நேபாள கரன்சி நோட்டுக்களில் புதிய மாற்றம்; இந்தியா அதிருப்தி – முழு விவரம்

நேபாளம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அசோக் தஹால்
  • பதவி, பிபிசி நேபாளி

நேபாள அரசு தங்களது நூறு ரூபாய் நோட்டுகளில் புதிய வரைபடத்தை (Map) அச்சிட முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த முடிவு ஒன்றும் புதிதல்ல என்று நேபாள பிரதமர் புஷ்ப குமார் தஹல் பிரசந்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசி நேபாளி சேவையிடம் பேசிய நேபாள தகவல்துறை அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான ரேகா சர்மா, “பழைய வரைபடத்துடன் கூடிய நோட்டுகள் தீர்ந்துவிட்டன. அதனால்தான் நேபாள ஸ்டேட் வங்கிக்கு புதிய நோட்டுகளை அச்சிட அனுமதி தந்துள்ளோம். இது ஒரு வழக்கமான செயல்பாடு” என்று கூறியுள்ளார்.

மேலும், “புதிய நோட்டுகளின் வடிவமைப்பை மாற்ற நேபாள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வேறு எதுவும் நடக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “நேபாளம் ஒருதலைப்பட்சமாக சர்ச்சைக்குரிய பகுதிகளின் வரைபடத்தை தங்களது புதிய நோட்டுகளில் அச்சிட முடிவு செய்துள்ளது. இது நடைமுறையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது” என்று கூறினார்.

மேலும், “எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எல்லை தகராறு தொடர்பாக பேசுவதற்கு நியமிக்கப்பட்ட மன்றம் மூலம் நேபாளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வரை, அந்தப் பகுதிகளின் தற்போதைய நிலை மாறாது,” என்றும் கூறியுள்ளார் அவர்.

நேபாளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரசந்தா அரசின் இந்த முடிவு ராஜதந்திரம் மற்றும் பொருளாதார துறைகளில் எடுக்கப்பட்ட முதிர்ச்சியற்ற முடிவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதிய வரைபடத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள்

கடந்த வியாழனன்று, நேபாள அமைச்சரவை புதிய வரைபடத்துடன் கூடிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சிட அந்நாட்டின் அரசு வங்கிக்கு அனுமதி வழங்கியது.

பிரசந்தா அரசின் இந்த முடிவு ராஜதந்திரம் மற்றும் பொருளாதார துறைகளில் எடுக்கப்பட்ட முதிர்ச்சியற்ற முடிவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நேபாளம் 2020 ஜூன் மாதத்தில், கலாபானி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வரைபடத்தை வெளியிட்டது.

நேபாளத்தின் அரசியலமைப்பு இந்த மாதம் மாற்றியமைக்கப்பட நிலையில், இந்த புதிய வரைபடம் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேபாள அரசு விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே இந்த முடிவை எடுத்ததாக சில ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தால் வெளியிடப்பட்ட இந்த வரைபடத்திற்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்படவில்லை.

நேபாளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா தனது புதிய வரைபடத்தில், நேபாளத்தின் புதிய வரைபடத்தை குறிப்பிடாதது தொடர்பாக நேபாளத்தின் நாடாளுமன்றக் குழு அர்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

நேபாளத்தில் என்ன நடக்கிறது?

சீனா ஆகஸ்ட் மாதத்தில் தனது புதிய வரைபடத்தை வெளியிட்ட சமயத்தில், ​​நேபாள அரசும் தனது புதிய வரைபடத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறதா அல்லது பழைய வரைபடத்தையே தொடரப்போகிறதா என்ற சந்தேகம் எழுந்தது.

மேலும் சீனா தனது புதிய வரைபடத்தில், நேபாளத்தின் புதிய வரைபடத்தை குறிப்பிடாதது தொடர்பாக நேபாளத்தின் நாடாளுமன்றக் குழு அரசிடம் கேள்வி எழுப்பியது.

நேபாளத்தின் புதிய வரைபடம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா என முன்னாள் பிரதமர் மாதவ் குமார் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேபாள நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் குழுவிடம் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சர்வதேச உறவுகளுக்கான குழுத் தலைவர் ராஜ்கிஷோர் யாதவ், “வரைபடம் வெளியானதும், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி எங்களிடம் தெரிவித்தார். ஆனால், அமைச்சர் என்.பி. சௌத்துக்கு, இது தொடர்பான எந்த ஆவணமும் வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

மேலும் “புதிய வரைபடம் குறித்த தகவல் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளதா என்று நாங்கள் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை,” என்று கூறினார் அவர்.

இந்த புதிய வரைபடம் குறித்து நேபாளத்தில் உள்ள சர்வதேச தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் கியாவாலி தெரிவித்தார்.

