குஜராத்: இன்ஸ்டா நேரலையில் கள்ள ஓட்டு செலுத்திய பாஜக தலைவர் மகன் கைது – மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு

தாஹோத்: நேரலையில் நடந்த ' போலி வாக்களிப்பு', மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு

பட மூலாதாரம், UGC

குஜராத்தில் உள்ள தாஹோத் மக்களவைத் தொகுதியில் சந்த்ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் கீழ் வரும் பர்த்தம்புரா வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 11ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தாஹோத் மக்களவைத் தொகுதியின் சாவடி எண் 220இல் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று குஜராத் தேர்தல் ஆணைய அதிகாரியும் கூடுதல் ஆட்சியருமான ஆலோக் கெளதம் பிபிசியிடம் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்டத்தில், குஜராத்தில் தாஹோத் உட்பட 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் தாஹோத் மக்களவைத் தொகுதியின் சந்த்ராம்பூர் தாலுக்கா, பர்த்தம்புரா கிராமத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டதன் நேரடி ஒளிபரப்பு நடந்துள்ளது.

கள்ள ஓட்டு போட்டு இந்தச் சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்த நபர் விஜய் பாபோர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். விஜய் பாபோர் பாஜகவின் குஜராத் மாநில பட்டியல் பழங்குடி மோர்ச்சாவின் மாநில துணைத் தலைவரான ரமேஷ் பாபோரின் மகன்.

இந்த வழக்கில் விஜய் பாபோரை கைது செய்த போலீசார், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை’ மீறியதாகப் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விஜய் பாபோரின் தந்தை ரமேஷ் பாபோர், பாஜகவின் குஜராத் மாநில பட்டியல் பழங்குடி மோர்ச்சாவின் மாநில துணைத் தலைவராக உள்ளார்.

வீடியோவில் விஜய் பாபோர் என்ன சொல்கிறார்?

தாஹோத்: நேரலையில் நடந்த ' போலி வாக்களிப்பு', மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு

பட மூலாதாரம், ANI

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விஜய் பாபோரின் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவை பிபிசி பெற்றுள்ளது. இந்த வீடியோவில் கீழே குறிப்பிட்டுள்ளபடி விஜய் பாபோர் பேசுவதைக் காணலாம்.

“அட சார், அட.. அஞ்சு பத்து நிமிஷம் போகட்டும்… அஞ்சு பத்து நிமிஷம் போகட்டும்…. நாள் முழுக்க நடந்துக்கிட்டு இருக்கு… இப்ப அழுத்தினா என்ன? கொள்ளையா போய்விட்டது…”

“அண்ணே இப்படிப் போகாதீங்க… பாஜகவுக்கு போங்க அண்ணே… பாபோருக்கு போங்க…*** நாங்கள் (ஆரவாரம்)”

இதற்குப் பிறகு விஜய் பாபோர் வேறு ஒருவருடன் பேசுவது கேட்கிறது. பின்னர் அவர் மீண்டும் கூறுகிறார்,

“வாருங்கள் பாபோர்… இந்த மெஷின்கள் எல்லாமே எங்க அப்பாவுடையது.. மெஷின்கள் எங்க அப்பாவுடையது.”

“நான் அழுத்தணும். வாங்க.. இதுல அழுத்துங்க..”

“சரி… தயார்… முடிஞ்சுது… ஜஸ்வந்த் பாபோருக்கு ஆதரவாக (மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்) வேலை முடிஞ்சுது…”

“சார் ஒண்ணும் நடக்கல… சார் என்ன தெரிஞ்சுக்கணும்?” விஜய் பாபோர் மட்டும்தான் இங்க முடிவு செய்ய முடியும்…”

பின்னர் அவர் மற்ற வாக்காளர்களிடம், “நீங்க அழுத்த வேண்டியதை நான் அழுத்திட்டேன்.. பாருங்க, ஜஸ்வந்த் பாபோர் வந்துவிட்டார்,” என்று கூறுகிறார்.

இதன் மூலம் வேறு ஒருவருக்குப் பதிலாக விஜய் பாபோர் வாக்களிப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

போலீஸ் என்ன சொல்கிறது?

தாஹோத்: நேரலையில் நடந்த ' போலி வாக்களிப்பு', மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு

மஹிசாகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெய்தீப் சிங் ஜடேஜாவிடம் பிபிசி பேசியது. இந்தச் சம்பவத்தை உறுதி செய்த அவர், விஜய் பாபோரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறினார்.

