வேட்டியை அவிழ்க்கவில்லையாம்?

by admin

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய நிர்வாக குழப்பங்களின் எதிரொலியாக செயலாளர் தமிழ் செல்வன் பதவி விலகியுள்ளார்.ஆலய நிர்வாகத்தினுள் தமிழ் கட்சியொன்றின் அதிகரித்த தலையீடு தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்;கப்பட்டுவருகின்ற நிலையில் செயலாளர் பதவி விலகியுள்ளார்.

இதனிடையே கடந்த மாதம் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை காவல்துறை மற்றும், வனவள திணைக்கள அதிகாரிகளிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நேற்று புதன்கிழமை வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், ஆலய நிர்வாகத்தினரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

அன்றையதினம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் கூறப்பட்ட விடயங்களை காவல்துறை மறுதலித்துள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது வனப்பகுதிக்குள் தீ மூட்டப்பட்டிருந்தது என்றும், பிளாஸ்ரிக் பொருள்கள், சமையல் கழிவுகள், ஆலயப் பூசைப் பொருள்கள் அங்கு கொட்டப்பட்டிருந்தன என்று வனவள பணிமனையினர் குறிப்பிட்டனர்.

தொல்பொருள் பணிமனையின் கடிதத்தின் அடிப்படையிலும், வனப் பகுதிக்குள் தீ மூட்டப்பட்டிருந்ததாலும் அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது

தாங்கள் எவர் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்றும், வேட்டியை அகற்றி அரைநிர்வாணமாக்கவில்லை என்றும் காவல்துறை மறுதலித்தள்ள நிலையில் நாளை வெள்ளிக்கிழமை, அங்கு நடைபெற்றன என்று கூறப்படும் விடயங்கள் தொடர்பான சான்றுகள் மற்றும் ஆதாரங்களை ஆலய நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்