ஆனால், இது தொடர்பான தகவல்கள் வெளிநாட்டிற்கு அனுப்பப்படவில்லை என்பது அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது என்றார் யாதவ்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

நேபாளம்
படக்குறிப்பு, டெராய் மற்றும் நேபாளத்தின் எல்லைப் பகுதிகளில் வணிக பரிவர்த்தனைகளுக்காக நேரு (நேபாளி ரூபாய்) மற்றும் பாரு (இந்திய ரூபாய்) ஆகிய பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புதிய நோட்டில், புதிய சிக்கல்

“புதிய வரைபடத்துடன் கூடிய நோட்டுகளை அச்சிடுவதால், இந்தியாவுடனான நேபாளத்தின் வர்த்தகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது,” என நேபாள ராஷ்டிரா வங்கியின் முன்னாள் கவர்னரும், அதிபரின் ஆலோசகருமான சிரஞ்சீவி நேபால் தெரிவித்துள்ளார்.

“நேபாளத்தின் அரசியலமைப்பு அந்த நாட்டிற்குள் மட்டுமே பொருந்தும். ஆனால் அந்நாட்டின் பணம் (Currency) இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும் புழக்கத்தில் உள்ளது” என்று கூறுகிறார் சிரஞ்சீவி.

டெராய் மற்றும் நேபாளத்தின் எல்லைப் பகுதிகளில் வணிக பரிவர்த்தனைகளுக்காக நேரு (நேபாளி ரூபாய்) மற்றும் பாரு (இந்திய ரூபாய்) ஆகிய பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், “புதிய வரைபடத்தின் அடிப்படையிலான நோட்டுகள் எப்போது வந்தாலும், அவை எல்லைப்பகுதி சந்தையில் செயல்பட முடியாது,” என்று அவர் கூறுகிறார்.

இது மட்டுமின்றி, 500 ரூபாய்க்கும் குறைந்த மதிப்புள்ள இந்திய நோட்டுகள் நேபாளத்தில் செல்லும். ஆனால் நேபாளி நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் இல்லை.

இந்த புதிய நோட்டுகளின் வருகையால் எல்லைப் பகுதிகளில் கூட நேபாள நோட்டுகளின் புழக்கத்துக்கு இந்தியா தடை விதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், “முதலில் புதிய வரைபடத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற வேண்டும்,” என்று கூறுகிறார் சிரஞ்சீவி.

நேபாளம்
படக்குறிப்பு, “நேபாளம் முழுவதும் இறையாண்மை கொண்ட நாடு” என்று கூறுகிறார் பேராசிரியர் கட்கா.

திரிபுவன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் கட்கா கே.சி.சர்வபௌம் பேசுகையில், “ஒரு இறையாண்மையுள்ள நாடு தனது நாட்டின் வரைபடத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவதைப் பற்றி அண்டை நாடுகளும், பிற நாடுகளும் என்ன நினைக்கும் என்று கவலைப்படத் தேவையில்லை” என்று கூறுகிறார்.

“நேபாளம் முழுவதும் இறையாண்மை கொண்ட நாடு” என்று கூறுகிறார் அவர்.

“புதிய வரைபடத்துடன் நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் நிறுவனங்களுக்கும் சரியாகத் தெரிவிக்கப்பட்டிருந்தால் இன்னும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால், அதைச் செய்யாமல், நேபாளம் அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது” என்கிறார் கட்கா.

நேபாளம் தனது பிராந்திய உரிமைகள் குறித்து பாசாங்கு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல்வேறு எல்லைப் பிரச்னைகள் இருந்தாலும் கூட, அது அவர்களது வர்த்தக உறவுகளை பாதிக்கவில்லை,” என்று கூறுகிறார் அவர்.

தொடர்ந்து பேசிய கட்கா, “நாடாளுமன்றம் புதிய வரைபடத்தை அங்கீகரித்தவுடன், நம்முடன் இராஜதந்திர உறவுகளை வைத்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இப்போதும் கூட, இதுகுறித்து அவர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு, நோட்டுக்களை அச்சிடுவது சரியான நடவடிக்கையாக இருக்கும்,” என்கிறார்.

சர்வதேச உறவுகள் குழுவின் தலைவர் ராஜ்கிஷோர் யாதவ் கூறுகையில், “நீண்டகால விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் கரன்சி நோட்டுகளில் புதிய வரைபடத்தை அச்சிட நேபாள அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

மேலும், “இந்த முடிவு உள்ளார்ந்த காரணங்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. இது நமது நலன்களை எந்தளவு பாதிக்கிறது, எந்தளவுக்கு நன்மை கொடுக்கும் என்பதை கருத்தில் கொண்டதாக தெரியவில்லை,” என்கிறார் அவர்.

முன்பு நேபாளம் வெளியிட்ட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு, அரசு செல்ல வழியில்லாத காரணத்தால், அந்த பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்த முடியவில்லை.