இந்த வீடியோவில் காணும் நபரின் பெயர் விஜய் பாபோர். அவர் வாக்களிக்க மாலை 5:49 மணிக்கு சாவடிக்குள் நுழைந்தார். அப்போது வாக்குப் பதிவு முடிய இன்னும் 10 நிமிடங்களே இருந்தன. அவர் வாக்களித்த பிறகும் அங்கேயே நிற்கிறார்.

”வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் வரிசையில் இருப்பவர்கள் வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு அங்கு வந்து வரிசையில் நிற்க அனுமதி இல்லை. கடைசி 10 நிமிடங்கள் இருக்கும் போது இது நடந்தது. அவர் வாக்களிக்கிறார். வேறு ஒருவரின் வாக்கை அவர் போடுவதை வீடியோவில் பார்த்திருப்பீர்கள். பிறகு அவர் ‘நான், அழுத்தினேன், அழுத்தினேன்’ என்கிறார்.”

“அந்த நேரத்தில் அவர் இதையெல்லாம் இன்ஸ்டாவில் நேரலையில் செய்தார். எனவே 5:49 முதல் 5:54 வரை அந்த நபர் அங்கு இருந்தார். பின்னர் அவர் வாக்களித்தார். அது அவருடைய உரிமை. ஆனால் அவர் இரண்டு மூன்று நபர்களின் வாக்குகளையும் போட்டுள்ளார். இது கள்ள ஓட்டு குறித்த வழக்கு” என்றார் காவல் கண்காணிப்பாளர் ஜெய்தீப் சிங்.

தாஹோத்: நேரலையில் நடந்த ' போலி வாக்களிப்பு', மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

தஹோத் மக்களவைத் தொகுதியில் விஜய் பாபோர் மற்றொரு சாவடியில் போலி வாக்குப்பதிவு செய்ய முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காங்கிரஸ் வேட்பாளர் பிரபா தாவியத்தின் தேர்தல் முகவரான ஷனாபாய் நாதாபாய் தாவியாத் சந்த்ராம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் நகல் பிபிசியிடம் உள்ளது.

தஹோத் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் பிரபா தாவியாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சந்த்ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் பர்த்தம்பூர் வாக்குச்சாவடி எண் 220இல் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.

ஜனநாயகத்தை மீறும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வரிசையில் நின்றிருந்த மக்களை வாக்களிக்கவிடாமல், சாவடியைக் கைப்பற்றி, அதிகாரத்தின் பெயரால் பாஜகவினர் ஜனநாயகத்தை மீறியுள்ளனர். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன,” என்றார்.

”இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம், அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.”

“மக்களின் வாக்குரிமை மீறல் நடந்துள்ளது. மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும். இனி இதுபோன்று எதுவும் நடக்காத வகையில், இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாங்களும் எங்கள் சொந்த வழியில் விசாரித்தோம். நடந்தது உண்மை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மஹிசாகர் மாவட்ட ஆட்சியர் என்ன கூறினார்?

தாஹோத்: நேரலையில் நடந்த ' போலி வாக்களிப்பு', மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு

பட மூலாதாரம், DAXESH SHAH / BBC

தேர்தலின்போது மாவட்ட ஆட்சியர் மாவட்ட தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருப்பார். விஜய் பாபோர் செய்த போலி வாக்குப்பதிவு குறித்து பிபிசியிடம் பேசிய மஹிசாகர் மாவட்ட ஆட்சியர் நேஹா குமாரி, விஜய் பாபோருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், அந்தச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு காரணம் காட்டும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“மே 8 காலை 11:30 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இந்த வீடியோ குறித்து எங்களுக்குத் தெரிவித்தார். இந்தக் காணொளியை ஆய்வு செய்தபோது, இவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீஸ் காவலில் உள்ளார். போலி வாக்குப்பதிவு செய்ததாக அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம்,” என்று மாவட்ட தேர்தல் அதிகாரி நேஹா குமாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

“சம்பவம் குறித்து எங்களிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று அந்தச் சாவடியில் உள்ள தேர்தல் ஊழியர்களுக்கு நாங்கள் காரணம் காட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். நாங்கள் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகிறோம். அது முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்,” என்றார் அவர்.

போலி வாக்கு அளித்தது நிரூபிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.