என்று மைக் வழியாக சொல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில் ராகுலுக்கும், சஞ்சீவுக்கும் என்ன உரையாடல் நடந்தது என்பது கேட்கவில்லை என்றாலும், சஞ்சீவ் கோயங்காவின் கோபமான சைகைகளே சமூக வலைத்தளங்களில் சூடான விவாதங்களை கிளப்பியுள்ளது.

குறிப்பாக எக்ஸ் வலைத்தளத்தில் விவாதித்து வரும் பயனர்கள் பலரும், லக்னெள அணியின் தோல்வியின் காரணமாக ராகுலை சஞ்சீவ் திட்டியுள்ளார் என்று பேசி வருகின்றனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆல்பா  என்ற எக்ஸ் பயனர் தனது ட்வீட்டில், “நீங்கள் பணத்திற்காக விளையாடும் போது, இப்படித்தான் நடத்தப்படுவீர்கள்” என்று பகிர்ந்துள்ளார்.

கொந்தளிக்கும் வலைத்தளவாசிகள்

கபர் சிங்க் என்ற எக்ஸ்(ட்விட்டர்) பயனர், “எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இது போன்ற ஒரு நடத்தையை எதிர்கொள்ள கூடாது. உங்கள் அணியின் கேப்டனையே அனைவரது முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறீர்கள். கொஞ்சமாவது கண்ணியத்தோடு நடந்துக் கொள்ளுங்கள். ஒருவரது கடினமான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டும். அது அணியின் உரிமையாளராகவே இருந்தாலும் கூட இது ஏற்கத்தக்கது அல்ல” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆல்பா என்ற எக்ஸ் பயனர் தனது ட்வீட்டில், “நீங்கள் பணத்திற்காக விளையாடும் போது, இப்படித்தான் நடத்தப்படுவீர்கள்” என்று பகிர்ந்துள்ளார்.

சமீரா என்ற பயனர், “நான் கேஎல் ராகுலின் ரசிகர் அல்ல, ஆனாலும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கோயங்கா அவர்களே எல்எஸ்ஜி அணியின் மீது நீங்கள் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், இந்தியாவின் ஒரு உச்ச கிரிக்கெட் வீரரை இப்படி நடத்துவது முறையல்ல. இந்த விவாதம் தனியிடத்தில் நடந்திருக்க வேண்டும். ராகுல் விரைவில் எல்எஸ்ஜியை விட்டு வெளியேற வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மகேஷ் என்ற ட்விட்டர் பயனர், “கே.எல்.ராகுலை வசைபாடும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் உரிமையாளர் மோசமான ரசனை கொண்டவராக இருக்கிறார். அவமானம். மோசமாக விளையாடினாலும் கூட இது போன்ற அழுத்தம் சிஎஸ்கே வீரர்களுக்கு இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “எங்களது வீரர்கள் பவர் பிளேயில் ஆட்டமிழந்த போதே, எங்களது வேகத்தையும் நாங்கள் இழந்து விட்டோம்” என்றார் ராகுல்.

தோல்விக்கு பிறகு கேஎல் ராகுல் கூறியது என்ன?

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய கேஎல் ராகுல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கினார்.

கே.எல்.ராகுல் பேசுகையில், “என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற ஆட்டத்தை நாங்கள் டிவியில் தான் பார்த்திருக்கிறோம். இப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறோம்.”

“ஹெட் மற்றும் அபிஷேக் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு தெறித்தது. சிக்ஸர் அடிப்பதற்காகவே பிரத்யேக பயிற்சி எடுத்து கடினமாக உழைத்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கூட இருவரும் வழங்கவில்லை. விக்கெட் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்யக்கூட வாய்ப்பு வழங்கவில்லை.”

“முதல் பந்திலிருந்தே இருவரும் கட்டுப்பாடின்றி அபாரமாக பேட் செய்தனர். விக்கெட் வீழ்த்தினால்தான் பவர்ப்ளேயில் இருவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். ஆனால், எங்களால் அதை கடைசிவரை செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், ” நீங்கள் தோல்வியடையும் நிலையில் இருக்கும்போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் மீதும் கேள்வி எழும். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவிக்க விரும்பினோம். ஆனால், 40-50 ரன்கள் குறைவாகவே எடுக்க முடிந்தது. எங்களது வீரர்கள் பவர் பிளேயில் ஆட்டமிழந்த போதே, எங்களது வேகத்தையும் நாங்கள் இழந்து விட்டோம்” என்றார் ராகுல்.

“நாங்கள் 250 ரன்கள் அடித்திருந்தாலும் கூட அவர்கள், எங்களை வென்றிருப்பார்கள்” என்று கூறினார் அவர்.

தனது அணியில் ரன்களை குவிக்க போராடிய ஆயுஷ் படோனி மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோரையும் பாராட்டினார் கே.எல்.ராகுல்.